என் மலர்
காஞ்சிபுரம்
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு பற்றி தவறான கருத்துகள் உள்ளன. இந்த தேர்வை எழுதும்போது தான் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இந்தியா முழுவதும் ஐ.ஏ.எஸ். தேர்வுபோல் இந்த தேர்வும் அமையும். நீட் தேர்வை தி.மு.க. எதிர்க்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் அவர்களால் சமமான கல்வியை கொடுக்கவில்லை.
நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தமிழில் எழுதலாம். கிராமப்புற மாணவர்கள் முயற்சி செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்றால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்கள் கூட தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரமுடியும். மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு அவர்களுக்கு கிடைக்கும். இதனால் பலன் இருக்கும்.
பவானியில் கேரளா அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் நடக்காது. முல்லைப்பெரியாறு, மேகதாது, சிறுவாணி ஆகியவற்றில் அணை கட்டும்போது மத்திய அரசு ஆதரவு தரவில்லை. பவானியில் அணை கட்டுவதை கேரளா அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மெரினாவில் ஒரு போராட்டம் நடந்துள்ளது. இதனால் அங்கு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அங்கு பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி செல்பவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
ஜல்லிக்கட்டிற்கு குடியரசு தலைவர் அனுமதி வழங்கி உள்ளார். குடியரசு தலைவருக்கு செல்லும் முன் 4 மத்திய மந்திரிகள் கையெழுத்து போட்டு உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாளை முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பிக் கொண்டு இருக்கிறது.
மன்மோகன்சிங், சிதம்பரம் போன்றவர்கள் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று இருப்பதாக கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த பொருளாதாரத்தை பிரதமர் மோடி தற்போது உயர்த்தி வருகிறார். மன்மோகன்சிங், சிதம்பரம் போன்றவர்களின் பேச்சுகளை மக்கள் நம்பமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வினாயகர் கோவில் தெருவில் தனியாருக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு 68 குழந்தைகள் தங்கியுள்ளனர். அவர்களில் 42 பேர் சிறுவர்கள், 24 பேர் சிறுமிகள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 26 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஆசிரமத்தில் இருந்து ரோட்டில் ஓடி வந்தார். அவரை 4 பேர் விரட்டி வந்து பிடித்தனர்.
அப்போது, ‘ஆசிரமத்தில் தன்னை பலவிதமாக ஆபாச படம் எடுப்பதாக பொது மக்களிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து சங்கர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே விரைந்து வந்த போலீசார் ஆசிரமத்துக்கு சென்று அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவரது பெயர் சுகன்யா (28) என்பது தெரியவந்தது.
தூத்துக்குடியை சேர்ந்த இவர் திருமணமானவர். கணவர் பெயர் ஜெரோம். பிறந்து 10 மாதமே ஆன தனது குழந்தையை தொலைத்து விட்டார். எனவே கணவருடன் பிரச்சினை ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து தாய் வீடு திரும்பி விட்டார்.
இதற்கிடையே, மனநலம் பாதித்து இருந்தால், அவரது பெற்றோர் இங்குள்ள ஆசிரமத்தில் சேர்த்ததும் தெரியவந்தது. மேலும், சுகன்யாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். எனவே தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற கூட்டத் தொடரில் தமிழக விவசாயிகள் பிரச்சினை குறித்து முக்கியமாக பேசுவோம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வலியுறுத்துவோம்.
