என் மலர்
காஞ்சிபுரம்
அடையாறு எம்.ஐ.டி. பிளாக் 3-வது தெருவில் கெஸ்ட்ஹவுஸ் ஒன்று உள்ளது. இங்கு திருவான்மியூரை சேர்ந்த தாமோதரன் என்பவர் தங்கியிருந்தார். இந்த கெஸ்ட்ஹவுஸ் அருகே பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தாமோதரன் விடுதியின் பாத்ரூம் ஜன்னலில் செல்போன் வைத்து பெண்கள் குளிப்பதை ஆபாச படம் எடுத்தார். இதை பெண் ஒருவர் கவனித்துவிட்டார்.
இதுகுறித்து அவரிடம் விடுதியில் தங்கிய பெண்கள் கேட்டபோது, ‘தான் சி.பி.ஐ. அதிகாரி’ என்று கூறி மிரட்டினார். இதையடுத்து திருவான்மியூர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் அந்த கெஸ்ட்ஹவுசுக்கு சென்றனர். அங்கு சிவப்பு விளக்கு பொருத்திய கார் ஒன்று நின்று இருந்தது. அதில் தமிழ்நாடு அரசு என்றும் எழுதி இருந்தது.
தாமோதரனிடம் விசாரித்தபோது, ‘தான் சி.பி.ஐ. அதிகாரி’ என்று கூறி அடையாள அட்டையை போலீசாரிடம் காட்டினார். இதை போலீசார் ஆய்வு செய்தபோது அது போலி அடையாள அட்டை என்பது தெரிந்தது. மேலும் அவர் போலியான வக்கீல் அடையாள அட்டையும் வைத்து இருந்தார்.
சிவப்பு விளக்கு பொருத்திய காரில் சென்று சி.பி.ஐ. அதிகாரி என்று கூறி பலரை மிரட்டி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் போக்குவரத்து போலீசாரை தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று மிரட்டி இருப்பதும் தெரியவந்தது. தற்போது ஆபாச படம் எடுத்தபோது போலீசில் சிக்கி கொண்டார்.
தாமோதரனை கைது செய்தபோது போலி அடையாள அட்டை, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சி.பி.ஐ. அதிகாரி என்று கூறி யார்-யாரிடம் மிரட்டி பணம் வசூல் செய்து இருக்கிறார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சீபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் மூலம் நகரில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் காஞ்சீபுரம் சரகத்தில் 270 விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் 186, செங்கல்பட்டு 198, மதுராந்தகம் 365, வண்டலூர் 130, மாமல்லபுரம் 344 என மாவட்டம் முழுவதும் 1625 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று முதல் வருகிற 11-ந் தேதி வரை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விநாயகர் சிலைகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். காலை 8 மணிமுதல் மாலை 6 மணிக்குள் விநாயகர் ஊர்வலத்தை நடத்தி முடிக்க வேண்டும். ஊர்வலங்கள் காவல் துறையினர் அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள் வருமாறு:-
காஞ்சீபுரம்- பொன்னேரிக்கரை, மதுராந்தகம் ஏரி, தழுதாளிகுப்பம் கடல் பகுதி, கடப்பாக்கம் கடல் பகுதி, மாமல்லபுரம் கடல், சதுரங்கபட்டினம் கடல், கடலூர்குப்பம் கடல், பரமன் கேணிகுப்பம் கடல், வடபட்டினம் கடல், கோவளம் கடல், நீலாங்கரை கடல் ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரத்தை அடுத்த விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்மு (வயது21).
இருவரும் கடந்த 10 மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்மு 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் சந்தானம், வரதட்சணை கேட்டு மனைவி அம்முவிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இதில் மனமுடைந்த அம்மு கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்மு பரிதாபமாக இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து போனது.
