என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம் சிற்பங்கள் வரலாற்று சிறப்பு பெற்றவை. உலகளவில் பழமைக் கால சிற்ப கலை என்ற வரலாற்று மதிப்பு இதற்கு உள்ளது.
மாமல்லபுரத்தில் தயாராகும் சிற்பங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மத்திய அரசுக்கு அன்னிய செலாவணி வருவாயும், தொழிலாளர்கள் நல்ல வருவாயும் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் சிற்ப ஆர்டர்களை முடித்தாலும் அதை வெளிநாட்டுக்கு அனுப்ப தொல்லியல் துறையின் தடையில்லா சான்று உடனடியாக கிடைக்காததால் அனுப்பமுடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொல்லியல்துறை அலுவலகம் மாமல்லபுரத்தில் இருந்தும் சிற்பங்களை பரிசோதிக்க சென்னை தலைமை செயலகத்தில் உள்ள மத்திய தொல்பொருள் அலுவலகத்துக்கு கொண்டு வர அதிகாரிகள் கூறுவதாக தெரிகிறது.
தொழிலாளர்கள் சிலைகளை பாதுகாப்பாக அங்கு கொண்டு சென்ற பிறகும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் தாமதப்படுத்துவதாக சிற்பம் செய்யும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதனால் டாலர் மதிப்பு குறைவது, கடன் வட்டி கூடுதல் என பல இன்னல்களுக்கு மாமல்லபுரம் சிற்பிகள் ஆளாகின்றார்கள்
எனவே சிற்பங்களுக்கு தடையில்லா சான்றை மாமல்லபுரத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிற்ப உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள அஞ்சூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஒரு நாயை சிறுத்தைப்புலி அடித்து கொன்றதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அதிகாரி ரிட்டோ சிரியாஸ் உத்தரவுப்படி செங்கல்பட்டு வனச்சரகர் கோபு தலைமையிலான வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிந்து இருந்ததை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அஞ்சூர் வனப்பகுதியில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமிரா மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கூண்டும் வைத்தனர்.
இந்த நிலையில் காமிராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு கேமிராவில் சுமார் 7 அடி நீளம், 3 அடி உயரம் உள்ள சிறுத்தைப்புலி கம்பீரமாக நடந்து செல்வது பதிவாகி இருந்தது.
மேலும் அந்த காமிராவில் முள்ளம் பன்றி, முயல் ஆகிய விலங்குகள் செல்லும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இதைத் தொடர்ந்து அங்குள்ள வனப்பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதனை பிடிக்க வனத்துறையினர் தீவிர ஆலோசனை செய்து வருகிறார்கள். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிக கூண்டுகள், கண்காணிப்பு கேமிரா வைக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான பணி விரைந்து நடந்து வருகிறது.
சிறுத்தை நடமாட்டத்தால் அஞ்சூர் கிராம மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர். அவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதேபோல் அருகில் உள்ள தென்னேரி, புலிக்குடிவனம், பட்டரைவாக்கம், ஈச்சங்கரனை, கருநீலம், கொண்டமங்கலம் ஆகிய வனப்பகுதி கிராமத்திலும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம், இரவில் வீட்டு முன்பு விளக்குகளை ஒளிர விட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்ட எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து வன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கண்காணிப்பு கேமிராவில் பதிவான சிறுத்தை புலிக்கு 12 வயது இருக்கும். தண்ணீர் தேடி அது கிராம பகுதிக்குள் புகுந்து இருக்கலாம். பொது மக்களுக்கு ஆபத்து இல்லாமல் அதனை கூண்டு வைத்து விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் அச்சப்பட தேவையில்லை’’ என்றார்.
கடந்த 6 மாதத்துக்கு முன்பும் இதேபோல் சிறுத்தைப்புலி அஞ்சூர் வனப்பகுதிக்குள் புகுந்தது. அதன் உருவமும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.
அதனை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்த போது அந்த சிறுத்தைப்புலி சிக்காமல் வனப்பகுதிக்குள் சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்த மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே மெட்ரோ ரெயில் பணிக்காக தூண் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 70 அடி உயரம் கொண்ட இந்த ரெயில்வே தூணில் உள்ள இடைப்பகுதியில் ஒரு நாய் சிக்கிக்கொண்டு செய்வதறியாமல் கத்திக்கொண்டு இருந்தது.
கடந்த 15 நாட்களாக அந்த நாய் தூணில் சிக்கித்தவித்துக்கொண்டிருப்பதை கண்ட அந்த பகுதி ஆட்டோ டிரைவர்கள், இதுபற்றி கிண்டியில் உள்ள புளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கிண்டி புளூ கிராஸ் அமைப்பினர், விமான நிலைய போலீசார், ஆட்டோ டிரைவர்கள் உதவியுடன் நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலே ஏறி நாயை பிடிக்க முயன்றால் அது பயந்து போய் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தூணின் அடியில் அனைவரும் வலையை பிடித்துக்கொண்டு நின்றனர்.
