என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோபி:

    கோபியை அடுத்த சிங்கிரிபாளையம், கணேசபுரம், வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி லட்சுமி (வயது27). இவர்களுக்கு லத்திகா(5), பவானி(3), என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது.

    பழனிவேல் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இந்நிலையில் லட்சுமிக்கு வயிற்று வலி இருந்துள்ளது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலிகுணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லட்சுமி தற்கொலை செய்ய முடிவெடுத்து சம்பவத்தன்று இரவில் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் லட்சுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும் போகும் வழியிலேயே லட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 6 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை விசாரித்து வருகிறார்.

    குப்பைகளை பொதுமக்களே தரம் பிரிக்க வேண்டும் சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. வேண்டுகோள்

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி தாலுகா லக்காபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தை வழங்கி பேசினார்.

    ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் லக்காபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எல்.எஸ்.ஜெயலட்சுமி வரவேற்றார். மொடக்குறிச்சி ஒன்றிய குழுத்துணை தலைவர் கணபதி, அவல்பூந்துறை பேரூராட்சி தலைவர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ வி.பி.சிவசுப்பிரமணி பேசும் போது. ‘‘பொதுமக்கள் தங்களது வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை தாங்களே உரமாக மாற்றி மரம் செடிகளுக்கு பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருள்களை தரம்பிரித்து நல்லவிலைக்கு விற்பதன் மூலம் செலவுக்கு உதவும். இதனால் பொது மக்களுக்கு லாபமும், ஊராட்சி மன்றத்திற்கு குப்பைகளை அள்ளும் வேலை குறையும்’’ என்று பேசினார்.

    தொடர்ந்து ஒளிரும் ஈரோடு சார்பில் லக்காபுரம் ஊராட்சிக்கு வழங்கப்பட்ட குப்பை அள்ளும் பேட்டரி வாகனத்தை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணியிடம் வழங்கப்பட்டது.

    இதில் லக்காபுரம் ஊராட்சி செயலாளர் சாலை மாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் வசந்தி, மயில் என்கிற சுப்பரமணி, பி.சி.சண்முகம், வார்டு உறுப்பினர்கள் பிரகாஷ், முருகானந்தம், ஆவின் இயக்குனர் அசோக், கூட்டுறவு சங்க தலைவர் சண்முகம், தாசில்தார் கருப்புசாமி உள்பட கலந்து கொண்டனர்.

    பழனியில் நடைபெறும் மாநில முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என பா.ஜ.க. மாநில செயலாளர் செந்தில்பால சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
    அம்மாபேட்டை:

    தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டையை சேர்ந்த செந்தில்பால சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    ஏற்கனவே மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த இவரை கட்சியின் தலைமை சமீபத்தில் மாநில செயலாளராக நியமித்தது. நியமனத்திற்கு பின் தன் சொந்த ஊரான சிங்கம் பேட்டைக்கு வந்த அவரை கட்சி நிர்வாகிகள் பவானி மற்றும் சிங்கம்பேட்டையில் சிறப்பான முறையில் வரவேற்றனர்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

    தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மீது பொதுமக்கள் வைத்துள்ள அனுதாபங்களை வாக்குகளாக மாற்ற நேரடியாக மக்களை சந்தித்து செயல் திட்டங்களை வகுத்து நிர்வாகிகள் செயல்பட பாடுபடுவேன்.

    மேலும் பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து பொதுமக்களின் குறைகளை அறிந்து நிறைவேற்ற பாடுபடுவேன்.

    மாநிலத்தில் தற்போது ப.ஜ.கா.வில் 65 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் 15 லட்சம் வாக்குகளே பதிவாகி உள்ளன. மீதமுள்ள உறுப்பினர்கள் ஏன் வாக்களிக்கவில்லை? என ஆராயப்படும.

    தமிழகத்தில் கண்னியாகுமரி மாவட்டம் எப்படி பா.ஜ.வின் கோட்டையாக உள்ளதோ, அதே போல் மேற்கு மண்டலத்தை பா.ஜ.வின் கோட்டையாக மாற்ற தீவிர முயற்சி எடுப்பேன்.

