என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஆலந்தூரில் ரேசன் குறை தீர்ப்பு முகாமில் அ.தி.மு.க. - தி.மு.க. தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    ஆலந்தூர்:

    பரங்கிமலை மண்டலத்துக்கு உட்பட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் குறை தீர்ப்பு கூட்டம் ஆலந்தூரில் உள்ள ஏ.ஜே.எஸ். நிதி பள்ளியில் இன்று நடந்தது.

    ரேசன் கார்டு குறை தீர்ப்புக்கான இந்த கூட்டத்தை தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் நிர்வாகிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது 161-வது வட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் வேம்பரசன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார்.

    குறை தீர்ப்பு கூட்டம் குறித்து தங்களிடம் தகவல் தெரிவிக்காதது ஏன்? என்று அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டனர். அப்போது இது தொடர்பாக அ.தி.மு.க. - தி.மு.க. தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.

    குறை தீர்ப்பு கூட்டம் தொடர்பான பேனர் எதுவும் இல்லாததால் அ.திமு.க.வினர் முதல்-அமைச்சர் படத்துடன் கூடிய பேனரை அங்கு வைத்தனர்.
    மணப்பாக்கம் ரிவர்வியூ காலனி – அம்பேத்கர் நகர் லிங்க் சாலையில் உள்ள ஹுண்டாய் கார் நிறுவன குடோனில் கார்களை திருடிய வழக்கில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்
    ஆலந்தூர் :

    நந்தம்பாக்கத்தை அடுத்த மணப்பாக்கம் ரிவர்வியூ காலனி – அம்பேத்கர் நகர் லிங்க் சாலையில் ஹுண்டாய் கார் நிறுவன குடோன் உள்ளது.

    இங்கு கடந்த 8–ந் தேதி இரவு ஒரு கும்பல் காவலாளி மனோகரனை தாக்கினர். பின்னர் அவரை கட்டி போட்டு விட்டு குடோனில் இருந்த 7 சொகுசு கார்களை திருடிச் சென்றது. இந்த நிலையில் வளசரவாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த 5 கார்களை போலீசார் மீட்டனர்.

    அதன்பின் மதுரவாயல் அஷ்டலட்சுமி நகரில் நின்ற ஒரு காரையும், கோடம்பாக்கம் லிபர்டி அருகே இருந்த 7–வது காரையும் மீட்டனர். கடத்தப்பட்ட அனைத்து கார்களையும் போலீசார் மீட்டனர். அவைகளில் போலி நம்பர் பிளேட் ஒட்டப்பட்டு இருந்தது.

    சொகுசு கார்கள் கடத்தல் கும்பலை போலீசார் தீவிர தேடி வந்தனர். அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    சந்தேகத்தின் பேரில் 8 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் ஒருவன் கார்கள் கடத்தலில் முக்கிய குற்றவாளி என்பது தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். இதில் மேலும் 4 பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.

    கார்களை திருடிய கும்பல் ராமாபுரம் தாங்கல் தெருவைச் சேர்ந்த விஜயன் என்பவரிடம் நம்பர் பிளேட் எழுதி வாங்கியது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் கடத்தல் கும்பலில் உள்ள ஒருவன் விஜயனின் நண்பர் என்பதும் அவர் கேட்டுக் கொண்டதால் நம்பர் பிளேட் எழுதி கொடுத்ததாகவும் தெரிவித்தார். அவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
    நங்கநல்லூர் தபால் பெட்டியில் இருந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 48 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பழவந்தாங்கல் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி தபால் ஊழியர் கடிதங்களை எடுக்க முயன்றார். அப்போது தபால் பெட்டியில் 23 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தபால் துறை உயர் அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுகளை பழவந்தாங்கல் போலீசில் ஓப்படைத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பாஸ்போர்ட்டுகளை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மீண்டும் அதே தபால்பெட்டியில் 6-ந்தேதி 13 பாஸ்போர்ட்டுகளும், 8-ந்தேதி 15 பாஸ்போர்ட்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. 3 நாட்களில் அந்த தபால் பெட்டியில் இருந்து மொத்தம் 51 பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

    அந்த பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றிய போலீசார், அவற்றை தபால் பெட்டியில் போட்டுச்சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியை வைத்து மடிப்பாக்கம், உள்ளகரம் பகுதிகளை சேர்ந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள், வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மாயமாகிவிட்டதாகவும், இதுபற்றி போலீசில் புகார் செய்து மாற்று பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால் மீட்கப்பட்ட அனைத்து பாஸ்போர்ட்டுகளும் காலாவதியாகாதவை என தெரிகிறது. எனவே அவை கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்ததா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தபால் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் இருந்த முகவரியை வைத்து கொல்கத்தா, டெல்லி, மதுரை, திருவனந்தபுரம், திருச்சி, ராமநாதபுரம், ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் உள்ள 48 பேருக்கு இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அந்த முகவரிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இந்த சம்மன் கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்துக்குள், சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கும்படி கோரப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, “எங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

    பாஸ்போர்ட்டுகள் கிடந்த தபால் பெட்டியை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அதில் பாஸ்போர்ட்டை போட்டுச்சென்றது யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த தபால் பெட்டி அருகே உள்ள தனியார் வங்கியின் நுழைவுவாயில் முன் கண்காணிப்பு கேமராவை பொருத்த பழவந்தாங்கல் போலீசார் அறிவுறுத்தினார்கள். அதன்படி அங்கு கேமரா பொருத்தப்பட்டது.

    அந்த பகுதிகளில் மாறுவேடங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் நங்கநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேளச்சேரியில் உள்ள பல்பொருள் அங்காடியின் மாடியில் இருந்த அறையில் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை வேளச்சேரி மெயின் சாலையில் பொன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி(சூப்பர் மார்க்கெட்) உள்ளது. இந்த அங்காடியின் மாடியில் பொன்ராஜீக்கு தனியாக அறை ஒன்று உள்ளது. அதை அலுவலகம் போல் அவர் செயல்படுத்தி வந்தார்.

    அந்த அறையில் உள்ள மேஜையில், பொன்ராஜ் தனது மனைவி மற்றும் தனக்கு சொந்தமான 100 பவுன் நகைகளை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அந்த அறையில் மேஜையில் வைத்து இருந்த 100 பவுன் நகைகளை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டதாக நேற்று வேளச்சேரி போலீசாருக்கு பொன்ராஜ் தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்ததும் கிண்டி உதவி கமிஷனர் சங்கரலிங்கம், வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெரி, சேட்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    நகைகள் மாயமானதாக கூறப்படும் அங்காடியின் மாடியில் உள்ள அறையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் விசாரிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து பொன்ராஜ், தனது அறையில் இருந்த 100 பவுன் நகைகள் மாயமானதாக புகார் அளித்தார்.

    பல்பொருள் அங்காடியின் மாடியில் உள்ள அறைக்கு பொன்ராஜை தவிர வெளியாட்கள் யாரும் எளிதில் செல்ல முடியாது. அப்படி இருக்க 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையா? என போலீசார் சந்தேகம் அடைந்து உள்ளனர்.

    மேலும் அந்த நகைகளை பொன்ராஜ் தனது வீட்டில் வைக்காமல் எதற்காக பல்பொருள் அங்காடியின் மாடியில் உள்ள அறையில் வைத்து இருந்தார்? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்து உள்ளது. இதுபற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    திருப்போரூரில் பா.ம.க. பிரமுகர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட கண்ணகப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் வன்னியகுமார் பா.ம.க. பிரமுகர்.

    நேற்று இரவு இவர் வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்போது சைக்கிளில் சென்ற ஒருவரை மோட்டார் சைக்கிளில் 2 பேர் லேசாக இடித்தனர். இதில் சைக்கிளில் சென்றவர் கீழே விழுந்தார்.

    இதனை கண்ட வன்னிய குமார் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் செல்போன் மூலம் பேசி நண்பர்களை வரவழைத்தனர்.

    வன்னியகுமாருக்கு ஆதரவாக ஒன்றிய செயலாளரான தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி வந்தார். இதில் ஏற்பட்ட மோதலில் வன்னியகுமார், தட்சிணாமூர்த்தி மீது கல்வீசி தாக்கினர்.

    தகவல் அறிந்ததும் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அங்கு கும்பலாக இருந்த இருதரப்பினரையும் விரட்டினர்.

    மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    காயமடைந்த வன்னிய குமார் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் 50 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
    ஆலந்தூர்:

    நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி 20-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடந்தது.

    தகவல் அறிந்த தபால் துறை அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுக்களை கைப்பற்றி பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். கடந்த 6-ந்தேதி அதே தபால் பெடடியில் 13 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது. அதனையும் கைப்பற்றிய போலீசார் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டது யார்? என்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று முன்தினம் தபால் பெட்டியில் 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததால் தபால் ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதுவும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

    இதுவரை தபால் பெட்டியில் இருந்து 50 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகள் ஆகும்.

    இந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 10 பேரிடம் போலீசார் விசாரித்தபோது, விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை தவற விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து எப்படி பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் கிடந்தது பற்றி விமான நிலைய ஊழியர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே இது மத்திய அரசு துறை விவகாரம் என்பதால் சி.பி.ஐ. விசாரிக்கிறது

    சி.பி.ஐ. விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் போலீசார் கைப்பற்றிய பாஸ்போர்ட்டுகளின் விவரங்களை சேகரித்து சென்று உள்ளார். 3 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. விஜிலென்ஸ் பிரிவினர் இதுபற்றி விசாரிக்கிறார்கள்.

    போலீஸ் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள் கிடந்தது தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். சி.பி.ஐ. விசாரணை நடத்துவது பற்றி தகவல் தெரியாது என்றனர்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக பொருட்களை கொண்டு வந்தால் அதற்கு அபராதம் கட்ட வேண்டும். அந்த சமயத்தில் அபராத தொகை இல்லையென்றால் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு அபராத தொகையை கட்டி விட்டு திரும்ப பெற்று கொள்ள வேண்டும்.

    அப்படி பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் சிலர் அபராத தொகையை கட்டாமல் பாஸ்போர்ட்டு தொலைந்து விட்டதாக புகார் செய்து புதிய பாஸ்போர்ட்டை பெற்று கொள்கிறார்கள்.

    இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் தபால் பெட்டியில் வீசப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

    பொதுவாக தபால் பெட்டியில் ஒரு பாஸ்போர்ட்டு கிடந்தால் அதை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

    ஆனால் கட்டுக்கட்டாக கிடந்ததால் இதில் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரிக்கும் கும்பல் கைவரிசை இருக்குமோ என்று சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் விமான நிலையத்தில் தவற விடப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வெளியே சென்றதில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்றும் விசாரிக்கப்படுகிறது.

    தபால் பெட்டியை சுற்றி உள்ள பகுதியில் எங்கும் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே பாஸ்போர்ட்டுகளை வீசியது யார் என்று தெரியவில்லை.

    இதையடுத்து தபால் பெட்டி அருகே உள்ள வங்கியில் தற்போது புதிதாக கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது.
    நங்கநல்லூரில் தபால் பெட்டியில் இருந்து 3-வது முறையாக 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் தபால் பெட்டி உள்ளது. கடந்த 2-ந்தேதி தபால் ஊழியர், அந்த தபால் பெட்டியில் இருந்து கடிதங்களை எடுக்க முயன்ற போது, அதில் 23 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த தபால் துறை அதிகாரிகள், அவற்றை ஆய்வு செய்து பின்னர் பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றி, அதை தபால் பெட்டியில் போட்டுச் சென்றது யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.

    தபால் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியில் போலீசார் விசாரணை நடத்தியதில், அவை விமான நிலையத்தில் மாயமான பாஸ்போர்ட்டுகள் என்றும், அவற்றுக்கு பதிலாக மாற்று பாஸ்போர்ட்டுகள் பெற்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். இதனால் அந்த பாஸ்போர்ட்டுகள் சென்னை பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

    அதன்பிறகு கடந்த 6-ந்தேதி அதே தபால் பெட்டியில் 2-வது முறையாக மீண்டும் 13 பாஸ்போர்ட்டுகள் கிடந்தன. இது தொடர்பாக தபால் துறை அதிகாரிகள், பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தனர்.

    அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் வைக்கப்படாததால் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டுச்சென்றவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    விமான நிலையத்தில் கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் பாஸ்போர்ட்டுகள் மாயமாகின. இதுதொடர்பாக விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளன.

    நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் விமான நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நங்கநல்லூர் 48-வது தெருவில் உள்ள அதே தபால் பெட்டியில் தபால் ஊழியர் கடிதங்களை எடுக்க முயன்றபோது மீண்டும் 3-வது முறையாக 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுதொடர்பாக நங்கநல்லூர் தபால் துறை அதிகாரிகள், பழவந்தாங்கல் போலீசில் மீண்டும் புகார் செய்தனர். தபால் பெட்டியில் கிடந்த 15 பாஸ்போர்ட்டுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையில் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை தொலைத்தவர்கள், தபால் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் தங்களுடையது இருக்கிறதா? என பழவந்தாங்கல் போலீஸ் நிலையம் வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர்.

    தபால் பெட்டியில் இருந்து இதுவரை 51 பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 23 பாஸ்போர்ட்டுகள், சென்னை பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் 3-வது முறையாகவும் தபால் பெட்டியில் இருந்து பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் வேறு எங்காவது கண்காணிப்பு கேமரா உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடுவாஞ்சேரியில் குடும்ப தகராறு காரணமாக தாயை அடித்து கொன்ற மகன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரி, மின் வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் உன்னம்மாள் (வயது 75). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கார்த்திகேயனுடன் (40) உன்னம்மாள் தங்கி இருந்தார். இவரது மனைவி பத்மாவதி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    உன்னம்மாள்- பத்மாவதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாய் உன்னம்மாளை திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தார்.

    ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார். இதனால் கணவருடன் ஏற்பட்ட மோதலில் கடந்த வாரம் பத்மாவதி 2 குழந்தையுடன் சாலவாக்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் கார்த்திகேயன் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு கார்த்திகேயன் மது அருந்தி வந்தார். அப்போது தாய் உன்னம்மாளுடன், மனைவி பிரிந்து சென்றது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் கயிற்றால் தாய் உன்னம்மாளின் கழுத்தை இறுக்கினார். மேலும் அவரது தலையை சுவற்றில் மோதினார். இதில் உன்னம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    சிறிது நேரத்திற்கு பின்னர் தாயை கொலை செய்ததை உணர்ந்த கார்த்திகேயன் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். தாயின் கழுத்தை இறுக்கி கொன்ற அதே கயிற்றால் கார்த்திகேயனும் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை நீண்ட நேரம் வரை வீடு பூட்டிக்கிடந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் உன்னம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதும் கார்த்திகேயன் தற்கொலை செய்து இருப்பதும் தெரிந்தது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தாயை கொன்று மகன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மாமல்லபுரம் அருகே திருமணத்திற்கு சென்றிருந்த வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த அம்பாள்நகர், வசந்தபுரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

    இவரது மகளின் திருமணம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதற்காக முருகேசன் நேற்று முன்தினம் இரவே வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருமண மண்டபத்திற்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் முருகேசனின் வீட்டு பூட்டை உடைத்து புகுந்தனர். பின்னர் திருமண செலவுக்காக பீரோவில் வைத்திருந்த ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்தனர்.

    மேலும் பீரோவில் இருந்த பட்டு புடவை, குத்து விளக்கு உள்ளிட்ட பொருட்களையும் மூட்டை கட்டி அள்ளிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டிணத்தை சேர்ந்தவர் இப்ராகிம் ஓய்வு பெற்ற அணுமின் நிலைய என்ஜினீயர்.

    இவர் கல்பாக்கம் நகரியத்தில் உள்ள வங்கியில் லாக்கரில் இருந்த 20 பவுன் நகை எடுத்தார். பின்னர் நகையை பைக்கின் பெட்டியில் வைத்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

    அணுமின் நகரிய குடியிருப்பு பகுதியில் வந்த போது கடை அருகே பைக்கை நிறுத்தி பொருட்கள் வாங்கினார்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பைக் பெட்டியை உடைத்து உள்ளே இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு பகுதியான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் நகரிய குடியிருப்பில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    காவலாளியை கட்டிப்போட்டு கார்கள் திருடப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சொகுசு கார் மதுரவாயலில் மீட்கப்பட்டுள்ளது. கார் கடத்தல் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    நந்தம்பாக்கத்தை அடுத்த மணப்பாக்கம் ரிவர்வியூ காலனி-அம்பேத்கார் நகர் லிங்க் சாலையில் ஹூண்டாய் கார் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது.

