என் மலர்tooltip icon

    ஈரோடு

    டி.என்.பாளையம் அருகே சிறுத்தை கடித்து ஆடுகள் பலியானதாக கூறி வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே சிறுத்தை கடித்து ஆடுகள் பலியானதாக கூறி வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோபிசெட்டி பாளையத்தை  சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (60). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் டி.என்.பாளையம் அடுத்த நஞ்சை புளியம்பட்டியில் பவானி ஆற்றோரம் உள்ளது.

    சுந்தர்ராஜ் தனது தோட்டத்தில் 6 ஆடுகளும், 10-க்கும் மேற்பட்ட மாடுகளையும் வளர்த்து வருகிறார். 

    சம்பவத்தன்று சுந்தர்ராஜ் தோட்டத்தில் ஆடுகளை அங்கு இருந்த கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தீவனம் எடுப்பதற்காக சென்றார்.

    அப்போது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது நாய் ஒன்று 4 ஆடுகளை கடித்து குதறி விட்டு சென்றதாக தெரிகிறது. இதில் 4 ஆடுகளும் பலியானது. 

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு  வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் இறந்து கிடந்த ஆடுகளை ஆய்வு செய்தனர். மேலும் அங்கு கால் தடயங்களை ஆய்வு செய்தனர். 

    அதில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என்பதும், நாய்கள் தான் ஆடுகளை கடித்து கொன்றது என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

    இதற்கிடையே ஆடுகளை சிறுத்தை தான் கடித்து கொன்று விட்டதாக தகவல் பரவியதும் 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அங்கு திரண்டனர். 

    ஏற்கனவே அதே பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 4 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்ற நிலையில் வனத்துறையினர் அங்கு 2 நாட்களாக கேமிராக்களை பொருத்தி கண்காணித்தனர். அதில் சிறுத்தை நடமாட்டம் அந்த பகுதியில் இல்லை என்பதும், ஆடுகளை நாய்கள் கடித்து கொன்றதும் தெரிய வந்தது.

    இந்நிலையில் சுந்தர்ராஜ் எனபவருக்கு சொந்தமான 4 ஆடுகளை சிறுத்தை தான் கடித்து கொன்றதாக தகவல் பரவியதும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடனடியாக சிறுத்தையை பிடிக்க வேண்டும் என கூறி வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதைத்தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் உடனடியாக சிறுத்தையை பிடிக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். 

    அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு கூடியிருந்த அப்பகுதி மக்களுக்கு சிறுத்தைக்கும், நாய்கள் கடித்து ஆடுகள் இறப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை காண்பித்து விளக்கினர்.

    மேலும் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு அங்கேயே ஆய்வு செய்யப் பட்டது. அதில் நாய்கள் கடித்ததால் தான் ஆடுகள் இறந்தது தெரியவந்தது. அதன் பின்னரே கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

    இதனால் நஞ்சைபுளியம் பட்டியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று கடை திறந்ததும் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று கடை திறந்ததும் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஈரோடு மாவட்டத்தில் 202  டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  இதில் 105 டாஸ்மாக்  பார் வசதிகளுடன் இயங்கி வருகிறது.

    ஈரோடு  மாவட்டத்தில் சாதாரண நாட்களில் தினமும் ரூ.4 கோடி வரை வசூல் ஆகும். பண்டிகை விசேஷ காலங்களில் மதுபிரியர்கள் அதிக அளவில் வந்து தங்களுக்கு வேண்டிய மதுவகைகளை அள்ளி செல்வதால் அன்று வழக்கத்தை விட வியாபாரம் அமோகமாக நடைபெறும். 

    விசேஷ நாட்களில் மாவட்டத்தில் ரூ.8 கோடி வரை வியாபாரம் நடைபெறும்.

    இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

    அதன்படி கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

    ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் இடங்களில் இருந்த 179 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  

    தேர்தல் நடைபெறாத இடங்களில் வழக்கம்போல் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. 

    ஆனால் கடந்த 16-ந் தேதி மாலை டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர். தங்களுக்கு வேண்டிய சரக்குகளை அள்ளிச்சென்றனர். 

    இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை வழக்கம்போல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடை திறந்த உடனேயே வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. குடிமகன்கள் அந்தந்த டாஸ்மாக் கடையில் குவிந்தனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. 

    வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியது. மாலை நேரங்களில் இதை விட அதிக அளவில் வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வரும் 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அன்றும் எந்த அசம்பாவிதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தலைவர்கள் சிலையை சேதப்படுத்திவிடாமல் தடுக்க, சிலைகளுக்கு இரு புறமும் ஆளுயர கண்ணாடி பதிக்கப்பட்டு வருகிறது. கல் உள்ளிட்ட பொருட்களை எரிந்தாலும் எளிதில் உடையாத வண்ணம் கண்ணாடி வலிமை மிக்கதாக இருக்கும்.
    ஈரோடு:

    தலைவர்கள் சிலையை சேதப்படுத்திவிடாமல் தடுக்க, சிலைகளுக்கு இரு புறமும் ஆளுயர கண்ணாடி பதிக்கப்பட்டு வருகிறது. கல் உள்ளிட்ட பொருட்களை எரிந்தாலும் எளிதில் உடையாத வண்ணம் கண்ணாடி வலிமை மிக்கதாக இருக்கும். 

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அண்ணா, பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆகிய தலைவர்களின் சிலை வைக்கப்பட்டுள்ளது. 

    இந்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களில் அரசியல் கட்சியினர் வந்து தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி இதே பகுதியில் அம்பேத்கர் சிலையும் வைக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்நிலையில் சமீபகால மாக தலைவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது, அவமதிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. 

    இதனைத் தவிர்க்கும் வகையிலும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தலைவர்கள் சிலைகளை பாதுகாக்கும் வகையில் சிலைகளை சுற்றி கண்ணாடித் தடுப்பு அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
    ஈரோடு மாவட்டத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டுகளுக்கும், பவானி, சத்தியமங்கலத்தில் தலா 27 வார்டுகள், கோபி நகராட்சியில் 30 வார்டுகள், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 4 நகராட்சிகளில் 102 வார்டுகளுக்கும், இதே போல 42 பேரூராட்சிகளில் உள்ள 608 வார்டுகள் என மொத்தம் 769 கவுன்சிலர் பதவிகளுக்கு 2722 பேர் களத்தில் உள்ளனர். 

    ஈரோடு மாநகராட்சியில் 434 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பவானி, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் 785 வாக்குச்சாவடிகள் என மாவட்டம் முழுவதும் 95 மண்டலங்களில் 1219 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக நேற்று வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தலில் பயன் படுத்தப்படும்  பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

    காலை 6 மணிக்கு மின்னணு வாக்குபதிவு எந்தி ரங்களில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குசாவடி ஊழியர்கள் மாதிரி வாக்குபதிவு நடத்தி காண்பித்தனர். 

    பின்னர் அதில் பதிவாகி இருந்த வாக்குகள் அழிக்கப்பட்ட பிறகு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குபதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 

    காலை நேரத்தில் பெண் வாக்காளர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். ஆண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 10 மணிக்கு மேல் ஆண் வாக்காளர் களுக்கு இணையாக பெண் வாக்களர்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.  

    கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் வாக்குசாவடி நுழைவு பகுதியில் வாக்காளர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டது. 

    இதன் பின்னர் வாக்குசாடிக்குள் முககவசம் அணிந்தபடி செல்ல அனுமதிக்கப் பட்டனர். பொதுமக்கள் வாக்களிக்கும் வசதியாக  வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. 

    குறிப்பாக மாற்றுதிறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக அவர்களுக்கு சாய்வு தளம் அமைக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு 3 சக்கர நாற்காலிகள் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 

    இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். கழிவறை, குடிநீர் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. பொதுமக்கள் வெயிலில் நின்று சிரமப்படக் கூடாது என்பதற்காக சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தன.

    மாவட்டத்தில் தேர்தலை யொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தேர்தல் அமைதியான முறையில் நடத்திட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    பதட்டமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 184 வாக்குசாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 55 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதோடு, சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டன. மேலும் வாக்கு பதிவு மையங்களை சுற்றிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள 59 வார்டுகளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 816 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 28 ஆயிரத்து 798 பெண் வாக்காளர்களும், 42 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 656 வாக்காளர்கள் உள்ளனர்.

