என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    செங்கல்பட்டு அருகே சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளது.இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு காட்டாங் கொளத்தூர் அஞ்சூர் கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுத்தைபுலி நடமாடுவதாக அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு வனசரகர் கோபுவுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வனத்துறையின் சார்பில் காட்டிற்குள் சிறுத்தையை பிடிக்க கூண்டுகளும், நடமாட்டத்தை கண்டுபிடிக்க சி.சி.டி.வி கேமிராவும் பொருத்தப்பட்டன.

    பொதுமக்கள் இரவில் வெளியே செல்ல கூடாது. இரவில் வீட்டில் விளக்குகளை எரிய வைக்கவேண்டும் என மக்களிடம் வனசரகர் கூறினார்.

    இந்தநிலையில் நேற்றுஇரவு அஞ்சூர் பழைய கிராமம் அரசு மேல் நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள இடத்திற்கு ஒரு சிறுத்தை புலி வந்தது. அதை பார்த்ததும் அங்குள்ள நாய்கள் குரைத்தன. உடனே அப்பகுதி மக்கள் வீட்டில் லைட்டை போட்டு விட்டு வெளியே வந்தனர். அப்போது சிறுத்தை புலி ஒரு நாய்யை அடித்து கொன்று ரத்தம் சொட்ட, சொட்ட வாயில் கவ்விய படி சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இது குறித்து உடனடியாக வன சரகர் கோபுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வன ஊழியர்கள் 6 பேருடன் ஆயுதங்களுடன் சென்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் சிறுத்தை புலியை தேடி வருகிறார்கள்.சிறுத்தைபுலி வந்த இடத்தில் இருந்து சி.சி.டி.வி கேமிரா வெகு தொலைவில் உள்ளதால் அதில் அதன் உருவம் பதிவாகவில்லை.

    மேலும் காட்டிற்குள் உள்ள மற்ற சி.சி.டி.வி கேமிராக்களை உழியர்கள் பரிசோதித்து வருகிறார்கள். அஞ்சூரை சுற்றியுள்ள கொண்டமங்களம்,கருநீலம், தென்மேல்பாக்கம், நிலச்சகரை அணை, புன்ன வாக்கம், பட்டரவாக்கம், புலிகுடிவணம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆடு, மாடுகளை, வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டிவைக்கும் படியும் பொது மக்களிடம் கூறினர்.

    பழைய அஞ்சூர் கிராமத்திற்கு சிறுத்தை புலி வந்தது நாய்யை இழுத்து சென்றதால் மீண்டும் அங்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே அப்பகுதி மக்கள் இரவில் தனியாக எங்கும் செல்ல வேண்டாம். வீட்டில் விளக்குகளை எரிய வைக்க வேண்டும். இவ்வாறு வன சரகர் கோபு மக்களிடம் கூறி உள்ளார். மேலும் அந்த காட்டில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஆலந்தூரில் வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர் லஸ்கர் தெருவை சேர்ந்தவர் அமல்சேகர். இவர் இன்று காலை பழுதான மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு ஆலந்தூர் ரவுண்டானா அருகே சென்றார். அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அமல்சேகரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து பரங்கிமலை போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ஆலந்தூர் கண்ணன் காலனியை சேர்ந்த நிர்மல் ராஜ், ரஜினி ஆகியோரை கைது செய்தார்.

    செடியில் பூ பறிக்கும்போது மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பலியானார். காப்பாற்ற சென்ற கணவனும் பலியானார்.
    சென்னையை அடுத்த ஜல்லடியன்பேட்டை பத்மாவதி நகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுபத்திரா (25). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. சுபத்திரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    நேற்று மாலை சுபத்திரா தனது கணவருடன் சேர்ந்து வீட்டின் மாடியில் நின்று மல்லி செடியில் இருந்து இரும்பு கம்பியை கொண்டு பூக்களை பறித்துக் கொண்டு இருந்தார்.

    சுபத்திரா பூ பறிக்க பயன்படுத்திய இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சுபத்திராவின் இடது கை கருகியது.

