என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது கடும் பனிப்பொழிவு உள்ளது. அதிகாலை 4 மணிக்கு பனிகொட்டத் தொடங்கி 9 மணி வரை அதன் தாக்கம் உள்ளது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது.
ஈரோடு மாவட்ட வனப் பகுதியான சத்தியமங்கலம் பனிமூட்டத்தால் வனப் பகுதியே தெரியாத அளவு மூடப்பட்டு கிடக்கிறது. பகல்-இரவு என தொடர்ந்து வெண்புகை மண்டலமாக வனப்பகுதி நிரம்பி உள்ளது.
இதையொட்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக காலை மற்றும் இரவு நேரத்தில் வாகனங்களில் செல்ல முடியவில்லை.
தமிழ்நாடு-கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் இந்த மலைப்பாதையில் தொடர்ந்து நிலவும் பனி மூட்டத்தால் வாகனங்கள் தட்டுதடுமாறி ஊர்ந்தபடியே செல்கிறது.
முகப்பு விளக்குகளை போட்டுச்சென்றாலும் ஒரே புகையாகத்தான் தெரிகிறதே தவிர ரோட்டை பார்க்க முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள்.
இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு வரும் தமிழக மற்றும் கர்நாடக மாநில பஸ்கள் 30 நிமிடம், 40 நிமிடம் என தாமதமாகவே வருகிறது. இந்த பனி மூட்டம், திம்பம், மாவநத்தம், ஆசனூர், கேர்மாளத்தில் அதிகமாக உள்ளது. அப்பகுதி மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகிறார்கள். குளிரில் இருந்து ஓரளவு தப்பிக்க நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மாநகர் பகுதி மக்கள் காவிரி ஆற்றுத்தண்ணீரைத்தான் குடிநீராகவும் பயன்படுத்தி வருகிறார்கள். காவிரியில் இருந்து தண்ணீர் வழங்குவதற்காக வைராபாளையம் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் மேல்நிலை தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு குழாய்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆழ்குழாய் கிணறுகள் இருந்தாலும் காவிரி தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று ஈரோடு மக்கள் காவிரி தண்ணீரையே குடித்து வந்தனர். ஆனால் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்ட பின்னர் ஆலைகளில் இருந்து வெளியேறிய கழிவுகள் காவிரியில் நேரடியாக வந்து கலந்தன.
ஒருபுறம் காலிங்கராயன் வாய்க்கால் ரசாயன விஷக்கழிவு வாய்க்காலாக மாறியது. அதேநேரம் ஈரோடு, வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரகாரம், பெரியசேமூர், சூரம்பட்டி என்று நகர் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய கழிவுகளும் காவிரியில் கலந்தது. இதனால் காவிரி தண்ணீர் புற்றுநோய் உருவாக்கும் தண்ணீராக மாறியது. எனவே ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு வைராபாளையத்தில் இருந்து தண்ணீர் எடுப்பதை விட்டுவிட்டு, மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
அதைத்தொடர்ந்து பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையில் இருந்து குழாய் மூலம் குடிதண்ணீர் கொண்டு வரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்துக்கான அனுமதி பெறும் நிலையிலேயே நிலுவையில் உள்ளது.
ஊராட்சிக்கோட்டை தண்ணீர் வருமா? என்ற கேள்வி எழுந்தாலும், தட்டுப்பாடு இல்லாமல் காவிரி தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் அளித்து வந்தது.
ஆனால் காவிரியில் கலக்கும் ஆலைக்கழிவுநீரால் தற்போது ஆற்றுநீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் பச்சை நிறமாக காணப்படும் தண்ணீரைத்தான் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடங்களில் வீட்டு உபயோகத்திற்காக எடுத்துச்செல்கிறார்கள்.

கடந்த வாரம் காவிரியில் இருந்து நீரேற்றம் செய்து வினியோகம் செய்யப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகும் சாக்கடையாக இருந்தது. வீடுகளில் குழாய்களை திறக்க முடியாத அளவுக்கு தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசியது.
இது மாநகர பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நீரேற்று நிலையம் சென்று பார்வையிட்டபோது காவிரியில் தண்ணீர் உறிஞ்சும் பகுதி முழுவதும் தண்ணீர் சாய மற்றும் தோல் ஆலைக்கழிவுகள் நிரம்பி இருந்தது தெரியவந்தது.
