என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் 5-ந்தேதி துணைவேந்தர்கள் மாநாடு- கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்பாடு
- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தமிழக அரசுக்கு சித்தாந்த ரீதியான மோதல் போக்கு ஏற்பட்டது.
- அரசும் சரி, கவர்னரும் சரி, அவரவரிடம் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கின்றனர்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தரான மாநில கவர்னரே பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளார். இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தமிழக அரசுக்கு சித்தாந்த ரீதியான மோதல் போக்கு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், சில மாநிலங்களில் உள்ளதுபோல் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் தமிழக அரசு மசோதா நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் அரசு அனுப்பி வைத்தது. ஆனால் அதற்கு அவர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
பல்கலைக்கழக விவகாரங்களில் கவர்னரின் தலையீடு இருப்பதில்லை என்ற நிலை மாறி தற்போது, அதில் சில பிரச்சினைகள் எழுந்து அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால் அதில் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதில் தமிழக அரசுக்கு முடியவில்லை. எனவே அரசும் சரி, கவர்னரும் சரி, அவரவரிடம் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கின்றனர்.
மத்திய அரசு புதிய தேசிய கல்விக்கொள்கையை 2020-ம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இதில் பல அம்சங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் புதிய தேசிய கல்விக் கொள்கையை பற்றி ஆலோசனை செய்ய ஊட்டியில் ஜூன் 5-ந்தேதி துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ஆர்.என்.ரவி நடத்த இருக்கிறார்.
அதற்கான கடிதத்தை அனைத்து துணைவேந்தர்களுக்கும் கவர்னரின் முதன்மைச் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல் அனுப்பியுள்ளார்.
இந்த மாநாட்டில் புதிய தேசியக் கல்விக் கொள்கை பற்றி, குறிப்பாக இந்திய மொழிகள் மூலம் பாடங்களை கற்றுக்கொடுக்க வழிவகை செய்யும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் கவர்னர் ஆர்.என்.ரவி இதுபோன்ற மாநாட்டை நடத்தினார். இது அப்போதும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.