என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தமிழகத்தில் யார் எந்த மொழியில் படிக்க வேண்டும் என சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தது கட்சிரீதியான சந்திப்பு கிடையாது. மக்களுக்கு நலன் தரக்கூடிய வளர்ச்சி பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை பெற பிரதமரை மாநிலத்தின் முதல்- அமைச்சர் சந்தித்து உள்ளார். இது ஆரோக்கியமான சந்திப்பு.

    இந்த சந்திப்பை அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கூட்டணி என கூறுவது சரியானதல்ல. அ.தி.மு.க. பொதுச் செயலாளர், பா.ஜ.க. தலைவரை சந்திக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதிராக மாநில அரசு செயல்பட்டால் அதை எதிர்த்து பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபடும்.

    மாணவர்களிடம் ஒரு மொழியை திணிக்க கூடாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். மத்திய பாடத்திட்டத்தில் எந்த ஒரு மொழியையும் மாணவர்கள் விரும்பினால் எடுத்து கொள்ளலாம். திணிக்கப்படாது என மத்திய அரசு கூறி உள்ளது.

    நாட்டின் எல்லையை தாண்டினால் ஆங்கிலம் தேவைப்படுவதால் அதை கற்கிறோம். ஒரு மாநிலத்தை தாண்டி சென்றால் இந்தி தேவைப்படுகிறது. அதை கற்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கருணாநிதியோ மற்ற தலைவர்களோ யார் எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை கிடையாது.

    பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் வெற்றி பெற்ற மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பா.ஜ.க. செயல்பாட்டிற்கும் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 10 லட்சம் ஜி.பி.எஸ். கருவிகளை வழங்க உள்ளது. கடலில் செல்போன் கோபுரங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. ஆனால் மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கானத்தூரில் நண்பர் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    கானத்தூரில் நண்பர் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தண்டி, நிலா தெருவில் வசித்து வருபவர் மாரி. கடந்த 6-ந்தேதி இவரது வீட்டில் இருந்த 24 பவுன் நகை திருட்டு போனது.

    இதுகுறித்து கானத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாரி வீட்டில் தங்கியிருந்த அவரது நண்பர் திருப்பதியை சேர்ந்த திலீப்குமார் நகையை திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து 24 பவுன் நகையை மீட்டனர்.

    சென்னை விமான நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் சரக்கு ஏற்றி, இறக்கும் இடத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போனது. இதுகுறித்து விமான நிலைய போலீசில் அதிக அளவு புகார்கள் வந்தன.

    இன்ஸ்பெக்டர் வெங்கட் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது மீனம்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேல்மருவத்தூர் அருகே 75 நாய்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பிராணிகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் அருகே உள்ளது கீழாமூர் கிராமம். இங்கு ஏராளமானதெரு நாய்கள் இருந்தன.

    இந்த நிலையில் கடந்த வாரம் கிராமத்தில் ஒதுக்குபுறமான இடம் மற்றும் வயல்வெளி பகுதியில் ஏராளமான நாய்கள் எரிந்த நிலையில் கொல்லப்பட்டு கிடந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் பிராணிகள் நல ஆர்வலரும் என்ஜினீரியங் மாணவருமான அஷ்வத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தலைமையிலான குழுவினர் கீழாமூர் கிராமத்துக்கு வந்து பார்வையிட்டனர் அவர்கள் எரித்து கொல்லப்பட்ட நாய்களின் உடல்களை மீட்டு கிராமநிர்வாக அலுவலர் முன்னிலையில் தகனம் செய்தனர்.

    இது குறித்து மேல்மருவத்தூர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கடந்த சிலமாதங்களில் மட்டும் கீழாமூர் கிராமத்தில் 40–க்கும் மேற்பட்ட ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்று இருப்பது தெரிந்தது.

    இதனால் அதே பகுதியை சேர்ந்த அண்ணன்–தம்பிகளான முத்து, முருகதாஸ் உள்பட 4 பேர் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். ஆடுகளை இழந்த அவர்கள் பழிக்கு பழியாக 75–க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து உயிரோடு எரித்து கொன்று இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து முத்து, முருகதாசை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக அதே பகுதியை சேர்நத மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    மொத்தமாக 75 நாய்களை விரட்டிப்பிடிப்பது கடினம். எனவே இந்த நாய்களை பிடிக்க மேலும் பலரை அவர்கள் உதவிக்கு அழைத்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    கொல்லப்பட்ட பல நாய்களுக்கு விஷமும் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த நாய்களின் உடல்களை தின்ற காகம், பூனையும் அதிக அளவு கீழாமூர் கிராமத்தில் இறந்து இருக்கிறது.

    இது குறித்து பிராணிகள் நல ஆர்வலர் அஷ்வத் கூறும் போது: கீழாமூர் கிராமத்தில் ஆடுகளை நாய்கள் கடித்து உள்ளன. அதற்கு பழிவாங்கும் படலமாக நாய்களுக்கு உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து பிடித்து இருக்கிறார்கள்.

    “மயங்கிய அந்த நாய்கள் மீது மண்எண்ணை ஊற்றி உயிரோடு எரித்து கொன்று உள்ளனர். இது தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்து உள்ளோம்” என்றார்.