    பவானி நகராட்சியில் 30 ஆயிரத்து 709 வாக்காளர்கள், கோபி நகராட்சியில் 48 ஆயிரத்து 247 வாக்காளர்கள், சத்திய மங்கலம் நகராட்சியில் 33 ஆயிரத்து 552 வாக்காளர்களும், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் 17,237 வாக்காளர்களும், 42 பேரூராட்சிகளில் 4லட்சத்து 6 ஆயிரத்து 12 வாக்காளர்கள் என மாவட்டம் முழுவதும் 9 லட்சத்து 84 ஆயிரத்து 113 வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆர்வமுடன் முதல் வாக்கினை பதிவு செய்த இளம் பெண்கள் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டோம் என உற்சாகமுடன் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆர்வமுடன் முதல் வாக்கினை பதிவு செய்த இளம் பெண்கள் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டோம் என உற்சாகமுடன் தெரிவித்தனர்.

    ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டுகளில் 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

    மாநகர் பகுதியில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 434 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    வாக்குபதிவு தொடங்கியதும் பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசை யில் நின்று வாக்குப்பதிவை  பதிவு செய்து வருகின்றனர். 

    இளம் தலைமுறையினர் அதாவது முதல் வாக்குப் பதிவை பெற்ற இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இன்று காலை ஆர்வத்துடன் வந்து தங்களது முதல் வாக்கினை பதிவு செய்தனர்.

    குறிப்பாக கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடன் வந்து தங்களது முதல் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். 

    ஈரோடு குமலன் குட்டை வாக்குச்சாவடி மையத்தில் தங்களது முதல் வாக்கினை பதிவு செய்து வந்த இளம்பெண்கள் தேர்தல் குறித்து கூறியதாவது:-

     நாங்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்று வாக்காளர் அடையாள அட்டையை பெற்றோம். 

    இப்போது இன்று எங்களது முதல் வாக்கினை பதிவு செய்துள்ளோம். 

    முதன் முதலாக எங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளோம். 

    இளம் தலைமுறையாக நாங்கள் மாற்றத்தை விரும்பி யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு திட்டங்கள் வந்து சேரும் என்பதை சிந்தித்து  பார்த்து வாக்களித்து உள்ளோம்.  முதன் முதலாக வாக்களித்த அனுபவம் புதுமையாக இருந்தது. 

    இனி நடக்கும் தேர்தலில் தவறாமல் எங்களது ஜனநாயக கடமை ஆற்றுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கோபிசெட்டிபாளையம் நகர பகுதியில் இன்று பனி மூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவியது. ஆனாலும் குளிரை பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு காலை 7 மணிக்கு பொதுமக்கள் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
    கோபி:

    கோபி நகர பகுதியில் இன்று பனி மூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவியது. ஆனாலும் குளிரை பொருட்படுத்தாமல்  வாக்குச்சாவடிகளுக்கு காலை 7 மணிக்கு  பொதுமக்கள் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் 59 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

    இந்த வாக்குச்சாவடி மையங்களில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் அனைத்தும் இன்று காலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 

    தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங் கியது. வாக்களிப் பதற்காக வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனர். 

    அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் கையுறை வழங்கப் பட்டது. பின்னர் அவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 

    கோபி நகர பகுதியில் இன்று பனி மூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவியது. ஆனாலும் குளிரை பொருட்படுத்தாமல்  வாக்குச்சாவடிகளுக்கு காலை 7 மணிக்கு  பொதுமக்கள் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 

    பின்னர் படிப்படியாக வாக்காளர்கள்  வந்து வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
     
    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் பாதுகாப்பு பணிகளை கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் ஆய்வு செய்தார். 

    கோபி நகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் அடுத்த பெரியூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34).கூலி தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து  வந்தார். 

    இந்த நிலையில் சம்பவத் தன்றும் குடித்து விட்டு வந்த சுரேஷ் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். ஏன் இப்படி அடிக்கடி குடித்து விட்டு வருகிறீர்கள்? என மனைவி கண்டித்தார். 

    இந்தநிலையில் அன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது சுரேஷ் விஷம் குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். 

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அவரை பரி சோதனை செய்த  டாக்டர்கள் வரும் வழியிலேயே சுரேஷ் இறந்து  விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் பதட்டமான வாக்குசாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருதாக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் பதட்டமான வாக்குசாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்தல்  அமைதியான முறையில் நடந்து வருதாக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்தார்.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 769 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் வாக்களிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 1219 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 876 வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்றுகின்றனர். காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 184 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 

    ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தாலும் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இது குறித்து இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதுபோக  ஒரு  கம்பெனி பட்டாலியன் படையி னரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம். அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    மாவட்டம் முழுவதும் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக சப்&இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் அங்கு சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத் தப்பட்டு ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    இதுபோக நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை தேர்தல் விதிமுறைகள் மீறியதாக 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் இது வரை அமைதியாகவே நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோடடில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்களிலும் மக்கள் கூட்டமின்றியே காணப்பட்டது.
    ஈரோடு:

    உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோடடில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்களிலும் மக்கள் கூட்டமின்றியே காணப்பட்டது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை முதல்  விறு விறுப்பாக நடந்து வருகிறது. பொது மக்கள் வாக்களிக்கும் வசதியாக அரசு  அலுவலகங்கள், பள்ளி மற்றும்  கல்லூரி களுக்கு விடு முறை அளிக்கப் பட்டது. 