வெண்டிபாளையம் தடுப்பணையில் மின்சார உற்பத்திக்காக நீர் தேக்கியதால் சாக்கடை பாய்ந்து செல்ல முடியாமல் தேங்கியது தெரியவந்தது. உடனடியாக நீரேற்றம் மற்றும் தண்ணீர் வினியோகத்தை நிறுத்திய மாநகராட்சி அதிகாரிகள் வெண்டிபாளையம் தடுப்பணையில் இருந்து தண்ணீரை திறந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
சில நிறுவனங்களில் இருந்து கழிவுகளை காவிரி ஆற்றில் வெளியேற்ற மண்ணுக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும்போது கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் குறைந்தாலும் குழாய் பதிக்கப்பட்டு இருப்பது வெளியே தெரியாத வகையில் போட்டு உள்ளனர். தற்போது வெண்டிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைத்திருந்ததால் கழிவுநீர் சாக்கடையாக மாறி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆலைக்கழிவுகள் தண்ணீரில் கலந்து வருகிறது.
எனவேதான் மாநகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் துர்நாற்றத்துடன் உள்ளது. இதை குடித்தால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கடந்த சில நாட்களாக மாநகராட்சி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆலைக்கழிவுகள் காவிரியில் கலப்பதை தடுக்க வேண்டும். ஆலை உரிமையாளர்களும், அனைத்து மக்களின் நலன் கருதி மனச்சாட்சியுடன் தொழிற்சாலைகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெருந்துறை:
பெருந்துறை,திங்களுர் பகுதிகளில் மானாவாரி நிலக் கடலை 4000 எக்டர் சாகுபடி செய்து வருகின்றனர்.இது முற்றிலும் மழையை நம்பி செய்து வரும் விவசாயம் ஆகும்.
இந்த வருடம் பருவமழை பொய்த்து விட்டதால் நிலக் கடலை, சோளம், பயறு வகை, துவரை போன்ற பயிர்கள் காய்ந்து வருகிறது. பெருந்துறை வட்டாரத்தில் அக்டோபர் மாதம் முடிய இயல்பு மழை 591மி.மீ ஆகும்.நடப்பாண்டு அக்டோபர் மாதம் முடிய-263 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. இயல்பு மழை அளவை விட இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிய -328மி.மீ அளவு மழை குறைவாக பெய்து கடும் வறட்சி நிலவுகிறது.
இதனை தமிழ்நாடு வருவாய் ஆணையர் சத்திய கோபால் ஈரோடு மாவட்ட கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் இணை இயக்குநர் உள்பட பலர் பார்வையிட்டனர்.
ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் விஜயகுமார் (வயது 38).
இவர் ஈரோடு ரெயில்வே காலனி குடியிருப்பில் வசித்து வருகிறார்.நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
இந்த மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. தீ மள மள என்று பிடித்து எரிந்ததது.
இது பற்றி தகவல் கிடைத்தவுடன் ஈரோடு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மோட்டார் சைக்கிளில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து சேதமானது.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோடு சம்பத் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு முன்பு நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திடீர் என்று தீயில் எரிந்து சேதமானது.
இதே போல இப்போது ஈரோடு ரெயில்வே காலனி குடியிருப்பில் நிறுத்தி இருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளும் திடீர் என்று தீப்பிடித்து எரிந்து உள்ளது.
எனவே இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு யாரோ மர்ம ஆசாமிகள் தீ வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவர்கள் யார்? எதற்காக மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
குஜராத் மாநிலம் அகமதபாத் ராஜ்கோட் என்ற இடத்தில் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த போட்டியில் விளையாடும் தமிழக அணியில் விளையாட ஈரோடு கலை மகள் கல்வி நிலைய 6-ம்வகுப்பு மாணவி தங்கம் ரூபினி இடம் பிடித்துள்ளார். இந்த மாணவியை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பாராட்டி மேலும் வெற்றிகளை பெற வாழ்த்தினார்.
மேலும் மாணவி தங்கம் ரூபினியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யணன், மாவட்ட கல்வி அலுவலர் மகாராஜன், மாவட்ட நீச்சல் கழக செயலாளர் ரமேஷ், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராமகிருஷ்ணன், மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் மகேந்திரன் ஆகியோரும் பாராட்டினர்.
தமிழக அணியில் இடம் பிடித்த மாணவி தங்கம் ரூபினி நீச்சல் “டையிங்” பிரிவில் பங்கேற்கிறார்.
ஈரோட்டில் இன்று தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
அப்போது இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்து விட்டு 9-ந் தேதி ஜப்பான் போய்விட்டார். அங்கு ஜப்பான் பிரதமருடன் கை குலுக்கினார். அதேசமயம் இந்தியாவில் மக்கள் வங்கிகளில் தவம் கிடக்க தொடங்கி உள்ளனர். கடந்த 20 நாட்களாக மக்கள் வங்கிகள் முன்புதான் தவம் கிடக்கிறார்கள்.
வாரத்தில் 6 நாட்கள் வேலைக்குப்போகும் தொழிலாளிகள் இப்போது 3 நாட்கள்தான் வேலைக்கு போகிறார்கள்.
