என் மலர்
காஞ்சிபுரம்
தாம்பரம்:
மேடவாக்கம் அருகே உள்ள கவுரிவாக்கம், வேம்புலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகரன். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது மகள்கள் திதிக்ஷா, சமிக்ஷா (வயது 2½).
சிறுமி திதிக்ஷா அருகில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். தினமும் வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அவளை தாய் ஈஸ்வரி, குழந்தை சமிக்ஷாவுடன் சென்று வழியனுப்பி வந்தார்.
இன்று காலை வீட்டு முன்பு சமிக்ஷா விளையாடிக் கொண்டிருந்தாள். இதனால் அவளை அங்கேயே விட்டு விட்டு ஈஸ்வரி, மற்றொரு மகளான திதிக்ஷாவை பள்ளி வேனில் ஏற்றுவதற்காக அழைத்து சென்றார்.
வேன் வந்தவுடன் அருகில் இருந்த தாயிடம் செல்வதற்காக சிறுமி சமிக்ஷா ஓடி வந்தாள். இதனை தாய் ஈஸ்வரியும், வேன் டிரைவரும் கவனிக்கவில்லை.
மாணவ- மாணவிகள் ஏறியதும் வேனை டிரைவர் இயக்கினார். அப்போது முன்னாள் நின்ற சிறுமி சமிக்ஷா மீது வேனின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவள் பரிதாபமாக இறந்தாள். இதனை பார்த்து தாய் ஈஸ்வரி கதறி துடித்தார்.
விபத்து நடந்ததும் வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூரை அடுத்த ஆமூர் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர். இவருடைய மகன் வில்சன்(வயது 20). கிழக்குகடற்கரைசாலை நெம்மேலியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று இரவு வில்சன் ஆமூரிலிருந்து தன்னுடைய திருப்போரூருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
திருப்போரூர்- மானாம்பதி சாலையில் உள்ள தனியார் கம்பெனி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த வில்சன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து திருப்போரூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்...
திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன் இவருடைய மகன் யுவராஜ்(வயது 4). வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த யுவராஜ் சாலையில் ஓரமாக நடந்து வந்தான். அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் யுவராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரை தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சித்தாலபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவருடைய மகள் பிரேமலதா(வயது 15). இவர், அருகில் உள்ள திருமுக்கூடல் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த வடிவேலு என்பவரின் மகள் சாந்தினி(13). இவர், அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் ஒன்றாகவே பள்ளிக்கு சென்று வருவார்கள். நேற்று மாலை 5 மணியளவில் பிரேமலதாவுக்கு சிறப்பு வகுப்பு முடிந்து இருவரும் தங்கள் ஊருக்கு செல்ல பள்ளி முன் காத்து நின்றனர்.
அப்போது அந்த வழியாக வாலாஜாபாத்தைச் சேர்ந்த மாணிக்கம்(53) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். மாணவிகள் இருவரும் அவரது மோட்டார் சைக்கிளில் ஏறி தங்கள் ஊருக்கு சென்றனர்.
பள்ளியில் இருந்து சிறிது தூரம் சென்ற போது அவர்களுக்கு பின்னால் கல்குவாரியில் இருந்து வேகமாக வந்த லாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சாலையில் விழுந்த மாணவி பிரேமலதா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் நசுங்கி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவி சாந்தினி மற்றும் மாணிக்கம் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
பள்ளி மாணவி பலியானதை அறிந்த திருமுக்கூடல் பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் விபத்துக்கு காரணமான லாரியை தீ வைத்து எரித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர்.
ஆனால் பொதுமக்கள் லாரியில் எரியும் தீயை அணைக்க விடாமல் தீயணைப்பு வாகனத்தை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் (உத்திரமேரூர்), ருக்மாங்கதன் (சாலவாக்கம்) மற்றும் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து பலியான மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.
அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாணவியின் உடலை அகற்ற விடாமல் தடுத்தனர். இந்த வழியாக கல்குவாரி லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவி பலியாகி விட்டார். எனவே கல்குவாரி லாரிகளை மாற்றுப்பாதையில் செல்ல உத்தரவிடவேண்டும். உயர் அதிகாரிகள் வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் கோபத்துடனும், வருத்தத்துடனும் இருக்கிறார்கள். தமிழகம் இருண்ட காலத்தில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் சசிகலாவை எதிர்க்கின்றனர்.
திடீரென டாக்டர் ரிச்சர்டு பீலே வந்து ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை பற்றி விளக்கம் தந்து இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த நேரத்தில் தந்து இருக்க வேண்டியது தானே. அப்போது எந்த உண்மையும் சொல்லாமல் 2 மாதத்துக்கு பிறகு தற்போது விளக்கம் தருவது ஏன்?
