என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருங்கல்பாளையத்தில் மதுபானம் வாங்க குவிந்த மதுபிரியர்கள்.
டாஸ்மாக் மது கடையில் அலைமோதிய கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று கடை திறந்ததும் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று கடை திறந்ததும் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு மாவட்டத்தில் 202 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 105 டாஸ்மாக் பார் வசதிகளுடன் இயங்கி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் சாதாரண நாட்களில் தினமும் ரூ.4 கோடி வரை வசூல் ஆகும். பண்டிகை விசேஷ காலங்களில் மதுபிரியர்கள் அதிக அளவில் வந்து தங்களுக்கு வேண்டிய மதுவகைகளை அள்ளி செல்வதால் அன்று வழக்கத்தை விட வியாபாரம் அமோகமாக நடைபெறும்.
விசேஷ நாட்களில் மாவட்டத்தில் ரூ.8 கோடி வரை வியாபாரம் நடைபெறும்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதன்படி கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் இடங்களில் இருந்த 179 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் நடைபெறாத இடங்களில் வழக்கம்போல் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன.
ஆனால் கடந்த 16-ந் தேதி மாலை டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர். தங்களுக்கு வேண்டிய சரக்குகளை அள்ளிச்சென்றனர்.
இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை வழக்கம்போல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடை திறந்த உடனேயே வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. குடிமகன்கள் அந்தந்த டாஸ்மாக் கடையில் குவிந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியது. மாலை நேரங்களில் இதை விட அதிக அளவில் வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அன்றும் எந்த அசம்பாவிதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






