என் மலர்
செய்திகள்

டீ ஆற்றவும் லாயக்கு இல்லை, பிரதமர் பதவிக்கும் லாயக்கில்லை: மோடி மீது இளங்கோவன் தாக்கு
ஈரோட்டில் இன்று தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
அப்போது இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்து விட்டு 9-ந் தேதி ஜப்பான் போய்விட்டார். அங்கு ஜப்பான் பிரதமருடன் கை குலுக்கினார். அதேசமயம் இந்தியாவில் மக்கள் வங்கிகளில் தவம் கிடக்க தொடங்கி உள்ளனர். கடந்த 20 நாட்களாக மக்கள் வங்கிகள் முன்புதான் தவம் கிடக்கிறார்கள்.
வாரத்தில் 6 நாட்கள் வேலைக்குப்போகும் தொழிலாளிகள் இப்போது 3 நாட்கள்தான் வேலைக்கு போகிறார்கள்.
மீதி நாட்களில் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் தான் காத்து கிடக்கிறார்கள்.
பிரதமர் மோடி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் அவர் டீ ஆற்றிக் கொண்டிருந்தார் என்கிறார்கள். அப்படி அவர் கஷ்டப்பட்டிருந்தால் மக்கள் படும் கஷ்டத்தை அறிந்திருப்பார். இதை வைத்து பார்க்கும்போது மோடி டீ ஆற்றவும் லாயக்கற்றவர். பிரதமர் பதவிக்கும் லாயக்கற்றவராகி விட்டார்.
பொதுமக்கள் இப்படி அவதிப்பட்டு வருவதை தமிழக அரசும் எதுவும் கண்டு கொள்ளவில்லை முதல்-அமைச்சரும் அறிக்கை விடவில்லை.
வைகோ முதலில் விஜயகாந்தை முதல் அமைச்சர் ஆக்கி காட்டுவேன் என்று கூறி கூட்டணி வைத்தார்.
இப்போது தே.மு.தி.க. என்ற ஒரு கட்சியே இல்லாமல் போய் விட்டது. இந்த நிலையில் மோடி பக்கம் சாய்ந்து அவரது நடவடிக்கையை பாராட்டத் தொடங்கி உள்ளார். மோடியையும் அவர் விரைவில் காலி செய்து விடுவார்.
தமிழ்நாட்டில் இதுவரை 50 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது எந்த அக்கறையும் கிடையாது. அமைச்சர்களோ எம்.எல்.ஏ.க்களோ... யாரும் விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லவும் கிடையாது.
பணம் வாங்க அலையும் மக்களுக்கு வங்கி ஊழியர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பணம் வினியோகித்து வருகிறார்கள். அவர்களது பணியை விரைவான சேவையை பாராட்டுகிறேன்.
பொதுமக்கள் பொறுமைக்கு ஒரு அளவு உண்டு பொறுத்து.... பொறுத்து பார்ப்பார்கள். பொறுமைக்கு ஒரு அளவு உண்டு அது எரிமலையாக வெடித்தால் மிகப்பெரிய போராட்டமாக மாறும். அப்படி ஒரு கலவர சூழ்நிலையை மோடி ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.






