search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட 2 விவசாயிகளின் குடும்பத்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்
    X

    தற்கொலை செய்து கொண்ட 2 விவசாயிகளின் குடும்பத்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்

    கொடுமுடி அருகே மஞ்சள் பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட 2 விவசாயிகளின் குடும்பத்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

    கொடுமுடி:

    பருவ மழை பொய்த்ததால் ஈரோடு மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்யாதால் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.34 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 133 கன அடி தண்ணீர் வருகிறது.

    இதன் காரணமாக அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பயிர்கள் கருகிய நிலையில் உள்ளன.

    தங்களது மஞ்சள் பயிர்கள் கருகியதால் கொடுமுடி அருகே 2 விவசாயிகள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.

    தாமரைப்பாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் வெங்கமேட்டூரை சேர்ந்த விவசாயி ராமலிங்கம், வெங்கமேட்டூரை சேர்ந்த விவசாயி முத்துசாமி ஆகியோர் தங்களது விவசாய நிலத்திலேயே வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    தற்கொலை செய்து கொண்ட இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து உயிர் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கொடுமுடி அருகே வெங்கமேட்டில் ஈரோடு -கரூர் ரோட்டில் நடந்த இந்த மறியலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    இவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிறகும் வெளியே செல்லாமல் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த மண்டபத்திலேயே விவசாயிகள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பும்-பதட்டமும் ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு கலெக்டர் பிரபாகர் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பவானி சாகர்அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் மஞ்சள் பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ராமலிங்கம்,முத்துசாமி ஆகியோரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சியில் இருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தார்.

    அவர் விவசாயிகள் ராமலிங்கம், முத்துசாமி ஆகியோரின் வீட்டுக்கு சென்று அவர்களது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். இதன்பிறகு தற்கொலை செய்துகொண்ட 2 விவசாயிகளின் குடும்பத்துக்கும் தலா ரூ. 1 லட்சம் நிதியை மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் முத்துசாமி, வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் நல்லசிவம் மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில் குமார், சின்னையன், செல்லப்பொன்னி மனோகரன், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, திண்டல் குமாரசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×