search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிக்கு அடியில் சிக்கி தொழிலாளி பலி: நடைபயிற்சியில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த சோகம்
    X

    லாரிக்கு அடியில் சிக்கி தொழிலாளி பலி: நடைபயிற்சியில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த சோகம்

    டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் நடைபயிற்சி சென்ற தொழிலாளி லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
    திருப்போரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த செம்பாக்கம் காசி விநாயகர் கோவில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 65). கூலி தொழிலாளி. இவர், நேற்று காலை 7 மணியளவில் செங்கல்பட்டு பிரதான சாலை ஓரத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.

    செம்பாக்கம் காசி விநாயகர் கோவில் எதிரில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரம் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த ராஜவேல் மற்றும் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

    இதில் லாரிக்கு அடியில் சிக்கிய ராஜவேல் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் சென்ற திருப்போரூரை அடுத்த கன்னகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோலமாவு வியாபாரி கங்காதுரை (42) படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த லாரி டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், பலியான ராஜவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாலையில் கவிழ்ந்த லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×