இதுபற்றி அம்முவின் பெற்றோர் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தனர். கணவரின் வரதட்சணை கொடுமையால் அம்மு தற்கொலை செய்து இருப்பதாக கூறி உள்ளனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த 10 மாதங்களில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அசாம் மாநிலம், கவுகாத்தி நகரை சேர்ந்தவர் நிலாசென்குப்தா (வயது 21). இவர் கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் அருகில் உள்ள ஒரு தனியார் இசைப்பயிற்சி கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி தனது நண்பர்கள் 18 பேருடன் மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் உள்ள வடநெம்மேலி கடற்கரையில் உள்ள ஒரு ஓய்வு இல்லத்திற்கு சென்றார்.
அங்கு நடந்த விருந்தில் கலந்து கொண்ட நிலாசென்குப்தா திடீரென காணாமல் போய்விட்டார். பல இடங்களில் அவரை நண்பர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாமல்லபுரம் போலீசில் அவரது நண்பர்கள் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் நேற்று வடநெம்மேலி கடற்கரையில் ஒரு வாலிபர் உடல் காயங்களுடன் கிடப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்ற பார்த்தபோது அது நிலாசென்குப்தாவின் உடல் என தெரியவந்தது. இதுபற்றி கவுகாத்தியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நிலாசென்குப்தாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிலாசென்குப்தா மதுபோதையில் இருந்தபோது அவரை நண்பர்கள் அடித்துக் கொலை செய்தார்களா? அல்லது கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு கடல்நீரை குடிநீராக்கி தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த தொழில்நுட்பம் பல நாடுகளில் உள்ளது.
கடல்நீர் குடிநீராக்கும் திட்ட தொழில்நுட்பத்தை இஸ்ரேலில் இருந்து தமிழக முதல்-அமைச்சருக்கு நான் வாங்கி தருகிறேன்.
விவசாயிகள் நலனுக்காக கிசான் யாத்திரை செல்லும் ராகுல்காந்திக்கு விவசாயிகள் பற்றி எதுவும் தெரியாது. காஷ்மீரில் அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க மறுத்த ஹூரியத் தலைவர்கள் அனைவரும் தேச விரோதிகள். அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் திருவனந்தபுரம் வழியாக மாலத்தீவுக்கு செல்லும் விமானம் புறப்பட இருந்தது.
அதில் செல்ல வேண்டிய 142 பயணிகளும் ஏற தயாராக இருந்தனர். ஆனால் விமானத்தை இயக்கும் விமானி வரவில்லை.
இதையடுத்து மாற்று விமானி வரவழைக்கப்பட்டார். பின்னர் 3 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி விமானம் புறப்பட்டு சென்றது.
இதே போல் சென்னை உள்நாட்டு முனையத்தில் காலை 5 மணியளவில் அந்தமான் செல்லும் விமானம் தயாராக இருந்தது. அதில் 123 பயணிகள் செல்ல இருந்தனர்.
விமானி வராததால் விமானம் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படவில்லை. மாற்று விமானி வரவழைக்கப்பட்டு தாமதமாக 9.30 மணிக்கு அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த கிழம்பி பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 50) எலக்ட்ரீசியன்.
இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகன்கள் வினோத்குமார், குமரன். இருவரும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தனர்.
நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு கோவிந்தராஜ் வீட்டுக்கு வந்தார். பின்னர் 2 மகன்களுடன் அமர்ந்து மது அருந்தினார். அப்போது கோவிந்தராஜின் மனைவி மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் போதை தலைக்கேறிய வினோத் குமாரும், குமரனும் செலவுக்கு பணம் கேட்டு கோவிந்தராஜிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் தந்தை - மகன்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த வினோத்குமாரும், குமரனும் தந்தை கோவிந்தராஜை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை கத்தியால் குத்தினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கோவிந்தராஜ் வீட்டுக்கு வெளியே கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தந்தை இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத்குமாரும், குமரனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த ஜெயந்தி வீட்டின் வெளியே வந்து பார்த்த போது கணவர் கோவிந்தராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.
இது குறித்து பாலு செட்டிசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த குமரனை போலீசார் கைது செய்தனர். வினோத்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலையுண்ட கோவிந்தராஜின் சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும். அவர் குடும்பத்துடன் கிழம்பி பகுதியில் தங்கி எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.