பின்னர் புளூ கிராஸ் அமைப்பினர் தூணின் மேலே சென்று நாயை பிடிக்க முயன்றனர். பயந்து போன நாய் அங்கிருந்து தவறி கீழே இருந்த வலையில் விழுந்தது. உயிருடன் மீட்கப்பட்ட அந்த நாய்க்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் 64-வது முறையாக கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.
விமான நிலையத்தில் இதுவரை 15 முறை மேற்கூரைகள் இடிந்து விழுந்து உள்ளன. 20 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 21 முறை தடுப்பு கண்ணாடிகளும் உடைந்து உள்ளன. 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்து உள்ளன.
ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி. நொறுங்கி உள்ளன. இதுவரை 63 முறை நடைபெற்று உள்ள இந்த சம்பவங்களில் 11 பேர் காயமடைந்து உள்ளனர்.
மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் 2-வது நுழைவு வாயில் பகுதி அருகே பண பரிமாற்றம் செய்யும் கவுண்ட்டர் உள்ளது. இந்த கவுண்ட்டரின் கண்ணாடி கதவு 8 அடி உயரம், 4 அடி அகலம் கொண்டது.
நேற்று காலை திடீரென இந்த கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது. 64-வது முறையாக நடைபெற்ற இந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுபற்றி விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த அதிகாரிகள், நொறுங்கி கிடந்த கண்ணாடி கழிவுகளை ஊழியர்களை கொண்டு அப்புறப்படுத்தினார்கள்.
பயணி யாராவது டிராலியால் இடித்ததில் கண்ணாடி கதவு உடைந்து இருக்கலாம் என்றும், இதுபற்றி விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் பரஞ்சோதி. இவர் நேற்று காலை பிருந்தாவன் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது கே.கே.நகரை சேர்ந்த நாகூர்மீரான், ஆதம்பாக்கம் பரமேஸ்நகரை சேர்ந்த பிரசன்னகுமார் ஆகிய 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பரஞ்சோதியிடம் பணத்தை பறித்து தப்பி சென்றனர்.
ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் உதயகுமார். இவர் நேற்று கக்கன் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தார். அப்போது ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த வீரமணி, ரகு ஆகியோர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி உதயகுமாரிடம் பணத்தை பறித்து சென்றனர்.
இந்த 2 வழக்குகள் குறித்து ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தா.மோ.அன்பரசன், சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரவிந்த்ரமேஷ், புகழேந்தி, எழிலரசன், அரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் இக்கூட்டத்தில் பேசியதாவது:-
கலைஞர் ஆட்சியில் திட்டமிடப்பட்டு ரூ.4.75 கோடி செலவில் அடையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்து கடந்த 4 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் தடைபட்டு போய் நிற்கிறது.
அனகாபுத்தூர் அருகே பாலம் முடியும் இடம் விமானப்படைக்கு சொந்தமான இடம் என்பதால் பணிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிகிறது.
திருப்போரூர் நெமிலி இடையே பக்கிங்காம் கால்வாய் குறுக்கே ரூ.4.75 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளும் தடைப்பட்டு நிற்கிறது.
அய்யப்பன்தாங்கல்-பரணிபுத்தூர்- மெளலிவாக்கம்- முகலிவாக்கம்-மதனந்தபுரம்-கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழைக் காலங்களில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் இப்பகுதியில் வெளியேறுவதற்கு வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளில் 5 அடிக்கு மேல் தேங்கி நிற்கும் நிலையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த கலைஞர் ஆட்சியின் போது ரூ.18 கோடி மதிப்பீட்டில் மணப்பாக்கத்தான் கால்வாய் வழியாக இவ்வெள்ள நீரை வெளியேற்ற திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டு கால்வாய் பணிகள் பாதியில் நிற்கிறது.
குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள சாலைகள் நாபார்டு திட்டத்தின் கீழ்அய்யப்பன் தாங்கல்-குன்றத்தூர் சாலை ரூ.1.60 கோடி மதிப்பீட்டிலும், கோவூர்-தண்டலம் சாலை ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும், கொளப்பாக்கம்-சித்தாத்தூர் சாலை ரூ.1 கோடி மதிப்பீட்டிலும் அய்யப்பன் தாங்கலில் மழைநீர் வடிக்கால் கால்வாய் ரூ.92 லட்சம் மதிப்பீட்டிலும் மெளலிவாக்கத்தில் மழைநீர் வடிக்கால் கால்வாய் ரூ.95 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் இத்திட்டங்களுக்கு உடனே நிர்வாக அனுமதி வழங்கி சாலை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
மெளலிவாக்கம் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்த பகுதிக்கு அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி மூடப்பட்டுள்ளது. அப்பள்ளியில் படித்த 600 மாணவ-மாணவிகள் தற்போது மெளலிவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
காலை ஷிப்டில் தொடக்கப் பள்ளி மாணவர்களும், மாலை ஷிப்டில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் பயின்று வருகின்றனர். மூடப்பட்டுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல் நிலைப்பள்ளியை இயக்கிட வேண்டும் அல்லது அரசு ஆதிதிராவிடர் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும்
கெருகம்பாக்கம்-கவுல்பஜார் இடையே அடை யாற்றின் குறுக்கே மேம்பாலம் உடனே அமைத்து தர வேண்டும். ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப் பள்ளி அருகே ரெயில்வே சுரங்கப் பாதை அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னையை அடுத்த மூவரசம்பட்டு மற்றும் பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த தோழிகளான 3 பேர் மூவரசம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் ஒன்றாக பள்ளிக்கூடத்திற்கு சென்று வருவார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவிகள் 3 பேரும் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதாக கூறி காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். அதன் பிறகு மாலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் தனித்தனியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது பள்ளி நிர்வாகம் மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவிகள் மாயமானது குறித்து அவர்களது பெற்றோர் மடிப்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகள் எங்காவது சென்றார்களா? அல்லது மர்மநபர்களால் கடத்தப்பட்டார்களா? என தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாயமான மாணவிகள் 3 பேரும் மும்பை ரெயில் நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மாணவிகளை மீட்டு அழைத்து வருவதற்காக சென்னை போலீசார் மும்பைக்கு விரைந்து உள்ளனர்.
அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பிறகு தான் அவர்கள் தாமாக சென்றார்களா? அல்லது கடத்தி செல்லப்பட்டனரா? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.
சென்னை:
மறைமலைநகர் என்.எச்.2 கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் திருமாறன். தொழில் அதிபர். தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் அவர் காரில் சிங்கபெருமாள் கோவில், ஒரகடம் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது எதிரே வந்த கார் திடீரென திருமாறன் வந்த கார் மீது மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த காரும் மோதி நின்றது.
காரில் இருந்த மர்ம நபர்களும், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களும் திருமாறன் வந்த கார் மீது 2 வெடிகுண்டுகளை வீசினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
உடனே அவர் கைத்துப் பாக்கியை எடுத்து கொலை வெறிகும்பலை நோக்கி சுட முயன்றார். இதனை கண்டு கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். ஒரு மோட்டார் சைக்கிளையும், வெடிகுண்டு இருந்த பையையும் விட்டுச் சென்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த கொலை வெறிதாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இது குறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது இந்த தாக்குதலில் 12 பேர் கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. கூலிப்படையை சேர்ந்த அவர்களில் 2 பேர் போலீசில் சிக்கினர். கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே உயிர் தப்பிய திருமாறன் போலீசில் ஒரு புகார் அளித்தார் அதில், தொழில் பங்குதாரராக இருந்து தற்போது பிரிந்து மலேசியாவில் வசிக்கும் நண்பர் தூண்டுதலின் பேரில் கொலை முயற்சி நடந்ததாக தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீருடன் மழை நீர் தேங்கி சாலையில் நிற்கிறது.
காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் கடந்த 3 நாட்களாக மழைநீர் வடியாததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகினர். இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இந்தநிலையில் நேற்று மாலை பெய்த கனமழையில் அப்பகுதியில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்தது. இதனால் இரவு 8 மணியளவில் அப்பகுதி மக்கள் கிழக்கு ராஜவீதி பகுதியில் மழைநீர் மற்றும் கழிவு நீரை அகற்ற கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் குடிநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவான்மியூர்:
சோழிங்கநல்லூரை அடுத்த நன்மங்கலம் இந்திராநகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் சுபஸ்ரீ (வயது 15) மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
நேற்ற காலை பள்ளிக்கு சென்ற சுபஸ்ரீ பின்னர் வீட்டுக்கு திரும்பிவரவில்லை. உறவினர்கள் தோழிகள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதே போல் அதே வகுப்பில் படிக்கும் மாணவிகள் மடிப்பாக்கம் தமிழரசி, வெள்ளக்கல் பவித்ரா ஆகியோரும் மாயமாகி இருப்பது தெரிந்தது.
ஒரே பள்ளியில் 3 மாணவிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பள்ளிக்கரணை , மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக சாரல் மழை கொட்டி வருகிறது.
இந்த நிலையில் மாமல்லபுரம் சுற்று வட்டார கடலோர பகுதிகளான கோவளம், நெம்மேலி, சூலேரிக்காடு, பட்டிபுரம், தேவநேரி, கொக்கிலமேடு, வெண்புருஷம், கல்பாக்கம், சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம் மற்றும் கடம்பாடி, மணமை, வடகடம்பாடி, பெருமாள் ஏரி, பையனூர், காரணை பகுதிகளில் நேற்று மாலை சூறை காற்றுடன் கன மழை பெய்தது.
இரவு 9 மணி வரை மழை நீடித்தது. இதனால் இரவில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
சூறை காற்றால் பல இடங்களில் விவசாயிகளின் வாழை மரங்கள் சாய்ந்தது. மாமல்லபுரம் நகரின் முக்கிய வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அதனை மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
கன மழை காரணமாக மாமல்லபுரத்தில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை இந்திராநகரை சேர்ந்தவர் ராஜி கூலித் தொழிலாளி. இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஐயம்பேட்டை பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜி பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