மீதி நாட்களில் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் தான் காத்து கிடக்கிறார்கள்.
பிரதமர் மோடி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் அவர் டீ ஆற்றிக் கொண்டிருந்தார் என்கிறார்கள். அப்படி அவர் கஷ்டப்பட்டிருந்தால் மக்கள் படும் கஷ்டத்தை அறிந்திருப்பார். இதை வைத்து பார்க்கும்போது மோடி டீ ஆற்றவும் லாயக்கற்றவர். பிரதமர் பதவிக்கும் லாயக்கற்றவராகி விட்டார்.
பொதுமக்கள் இப்படி அவதிப்பட்டு வருவதை தமிழக அரசும் எதுவும் கண்டு கொள்ளவில்லை முதல்-அமைச்சரும் அறிக்கை விடவில்லை.
வைகோ முதலில் விஜயகாந்தை முதல் அமைச்சர் ஆக்கி காட்டுவேன் என்று கூறி கூட்டணி வைத்தார்.
இப்போது தே.மு.தி.க. என்ற ஒரு கட்சியே இல்லாமல் போய் விட்டது. இந்த நிலையில் மோடி பக்கம் சாய்ந்து அவரது நடவடிக்கையை பாராட்டத் தொடங்கி உள்ளார். மோடியையும் அவர் விரைவில் காலி செய்து விடுவார்.
தமிழ்நாட்டில் இதுவரை 50 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது எந்த அக்கறையும் கிடையாது. அமைச்சர்களோ எம்.எல்.ஏ.க்களோ... யாரும் விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லவும் கிடையாது.
பணம் வாங்க அலையும் மக்களுக்கு வங்கி ஊழியர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பணம் வினியோகித்து வருகிறார்கள். அவர்களது பணியை விரைவான சேவையை பாராட்டுகிறேன்.
பொதுமக்கள் பொறுமைக்கு ஒரு அளவு உண்டு பொறுத்து.... பொறுத்து பார்ப்பார்கள். பொறுமைக்கு ஒரு அளவு உண்டு அது எரிமலையாக வெடித்தால் மிகப்பெரிய போராட்டமாக மாறும். அப்படி ஒரு கலவர சூழ்நிலையை மோடி ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முத்தையன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற தங்கவேல் (வயது 44). விவசாயியான இவர், மணல் லாரி வைத்தும் ஓட்டி வருகிறார். இதற்காக தனது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அலுவலகம் வைத்துள்ளார். தங்கவேல் தனது வீட்டில் ஜானி என்ற டாபர்மேன் இன நாய் ஒன்றை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகிறார்.
தங்கவேல் நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். வீட்டை அடைந்ததும், நாய் ஜானி இவரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. அருகில் வந்ததும் வழக்கத்துக்கு மாறாக பயங்கரமாக குரைக்க தொடங்கியது. அதற்கு சாப்பிட எதுவும் வாங்கி வராததால் இவ்வாறு குரைப்பதாக நினைத்த தங்கவேல், ஜானியை சமாதானப்படுத்த முயன்றார். எனினும் அவரது மோட்டார் சைக்கிளையே பார்த்து குரைத்துக்கொண்டிருந்த ஜானி, அதையே சுற்றி சுற்றி வந்தது. உடனே தங்கவேல் மோட்டார் சைக்கிளை பார்த்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் இருந்து கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று தரையில் வந்து விழுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தங்கவேல் பதறி ஓடினார். உடனே அந்த பாம்பு அங்கிருந்து வேகமாக ஊர்ந்து சென்றது. ஆனால் அதை துரத்தி சென்று பிடித்த ஜானி, அதை கடித்து குதறியது. இதில் பாம்பு சம்பவ இடத்திலேயே செத்தது.
மோட்டார் சைக்கிளில் பாம்பு இருந்ததை காட்டி கொடுத்ததுடன், தனது உயிரை காப்பாற்றிய நாய் ஜானியை தங்கவேல் அன்புடன் தடவிக்கொடுத்தார். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினரும் நாய் ஜானியின் சாதுர்யத்தை பாராட்டினர்.
ஈரோடு:
அந்தியூர் நேருவீதி, சேர்ந்தவர் காந்திமணி (வயது 54). தொழிலாளி. சம்பவத் தன்று காந்திமணி தனது மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.
அந்தியூர்- பவானி பிரிவில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் காந்திமணி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி காந்திமணி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா மற்றும் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பிரபாகரன் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டினார். மேலும் புத்தகங்களையும் அறிமுகம் செய்து வைத்து வைகோ பேசியதாவது:-
பிரபாகரன் இந்தியாவை பெரிதும் நம்பினார். ஆனால் அவருக்கு இந்தியா துரோகம் தான் செய்தது. பாராளு மன்றத்தில் நான் ராஜீவ்காந்திக்கு பல கேள்விகளை எழுப்பி உள்ளேன். ஆனாலும் என் மீது ராஜீவ் அன்பாக இருந்தார்.