ஜெயலலிதா நன்றாக இருந்த போது ஒரு புகைப்படமோ, கண்காணிப்பு பதிவையோ எடுக்க முடியாதா?. இது முழுக்க முழுக்க பொய் பிரசாரம். இவர்கள் அளித்த விளக்கம் திருப்தி தரவில்லை. எனவே இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நந்தம்பாக்கம் நேதாஜி காலனி பூம்புகார் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (47) ரவுடி. இவர் நேற்று பரங்கிமலை பட்ரோட்டில் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தார். இதை அவரது நண்பர் லோகநாதன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லோகநாதனை வெட்டினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நந்தம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு மும்பையில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது மும்பையைச் சேர்ந்த அம்ரீத்கோத்தாரி (வயது 45) என்பவர் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்தார்.
விமான நிலையத்தில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியரான ரமேஷ்(25) என்பவர் அவரை வரவேற்று வெளியே அழைத்து வந்தார். இதை பார்த்த வருமான வரித்துறை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அப்போது அம்ரீத்கோத்தாரியின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் புத்தம் புதிய தங்க நகைகள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
விசாரணையில் அவர், சென்னையில் உள்ள நகை கடைகளுக்கு வழங்க அந்த தங்க நகைகளை கொண்டு வந்ததாக கூறினார்.
இதையடுத்து 9 கிலோ தங்க நகைகளுடன் பிடிபட்ட 2 பேரையும் விசாரணைக்காக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நகைகளுக்கு வருமான வரி கட்டப்பட்டு உள்ளதா?. அதற்கான ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
கடந்த டிசம்பர் மாதம் வார்தா புயல் சென்னை நகரை தாக்கியது. நகர் முழுவதும் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.
வண்டலூர் உயிரியல் பூங்காவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து விழுந்தன. விலங்குகள் அடைக்கப்பட்டிருந்த இடங்களும் சேதம் அடைந்தது. கூண்டுகள் மேற்கூரைகள் உடைந்தன.
இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் விழுந்த மரங்களை அகற்றும் பணியும் சீரமைப்பு பணியும் நடந்து வந்தது. மரங்களை துண்டு துண்டாக வெட்டி பூங்காவில் ஒரு இடத்தில் குவித்து வைத்தனர்.
ஏராளமான மரங்கள் விழுந்ததால் அதனை அகற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் பொங்கல் பண்டிகைக்குள் சீரமைப்பு பணிகள் முடிந்து பூங்கா திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால் பொங்கல் பண்டிகைக்கு பூங்கா திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் பூங்காவில் சீரமைப்பு பணிகள் முடிந்து உள்ளது. அங்கு சுமார் 3000 டன் மரக்கழிவுகள் அகற்றப்பட்டன. விலங்குகள் இருந்த இடங்கள், கூண்டுகள், மேற் கூரைகள் சீரமைக்கப்பட்டு பணிகள் முடிந்து இருக்கிறது.
இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா வருகிற 10-ந்தேதி திறக்கப்படுகிறது.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அவர் கூறுகையில், வண்டலூர் பூங்காவில் புயலால் சரிந்த மரங்கள் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளன. கூண்டுகள், மேற்கூரைகள் போன்ற சீரமைப்பு பணி முடிந்து பார்வையாளர்கள் வந்து செல்ல வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் வருகிற 10-ந் தேதி வண்டலூர் பூங்கா திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புயலால் சேதமடைந்த வண்டலூர் பூங்கா 2 மாதத்துக்கு பிறகு திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
காஞ்சீபுரம் நகரின் பிரதான சாலையான காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் தேவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை இறைவன் நேரில் வந்து தீர்த்து வைத்ததாக புராணங்களில் கூறுகின்றன.
இத்திருக்கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினால் சட்டரீதியான வழக்குகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் தீரும் என்ற ஐதீகம் உள்ளது. இதனால் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்வர்.
திங்கட்கிழமை தோறும் அதிகாலை முதலே ஆயிரம்கணக்காண பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவர்.
இக்கோவிலுக்கு கடந்த 2014ம் ஆண்டு பக்தர்கள் நன்கொடையுடன் அறநிலையத்துறை சார்பில் புதிதாக ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 74.40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.42.40 லட்சம் கோவில் நிதியிலிருந்து ராஜகோபுரம் மற்றும் சுற்றுபிரகார மண்டபமும், பொது நிதி 18.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய முகப்பு மண்டபமும் மேலும் 14.40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய அன்னதான கூடமும் சீரமைக்கப்பட்டன. மேலும் பக்தர்களின் நன்கொடை மூலம் குளம் மற்றும் நவகிரக சன்னதிகள் உள்ளிட்ட வைகள் புதுப்பிக்கப்பட்டன.
தற்போது திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வருகிற 9-ம்தேதி (வியாழன்) கும்பாபிஷேகம் காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் 6ம்தேதி தொடங்குகின்றது. கும்பாபிஷேம் முடிந்த உடன் மாலை 5 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்வுள்ளது.