    ஆடுகளை இழந்த கோபத்தில் பழிவாங்குவதற்காக 75 நாய்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பிராணிகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுமக்கள் புகாரை ஏற்று தாம்பரம்–வேளச்சேரி ரோட்டில் பயணிகள் நிழற்குடை கட்ட எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்துள்ளார்.

    சென்னை:

    செம்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவுக்கு வரவேற்பு மற்றும் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

    முருகன் தலைமை தாங்கினார். கமலக்கண்ணன் வரவேற்றார். பா.ஜனதா சார்பில் எஸ்.ஆர்.ராஜாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த செம்பாக்கம் வேத சுப்பிரமணியன் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். தாம்பரம்-வேளச்சேரி ரோட்டை அகலப்படுத்தும் போது செம்பாக்கம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. இதனால் 2 வருடமாக பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

    பொதுமக்கள் புகார்களை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் 2 பயணிகள் நிழற் குடைகள், செம்பாக்கம் 7–வது தெருவில் இருந்து நன்மங்கலம் ஏரிக்கு நீர்வழிப்பாதை சீரமைப்பு, அஸ்தினாபுரம்– செம்பாக்கம் சிமெண்டு ரோட்டை அகலப்படுத்துதல் ஆகியவற்றை செய்து தருவதாக உறுதி அளித்தார்.

    மேலும் தொல்லியல் துறை யின் தடை ஆணையை ரத்து செய்ய முயற்சி மேற்கொள் வதாகவும், எஸ்.ஆர்.ராஜா உறுதியளித்தார். சுந்தரமூர்த்தி, வெங்கட்ரமணி, லோகநாதன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பணம் வைத்து சூதாடியதாக 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் தெரு பகுதியில் காசு வைத்து சிலர் சூதாடி கொண்டிருப்பதாக சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட காஞ்சீபுரத்தை சேர்ந்த அன்சாரி, குமார், நாகராஜ், முரளி, வாசு, சந்தியப்பன், கணேசன், தமிழ்செல்வன் மற்றும் செந்தில் ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 410 பறிமுதல் செய்யப்பட்டது.

    பாலாற்று படுகையில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பாலாற்று படுகை பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக காஞ்சி தாலுக்கா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருப்பருத்திகுன்றம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.

    இதேபோல் மாகறல் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த டில்லிகணேஷ், நீலகண்டன், இளங்கோ ஆகியோரை மாகறல் போலீசார் கைது செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சுங்குவார்சத்திரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் மற்றும் 2 வயது சிறுவன் பலியானார்கள். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    செங்கல்பட்டு, பாரதி செல்லம்மா தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார். பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யபிரியா இவர்களது 2-வது மகன் தேஜாய்.

    நேற்று இரவு விஜயகுமார் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள அண்ணன் வீட்டிற்கு காரில் புறப்பட்டார். அவர்களுடன் விஜயகுமாரின் தாய் விசாலாட்சி, அண்ணி தேவி (வயது 30), அவரது 4 வயது மகள் லட்சுதா ஆகியோர் சென்றனர்.

    நள்ளிரவு 12 மணியளவில் சுங்குவார்சத்திரத்தை அடுத்த தர்காமேடு அருகே கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரி மீது திடீரென கார் மோதியது.

    இதில் கார் முழுவதும் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய தேவி, சிறுவன் தேஜாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் விஜயகுமார், அவரது மனைவி சத்யபிரியா, தாய் விசாலாட்சி, சிறுமி லட்சுதா ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து அறிந்ததும் சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த 4 பேருக்கும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிசிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நங்கநல்லூர் தபால் பெட்டியில் கிடந்த பாஸ்போர்ட்டுகள் காலாவதியானவையா? என்பது பற்றி தகவல் தெரிவிக்குமாறு குடியுரிமை அதிகாரிகளுக்கு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
    ஆலந்தூர்:

    சென்னை நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந் தேதி கடிதங்களை எடுக்க முயன்றபோது கட்டுக்கட்டாக 23 பாஸ்போர்ட்டுகள் இருந்ததை கண்ட தபால் ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். ஆய்வு செய்த தபால் துறை அதிகாரிகள் பாஸ்போர்ட்டுகளை பழவந்தாங்கல் போலீசில் ஓப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி 13 பாஸ்போர்ட்டுகளும், 8-ந் தேதி 15 பாஸ்போர்ட்டுகளும் தபால் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றிய போலீசார் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டு சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக மடிப்பாக்கம், உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டு மாயமாகி விட்டதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் செய்து மாற்று பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

    இதனையடுத்து மற்ற பாஸ்போர்ட்டுகளில் இருந்த முகவரிக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். அதில் போலீஸ் விசாரணைக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    மேலும் தபால் பெட்டியில் கிடந்த பாஸ்போர்ட்டுகள் காலாவதியாகி விட்டதா? அல்லது அதற்கு பதிலாக வேறு பாஸ்போர்ட்டுகள் பெறப்பட்டு உள்ளதா? என்ற விவரங்களை தெரிவிக்குமாறு சென்னையில் உள்ள குடியுரிமை அதிகாரிகளுக்கு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
    காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளை நீக்கி அதன் தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலோடு, காஞ்சீபுரம் அடுத்த பரந்தூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் சங்கர், கூரம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்.