    மேலும் வட மாநிலங்களில் பா.ஜ.வின் தலைமையில் ஆட்சி அமைந்தது போல் தமிழகத்திலும் பா.ஜனதாவின் ஆட்சி அமைய அரும்பாடுபடுவேன். பழனியில் நடைபெறும் மாநில முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநில தொழில் நுட்ப பிரிவு செயலாளர் தெய்வசிகா மணி மற்றும் நிர்வாகிகள் சித்திவினாயம் பற்குணன், அம்மாபேட்டை ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை 40 அடியை தொட்டு 40.15 அடியாக இருந்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதால பாதாளம் வரை சென்றது. 30 அடிக்கும் கீழே சென்றதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெரும் கவலையுடன் இருந்தனர்.

    கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததையொட்டியும் மேலும் மின்சாரம் தயாரிக்க அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டியும் சிறுக.. சிறுக நீர்மட்டம் உயர்ந்தது.

    இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி அணை 40 அடியை தொட்டு 40.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 420 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் குடிநீருக்கு ஆற்றில் வினாடிக்கு 50 கன அடி தண்ணீரும், வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
    அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி பேருந்து குழந்தைகளுடன் பள்ளத்தில் இறங்கிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் உயிர் தப்பினர்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்து உள்ள நெரிஞ்சிப்பேட்டையில் ஸ்ரீசரவணா நிகேதன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் பஸ் மற்றும் வேன் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

    இந்த நிலையில் காலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள மேலும் குழந்தைகளை ஏற்றி வருவதற்க்காக சென்றது.

    இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது ‘‘இந்த பள்ளியின் பஸ் குழந்தைகளை ஏற்றவரும் போது நிறைய இடம் இருக்கும் இடத்தில் திருப்புவது இல்லை மெயின்ரோட்டில்தான் அதுவும் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த இடத்தில் தான் திருப்புகின்றனர்’’ என்று கூறினர்.

    இந்த நிலையில் காலை பஸ்சின் டிரைவர் போக்குவரத்து மிகுந்த ரோட்டில் குழந்தைகளுடன் எம் ஏம் தோட்டம் எதிரில் திருப்பும்போது எதிர்பாராத விதமாக பஸ்ஸின் பின்பகுதி திடீர் என ரோட்டின் அருகில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது இதில் பஸ் கவிழாமல் நின்று கொண்டது குழந்தைகள் இதை கண்டு அலறினர். அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து குழந்தைகளை பஸ்சிலிருந்து இறக்கி மீட்டனர்.

    நல்லவேலையாக குழந்தைகளுக்கு எந்தவித அடியும் படவில்லை. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்தில் இருந்து குழந்தைகள் உயிர் தப்பினர்.

    இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும் போது இந்த இடத்தில் பஸ் திருப்புவதால் ஆபத்து என கூறியும் அலட்சியத்தால் பஸ்ஸை இயக்கியதால் இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தனர்.
    சிவகிரி அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    சிவகிரி:

    சிவகிரியை அடுத்த மலையம்பாளையம், வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது35).

    இவருக்கும் நத்தக்காடையூரை சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திரமணம் நடந்தது. திருமணம் ஆனதில் இருதே கண்வன்–மனைவி இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கவுசல்யா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சம்பவத்தன்று பெரியசாமி கவுசல்யா வீட்டிற்கு சென்று சமதானம் பேசி மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார்.

    ஆனால் கவுசல்யா பெரியசாமியுடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்து சிவகிரியை அடுத்த ஆயப்பரப்பு பகுதியில் உள்ள கனக்காங்காடு பகுதியில் விஷ மாத்திரை தின்று தனது தங்கைக்கு தகவல் கொடுத்தார்.

    அவரது தங்கை மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மயங்கி கிடந்த பெரியசாமியை மீட்டு கரூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த வாய்க்கால் மேடு ரகுபதி நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் பெருந்துறையில் உள்ள ஒரு நகை கடையில் பங்குதாரராக உள்ளார்.