விடுதலை புலிகள் இயக்கம் பற்றி பேசி அவரது மனதை மாற்றம் செய்து வைத்திருந்தேன் அவரும் விடுதலை புலிகளுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டினார். ஆனால் டெல்லியில் உள்ள அதிகாரிகள் ராஜீவ் மனதை மாற்றி விட்டார்கள். அதே நேரம் போபர்ஸ் ஊழல் தொடர்பாக அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது. அதில் இருந்து பிரச்சினையை திசை திருப்ப இலங்கை- இந்தியா ராணுவ ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பிறகு தான் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது.
வன்னி காட்டில் பிரபாகரன் மறைந்திருந்து மிகப் பெரிய படையை உருவாக்கினார். அனைத்து வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். எனக்கும் பிரபாகரன் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து தான் எனக்கு வெளிநாடுகள் செல்ல விசா மறுக்கப்பட்டு வருகிறது.
எனக்கு பதவி மீது எந்த மோகமும் இல்லை. எனது லட்சியம், கனவு எல்லாம் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது தான். தமிழ் ஈழ தாயகம் காண தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
விழாவில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கணேசமூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராம கிருஷ்ணன், மாவட்ட செய லாளர் குமரகுருபரன், இளை ஞர் அணி செயலாளர் சந்திரன், டி.எஸ்.எஸ்.மணி உள்பட பலர் கலந்து கொண் டனர். * * * ஈரோட்டில் நடந்த பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேக் வெட்டிய காட்சி.
கொடுமுடி:
பருவ மழை பொய்த்ததால் ஈரோடு மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்யாதால் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.34 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 133 கன அடி தண்ணீர் வருகிறது.
இதன் காரணமாக அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பயிர்கள் கருகிய நிலையில் உள்ளன.
தங்களது மஞ்சள் பயிர்கள் கருகியதால் கொடுமுடி அருகே 2 விவசாயிகள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.
தாமரைப்பாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் வெங்கமேட்டூரை சேர்ந்த விவசாயி ராமலிங்கம், வெங்கமேட்டூரை சேர்ந்த விவசாயி முத்துசாமி ஆகியோர் தங்களது விவசாய நிலத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை செய்து கொண்ட இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து உயிர் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொடுமுடி அருகே வெங்கமேட்டில் ஈரோடு -கரூர் ரோட்டில் நடந்த இந்த மறியலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிறகும் வெளியே செல்லாமல் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த மண்டபத்திலேயே விவசாயிகள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பும்-பதட்டமும் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு கலெக்டர் பிரபாகர் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பவானி சாகர்அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் மஞ்சள் பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ராமலிங்கம்,முத்துசாமி ஆகியோரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சியில் இருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தார்.
அவர் விவசாயிகள் ராமலிங்கம், முத்துசாமி ஆகியோரின் வீட்டுக்கு சென்று அவர்களது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். இதன்பிறகு தற்கொலை செய்துகொண்ட 2 விவசாயிகளின் குடும்பத்துக்கும் தலா ரூ. 1 லட்சம் நிதியை மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் முத்துசாமி, வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் நல்லசிவம் மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில் குமார், சின்னையன், செல்லப்பொன்னி மனோகரன், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, திண்டல் குமாரசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பவானி:
காஞ்சிகோவில், கவுண்டம்பாளையம், காசிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி செல்லம்மா (வயது 44).
சம்பவத்தன்று செல்வராஜ் வேலை விசயமாக தனது மனைவி செல்லம்மாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பவானி- கல்பாவி கந்தம்பாளையம் பிரிவில் வந்த போது அந்த வழியாக வந்த ஆட்டோ எதிர்பாராத வகையில் செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட செல்வராஜியும், செல்லம்மாவும் படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் செல்வராஜ், செல்லம்மா ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் ராம பையனூர் சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 40). இவரது மனைவி வீரம்மாள்.
ராமசாமிக்கு குடி பழக்கம் இருந்ததாகவும், இதனால் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்றும் ராமசாமி தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டடார். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என்று கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமசாமி வீட்டை வீட்டு வெளியே சென்று விட்டார். வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.
அவரது மகன் மற்றும் உறுவினர்கள் அக்கம் பக்கம் உள்ள இடங்களில் தேடி வந்தனர். அப்போது அருகே உள்ள ஒரு காட்டின் மரத்தடியில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டிலும் இருந்தது.
உடனடியாக அவரை சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் இனஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