மகன்கள் வேலைக்கு செல்லாததால் கோவிந்தராஜ் மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தினார். குடிப்பழக்கத்தால் மகன்களாலேயே அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூவத்தூரை அடுத்த சீக்கனாங் குப்பத்தில் உள்ள தனியார் இசைக்கல்லூரில் 3-ம் ஆண்டு படித்து வந்தவர் செங்குப்தா (21).
நேற்று முன்தினம் அவர் கல்லூரியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் குழுவாக மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றார். பின்னர் தனியார் ரிசார்ட் அருகே செங்குப்தா 6 மாணவர்களுடன் கடலில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது ராட்சத அலை 6 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் 5 பேர் மீட்கப்பட்டனர். செங்குப்தா மட்டும் கடலில் மூழ்கினார். அவரை மாமல்லபுரம் போலீசார், கல்பாக்கம், கோவளம், முட்டுக்காடு கடற்கரை பகுதியில் கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வடநெம்மேலி முதலை பண்ணை கடற்கரை அருகே செங்குப்தா பிணமாக கரை ஒதுங்கினார். மாமல்லபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமயபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகன் அகிலன் (18). செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு (இசிஇ)விடுதியில் தங்கி படித்து வந்தார்.
நேற்று விடுமுறையொட்டி அவர் நண்பர்கள் 8 பேருடன் கோவளம் கடலில் குளித்தார். ராட்சத அலை மாணவர் அகிலனை கடலுக்குள் இழுத்து சென்றது. அருகில் இருந்த மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. கடலில் மூழ்கி அகிலன் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் கலியலூரை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக சுங்குவார் சத்திரத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் மோகன்தாஸ் நேற்று வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தையை கூட்டி வர சுங்குவார்சத்திரம் சென்றார்.
இதையறிந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை, 5 ஆயிரம் ரொக்க பணம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம்.
இதுகுறித்து மோகன்தாஸ் வாலாஜாபாத் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
தாம்பரம்:
சேலையூர் மப்பேட்டை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் பிராட்வேயில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு மாடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் இன்று காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 1 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் பீரோவில் இருந்த 10 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருவான்மியூர்:
நீலாங்கரை கானாத்தூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (50). கொத்தனார். இவர் நேற்று இரவு விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக பொருட்களை வாங்கிக் கொண்டு கானாத்தூர் நாகூர் மீரான் நகர் பஸ்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே ‘திருவள்ளுவர் பூங்கா’ உள்ளது. திருப்போரூர் பேரூராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பூங்காவில் திருவள்ளுவர் சிலை அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு திருப்போரூர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்க பூங்காவில் பீடம் அமைக்கப்பட்டது.
திருவள்ளுவர் சிலையும் செதுக்கப்பட்டு பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது. முறையான அனுமதி கிடைத்தவுடன் அங்கு சிலையை நிறுவ முடிவு செய்து, ஒரு மாதமாக பூங்காவில் திருவள்ளுவர் சிலையை துணியால் சுற்றி மூடிவைத்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூங்காவில் மூடிவைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் சிலை திடீரென மாயமானது. சிலை வைக்க அமைக்கப்பட்டு இருந்த பீடமும் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தது. பூங்காவுக்கு நேற்று காலை வந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் திருவள்ளுவர் சிலை மாயமாகி இருப்பதையும், பீடம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
திருவள்ளுவர் சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவிட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சமூக ஆர்வலர்கள் அவரிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். போலீசாரும் சிலையை அகற்றவில்லை என்று கூறிவிட்டனர்.
எனவே திருவள்ளுவர் சிலை திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளுவர் சிலையை யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது தெரியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்த ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஒன்றிய செயலாளர் சிவராமன், நகர செயலாளர் லோகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், பா.ம.க. ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிலை வைக்கப்பட்டு இருந்த இடத்தையும், பீடம் உடைக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர்.






