என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் ஆலப்பாக்கம் ஆற்றுபடுகையில் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து சென்றபோது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், குமார், சேகர் ஆகியோரை கைது செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சூணாம்பேடு ஏரி பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி சூணாம்பேடு போலீசார் கைது செய்தனர்.
திருபோரூர்:
திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ. 2 லட்சம் செலவில் நீர் ஆதாரமான முத்தாளம்குட்டை ஜேசிபி மூலம் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் வார்டு உறுப்பினர் தாமரைசெல்வி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி:- சட்டசபையில் தொடர்ந்து அமளி ஏற்படுகிறதே?
பதில்:- சட்டசபையில் எதிர்க்கட்சியின் குரலுக்கு ஆளும் கட்சி செவி சாய்ப்பதில்லை. எதிர்க்கட்சிகள் வைக்கக் கூடிய பிரச்சனைகளை சந்திப்பதற்கு வக்கற்ற, திராணியற்ற ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. சட்டசபையில் சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசி கலகத்தை தூண்டுவதே ஆளும் கட்சிதான். இதை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.
கே:- கோவையில் நீங்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன?
ப:- சிறுவாணி ஆற்றில் அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்தும், இதில் தமிழக நலன்காக்க தேவையான நடவடிக்கையை உடனே எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த தமிழக அரசை கண்டித்தும், அணை கட்டுவதை தடுக்கும் படி மத்திய அரசை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறுகிறது.
கே- மத்திய அரசை நேரில் சென்று வலியுறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?
ப- தலைவர் கலைஞர் இந்த பிரச்சனையை கூர்ந்து கவனித்து வருகிறார். அதற்கான முடிவை விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பன். இவரது மனைவி சுமதி. மகள் புவனேஸ்வரி ஊராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தார்.
புவனேஸ்வரி வீட்டு வேலை செய்யாததை சுமதி கண்டித்ததால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வரி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வெள்ளிக்கிழமை மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடந்த மாதம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக கோயிலுக்கு முன்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி நிர்வாகம் அதிரடியாக அகற்றியது. நகராட்சியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் திருக்கோயிலின் ராஜகோபுரம் எதிரே சாலைத் திருப்பத்தின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள நகராட்சி கழிப்பறையினை இடமாற்றம் செய்ய வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த கழிப்பிடம் ராஜகோபுரம் எதிரில் சாலை வளைவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை கழிப்பறை எதிரே சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர்.
சாலையின் திருப்பத்தில் இருபுறமிருந்தும் வரும் நான்கு சக்கர வாகனங்களால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதனால் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும் கோயிலின் தெற்கு கோபுரம் உள்ள பகுதியில் நகராட்சியின் சார்பில் ஏற்கனவே ஒரு கழிவறை இயங்கி வருவதால் ராஜகோபுரம் எதிரே உள்ள இந்த நகராட்சி கழிவறையினை இடமாற்றம் செய்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க காஞ்சீபுரம் நகராட்சி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தினமும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து புறப்பட்டு செல்கின்றன. சென்னை விமான நிலைய வான் கட்டுப்பாட்டு மையம் வழியாக தினமும் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் கையாளப்படுகின்றன. இந்த விமானங்களின் சேவையை அதிகரிக்கவும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவும் இந்திய விமான கட்டுப்பாட்டு துறை திட்டமிட்டு உள்ளது.
கூடுதல் விமானங்களை கையாளுவது, மாசு ஏற்படாமல் தடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பது சம்பந்தமாக சென்னை வான் எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள், விமான நிலைய ஆணையக அதிகாரிகள் ஆகியோருக்கு டெல்லியில் இருந்து வந்த சிறப்பு குழு பயிற்சி அளித்து வருகிறது. வருகிற 15-ந்தேதிக்கு பின்னர் விமான சேவை படிப்படியாக உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம்:
வாலாஜாபாத் வெள்ளேரியம்மன் கோவில் புதுத்தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன். வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 1996-ம் ஆண்டு கஜேந்திரனும் அவருடன் பணிபுரிந்த வேறு சிலரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து கஜேந்திரன் வழக்கு தொடர்ந்ததில் சென்னை முதலாவது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம் 2007-ம் ஆண்டு வரை ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்க உத்தரவிட்டது.