    இவரது மனைவி சரண்யா (வயது23). இவருக்கு வயிற்று வலி இருந்தாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாக வில்லையாம்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியாக சரண்யா இருந்தாராம். இதை நினைத்த கவலை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து வந்த ஈரோடு தாலுகா போலீசார் சரண்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் 2 கிட்னி, கல்லீரல், இதயம் மற்றும் நுரையீரல், 2 கண்கள் தானமாக எடுக்கப்பட்டது.
    ஈரோடு:

    பெங்களூரில் வசிப்பவர் மதியழகன் (வயது 48). எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா (37).

    இந்த தம்பதியினருக்கு பூமா (17) கார்த்திகா (15) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் பூமா பிளஸ்-2 முடித்து என்ஜினியரிங் படிக்க இருந்தார்.

    இவர்கள் 4 பேரும் பெங்களூரில் இருந்து பொள்ளாச்சிக்கு உறவினர் கிரக பிரவேசத்துக்கு காரில் சென்றனர்.

    சித்தோடு பைபாசில் அந்த கார் சென்ற போது ரோட்டோரம் உள்ள மண் குவியலில் மோதி கார் கவிழ்ந்தது.

    இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் மயக்க நிலையில் இருந்த பூமாவை ஈரோடு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி பூமா மூளை சாவு அடைந்தார்.

    இதற்கிடையே தங்களின் மகள் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர். அதன் படி மாணவியின் 2 கிட்னி, கல்லீரல், இதயம் மற்றும் நுரையீரல், 2 கண்கள் தானமாக எடுக்கப்பட்டது.

    இதில் 2 கிட்னி ஈரோடு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கும், கல்லீரல் கோவைக்கும், நுரையீரல் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    கல்லீரல், இதயம் மற்றும் நுரையிரல் ஆகிய உறுப்புகள் இன்று காலை 3 ஆம்புலன்சு மூலம் கோவைக்கு எடுத்து செல்லப்பட்டது. போக்குவரத்து போலீசார் ஆம்புலன்சு செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். கோவை விமான நிலையத்தில் இருந்து இதயமும், நுரையீரலும் விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
    மாடு மேய்க்க சென்ற விவசாயியை யானை தூக்கி வீசியதில் அவரது கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதி குன்றி அருகே உள்ள கீழுர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 36) விவசாயி. இவர் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதி யோரம் மாடுமேய்க்க செல்வது வழக்கம்.

    அதே போல் நேற்று காலை வழக்கம்போல் மாடுகளை ஓட்டிச்சென்றார். அப்போது மாடுகள் வனப்பகுதிக்குள் சென்றதால் மாடுகளை தேடி பெருமாள்சாமி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற போது புதர்மறைவில் நின்றிருந்த யானை பெருமாள் சாமியை துரத்தி சென்று தாக்கி துதிக்கையால் தூக்கி வீசியது.

    யானை தாக்கியதால் வலதுகால் எலும்பு முறிவு ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து யானை அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது.

    பின்னர் பெருமாள்சாமி மயக்கம் தெளிந்ததும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. கூக்குரலிட்டார். கால்வலி காரணமாக இதை தொடர்ந்து அப்பகுதியிலிருந்தவர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசாரும், டி.என். பாளையம் வனத்துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர்.

    ஈரோடு அருகே காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து உயிரிழந்தார். இதுகுறித்து அவருடை தாய் சித்தோடு போலீசில் புகார் செய்துள்ளார்.
    ஈரோடு:

    ஈராடு ஆர்.என்.புதூர் அருகே உள்ள சி.எம். நகரை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (வயது 26).

    இவர்கள் கடந்த 6 வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிவ சுப்பிரமணியம் (5) என்ற மகனும், காவ்யா, கவியரசு என்ற 2 வயதான இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.

    அடிக்கடி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்களிடையே இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனம் உடைந்த மணிமேகலை தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் மணிமேகலை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி மணிமேகலையின் தாயார் பழனியம்மாள் (46) சித்தோடு போலீசில் புகார் செய்தார்.

