என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் அருகே லாரி மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வடிவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (47). இவர் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் காஞ்சிபுரம் வந்த அவர் தனது இரு சக்கர வாகனத்தில் நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு செவிலிமேடு பாலாற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை பச்சையப்பன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஓடுபாதையில் மழைநீர் தேங்கியிருப்பதால் சென்னை வந்த 3 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

    ஆலந்தூர்:

    சென்னையில் நேற்று நள்ளிரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்ததால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கியது.

    இதனால் வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்கள் நேற்று இரவு தரை இறங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வந்த மலேசியா ஏர்லைன்ஸ், ஜெர்மனியின் பிராங்பர்ட் விமானம், டெல்லியில் இருந்து வந்த ஏர்இந்தியா விமானம் ஆகிய 3 விமானங்கள் வானிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

    இந்த 3 விமானங்களும் வானிலை சீரடைந்த பிறகு இன்று காலை சென்னை விமான நிலைணுயத்தில் தரை இறங்கியது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    வானிலை மோசம் காரணமாக வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. குவைத், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதே போல் உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் விமான நிலையத்திலேயே காத்துகிடந்தனர்.

    டெல்லிக்கு காலை 6.30 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் 10.30 மணிக்கு புறப்படும் என்றும், காலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய ஜெட்ஏர்வேஸ் விமானம் காலை 9.30 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. வானிலை மோசம் காரணமாக சுமார் 20 விமானங்கள் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    கூடுவாஞ்சேரி அருகே இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் இளம்பெண் தனியாக நடந்து செல்வதை பார்த்தனர். உடனே 2 பேர் அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றனர்.

    அங்குள்ள பாழடைந்த வீட்டில் வைத்து இளம்பெண்ணை 4 பேரும் பலாத்காரம் செய்தனர். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    இதனை பார்த்து 4 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அந்த இளம்பெண் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த கண்ணன், சந்திரசேகர் உள்பட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
    காஞ்சீபுரம் அருகே பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஒரிக்கை பகுதியில் வசித்து வருபவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி தேவி (54). இவர் கடந்த மாதம் 5–ந்தேதி மாலை கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து காணாமல் போன தேவியை தேடி வருகின்றார்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்காததால் அரசு பள்ளிக்கு பூட்டுபோட்டு கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த எழிச்சியூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 240 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பள்ளியில் அருகில் உள்ள கிராமப்புற மாணவர்களை சேர்க்க மறுப்பதாகவும், படிப்பு முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கவில்லை என்று தெரிவித்தும் எழிச்சியூர், பனையூர் உள்ளிட்ட 5 கிராம மக்கள் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பள்ளி கதவை பூட்டு போட்டு பூட்டினர். இதனால் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் வெளியிலேயே நின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த ஆசிரியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கிராம மக்கள் கூறும் போது, பள்ளியில் எங்கள் கிராம மாணவர்களை சேர்க்க அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ் இன்னும் கொடுக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தலைமை ஆசிரியை லூர்ந்து மேரி மீது தெரிவித்தனர்.

    அவரிடம் உரிய விசாரணை நடத்துவதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர் பூட்டிய பள்ளிக் கூட கதவை திறந்தனர்.

    ஆனால் மாணவ- மாணவிகள் பள்ளிக்குள் செல்லவில்லை. அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்குள் சென்றனர்.

    இதற்கிடையே தலைமை ஆசிரியை லூர்து மேரி, உதவி தலைமை ஆசிரியை தான்சியா, ஆகியோரை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மாமல்லபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்போரூர்:

    ஆலத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே ஆலத்தூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்சப்ளை பெறும் ஆலத்தூர், ஆலத்தூர் சிட்கோ, தண்டலம், கருங் குழிப்பள்ளம், பண்டிதமேடு, பையனூர், கூத்தவாக்கம், சாவடி, பூஞ்சேரி, கடம்பாடி, வடகடம்பாடி, கோவளம், திருவிடந்தை, தெற்குப்பட்டு, வடநெம்மேலி,

    பட்டிபுலம், பெரியநெம்மேலி, சூளேரிக்காடு, கிருஷ்ணன்காரணை, இளந்தோப்பு, சாலவான் குப்பம், தேவனேரி, மாமல்லபுரம், உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சப்ளை இருக்காது இந்த தகவலை செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

    நங்கநல்லூரில் தபால் பெட்டியில் கிடந்த பாஸ்போர்ட்டுகளால் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தபால் பெட்டியில் இருந்து கடிதங்களை, தபால் ஊழியர் எடுத்தார். அப்போது அதில் கட்டுக்கட்டாக 25 புதிய பாஸ்போர்ட்டுகள் இருந்ததை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. அதிகாரிகள் பாஸ்போர்ட்டுகளை ஆய்வு செய்து, பின்னர் பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்போர்ட்டுகளை தபால் பெட்டியில் போட்டுச்சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புதிய பாஸ்போர்ட்டுகள் சென்னை, மதுரை உள்பட 7 நகரங்களுக்கு செல்ல வேண்டியது என தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தாம்பரத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பெண்களிடம் நகைகளை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சூரத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேரி. இவர் நேற்று இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த போது 2 பேர் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

    இதேபோல நேற்று இரவு சேலையூர் அடுத்த மாடம் பாக்கம் மாருதி நகரை சேர்ந்த கவிதா மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது 2 மர்ம நபர்கள் 5 பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டான்.

    தாம்பரம் ரெங்கநாத புரத்தில் ஒரு பெண்ணிடம் நகையை பறித்துவிட்டு ஒடிவிட்டனர். இந்த 3 சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

     

     

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கால்சென்டர் ஊழியர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.

