என் மலர்
காஞ்சிபுரம்
ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், செயல் அலுவலர் விஜயன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் 1841, 1944, 1976 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டன. 1944 மற்றும் 1976-ல் கும்பாபிஷேகங்களை காஞ்சி சங்கராசாரியார் மகா பெரியவர் நடத்தி வைத்தார்.
தற்போது திருக்கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தங்க கோபுரம் 70 கிலோ தங்கத்தை கொண்டு 5 அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆதிசங்கரர் சன்னதி முழுவதும் கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் உள்ளிட்ட திருக்கோவிலில் உள்ள 4 கோபுரங்களிலும் உள்ள கோபுர கலசங்களில் நடு கலசம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மற்றவை செப்பு கலசங்களாகும். திருப்பணிகள் அனைத்தும் உபயதாரர்களால் செய்து தரப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் இன்று 9 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் வாஸ்து ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை, கன்யா மற்றும் சுவாசினி பூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு 8-ந் தேதியன்று இரவு பூர்ணாஹீதி மற்றும் தீபாராதணை நடைபெறும்.
9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.10 மணி முதல் 9.45 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடை பெறும். தொடர்ந்து மூலஸ்தானத்துக்கு அபிஷேகமும், மகா தீபாரா தனையும் நடைபெறும். அன்று இரவு வெள்ளி ரதத்தில் காமாட்சியம்மன் ராஜவீதியில் உலாவருவார்.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் ஜம்முகாஷ்மீர் துணை முதல்வர், கர்நாடக மற்றும் அசாம் மாநில அமைச்சர்கள், புதுவை கவர்னர் கிரண்பேடி, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, மதுரை ஆதீனம், வேலூர் நாராயணியம்மாள், பங்காரு அடிகளார் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 18 ஆதீனங்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் கந்தன். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு மாமல்லபுரத்தை அடுத்த புதிய கல்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கேட்டார்.
ஆனால் பெண் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தன், இளம்பெண் குறித்தும் அவரது குடும்பத்தாரையும் பற்றியும் ஆபாசமாக விமர்சித்து நோட்டீஸ் அச்சடித்து வீடுவீடாக போட்டார். மேலும் முக்கிய வீதிகளிலும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்த புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருக்கழுகுன்றம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.அதில், ‘‘பெண்களை மிரட்டும் வகையில் அவர்களை இழிவுபடுத்துவதுடன் சட்டம் ஒழுங்குக்கு பயமின்றி ஆபாச வார்த்தையுடன் போஸ்டர்களை ஒட்டி பெண்களை இழிவு படுத்திய குற்றத்துக்காக குற்றவாளி கந்தனுக்கு ஓராண்டு சிறை தண்டணையும், 3ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து கந்தனை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
எண்ணூர் கடலில் தொடங்கிய எண்ணெய் படலம் சென்னை மட்டுமல்லாது, கிழக்கு கடற்கரை பகுதி வரையிலும் பரவி கடுமையான மாசு ஏற்படுத்தியுள்ளது.
கடலோர காவல் படையினர் சிறிய கப்பல்களில் சென்று எண்ணெய் படலத்தை கண்டுபிடித்து வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை வரை கிழக்கு கடற்கரைசாலை கானாத்தூர் வரை 15 கி.மீ. தொலைவுக்கு பரவிஇருந்தது. அதன் பிறகு பாலவாக்கம் வரை பரவியது. நேற்று மாலை ஈஞ்சம்பாக்கம் கடற்கரைக்கு பரவியது. நாளை வி.ஜி.பி. தங்க கடற்கரையை தாண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
எண்ணெய் படலம் பரவல் தொடர்பாக ஐதராபாத்தில் தேசிய கடல்சார் தகவல் தொடர்பு மையம் ஆய்வு செய்து கம்ப்யூட்டர் மூலம் மாதிரி எடுத்து அனுப்பி உள்ளது. இதன் மூலம் எண்ணெய் படலம் எங்குவரை பரவி உள்ளது என்பது கண்டறியப்பட்டு வருகிறது.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவை வலுப்படுத்த அனைத்து மாநில நிர்வாகிகளுக்கு 4 நாள் பயிற்சி முகாம் பெரம்பூரில் நடைபெறுகிறது. 5-ந்தேதி மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது.