நதிநீர் பிரச்சினை குறித்து முக்கியமாக அதில் விவாதிக்கப்படும், தமிழகத்தில் ஏற்பட்ட ‘வார்தா’ புயல் பாதிப்பை மத்திய குழு ஆய்வு செய்து முடித்து உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிவாரண உதவித்தொகை இன்னும் வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியை மத்திய குழு ஆய்வு செய்து முடித்து இருக்கிறது. அதற்கு வேண்டிய நிவாரணத் தொகையையும் விரைவில் மத்திய அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல தேவி நகர், 6-வது தெருவைச் சேர்ந்தவர் அன்சாரி (வயது 50). இவர், சென்னை மயிலாப்பூரில் ‘பேன்சி’ கடை நடத்தி வருகிறார். இவருடைய மைத்துனருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதனால் அன்சாரி, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் கீழே சிதறிக்கிடந்தன. பீரோவில் சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 90 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பழனி (40) என்பவர் வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், வீட்டில் இருந்த 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச்சென்று விட்டனர். இது பற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
இங்கு கொலை, கொள்ளை, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 18 வயதுக்குட்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்வி, தொழிற் கல்வி, விளையாட்டு போன்றவைகள் ஆசிரியர்களை கொண்டு கற்று தரப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், ஆசிரியர்கள், தொழில் கல்வி ஆசிரியர்கள், காவலர்கள் உள்பட 40 பேர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஊழியர்களுக்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே ஓடுகளால் ஆன 20 வீடுகள் உருவாக்கப்பட்டது. தற்போது அந்த வீடுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.
இதற்கிடையே பாழடைந்த குடியிருப்பு அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்களுக்காக 18 குடியிருப்புகள் கட்ட கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இந்த பணி கடந்த 2015-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனால் குடியிருப்பு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து ஊழியர்கள் கூறும்போது, பாழடைந்த அரசு குடியிருப்பில் குழந்தைகளுடன் இருந்து வருகிறோம். விஷ பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் சுற்றி இருப்பதால் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வருகிறார்கள்.
கட்டி முடிக்கப்பட்டு அரசு சிறப்பு இல்லம் திறக்கப்படாமல் உள்ளது. ஊழியர்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட 18 குடியிருப்புகள் திறக்கப்பட வேண்டும்’ என்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பேரப்பணஞ்சேரியில் மருந்து கடை நடத்தி வருபவர் மகேஷ். நேற்று இரவு கடையை பூட்டி சென்றார். இன்று காலை கடைபூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த மகேஷ் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.50 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. மேலும் பொருட்களையும் அள்ளிச் சென்றுள்ளனர்.
மருந்து கடை அருகே இருந்த 2 மளிகை கடையின் பூட்டை கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். ஆனால் அங்கு பணம் இல்லாததால் கொள்ளையடித்து செல்லவில்லை. இதுகுறித்து மணிமங்களம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த செம்பாக்கம் காசி விநாயகர் கோவில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 65). கூலி தொழிலாளி. இவர், நேற்று காலை 7 மணியளவில் செங்கல்பட்டு பிரதான சாலை ஓரத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.
செம்பாக்கம் காசி விநாயகர் கோவில் எதிரில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரம் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த ராஜவேல் மற்றும் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
இதில் லாரிக்கு அடியில் சிக்கிய ராஜவேல் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் சென்ற திருப்போரூரை அடுத்த கன்னகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோலமாவு வியாபாரி கங்காதுரை (42) படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த லாரி டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், பலியான ராஜவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையில் கவிழ்ந்த லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் அரிகரன். இவர் தன்னிடம் இருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும்படி தியாகராய நகரில் உள்ள கும்பலிடம் பேசினார்.
அவர்கள், அரிகரனை திருவான்மியூருக்கு பணத்துடன் வருமாறு தெரிவித்தனர். மேலும் பழைய ரூபாய் நோட்டை மற்ற 45 சதவீத கமிஷனும் கேட்டு இருந்தனர்.
இதனை நம்பிய அரிகரன் பணத்துடன் திருவான்மியூருக்கு சென்றார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் ரூபாய் நோட்டுகளை சரிபார்ப்பதாக கூறி ரூ.70 லட்சத்துடன் காரில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அரிகரன் திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மோசடி கும்பலின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.70 லட்சம் பணத்துடன் மோசடி கும்பல் வாணியம்பாடிக்கு தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் வாணியம்பாடிக்கு தனிப்படை போலீசார் அழைத்து சென்று உள்ளனர். பணத்துடன் தப்பியவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
செங்கல்பட்டை அடுத்த மலையாள நத்தத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 27). இவருக்கும் மதுராந்தகத்தை அடுத்த அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த ஜெய மாலினிக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
தனிக் குடித்தனம் செல்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி அறிந்த ஜெயமாலினியின் தாய் முத்துலட்சுமி மற்றும் உறவினர்கள் அருண் பாண்டியன் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது அருண்பாண்டியன் வீட்டில் இல்லை. அவரது பெற்றோரிடம் ஜெயமாலினியின் உறவினர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அருண் பாண்டியனின் தாயார் அஞ்சலை செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இதற்கிடையே ஜெயமாலினியும் போலீசில் புகார் செய்தார். அதில், நகையை அபகரித்து கணவர் மற்றும் மாமனார், மாமியார் துன்புறுத்துவதாக தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி விசாரிப்பதற்காக அருண்பாண்டியனை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை கடுமையான வார்த்தைகளால் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த அருண்பாண்டியன் மலையாளநத்தம் ஏரிக்கரையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அருண்பாண்டியன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்- இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரத்தில் சுற்றுலா வரும் பயணிகளிடம் வழிப்பறி சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த செனிஜா முராரி கடந்த மாதம் 26-ந் தேதி மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார்.
வடக்கு மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி சென்றபோது மர்ம கும்பல் அவரை வழிமறித்து கைப்பையை பறித்து சென்றனர். செல்போன், வெளிநாட்டு பணம் இருந்தது.
இது குறித்து மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்.
அப்போது வழிப்பறியில் ஈடுபட்டது மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த தீபக்குமார், அஜித்குமார், பிலிப்குமார், சிவக்குமார், விஜயகுமார் என்பது தெரிந்தது.
அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் தீபக்குமார் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். மற்ற 4 பேரும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
உல்லாச செலவுக்கு ஆசைப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதேப்போல் அவர்கள் மாமல்லபுரம் பகுதிக்கு சுற்றுலா வரும் ஏராளமானவர்களிடம் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கைதான 5 பேரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண் பெடி, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் அறவழியில் போராட்டம் செய்தனர். சென்னையில் மாணவர்கள் போராட்டத்தின் போது நடந்த சம்பவங்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். போலீசார் சட்டத்துக்குட்பட்டு நடக்க வேண்டும்.
மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பலனும், வெற்றியும் மக்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக வேண்டும் என்றே சில விஷமிகள் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து இருக்கிறார்கள். இது பற்றி டி.ஜி.பி., மனித உரிமை ஆணைய தலைவர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் எப்போதும் இருந்தது கிடையாது. சட்டத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும் என்று தான் கூறினேன். தமிழ் கலாசாரம், பண்பாட்டை பெரிதும் மதிக்கிறேன். புதுச்சேரி மாநில கவர்னர் மாளிகையில் முதல் முறையாக காளை மாடுகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் நான் ஆற்றவேண்டிய உரையை சபாநாயகர் வாசித்தார். இதற்காக அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
புதுச்சேரியில் கவர்னராக பதவி ஏற்றதும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு அங்கிருந்த லட்சுமி என்ற யானையிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். தேசிய விலங்குகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த அக்டோபர் மாதத்தில் யானை லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பராமரிக்கப்பட வேண்டும் என கோரியிருந்தது.
அதன் அடிப்படையில் யானை லட்சுமியை பராமரிக்க வேண்டும் என புதுச்சேரி அரசிடம் தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டால் ஏற்பீர்களா என அவரிடம் கேட்டதற்கு இது பற்றி நீங்களோ, நானோ முடிவு எடுக்க முடியாது. ஜனாதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குடியரசு தினத்தினை முன்னிட்டு நாளை (26-ந் தேதி) காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் உரிமம் பெற்று இயங்கும் கிளப்புகள் மற்றும் ஓட்டல்களில் இயங்கும் பார்கள் அனைத்தும் அடைக்கப்பட வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் சம்மந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