    வேளச்சேரி:

    கோவில்பட்டியை சேர்ந்தவர் ரவிசங்கர் மகன் முத்துக்குமார். வேளச்சேரி விஜயநகர் பஸ்நிலையம் அருகே உள்ள கால்சென்டரில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார்.

    வேளச்சேரி போலீஸ் நிலையம் அருகே ஒரு திருப்பத்தில் திரும்பும் போது பைக்கில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவம் இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தார்.

    முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

    காஞ்சிபுரத்தில் நேற்று சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது.

    காஞ்சிபுரம்:

    கடந்த சில வாரங்களாக கடும் வெயிலின் தாக்கத்தால் காஞ்சிபுரம் மக்கள் தவித்து வந்து நிலையில் கடந்த இரு நாட்களாக வெய்யிலின் தாக்கம் மிகவும் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் 5 மணிக்கு ஆரம்பித்த மழை ஏறத்தாழ 7 மணிவரை இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்தது. நகரின் முக்கிய சாலையான காந்திரோடு, காமராஜர் வீதி, மூங்கில் மண்டபம், பஸ்நிலையம், சங்கரமடம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான சாலைபகுதிகளாக மேட்டுத்தெரு, ஓரிக்கை ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    இடி, மின்னல் மற்றும் சூறைகாற்றுடன் மழை பெய்ததால் நகரின் சில பகுதிகளில் சாலைகளில் மரங்கள் ஒடிந்து விழுந்தன. தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் துரிதமாக செயல்பட்டு இடர்பாடுகளை அகற்றி போக்குவரத்தினை சீர் செய்தனர்.

    மழை காரணமாக இரவு ஏறத்தாழ மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகரின் முக்கிய பகுதிகள் இருளில் மூழ்கின. கடும் வெய்யிலில் அவதிப்பட்ட காஞ்சிபுரம் மக்களுக்கு நேற்று பெய்த மழை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    மேல்மருவத்தூர் அருகே கார் மீது பஸ் மோதலில் 2 பேர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சங்கரப் பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆசிக்அலி (வயது 45) துபாயில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    மீண்டும் துபாய்க்கு செல்வதற்காக நேற்று வீட்டில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்து கொண்டிருந்தார்.

    காரை அவரது உறவினர் முகமது அஸ்ரப்அலி ஓட்டினார். காரில் உறவினர்கள் சுல்தான் ஆரிப், ஜாகீர்உசேன் ஆகியோர் இருந்தனர்.

    இரவு 7 மணியளவில் மேல் மருவத்தூர் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து அரசு பஸ் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென்று தறிகெட்டு ஓடியது. சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு மறுபுறம் சென்று எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டிய முகமது அஸ்ரப் அலி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிக்அலி இறந்தார். சுல்தான் ஆரிப், காசீர்உசேன் ஆகிய இருவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மறைமலைநகர் அடுத்த பொத்தேரியில் நேற்று மாலை எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
    செங்கல்பட்டு:

    மதுராந்தகம், மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கவுதம் கோத்தாரி. வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம்.

    இவரது மகன் பிரகாஷ் கோத்தாரி (வயது 22). மறைமலைநகரை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று மாலை அவர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பொத்தேரி பஸ்நிலையத்தில் நின்றார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரகாஷ் கோத்தாரியை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது வாயை பொத்தி காருக்குள் தூக்கிப் போட்டு கடத்தி சென்றனர்.

    இரவு வரை பிரகாஷ் கோத்தாரி வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அவர்கள் மறைமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையே இரவு கவுதம் கோத்தாரியின் செல்போனுக்கு மர்ம நபர்கள் பேசினர். அப்போது ‘‘உங்களது மகன் பிரகாஷ் கோத்தாரியை கடத்தி உள்ளோம். ரூ. 1 கோடி தர வேண்டும். இல்லையெனில் அவனை தீர்த்துக் கட்டிவிடுவோம். பணத்தை தரும் இடம் குறித்து பின்னர் தெரிவிப்போம்’’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டனர்.

    அதிர்ச்சி அடைந்த கவுதம் கோத்தாரி இதுபற்றி போலீசுக்கு தெரிவித்தார். உஷாரான போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர். தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    கடத்தல்காரர்கள் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி சாலையோரத்தில் கடத்தல் கும்பல் இறக்கி விட்டுள்ளதாக பிரகாஷ் கோத்தாரி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் போலீசாரின் உதவியோடு பிரகாஷ் கோத்தாரியை மீட்டனர். அவரது உடலில் காயங்கள் இருந்தன. போலீசார் நடவடிக்கை எடுப்பதை அறிந்த கடத்தல் கும்பல் மாணவரை இறக்கி தப்பிச்சென்று இருப்பது தெரிந்தது.

    இது குறித்து மாணவர் பிரகாஷ் கோத்தாரி கூறும் போது, ‘நேற்று மாலை 4 பேர் கும்பல் என்னை காரில் கடத்தி சென்றனர். இரவு முழுவதும் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் பகுதிகளுக்கு காரிலேயே சுற்றினர்.

    போலீசார் தேடுவதை அறிந்ததும் கடத்தல் கும்பல் என்னை கருங்குழியில் இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்’’ என்றார்.

    மாணவரின் தந்தை கவுதம் கோத்தாரி பைனான்ஸ் தொழில் செய்து வருவதால் அவரிடம் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இந்த கடத்தல் சம்பவம் நடந்ததா? அல்லது மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பிரகாஷ் கோத்தாரி கடத்தப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக மாணவர் பிராகஷ் கோத்தாரியிடமும் விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×