    இதைக்கண்டதும் மனைவியை காப்பாற்ற சவுந்திரராஜன் முயன்றபோது, அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் கணவன்–மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலியானார்கள்.

    இவர்களது சத்தம் கேட்டு சவுந்திரராஜன் தந்தை செல்வக்குமார் மகன் மற்றும் மருமகள் ஆகியோரை தொட்டபோது மின்சாரம் தாக்கி அவரும் தூக்கி வீசப்பட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலியான இருவரது உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த செல்வகுமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் விஞ்ஞானிகள் கடத்தல் ஒத்திகையால் ஊழியர்களுக்கிடையே பரபரப்பு ஏற்படுத்தியது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இங்கு தீவிரவாதிகள் ஊடு வலை தடுப்பது குறித்து அதிகாரிகள் அடிக்கடி பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை 5 பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் போல் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குள் ஊடுருவினர். இதுபற்றி பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

    தீவிரவாதிகள் போல் அணுமின்நிலைய பகுதிக்குள் புகுந்த 5 பேரும் அங்கிருந்த விஞ்ஞானிகள் சிலரை துப்பாக்கி முனையில் கடத்தி அருகில் உள்ள அறைக்குள் அடைத்தனர். மேலும், நிபந்தனைகள் விதித்து அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பயத்தில் வெளியே செல்ல முயன்றனர்.

    ஆனால் அவர்களை பாதுகாப்பு படையினர் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. இதைத்தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்பு வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் கமாண்டோ படையினர் அணுமின் நிலையத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் போல் வேடமிட்ட பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய விஞ்ஞானிகளை அதிரடியாக மீட்டனர்.

    இதன்பின்னரே இது ஒத்திகை என்பது அங்கிருந்த ஊழியர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்து விட்டதாக நகரிய குடியிருப்புகளிலும் தகவல் பரவியது.

    அங்கிருந்த ஊழியர்களின் உறவினர்கள் போன் மூலம் அணுமின்நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். பாதுகாப்பு ஒத்திகை என்று அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    திருப்போரூர், கேளம்பாக்கம் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்போரூர்:

    திருப்போரூர் 110 கி.வோ. துணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருப்போரூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை பெறும் திருப்போரூர், தண்டலம், இள்ளலூர், மடையத்தூர், செம்பாக்கம், கரும்பாக்கம், கொட்டமேடு, மயிலை, சென்னேரி, திருவடிசூலம்,

    அனுமந்தபுரம், காலவாக்கம், தையூர், கேளம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு, ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் சப்ளை இருக்காது இந்த தகவலை மறைமலைநகர் செயற்பொறியாளர் ஏ.எஸ். மாலதி தெரிவித்துள்ளார்.

     

     

    மாங்காடு அருகே பாலிடெக்னிக் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த பரணி புத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராம்குமார். ஆலப்பாக்கத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை ராம்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் மொய் பணம்-நகைகள் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தாம்பரம்:

    குரோம்பேட்டை சி.எல்.சி. ரோட்டில் ஒரு தனியார் திருமண மண்டபம் உள்ளது. இன்று காலை கூடுவாஞ்சேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரை சேர்ந்த காமராஜ் (56) என்பவரது மகள் தீபிகாவின் திருமணம் நடந்தது.

    நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் வீட்டினர் விருந்து சாப்பிட்டனர். அதன் பின்னர் மணமகள் அறைக்கு வந்தனர்.

    அப்போது அங்கு வைத்திருந்த மணமகளின் 7 பவுன் தங்க நகைகள், மொய் பணம் ரூ.30 ஆயிரம், ஒரு செல்போன் மற்றும் ஒரு கிலோ வெள்ளி சாமான்களை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா (சி.சி.டி.வி.) பதிவான வீடியோவை போட்டுப் பார்த்தனர்.