வருங்கால அரசியல் திட்டங்கள், உள்ளாட்சி தேர்தல் குறித்து இதில் விவாதிக்கப்படும். பயிற்சி முகாமில் பங்கேற்க மத்திய தலைமை நிர்வாகிகள் வருகிறார்கள்.
மத்திய அரசு பட்ஜெட் எல்லோரும் பாராட்டும் வகையில் உள்ளது. இதை விமர்சிக்கிறார்கள் என்றால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கும்.
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு கொண்டு வரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. இதை மத்திய மந்திரி நட்டா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
பாலாற்றின் குறுக்கே 2 அணைகளை கட்ட ஆந்திரா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு ஆந்திரா அரசிடம் பேசி அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த மத்திய அரசிடம் தமிழக பா.ஜனதா சார்பில் வலியுறுத்தப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் 35 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வெறும் அறிவிப்புடன் உள்ளது. பா.ஜனதா அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தும் வகையில் ஆட்சி செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அச்சரப்பாக்கத்தை அடுத்த தேனபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.
இவருக்கும் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்று அச்சரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய இரு வீட்டு பெற்றோரும் முடிவு செய்து இருந்தனர்.
நேற்று இரவு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இருதரப்பு உறவினர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதனிடையே மணமகளுக்கு 17 வயது தான் ஆவதாக விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு புகார் வந்தது. இது பற்றி அவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மதுராந்தகம் தாசில்தார் கற்பகம், மேல்மருவத்தூர் மகளிர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு திருமண மண்டபத்திற்கு வந்தனர். இதற்குள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முழுவதும் முடிந்து இருந்தது.
இருதரப்பு உறவினர்களையும் அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது மணமகளுக்கு 17 வயது ஆவதால் திருமணம் நடத்தக்கூடாது. உரிய வயது அடைந்ததும் திருமணம் நடத்துமாறு தெரிவித்தனர்.
இதனை மணமக்களின் பெற்றோர் ஏற்று இன்று நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தினர். பின்னர் இரவே திருமண மண்டபத்தில் இருந்து பொருட்களை எடுத்து சென்று விட்டனர்.
இதனால் இன்று திருமண நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்த்து வந்த சிலர் ஏமாற்றம் அடைந்தனர். சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அச்சரப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலையூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் அனிதா. சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும் மடிப்பாக்கத்தை சேர்ந்த என்ஜினீயர் அரவிந்தனுக்கும் இன்று குரோம்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.
நேற்று இரவு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு மணமகளின் அறைக்கு உறவினர் ஒருவர் சென்று பார்த்த போது நகை வைத்து இருந்த சூட்கேஸ் உடைந்து கிடந்தது.
அதில் இருந்த 35 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் மணமகள் நகையை சுருட்டிச் சென்று இருப்பது தெரிந்தது. இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே இன்று காலை மணமகள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
திருப்போரூர், பிப். 2-
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் விக்ரம் (வயது 18).
இவர் ஏகாட்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆர்கிடெக் படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு வந்த அவர் கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்கள் 5 பேருடன் அருகே உள்ள நத்தம் பகுதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள குளத்தில் விக்ரம் நண்பருடன் குளித்தார். இருவரும் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்தி சென்றனர். பாதி தூரத்திற்கு மேல் நீந்த முடியாமல் விக்ரம் தண்ணீரில் மூழ்கினார். அவரை கரையில் இருந்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
சிறுசேரி தீயணைப்புத் துறையினர் குளத்தில் மூழ்கிய விக்ரம் உடலை தேடினர். இரவு 10 மணி அளவில் அவரது உடலை மீட்டனர்.
காஞ்சீபுரம் நகராட்சிக் குட்பட்ட திருக்காலிமேடு மின்நகர், வீரசிவாஜி தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு சொந்தமான கார்கள், வாகனங்களை வீட்டு வாசலிலேயே நிறுத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு கத்தி, உருட்டுக்கட்டையுடன் 10 பேர் கும்பல் அப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட கார், ஆட்டோக்களை நொறுக்கினர். மேலும் தெருவிளக்கு டியூப்லைட்டுகளையும் கல்வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி இருட்டாக மாறியது.
வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு சிலர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். இதனை கண்ட கும்பல் அவர்களை பயங்கர ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பயந்து போன பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசுக்கு தொலைபேசியில் தகவல் தந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதே பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அங்கு வந்த நபர்கள் மது போதையில் ரகளையில் ஈடுபட்டார்களா? அல்லது ரவுடி கும்பல் வாகனங்களை சேதப்படுத்தினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து தாலுகா போலீசார் வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
கடந்த 10 வருடங்களாக இப்பகுதியில் சிறு திருட்டுகள் கூட நடந்தது இல்லை. ஆனால் இரவில் வந்த மர்ம நபர்கள் முதலில் தெரு விளக்குகளை அடித்து உடைத்து பின்னர் இருளில் இப்பகுதியில் உள்ள வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அந்த மர்ம நபர்கள் யார் என்றும் எதற்காக வாகனங்களை அடித்து உடைத்தனர் என்பதும் தெரியவில்லை. இதனை தடுக்க முயன்ற சிலரை மர்ம கும்பல் மிரட்டினர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
காஞ்சீபுரத்தின் முக்கிய பகுதியில் மர்ம நபர்கள் வாகனங்களை அடித்து உடைத்த சம்பவம் நகரத்தில் பெரும் பரபரப்பினையும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 62). நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட அவர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து இன்று காலை ஆறுமுகத்தை ஆம்புலன்சு வேனில் சென்னைக்கு அழைத்து வந்தனர். டிரைவர் ராமராஜ் (37) வேனை ஓட்டினார். உடன் மருத்துவ உதவியாளர்கள் 2 பேர் மற்றும் ஆறுமுகத்தின் உறவினர் ஒருவர் இருந்தனர்.
கல்பாக்கத்தை அடுத்த வடபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஆம்புலன்சு வேனை டிரைவர் திருப்பினார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்சு வேன் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பலத்த காயம் அடைந்த நோயாளி ஆறுமுகம், டிரைவர் ராமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் உடன் இருந்த மருத்துவ உதவியாளர்கள் 2 பேர் மற்றும் ஆறுமுகத்தின் உறவினர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பு பணிகள் சம்பந்தமாக காமாட்சியம்மன் கோயிலை பார்வையிட்டார்.
உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பிப்ரவரி 9-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி பார்வையிட்டார்.
அப்போது காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் என்.ஸ்ரீநாத், கோயில் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, தாசில்தார் கியூரி, பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.ஜெய்சங்கர், கோயில் நிர்வாக அதிகாரி எம்.விஜயன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பிரேம்குமார், அரீஷ்தயாத் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது இருவரும் உடல் முழுவதும் அமெரிக்க டாலர் நோட்டுகளை ‘டேப்பால்’ ஒட்டி கடத்தி வந்திருந்தது தெரிந்தது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.7½ லட்சம் ஆகும். இந்த பணத்திற்குரிய ஆவணம் அவர்களிடம் இல்லை. இதைத் தொடர்ந்து பிரேம் குமார், அரீஷ்தயந்தின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி பேசியதாவது:-
மாவட்டத்தில் விவசாயிகளின் நலனைகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளபட்டு வருகிறது. பொதுபணித்துறை மூலம் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தி அதிகளவில் தண்ணீரை சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றது.
மாவட்டத்தில் 3 லட்சம் நாட்டு மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இதனை 6 லட்சமாக உயர்த்தி மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு இடத்தினை ஆய்வு செய்து அரசுக்கு கருத்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு பயிர்கடன் மற்றும் நகை கடன் வழங்கும் போது உச்சவரம்பின்றி ரொக்கமாக வழங்க அனுமதிஅளிக்க கோரி ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.






