என் மலர்
செய்திகள்

குப்பைகளை பொதுமக்களே தரம் பிரிக்க வேண்டும்: எம்.எல்.ஏ. வேண்டுகோள்
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி தாலுகா லக்காபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தை வழங்கி பேசினார்.
ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் லக்காபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எல்.எஸ்.ஜெயலட்சுமி வரவேற்றார். மொடக்குறிச்சி ஒன்றிய குழுத்துணை தலைவர் கணபதி, அவல்பூந்துறை பேரூராட்சி தலைவர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ வி.பி.சிவசுப்பிரமணி பேசும் போது. ‘‘பொதுமக்கள் தங்களது வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை தாங்களே உரமாக மாற்றி மரம் செடிகளுக்கு பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருள்களை தரம்பிரித்து நல்லவிலைக்கு விற்பதன் மூலம் செலவுக்கு உதவும். இதனால் பொது மக்களுக்கு லாபமும், ஊராட்சி மன்றத்திற்கு குப்பைகளை அள்ளும் வேலை குறையும்’’ என்று பேசினார்.
தொடர்ந்து ஒளிரும் ஈரோடு சார்பில் லக்காபுரம் ஊராட்சிக்கு வழங்கப்பட்ட குப்பை அள்ளும் பேட்டரி வாகனத்தை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணியிடம் வழங்கப்பட்டது.
இதில் லக்காபுரம் ஊராட்சி செயலாளர் சாலை மாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் வசந்தி, மயில் என்கிற சுப்பரமணி, பி.சி.சண்முகம், வார்டு உறுப்பினர்கள் பிரகாஷ், முருகானந்தம், ஆவின் இயக்குனர் அசோக், கூட்டுறவு சங்க தலைவர் சண்முகம், தாசில்தார் கருப்புசாமி உள்பட கலந்து கொண்டனர்.