    அதில் சந்தேகப்படும்படி 2 பெண்களும், ஒரு நபரும் நடமாடுவது தெரிந்தது. எனவே நகை மற்றும் பணத்தை இவர்கள் கொள்ளையடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
    குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த 3 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம் 13-வது வார்டு எம்.ஜி.ஆர்.நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. நேற்று இரவு ‘சி’ பிளாக்கில் உள்ள 3-வது மாடியின் பால்கனியில் அங்கு குடியிருக்கும் சுந்தர், அன்பு, சிவக்குமார் ஆகியோர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பால்கனி சுவர் இடிந்து 3 பேரும் கீழே விழுந்தனர். பலத்த காயம் அடைந்த சுந்தருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அன்பு, சிவக்குமார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் அ.தி.மு.க - தி.மு.க.வை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் வணிகர் வீதியில் பாமக சார்பில் சட்டசபை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார் அவர் பேசியதாவது:-

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பணநாயக முறைப்படியே நடைபெற்றது. எனினும் எங்களுக்கு 25 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். பா.ம.க. 5.3 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்தே போட்டியிடும்.

    தமிழகத்தில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியின் ஆட்சியை அகற்ற அண்ணாதுரை கட்சியை நடத்தினார். ஆனால் இன்று பா.ம.க.விற்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளை வீழ்த்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. அது நிறைவேறும் வரை பா.ம.க. ஓயாது.

    அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டினை அவர் வழி நடப்பதாக செல்லும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கடைபிடிக்க வில்லை. மாறாக பா.ம.க. தான் கடைபிடிக்கிறது.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே நாங்கள் ஜாதி கட்சி அல்ல. எங்களை அப்படி கூறாதீர்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும் போது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவினை தடுக்க தேர்தல் கமி‌ஷன் தவறிவிட்டது.

    எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து அவர்களின் கூறைகளை கேட்டு அதைதான் நாங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டோம். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் அ.தி.மு.க., தி.மு.க. விற்கு மாற்றாக புதிய மாற்றத்தை உருவாக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டோம். இந்தமுறை எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

    ஆனால் அடுத்தமுறை அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை நோக்கி பயணம் தொடரும் என்றார்.

    கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, நிர்வாகிகள் திருகச்சூர் ஆறுமுகம், பொன்.கங்காதரன், மகேஷ் குமார், உமாபதி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தரமணியில் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேளச்சேரி:

    தரமணி அம்பிகா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். வேளச்சேரி காந்தி ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார்.

    மதியம் வந்த போது வீட்டு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்து 3½ பவுன் நகை, ரூ.22 ஆயிரம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு சென்று விசாரிக்கிறார்கள்.

    கத்திமுனையில் அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்ற போது அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மடக்கி பிடித்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் காட்டாங்கொளத்தூர், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ் என்பவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    இங்கு தினமும் நகையை அடகு வைப்பதற்கும், திருப்புவதற்கும் பல பேர் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று பகல் 12.30 மணி அளவில் 3 பேர் நகை அடகு கடைக்கு வந்தனர். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். உடனே பிரகாஷ் கடையின் உள்ளே சென்று தண்ணீர் குடிக்குமாறு கூறினார்.

    உள்ளே சென்ற 3 பேரும் திடீரென பிரகாசிடம் கத்தியை காட்டி நகை-பணத்தை தரும்படி கேட்டு மிரட்டினர். இதனால் பயந்து போன பிரகாஷ் அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் 3 பேரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து மறைமலைநகர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    திருப்போரூர் முருகன் கோயில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. உண்டியலில் 68 லட்சத்து 54 ஆயிரத்து 199 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 534 கிராம் தங்கமும், 6 கிலோ 700 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.
    திருப்போரூர்:

    திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.

    நேற்று காஞ்சிபுரம் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் நற்சோனை, கோயில் ஆய்வாளர் கோவிந்தராஜ் மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் 68 லட்சத்து 54 ஆயிரத்து 199 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 534 கிராம் தங்கமும், 6 கிலோ 700 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் வருவாய் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் சென்னை சாய்குரூப் தன்னார்வலர்கள் மற்றும் திருப்போரூர் அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் நேற்று காலை முதல் மாலை வரை ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையைவிட இம்முறை கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×