என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்திரமேரூரில் வெடிச்சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்ததில் தாய்-மகன் பலி: போலீசார் விசாரணை
    X

    உத்திரமேரூரில் வெடிச்சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்ததில் தாய்-மகன் பலி: போலீசார் விசாரணை

    உத்திரமேரூரில் பலத்த வெடிச்சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்ததில் தாயும், அவருடைய மகனும் இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். வீட்டில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் இச்சம்பவம் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 33). இவர் கிணற்றில் பாறையை வெடி வைத்து தகர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயா (28). இவர்களுடைய குழந்தைகள் தீனதயாளன் (5), திவாகரன் (2). தீனதயாளன் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று இரவு ரவி வெளியே சென்றிருந்தார். அவருடைய குழந்தை திவாகரன் வெளியே விளையாடி கொண்டிருந்தது. வீட்டில் ஜெயா, அவருடைய அண்ணன் மோகன் (33), சிறுவன் தீனதயாளன் ஆகியோர் இருந்தனர்.

    இந்த நிலையில் திடீரென ரவியின் வீட்டில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் அவருடைய வீடு இடிந்து தரைமட்டமானது. வெடிச்சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    அப்போது ரவியின் வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்த ஜெயா, மோகன் ஆகியோரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஜெயா பரிதாபமாக இறந்தார். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மோகன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் பற்றி அறிந்த மதுராந்தகம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசங்கரன் மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படைவீரர்கள் இடிபாடுகளை அகற்றிய போது அங்கு தீனதயாளன் பிணமாக மீட்கப்பட்டான்.

    இது தொடர்பாக உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலிண்டர் வெடித்ததால் வீடு இடிந்து விழுந்ததா? என்ற கோணத்தில் முதலில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சிலிண்டர் வெடித்ததற்கான அடையாளம் எதுவும் அங்கு இல்லை.

    எனவே ரவி வீட்டில் வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் இச்சம்பவம் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×