    இதே போன்று பா.ம.க. மாநில துணைத்தலைவர் காஞ்சி குமாரசாமி கட்சியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சுனாமியால் பாதிக்கப்பட்டவரின் 2 மகள்களின் கல்வி செலவை கலெக்டர் கஜலட்சுமி ஏற்றுள்ளார். மேலும் வீட்டுமனைப்பட்டா கிடைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலில் காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.

    300-க்கும் மேற்பட்டோர் ஆழிப்பேரலையில் சிக்கினர். இவர்களில் 73 பேர் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

    இதற்கிடையே கானத்தூரை அடுத்த கானத்து ரெட்டிகுப்பத்தில் சுனாமி அலையில் சிக்கி மணலில் புதைந்த மீனவர் சண்முக வேலை மீட்பு குழுவினர் உயிரோடு மீட்டனர். ஆனால் அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து இருந்தது.

    அவருக்கு அரசின் உதவிகள் ரூ. 25 ஆயிரம் மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சண்முகவேலுக்கு அரசின் உதவிகள் கிடைக்கவில்லை.

    உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் அவரால் பழையபடி மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. இதனால் மனைவி மற்றும் 3 மகள், ஒரு மகனுடன் மிகவும் கஷ்டப்பட்டார். படிப்பு செலவுக்கே திண்டாடும் நிலை உருவானது.

    இதுகுறித்து காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமியின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சண்முகவேலின் நிலையை அறிந்த கலெக்டர் கஜலட்சுமி அவருக்கு தனிப்பட்ட மனிதாபிமான முறையில் உதவி செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து சண்முகவேலின் 2-வது மகள் மஞ்சுளாவின் பட்டப்படிப்பு மற்றும் 3-வது மகள் யுவஸ்ரீயின் கல்விச் செலவு தொகை ரூ. 55 ஆயிரத்தை தான் ஏற்பதாக கூறினார். மேலும் வீட்டுமனைப்பட்டா கிடைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

    இதுகுறித்து சண்முகவேல் கூறியதாவது:-

    திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நான் பிழைப்புக்காக கானத்துரெட்டி குப்பத்துக்கு வந்தேன். மீன்பிடி தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தினேன்.

    சுனாமி தாக்குதலில் மண்ணில் புதைந்த என்னை மீட்பு குழுவினர் மீட்டனர். உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் பழையபடி என்னால் மீன்பிடி தொழில் செய்ய முடியாது என டாக்டர்கள் தெரிவித்தனர். அரசு அறிவித்த நிவாரண உதவி தொகை, வீட்டு மனைப் பட்டா கிடைக்கவில்லை.

    போதிய வருமானம் இல்லாததால் மகள்களை படிக்க வைக்கவும், குடும்ப செலவுக்கு பணம் இல்லாமலும் கஷ்டப்பட்டேன்.

    எனது நிலையை அறிந்த கலெக்டர் கஜலட்சுமி எங்களுக்கு உதவி இருக்கிறார். 2 மகள்களின் கல்விச் செலவை ஏற்பதாகவும் மற்றும் வீட்டு வாடகைக்கு ரூ. 10 ஆயிரத்து 500-ம் வழங்கினார். அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி கலெக்டர் கஜலட்சுமி கூறும்போது, “சுனாமியால் பாதிக்கப்பட்ட சண்முகவேலுக்கு மனிதாபிமான முறையில் அவரது மகள்களின் கல்வி செலவை ஏற்றுள்ளேன். மேலும் மூத்த மகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    சண்முகவேல் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வருவாய்த்துறையினர் மூலம் ஆய்வு செய்து அவருக்கு அதே பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கால்களை இழந்த ஆமைக்கு சக்கரங்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    வண்டலூர்:

    சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 14 நட்சத்திர ஆமைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் உள்ள கீரிப்பிள்ளை கடித்ததில், இங்குள்ள ஒரு பெண் நட்சத்திர ஆமையின் முன்னங்கால்கள் நடக்கமுடியாத அளவிற்கு ஊனமாகி விட்டது. இந்த ஆமையால் நடமாடவும், உணவைத் தேடிச்செல்லவும் இயலாத நிலை ஏற்பட்டது.

    இதனை சரிசெய்வதற்காக பூங்கா கால்நடை மருத்துவர் குழு சிறப்பு ஏற்பாட்டை செய்தது. அதன்படி ஆமையின் முன்னங்கால்களுக்கு பதிலாக இரண்டு சக்கரங்கள் அடிப்புற ஓட்டின்மீது ஒட்டி பொருத்தப்பட்டன. இந்த சக்கரங்களின் உதவியுடன் ஆமை வழக்கத்தை விட வேகமாக விரும்பும் இடத்திற்கு சென்று வரவும், உணவைத் தேடிச்செல்லவும் முடிகிறது.

    இந்த தகவலை பூங்கா இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். 
    ×