    அதில் தனது மகள் மணிமேகலையை அவரது கணவர் சுரேஷ் பணம் கேட்டு அடித்து தொந்தரவு செய்ததால் மணிமேகலை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வக்கீல்கள் சட்டதிருத்தம் ரத்து செய்வது தொடர்பாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அறிவிக்கும் வரை கோர்ட்டு புறக்கணிப்பு தொடரும் என்று ஈரோட்டில் நடந்த வக்கீல்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஈரோடு:

    வக்கீல்கள் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு கொண்டு வந்த திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக சென்னையில் வக்கீல்கள் கண்டன ஊர்வலம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டங்கள் நடத்தினார்கள். இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில் மதுரையில் ஒரு வக்கீல் மீது நீதிபதி மேற்கொண்ட நடவடிக்கை வக்கீல்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் வக்கீல்களுக்கு எதிரான ஐகோர்ட்டின் சட்டதிருத்தத்தை ரத்து செய்யக்கோரியும், வலுவான இயக்கம் அமைக்கும் வகையிலும் ஈரோட்டில் நேற்று மாநில அளவிலான வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வக்கீல் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஏகமனதாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

    இதில் குறிப்பாக தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலை கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க தேர்தல் நடத்த வேண்டும் என்பதாகும். மேலும், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வம், அகில இந்திய பார் கவுன்சில் கூட்டுத்தலைவர் பிரபாகரன் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பரிந்துரை செய்யக்கூடாது.

    இதையும் மீறி தலைமை நீதிபதி பரிந்துரை செய்தாலும், இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது. இதுதொடர்பாக ஈரோட்டில் நடந்த வக்கீல்கள் சங்க கூட்டத்தின் தீர்மானத்தை பாரத பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் நேரில் வழங்க முடிவு செய்து இருக்கிறோம்.

    அடுத்தபடியாக தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும் செயல்பட்டு வரும் இலவச சட்ட உதவி மையங்கள், மக்கள் நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறை மையங்களில் இருந்து அனைத்து வக்கீல்களும் தங்கள் பணியை வாபஸ் பெறுவார்கள். இங்குள்ள தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகுவார்கள்.

    மாவட்ட கோர்ட்டுகளில் உள்ள வக்கீல்கள் சங்கங்களுக்கு பார் கவுன்சில் அனுப்பிய நோட்டீசுகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நோட்டீசு அனுப்பிய நடவடிக்கைக்கு கண்டனத்தையும் பதிவு செய்கிறோம்.

    கீழமை கோர்ட்டுகளில் உள்ள நடைமுறைகளை தெரியாத வக்கீல்களை வைத்துக்கொண்டு வக்கீல்களுக்கான நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை ஐகோர்ட்டு திரும்ப பெற வேண்டும் என்று கீழமை கோர்ட்டு வக்கீல்கள் மற்றும் வழக்காடிகள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

    வக்கீல்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நடவடிக்கை எடுத்து அறிவிக்கும் வரை தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவார்கள். இந்த அறிவிப்பை ஐகோர்ட்டு பதிவாளர் அல்லது வேறு யாராவது அறிவித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தலைமை நீதிபதி அறிவிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். அந்தந்த மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களும் நடைபெறும்.

    இதுபோல் இந்த போராட்டத்தின் நோக்கம் குறித்து வழக்காடிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் நடவடிக்கையையும் வக்கீல்கள் நடத்துவார்கள்.

    அடுத்தகட்டமாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) திருச்சியில் அனைத்து வக்கீல்கள் சங்கங்களின் கூட்டம் நடைபெறும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு கூட்ட ஒருங்கிணைப்பாளர் பி.திருமலைராஜன் கூறினார்.
    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது26).

    ரமேஷ் சம்பவத்தன்று தனது நண்பர் பூபதியுடன் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தார். ஈரோடு வடக்கு நுழைவு வாயிலில் ரோட்டை கடந்த போது எதிர் திசையில் வந்த அரசு பஸ் எதிர்பாராத வகையில் அவர்கள் மீது மோதியது.

    இதில் ரமேஷுக்கும், பூபதிக்கும் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ×