என் மலர்tooltip icon

    ஈரோடு

    2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 15-ந் தேதி தொடங்குகிறது.
    சென்னிமலை:

    2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 15-ந் தேதி தொடங்குகிறது.

    கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் 18 சித்தர்களில் ஒருவரான பின்னாக்கு சித்தர் வாழ்ந்து முக்தியடைந்த திருத்தலம் ஆகும்.

    இங்கு முருகனுக்கு தைப் பூச தேர், பங்குனி உத்திர தேர் என இரண்டு திருத்தேர் உள்ளது. ஆண்டு தோறும் தைப் பூச தேரோட்டமும், பங்குனி தேரோட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது. 

    கொரோனா நெருக்கடியால் 2020-ம் வருடம் பங்குனி உத்திர திருவிழா முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. 2021-ம் வருடம் எளிய முறையில் சகடை தேரில் பங்குனி உத்திர விழா நடந்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு தான் தேரோட்டம் நடக்கிறது.


    இந்த வருட பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 15-ந் தேதி கணபதிஹோமத்துடன் தொடங்குகிறது. 16-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 17-ந் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

    18-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும். 

    19-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது. 20-ந் தேதி காலை 8 மணிக்கு மகாதரிசனம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரமணிகாந்தன், தலைமையில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்-தேர்த்திருவிழா 17-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்குகிறது.
    அந்தியூர்:

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்-தேர்த்திருவிழா 17-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்குகிறது.

    அந்தியூர் பஸ் நிலை யம் அருகே உள்ள பத்ர காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குணடம்- தேர் திருவிழா நடப்பது வழக்கம்.
    கொரோனா பரவல் காரண மாக கடந்த 2 ஆண்டு களாக விழா நடத்தப் படாமல் இருந்து வந்தது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா  பரவல் குறைந்து வருகிறது. 

    இந்த நிலையில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பாது காப்பு வழிமுறைகளுடன் குண்டம் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 17-ந் தேதி (வியாழக்கிழமை) பூச்சாட்டு விழாவுடன் பத்ர காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திரு விழா தொடங்குகிறது. இதை தொடர்ந்து 30-ந் தேதி கொடி ஏற்றப்படுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா அடுத்த மாதம் 6-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதில் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குறார்கள்.

    இதைதொடர்ந்து 8-ந் தேதி மாலை தேர்த்திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 11-ந் தேதி வரை 4 நாட்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு தேர் நிலையை அடைகிறது.
    நம்பியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலியானதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலியானதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

    நம்பியூர் அருகே உள்ள அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

    சங்கர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது மனைவி நேற்று மாலை தனது தோட்டத்தில் இருந்த பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு ஊருக்குள் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். இன்று அதிகாலை 3 மணி அளவில் ஆட்டு பட்டியில் இருந்து ஆடு சத்தம் மற்றும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.

    இதையடுத்து பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் ஊருக்குள் வந்து சங்கர் மனைவி தமிழரசி தகவல் தெரிவித்தார். அவர் அக்கம் பக்கத்தினருடன் தோட்டத்தில் உள்ள பட்டிக்கு சென்றார்.

    அப்போது பட்டியில் இருந்த 3 ஆடுகள் ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்ததில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மேலும் மர்ம விலங்கிடம் தப்பி ஓடிய ஒரு ஆடு கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஆட்டை மீட்டனர்.
    இதுகுறித்து வரப்பாளையம் போலீசாருக்கும் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்த பின்புதான் ஆடுகளை கடித்து கொன்ற விலங்கு எது என்று தெரிய வரும்.

    நம்பியூர் பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஊருக்குள் புகுந்து ஒரு சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இந்த நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தையை தேடி வந்தனர். ஆனால் சிறுத்தை தப்பி சென்று விட்டது.

    இந்த நிலையில் மீண்டும் மர்ம விலங்கு ஆடுகளை அடித்து கொன்றதால் அது சிறுத்தையாக இருக்குமோ என்று பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் வந்து ஆய்வு செய்த பின்பே முழு விபரமும் தெரிய வரும்.
    பெருந்துறை அருகே தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


    பெருந்துறை  அடுத்த கராண்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர். காளி யப்பன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 62). காளியப்பன் ஏற்கனவே இறந்து விட்டார்.

    தனலட்சுமி அந்த பகுதி யில் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மகள் மற்றும் கருப்புசாமி என்ற மகனும் உள்ளார். மஞ்சுளா தேவி திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் குடி யிருந்து வருகிறார்.

    கருப்புசாமிக்கு திருமண மாகி முதல் மனைவி இறந்து விட்டார். வெண்ணிலா என்ற பெண்ணை 2-வ தாக திருமணம் செய்து கொண்டார். சில நாட்களில் 2-வது மனைவி அவரை பிரிந்து அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். 

     இந்த நிலையில் கருப்பு சாமி அவரது தாயாருடன் குடியிருந்து வருகிறார். கருப்புசாமி பணம் கேட்டதால் தனலட்சுமி தனது பெயரில் உள்ள வீட்டை 2 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து பணத்தை கொடுத்துள்ளார். 
    அதன்பின்னரும் கருப்புசாமி வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். தொடர்ந்து அவர் தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது கருப்புசாமி திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியிடம் எனது பெயருக்கு வீட்டை மாற்றி தராவிட்டால் கத்தியால் உங்களை குத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து தனலட்சுமி பெரு ந்துறை போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார்.   போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து கருப்பு சாமியை கைது செய்தார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.
    மதுவில் விஷ மாத்திரை கலந்து பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    மதுவில் விஷ மாத்திரை கலந்து பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, ரங்கம் பாளையம்,  இரணியன் வீதியை சேர்ந்தவர் பாலன் (51).  இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  பாலன் திண்டலில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.
      
    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. போதிய வருமானம் இல்லாததால் வீட்டு வாடகை, மகன், மகள் படிப்புக்கு செலவு செய்ய முடியவில்லையே என கூறி பாலன் வேதனையில் இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அனைவரும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவில் பாலன் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து அவரது மனைவி விசாரித்தபோது தான் மதுவில் விஷ மாத்திரை கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.

    உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    3 நாட்கள் தொடர்ந்து விஷேசம் என்பதால் சென்னிமலை -மகுடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    சென்னிமலை:

    3 நாட்கள் தொடர்ந்து விஷேசம் என்பதால் சென்னிமலை -மகுடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய்க் கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.  இங்கு சஷ்டி அன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். கார்த்திகை விரதம் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

    இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி தினம், கார்த்திகை என ஒரே நாளில் 3 விசேஷங்கள் வந்தது. இதனால் சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    இதையொட்டி அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து  முருகப் பெரு மானுக்கு பால், தயிர், பன்னீர் போன்ற பொருட் களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.
    பின்னர் வண்ண மலர் களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து தீபாரா தனை நடைபெற்றது. சிறப்பு அலங் காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளி தார்.

    3 விசேஷங்கள் ஒரே நாளில் வந்ததால் காலை முதல் இரவு வரை ஆயிரக் கணக்கான பக்தர்கள்  கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பொது மக்கள் வசதிக்காக கோவில் மலை அடிவாரத்திலிருந்து மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு அதிகாலை முதல் இரவு வரை பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டது. 

    கூட்டம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கோவிலில் நீண்ட வரி சையில் காத்திருந்து  தரிசனம் செய்தனர்.

    இதே போல் கொடு முடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவிலில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, திருவீதி உலா நிகழ்ச்சி நடை பெற்றது. 
    கொரோனா தடை காரண மாக கடந்த 2 ஆண்டு களுக்கு பிறகு கோவிலில் முதன் முறையாக நேற்று சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதேபோல் கிளாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பழனிக் கவுண்டன் பாளை யத்தில் பழனிக்குமார சுவாமி கோவிலில் செவ்வாய்க் கிழமை, வளர்பிறை சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம் அனைத்தும் ஒன்றாக வந்ததால் மலைமீது உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிசேகம் நடைபெற்றது. 
    அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய் யப்பட்டு இரவு மகா தீபாராதனை காட்டப் பட்டது. பின்னர் அனை வருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது.இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

    பெருந்துறையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு:

    பெருந்துறையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    பெருந்துறை வண்ணம்பாறையை சேர்ந்தவர் பரமசிவன். இவரது வீட்டில் கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி மர்மநபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடி சென்றார்.

     இதேபோல் பெருந்துறை வெற்றி விநாயக நகரில் வேலுச்சாமி என்பவர் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி பூட்டை உடைத்து 2 பவுன் நகையை மர்மநபர் திருடி சென்றார். 

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர்.

     இந்நிலையில் வீடு புகுந்து திருடிய வழக்கில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் (29) என்பவரை போலீசார்  கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

     மேலும் தனசேகரனிடம் இருந்து 9 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  

    திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆளில்லாத விமானம் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆளில்லாத விமானம் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    தமிழகம்- கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. 