இத்திருக்கோவிலினுள் கொடிமரம் அமைப்பதற்கு அ.தி.மு.க. காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் அளித்த நன்கொடை மூலம் ரூ. 4 லட்சம் மதிப்பில் தேக்கு மரத்தில் அமைக்கப்பட்ட புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டது. அந்த கொடி மரம் ஸ்தாபிதம் இன்று காலை நடைபெற்றது. வேதமந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைநடத்தி இக்கொடி மரத்தின் ஸ்தாபிதம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்தினர், நிர்வாகிகள் அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், ஆர்.டி.சேகர், குண்ணவாக்கம் கிருஷ்ண மூர்த்தி, தென் னேரி வரதராஜீலு, டபிள்யூ.பி.ஜி.சரவணன், விஸ்வநாதன், மாலினி பாலாஜி, ஜெயராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). லண்டன் சென்ற அவர் அங்கு இலங்கை தமிழர்களான முகமது இம்ரான் (32), சுகனந்தன் (32), முரளிதரன் (44), பிரகாஷ் (25), சந்்திரமோகன் (34) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
போலியான ஏ.டி.எம். அட்டைகளை அவர்கள் தயாரித்து 2014-ம் ஆண்டு சென்னை வந்தனர். சென்னை ஏ.டி.எம். மையத்தில் போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இது தொடர்பான வழக்கில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 6 பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்கள் சி.பி.சிஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 6 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 303 போலி ஏ.டி.எம். அட்டைகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
2015-ம் ஆண்டு 6 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில் சந்திரமோகன், முகமது இம்ரான் ஆகியோர் தப்பி சென்றனர். சுகனந்தன், முரளிதரன், பிரகாஷ் ஆகியோர் நேபாள நாட்டு வழியாக தப்பி சென்ற போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செந்தில்குமார் சென்னையிலேயே இருந்தார்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 11-வது கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷ் தன்னுடைய தீர்ப்பில், செந்தில்குமார், சுகனந்தன், பிரகாஷ், முரளிதரன் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அரசு தரப்பு வக்கீல்களாக மேரிஜெயந்தி, எட்விக் ஆகியோர் ஆஜராகினர். முகமது இம்ரான், சந்திரமோகன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (24) இவர் வண்டலூர் உம்மனாஞ்சேரியில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வந்தார்.
இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார். தாம்பரம்-மதுரவாயல் நெடுஞ்சாலையில் தாம்பரம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
அண்ணாநகரை சேர்ந்தவர் பாலஅருள் (36) இவர் பெருங்களத்தூர் நெடுகுன் றத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார். பெருங்களத்தூர் நெடுங்குன்றம் சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பாலஅருள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், சாஸ்திரி நகர் 4-வது தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு சுமார் 12 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் தங்களுக்கு தலைவலி, வயிற்று வலி இருப்பதாக கூறி சிகிச்சை பெற வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த நர்சுகளிடம் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். 2 சிறுவர்களும் கழிவறைக்கு சென்றபோது நர்சுகளின் பைகள் இருந்த அறைக்குள் புகுந்து ரூ. 4 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.
மேலும் நர்சு சசிகலா என்பவரது கைப்பையில் இருந்த ஏ.டி.எம். கார்டையும் சிறுவர்கள் எடுத்து சென்று விட்டனர். அதனுடன் ரகசிய எண்ணும் இருந்தது.
இந்த நிலையில் நர்சு சசிகலாவின் செல்போனுக்கு, வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். மூலம் ரூ.19 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக எஸ்.எம்.எஸ். வந்தது. திருடிய ஏ.டி.எம். கார்டு மூலம் சிறுவர்கள் பணத்தை எடுத்து இருப்பது தெரிந்தது.
பணம் எந்த ஏ.டி.எம். மையத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் சிறுவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சின்ன காஞ்சீபுரத்தில் நினைவிடமாக உள்ள அவர் வாழ்ந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ள திருஉருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
சின்ன காஞ்சீபுரத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத். பா.கணேசன் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மைதிலி திருநாவுக்கரசு, வி.சோமசுந்தரம், கே.யு.எஸ். சோமசுந்தரம். வள்ளிநாயகம், விஸ்வநாதன் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் திரளானோர் காஞ்சீபுரம் காந்தி சாலை பெரியார் நினைவுத்தூண் பகுதியில் இருந்து அமைதி ஊர்வலமாக காஞ்சீபுரம் நகரமன்ற அலுவலகம் வரை சென்றனர். பின்னர் அங்கு அண்ணாதிருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ, எழிலரசன் எம்.எல்.ஏ, சன்பிராண்ட் ஆறுமுகம், பொன்மொழி, சிவிஎம். அ.சேகர், வி.எஸ். ராமகிருஷ்ணன், பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் வளையாபதி தலைமையில் ஏராளமானோர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. சார்பில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சாட்சி சண்முக சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதே போன்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.