    இதேபோல் பெரிய மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், கடைகளுக்கும் இன்று சம் பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு அறிவித்து இருந் தது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

    இதன் காரணமாக இன்று ஈரோடு ஆர்.கே.வி. ரோடு, ஈ.வி.என் ரோடு, மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பார்க் பகுதி உள்பட முக்கிய பகுதிகளில் உள்ள 100-க் கணக்கான கடைகள் அடைக் கப்பட்டிருந்தன. 

    இதனால் அந்த பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப் பட்டது. ஆனால் அதே நேரம் அத்தியா வசியப் பொருட் களுக்கான பால், மருந்த கங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.

    மேலும் ஈரோடு பஸ் நிலையம் பகுதியும் வெறிச்சோடி காணப் பட்டது. இதனால் பஸ்களில் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. வெளியூர் செல்லும் பஸ்களிலும் குறைந்த பயணிகளே சென்று வந்தனர்.

    இதே போல் ஒரு சில பேக்கரி கடை, டீ கடைகளும் திறந்திருந்தன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி  இன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீரமட்டம் 94.40 அடியாக குறைந்தது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீரமட்டம் 94.40 அடியாக குறைந்தது.

    பவானி சாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை  8 மணி நிலவரப்படிநிலவரப்படி 94.40 அடியாக இருந்தது. 

    அணைக்கு 1155 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கனஅடியும், ஆற்றில் குடிநீருக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி என மொத்தம் 3 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேர்தல் தினத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேர்தல் தினத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று  இணை இயக்குனர்  தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதார  இணை இயக்குனர் வினோத் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
     
    தமிழகத்தில் நகர்ப்புற பகுதி களுக்கான உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக் கிழமை) நடக்கிறது. 

    அன்றைய தினம் தேர்தல் நடக்கும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் அவற்றில் பணி புரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண் டும் என தமிழக அரசு உத்திர விட்டுள்ளது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடை பெறும் பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும் தங்களது தொழிற்சாலைகளில் பணி புரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான நாளை (சனிக்கிழமை) ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.  

    அவ்வாறு ஊதியத்துடன் விடுப்பு வழங்காவிட்டால் தொழிசாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

    எனவே தொழிற்சாலை நிர்வாகத்தினர் எந்த விதமான புகார்களுக்கும் இடம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் போதிய வசதி உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்  வாக்குச்சாவடி மையங்களில்  போதிய  வசதி உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாளை  ஈரோடு மாவட்டத்தில்  மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூரா ட்சிகளில் நடைபெறும் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1,221 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள், வாக்காளர் மற்றும் வாக்குச் சாவடியில் பணி செய்வோர், வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேவை யான இருக்கை, குடிநீர், மின்சாரம் கழிப்பறை மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையிலான சாய்வு தளம், முதியவர் உடல் நலம் குன்றியோர் வந்து செல்லும் போது அமர்ந்து செல்ல இருக்கை, ஓட்டுச்சாவடி பணி செய்வோர் வேட்பாளர்களுக்கு தேவையான டேபிள், சேர் போன்றவற்றை ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அவரது உதவியாளர்கள் தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் சரியாக உள்ளதா? என்று குறித்து ஆய்வு செய்தனர்.

    இவற்றை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்பாடு செய்தாலும், ஓட்டுச் சாவடி நிலை அலுவலருக்கு வழங்கப்பட்ட பட்டியல் படிவத்தில் அவற்றை உறுதி செய்தனர்.

    மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் வேட்பாளர் பட்டியல் விபரம் ஒட்டப்பட்டுள்ளதையும், ஓட்டுப்பெட்டிகள் வைப்பு அறை, ஓட்டுப்பதிவுக்கு பின் அவற்றை எடுத்துச் செல்ல வாகனங்கள் வந்து செல்லும் பாதையையும் உறுதி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×