ஆனால் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் 2003 ஆண்டு வரையான ஊதியம் மட்டும் அளித்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் ஊதியம் மற்றும் சில சலுகைகளை வழங்கவில்லை என கஜேந்திரன் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உரிய இழப்பீடு வழங்கவில்லையெனில் அலுவலகத்தை ஜப்தி செய்யலாம் என கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இதையடுத்து ஊழியருக்கு இழப்பீடு தொகை வழங்காத வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோர்ட்டு உத்தரவை காட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் வழக்கு தொடர்ந்த கஜேந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒருவார கால அவகாசத்தில் நிலுவை தொகையினை வழங்குவதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.
வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சீபுரம்:
அகில இந்திய தொழிற்சங்கங்கள் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. கூடுதலாக 13 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
திருவள்ளூர் தலைமை தபால் நிலையம், ரெயில் நிலையம், பஸ் பணிமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் மட்டும் பணியில் இருந்தனர் .பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.
இதைப்போல் திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திடீரென அவர்கள் மறியல் செய்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்,.
காஞ்சீபுரத்தில் பொது வேலை நிறுத்தத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. பொது மக்கள் அதிகமாக பயணிக்கும் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின
நகரின் முக்கிய சாலைகளான காந்தி சாலை, காமராஜர் சாலை, ரெயில்வே சாலை உள்ளிட்ட இடங்களில் கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் தேரடியில் இருந்து தொழிற்சங்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
மதுராந்தகத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடின. ஆட்டோக்கள் மட்டும் ஓட வில்லை.
இதேபோல் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் எந்த வித பாதிப்பும் இன்றி பஸ்கள் இயங்கியது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ்நிலையம், ரெயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டது.
தாம்பரம்:
பம்மல் சிக்னல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (75). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சீதா லட்சுமி கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.
இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஆடிபட்டிபூஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அள்ள குத்தகை எடுத்தவரின் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று நள்ளிரவு குப்பைகளை கொட்டுவதற்காக மயிலாப்பூர் அம்பேத்கார் பாலம் குப்பை கிடங்குக்கு லாரியை ஓட்டி சென்றார். குப்பைகளை கொட்ட லாரியின் பின்பகுதியை மேல்நோக்கி தூக்கினார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் முத்துவேல் லாரியின் பின் பகுதியில் மேல்நோக்கி இருந்த நிலையில் அதன் இடைப்பட்ட பகுதியில் படுத்து தூங்கினார்.
அப்போது திடீரென்று லாரியின் பின்பகுதி கீழே இறங்கியது. இதில் முத்துவேல் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சத்தம் கேட்டு வந்த மற்ற டிரைவர்கள் முத்துவேல் இறந்து கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் முத்துவேல் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
பலியான முத்துவேலுக்கு காந்தா என்ற மனைவியும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வருகை முனையம் எதிரே போலீஸ் பூத் உள்ளது. இதன் அருகே இன்று காலை ஒரு பை கிடந்தது. நீண்ட நேரம் ஆகியும் அதை யாரும் எடுத்து செல்லவில்லை.
இதை பார்த்த பயணிகள் அதில் வெடி குண்டு இருக்கலாம் என்று பீதி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் வெடி குண்டு நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள் அந்த மர்ம பையை திறந்து சோதனையிட்டனர். அதில் பழைய துணிகள் இருந்தன.
இதனால் பயணிகள் மற்றும் போலீசார் நிம்மதி அடைந்தனர். பயணிகள் யாராவது பையை தவறவிட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுராந்தகம், வடக்கு பைபாஸ் சாலையில் இன்று காலை திருச்சி நோக்கி சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அதில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர்.
முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது திடீரென சரக்கு ஆட்டோ மோதியது.
இதில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி நசுங்கியது. அதிலிருந்த டிரைவர் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். லாரிக்கு சேதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியான 3 பேர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. ஒருவரிடம் மட்டும் செல்போன் இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பலியானவர்கள் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