    நேற்று இரவு 60-க்கும் மேற்பட்ட கார்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. காவலாளியாக வேளச்சேரியை சேர்ந்த மனோகரன் இருந்தார்.

    நேற்று அதிகாலை 10 பேர் கும்பல் திடீரென குடோனுக்குள் புகுந்து கற்களை வீசினர். அவர்கள் காவலாளி மனோகரனை சரமாரியாக தாக்கி கட்டி போட்டனர். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 7 சொகுசு கார்களை திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பரங்கிமலை துணை கமிஷனர் கல்யாண் உத்தரவுப்படி கார் திருட்டு கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கடத்தப்பட்ட 7 கார்களில் 5 கார்கள் வளசரவாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை போலீசார் மீட்டனர்.

    மேலும் அந்த கார்களில் போலி நம்பர் பிளேட்டுகள் ஒட்டப்பட்டிருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணை செய்த போது வளசரவாக்கத்தில் உள்ள கடையில் போலி நம்பர் பிளேட்டுகள் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அதில் கார் கடத்தல்காரர்கள் உருவம் பதிவாகி இருந்தது. இதே போல் வளசரவாக்கத்தில் கார்கள் மீட்கப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவிலும் அதே வாலிபர்கள் உருவம் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இந்த நிலையில் கடத்தப்பட்ட மற்றொரு கார் மதுரவாயல், அஷ்டலஷ்மி நகர் 16-வது தெருவில் அனாதையாக நிறுத்தப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த காரை தனிப்படை போலீசார் இன்று அதிகாலை மீட்டனர். காரை நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    கடத்தப்பட்ட மேலும் ஒரு கார் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் உள்ளது. அதனையும் மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கார் கடத்தல் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இதில் முக்கிய குற்றவாளிகளாக ராமாபுரம் செந்தில், வளசரவாக்கம் ரமேஷ் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.

    தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கிய பின்னர் தான் கார் திருட்டில் உள்ள பின்னணி தகவல்கள் தெரிய வரும்.
    தி.மு.க.வு.டன் காங்கிரஸ் இருக்கும் வரையில் தி.மு.க.வுக்கு இறங்கு முகம்தான் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நேற்று நள்ளிரவு பெங்களூரில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையதத்ல் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

    தி.மு.க. தலைவர் கருணாநிதி பி.ஜே.பி.யும் அ.தி.மு.க.வும் நெருங்கி வருகிறது. இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று கூறியிருக்கிறார்.

    காங்கிரசுடனான கூட்டணியை தி.மு.க. முறித்த போது கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்லி இருந்தார். மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார் அது ஏன்? அவர் மட்டும் கூட்டணி வைக்கலாம் மற்றவர்கள் வைக்க கூடாதா? தி.மு.க.வு.டன் காங்கிரஸ் இருக்கும் வரையில் தி.மு.க.வுக்கு இறங்கு முகம்தான்.

    சமஸ்கிருத மொழி தமிழை போல பழமையான மொழி தான் – அதை பயில்வது தவறு இல்லை.

    தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவது குறித்தான பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் இந்திய அரசு, இலங்கை அரசு, தமிழக அரசு, இலங்கையில் உள்ள வடகிழக்கு மாகாண அரசு, ஆகியவை இணைந்து தீர்வு காண வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்படுகிறது. வெகு விரைவில் தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னை வந்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

    வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும், பா.ம.க. தனித்து தான் போட்டியிடும். நான் டெல்லியில் தேர்தல் ஆணைய தலைவரை சந்தித்து 6 மணி நேரம் பேசினேன்.

    தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் தர வேண்டும் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அவருடைய கட்சி சின்னத்தை முடக்க வேண்டும்.

    இதுகுறித்து பாராளு மன்றத்தில் பேசுவேன். பாராளுமன்ற நிலை குழு சென்னை வரவிருக்கிறது. அவர்களையும் சந்தித்து இது குறித்து மனு கொடுப்பேன்.

    திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி குறித்து உண்மை வெளிவர வேண்டும். இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×