    இந்த பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில்  27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. குறுகிய வளைவுகளுடன் உள்ள இந்த மலைப்பாதை வழியாக கார், வேன், பஸ், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்கு வரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த வழியாக அதிக பாரம் ஏற்றி கொண்டு வரும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடு கிறது.
    மேலும் ஒரு சில நேரங் களில் பாரம் தாங்காமல் வாகனங்கள் கவிழ்ந்து விடுவதும் தொடர் கதை யாக நடந்து வருகிறது. இதனால் குறுகிய இந்த மலைப்பாதையில் வாக னங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. இதனால் பல மணி நேரம் இரு மாநில வாகனங்கள் அணி வகுத்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இதையடுத்து கடந்த  மாதம் 10-ந் தேதி முதல் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர போக்கு வரத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அபாயகரமான  வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவது ஏன் என்பது குறித்தும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த பகுதியில் ஆய்வு நடத்த தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் முடிவு செய்யப் பட்டது.

    அதன்படி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தேசிய நெஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று இந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். மேலும் பண்ணாரியம்மன் கோவில் முதல் திம்பம் மலை உச்சி வரை ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

    இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும் போது, திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி போக்குவரத்து பாதிப்பு ஏற் படுகிறது. எனவே திம்பம் மலைப்பாதை அமைப்பு குறித்து ஆளில்லாத விமா னத்தை பயனபடுத்தி ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் அறிக்கை உயர் அதி காரிகளுக்கு அனுப்பி வைக் கப்படும். இதன் மூலம்  திம்பம் மலைப்பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண திட்டம் வகுக்கப்படும் என கூறினர்.
    பெருந்துறையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    பெருந்துறையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் பவானி ரோடு சந்திப்பில்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக  சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில், அவர், நசியனூரை சேர்ந்த அர்ஜூனன் (20) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அர்ஜூனன் அளித்த வாக்குமூலத்தின் பேரில், அவரை கைது செய்து அவரிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அர்ஜூனனை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சிப்காட் பகுதியில் வேப்ப மரத்தில் தூரி கட்டி விளையாடியபோது கழுத்தில் கயிறு இறுக்கி 3-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    சென்னிமலை:

    பீகார் மாநிலம் ஜாஜா பகுதியை சேர்ந்தவர் ஜனதாகுமார் (28). இவரது மனைவி நிக்கிதேவி. இவர்கள் கடந்த 5 வருடங்களாக ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சிப்காட் பகுதியில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு பியூஷ்குமார் (12), ராஜாகுமார் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருமே அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

    நேற்று மாணவர்கள் பியூஷ்குமார், ராஜாகுமார் ஆகியோர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். இவர்களது பெற்றோர்கள் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பியூஷ்குமாரும், ராஜாகுமாரும் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வேப்பமரத்தில் கயிற்றில் தூரி கட்டி விளையாடி கொண்டிருந்தனர்.

    அப்போது ராஜாகுமார் தனது கழுத்தில் கயிற்றை போட்டு குதித்தபோது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறுக்கியது. இதில் ராஜாகுமார் மயங்கி கீழே விழுந்துள்ளான்.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ராஜாகுமாரை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் ராஜாகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆப்பக்கூடல் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள ஓசைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (22). இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். 

    சம்பவத்தன்று அருணாசலம் தனது மோட்டார்சைக்கிளில் ஆப்பக்கூடலில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி அத்தாணி கைகாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அருணாசலம் திடீரென எதிரே வந்த வாகனத்தை கவனிக்காமல் பிரேக் அடித்தார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். 

    உடனே  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அருணாசலம் இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஈரோட்டில் 26.75 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் 26.75 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2-ம் அலை உச்சத்தின் போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1700 வரை பதிவானது. முன் களப்பணியாளர்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கியது.

    இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். 
    இதன்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டது. 2-ம் அலையின் போது பாதிப்பு அதிகரித்து வந்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

    தினசரி பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக் கப்பட்டு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வந்தது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனு க்குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டு தனிமையிலேயோ, ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட் டவர்கள் விரைவாக குணம் அடைந்தார். இந்நிலையில் மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மூலம் மூன்றாம் அலையாக உருவாகி மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இதைத் தொடர்ந்து முதலில் 2 ஆயிரம் பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில் பின்னர் அது படிப்படியாக 4 ஆயிரமாக உயர்ந்தது. அதன் பின்னர் 6 ஆயிரமாக அதிகரித்தது. 
    இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 26 லட்சத்து 75 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 
    ×