என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் ஏட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கரட்டுப்பாளையம் என்ற இடத்தை சோந்தவர் சிவகுமார் (வயது 38). இவர் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். இவர் கோபி ரோட்டில் உள்ள அளுக்குளி அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது கொடி வோரியில் இருந்து நம்பியூருக்கு ஒரு மினி லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி எதிர்பாராத விதமாக போலீஸ் ஏட்டு சிவகுமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சிவகுமார் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவர் அணிந்து இருந்த ஹெல்மெட் மீது லாரி ஏறியதால் உடைந்து நொறுங்கியது .

    இது பற்றி தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் இறந்த சிவகுமாரின் உடலை மீட்டனர். இதன்பிறகு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் சத்திய மங்கலம் டி.எஸ்.பி பழனிச்சாமி ஆகியோர் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு சிவகுமாருக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். விபத்தில் இறந்த சிவகுமாருக்கு நந்தினி (35) என்ற மனைவியும், மதின வதினி (9) என்ற மகளும், லிங்க வாசன் (4) என்ற மகனும் உள்ளனர்.

    மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களும் விபத்தில் இறந்த எட்டு சிவகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
    கோபி அருகே மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி அடுத்த கள்ளிபட்டி சி.சி.கே.நகர் டேங் வீதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (வயது49). தொழிலாளி. இவரது மனைவி பார்வதி.இவர்களுக்கு ஒரு மகள் இருந்துள்ளார்.

    அவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அதில் இருந்து வெங்கடாச்சலம் மகள் நினைப்பாகவே இருந்துள்ளார். அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார்.

    சம்பவத்தன்று வெங்கடாச்சலம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்ய முடிவெடுத்து படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடாச்சலம் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, டிச. 3-

    ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் அப்துல்ஹமீது. இவரது மகன் ஹபிபுல்லா (வயது 62).

    இவர் சம்பவத்தன்று வீட்டு அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வகையில் ஹபிபுல்லா மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப் பட்டு அவர் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஹபிபுல்லா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலை பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.

    நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மரங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திம்பம் 23 -வது வளைவில் லாரி திரும்பும்போது அதிகபாரம் காரணமாக லாரி திடீர் என்று பழுதாகி நின்றது.

    இதனால் லாரியை நகர்த்தமுடியாமல் அதே இடத்தில் நின்று விட்டது. அப்போது அதிக பாரம் காரணமாக சாய்ந்துவிழும் நிலையில் லாரி இருந்தது

    இதனால் லாரியை தாங்கி பிடிக்கும் இரும்புகம்பிகளை வைத்து சாய்ந்துவிடாதபடி தடுத்தனர்.

    லாரி பழுது காரணமாக கோவை, சத்தியில் இருந்து மைசூர், பெங்களூரு, கெள்ளேகால் செல்லும் சரக்கு வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பண்ணாரியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து பண்ணாரி சோதனைச்சாவடிக்கு தககவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு வாகனம் பழுதாகி நின்ற சரக்கு லாரியை சற்று நகர்த்தி சிறிது இடைவெளி ஏற்படுத்தியது.

    அதில் சிறிய வாகனங்கள் மட்டுமே செல்லும் வழித்தடமாக இருந்ததால் கார், வேன் வாகனங்கள் போன்றவை செல்ல அனுமதிக்கப்பட்டன. பஸ்கள் தொடர்ந்து பண்ணாரியில் தடுத்து நிறுத்தப்பட்டன.

    இதற்கிடையே, பழுதாகி நின்ற லாரியில் இருந்த மரங்களை வேறொரு லாரியில் ஏற்றினர். சரக்கு பாரம் குறைந்ததால் லாரியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு இரு மாநிலங்களிடையே போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

    16 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் அனுமதிப்பதில்லை. தற்போது அதிக பாரம் காரணமாக சரக்கு லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    வெள்ளகோவில் அருகே விபத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    வெள்ளகோவில் சேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 38). இவர் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி தாராபுரம் கிளையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தாராபுரத்துக்கு வேலைக்கு சென்று விட்டு நேற்று மாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வெள்ளகோவில் அருகே வந்த போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் பார்த்திபன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த பார்த்திபனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வனப்பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    நாடா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வானம் மூடியே மேக கூட்டத்துடன் காணப்பட்டது. பனி கொட்டியதால் குளிர் நிலவியது.

    இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதேபோல் மாலை மற்றும் இரவு நேரத்திலும் சாரல் மழை பெய்தது.

    மொடக்குறிச்சி, அரச்சலூர், சிவகிரி, சென்னிமலை பகுதியில் மட்டும் மழை கொஞ்சம் வேகமாக பெய்தது. இதனால் அப்பகுதிகளில் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இந்த மழையையொட்டி நேற்று இரவு கடும் குளிர் வாட்டியது. இரவில் வெளியே நடமாட முடியாமல் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

    இன்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வனப்பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து மாயமான காதல் கணவரை கண்டுபிடித்து தரும்படி இளம்பெண் எஸ்.பி.யிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 22), இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

    எனினும் பிரிய மனம் இல்லாத காதலர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து பிறகு பாதுகாப்பு கேட்டு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவர் வீட்டு பெற்றோரை வரவழைத்தபோது இருவர் வீட்டாரும் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டார்களாம்.

    இதனால் காதலர்கள் ஈரோடு அருகே உள்ள கொங்கம்பாளையத்தில் தனிக்குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனது பெயர் ஆசாந்த் 2 வயது ஆகிறது.

    இந்த நிலையில் புவனேஸ்வரியின் காதல் கணவர் கார்த்திக் திடீரென மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. கடந்த 1½ ஆண்டாக பல இடங்களில் அலைந்தும் திரிந்தும் பார்த்துவிட்டார். கணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    தனது 2 வயது மகனுடன் கணவர் வீட்டுக்குப் போய் முறையிட்டார். அவர்கள், “எங்களுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை. நீயே போய் தேடி கண்டுபிடி” என்று விரட்டி விட்டார்களாம்.

    இதனால் கண்ணீர் மல்க புவனேஸ்வரி இன்று (வெள்ளிக்கிழமை) தனது மகனுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுத்தார்.

    அதில் “1½ வருடமாக என் கணவரை தேடி வருகிறேன் கிடைக்கவில்லை. அவரது மாயம் மர்மமாகவே உள்ளது. என் கணவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.
    வங்க கடலில் மையம் கொண்டுள்ள நடா புயல் நாளை கரையை கடக்கும் என்று வானிலை அறிவித்துள்ளளது. இதனால் நடா புயல் மூலமாவது பவானிசாகர் அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரிக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    ஈரோடு:

    கடந்த பல நாட்களாக பவானிசாகர் அணைக்கு குறைந்த அளவே நீர் வந்து கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவ மழை பொய்யதாலும், வட கிழக்கு பருவ மழை பொய்ததாலும் அணைக்கு எதிர்பார்த்த அளவு நீர்வரவில்லை.

    இதனால் இதையே நம்பி இருந்த காளிங்கராயன் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளளனர். பவானிசாகர் அணையை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டிருந்தனர்.

    விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து உயிர் நீர் திறக்கப்பட்டது. எனினும் நீர் வரத்து குறைந்ததால் உயிர் நீர் நிறுத்தப்பட்டது.

    இதனால் விவசாய அமைப்புகள் பவானிசாகர் அணையில் இருந்து உடனடியாக உயிர் நீர் திறக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தினர்.

    கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணை 75 அடியாக இருந்தது. ஆனால் இன்று காலை 10 மணி நிலவரபடி அணையின் நீர்மட்டம் 45.17 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக காவிரி ஆற்றுக்கு 150 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடிநீரும் திறந்துவிடப்படுகிறது.

    இந்நிலையில் வங்க கடலில் மையம் கொண்டுள்ள ’நடா‘ நாளை காலை கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழ்நாடு முழவதும் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளளது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மழை பெய்தால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நடா புயல் மூலமாவது தாங்களுக்கு வருணபகவான் கருணை காட்டமாட்டாரா? என்று விவசாயிகளும், பொது மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.
    பவானி:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பவானி லட்சுமி நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் கடும் வறட்சி காரணமாக மஞ்சள் பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட 2 விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    பணத்தட்டுப்பாட்டினால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அனைத்து தொழில்களும் முடங்கிபோய் உள்ளன. அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பணத்தட்டுப்பாட்டினால் மக்கள் படும் துயரங்களை நேரில் வந்து பார்க்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு வரும்... ஆனால் வராது.. என்ற நிலையே இப்போது உள்ளது. ஜல்லிகட்டு நடத்தக்கோரி த.மா.கா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பதை மத்தியஅரசு கைவிட வேண்டும். இந்த நடவடிக்கையால் அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. எனவே இதை கண்டித்து எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ விடியல்சேகர், மாநில துணை தலைவர் ஆறுமுகம் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    நாளை மறுதினம் தண்ணீர் திறப்பு தேதி அறிவிக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று காளிங்கராயன் பாசன சபை விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    கொடுமுடி:

    பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசன பகுதிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். கருகி வரும் விவசாய பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இதை வலியுறுத்தி கடந்த 23-ந் தேதி கொடுமுடி அருகே கரூர் மாவட்ட எல்லையான நொய்யல் வெங்கமேட்டில் காளிங்கராயன் பாசன விவசாயிகள் விடிய-விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விடாப்பிடியுடன் பெண்கள் மற்றும் விவசாயிகளும் விடிய-விடிய மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதையொட்டி மாவட்ட கலெக்டர் பிரபாகர் சம்பவ இடத்துக்கு சென்று விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார். முடிவில் 10 நாட்களில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் உறுதிமொழி கொடுத்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கை விடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் கொடுமுடி அருகே உள்ள கொம்பனைபுதூர் அம்மன் திருமண மண்டபத்தில் காளிங்கராயன் பாசன பகுதி விவசாயிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் வேலாயுதம் தலைமையில் நடந்தது. சங்க நிர்வாகிகள் வக்கீல் குழந்தைவேலு, கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், பொன்னுவேல், தியாகராஜன் உள்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

    “கடந்த 23-ந்தேதி நடந்த மறியல் போராட்டத்தின் போது 10 நாட்களுக்குள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறி இருந்தார். அதன்படி நாளை மறுதினத்துக்குள் தண்ணீர் திறப்பு தேதி அறிவிக்கப்பட வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் வரும் 3-ந்தேதி அடுத்த கட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்படும்.” என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை கைவிட வலியுறுத்தி ஈரோட்டில் இன்று ஆதி தமிழர் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஆதி தமிழர் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை கைவிட வலியுறுத்தி ஈரோட்டில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடை பெறும் என அறிவித்திருந்தனர்.

    இதையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அதன்படி இன்று (புதன்கிழமை) காலை ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகள் பொதுச் செயலாளர் வெண்மணி, ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் சண்முகம், துணை செயலாளர் கார்த்தி, துணைத்தலைவர் செங்கோட்டையன்.

    மாவட்ட செயலாளர்கள் பழனிச்சாமி, சக்திவேல், ஆறுச்சாமி, செல்வகுமார முருகேசன் உள்பட பலர் மறியல் செய்ய ஈரோடு ரெயில் நிலையத்தில் திரண்டனர். அவர்களை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

    பொது சிவில் சட்டம் கொண்டு வருவதால் சிறு பான்பான்மையினர் மற்றும் தலித்களின் உரிமைகள் மறுக்கப்படும் என ஆதி தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.

    ஜெருசலேம் செல்ல விருப்பம் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவு கிறிஸ்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல ஏற்பாடு செய்து வருகிறது.

    2016-17-ம் ஆண்டுக்கான ஜெருசலேம் செல்ல விருப்பம் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவு கிறிஸ்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவராக இருக்க வேண்டும். 1.1.2017-ந் தேதி ஒரு ஆண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் உடையவராக இருக்க வேண்டும். வெளிநாடு செல்ல எந்த வில்லங்கமும் இருக்க கூடாது. மருத்துவம் மற்றும் உடல் தகுதி இருக்க வேண்டும்.

    அரசு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும். மீதி தொகை தாங்கள் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கனவே இந்த திட்டத்தில் ஜெருசலேம் சென்றிருக்க கூடாது.

    ஒரே குடும்பத்தில் 4 பேர் பயணம் செய்யலாம். 2 வயதுடைய 2 குழந்தைகள் இருக்கலாம். 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாவட்ட வாரியாக கிறிஸ்தவ மக்கள் தொகை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    அரசு தேர்வு செய்யப்பட்ட முகவர் மூலமே இந்த புனித பயணம் மேற் கொள்ள வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியிள்ளார்.

    ×