search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் நாடகம் ஆடி மக்களை திசை திருப்புகின்றனர்: எச்.ராஜா குற்றச்சாட்டு
    X

    செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் நாடகம் ஆடி மக்களை திசை திருப்புகின்றனர்: எச்.ராஜா குற்றச்சாட்டு

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது நாடகமாடி மக்களை திசை திருப்பினர்.
    • மத்திய அரசிற்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று இவர்கள் எண்ணுகின்றனர்.

    காரைக்குடி :

    காரைக்குடியில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 8 நாட்கள் சோதனை முடிந்து அதில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம், தலைமைச் செயலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தி அதன் பின்னர் தான் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தனர். இதை சகித்து கொள்ள முடியாதவர்கள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

    தமிழகத்தில் தி.மு.க.வினர் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு காரணம் மக்களிடம் அனுதாபம் பெறலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசிற்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று இவர்கள் எண்ணுகின்றனர். ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் அந்த மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடைபிடித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதை அனைத்து மீடியாக்களும் வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்படுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கவர்னரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போலீசார் கைது செய்தபோது நாடகமாடி மக்களை திசை திருப்பினர். அதைபோல் இன்று அதே நாடகத்தை கையில் எடுத்துள்ளனர்.

    இது மக்களுக்கு நன்றாக தெரியும். அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்வதற்கு முன்பு வரை வராத நெஞ்சுவலி அதற்கு பின்னர் எப்படி வந்தது? திடீரென ஒரு நாள் இரவு எப்படி அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு சந்தேகம் உள்ளது. இதற்கு உயர்தர டாக்டர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அமலாக்கத்துறை கைது செய்ததால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

    நேற்று நீட் தேர்வு ரிசல்ட் வந்துள்ளது. இதில் 720-க்கு 720 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதல் மாணவனாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.

    மேலும் இந்திய அளவில் முதல் 10 இடத்தில் நான்கு பேர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான். இதன் மூலம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×