search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் எந்த மொழியில் படிக்க வேண்டும் என சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
    X

    தமிழகத்தில் எந்த மொழியில் படிக்க வேண்டும் என சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

    தமிழகத்தில் யார் எந்த மொழியில் படிக்க வேண்டும் என சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தது கட்சிரீதியான சந்திப்பு கிடையாது. மக்களுக்கு நலன் தரக்கூடிய வளர்ச்சி பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை பெற பிரதமரை மாநிலத்தின் முதல்- அமைச்சர் சந்தித்து உள்ளார். இது ஆரோக்கியமான சந்திப்பு.

    இந்த சந்திப்பை அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கூட்டணி என கூறுவது சரியானதல்ல. அ.தி.மு.க. பொதுச் செயலாளர், பா.ஜ.க. தலைவரை சந்திக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதிராக மாநில அரசு செயல்பட்டால் அதை எதிர்த்து பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபடும்.

    மாணவர்களிடம் ஒரு மொழியை திணிக்க கூடாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். மத்திய பாடத்திட்டத்தில் எந்த ஒரு மொழியையும் மாணவர்கள் விரும்பினால் எடுத்து கொள்ளலாம். திணிக்கப்படாது என மத்திய அரசு கூறி உள்ளது.

    நாட்டின் எல்லையை தாண்டினால் ஆங்கிலம் தேவைப்படுவதால் அதை கற்கிறோம். ஒரு மாநிலத்தை தாண்டி சென்றால் இந்தி தேவைப்படுகிறது. அதை கற்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கருணாநிதியோ மற்ற தலைவர்களோ யார் எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை கிடையாது.

    பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் வெற்றி பெற்ற மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பா.ஜ.க. செயல்பாட்டிற்கும் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 10 லட்சம் ஜி.பி.எஸ். கருவிகளை வழங்க உள்ளது. கடலில் செல்போன் கோபுரங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. ஆனால் மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×