என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • 2 ஆயிரம் லஞ்சமாக ஊராட்சி செயலாளர் சரவணன் கேட்டுள்ளார்.
    • பவுடர் தடவி கொடுத்த ரூ. 1500 கொடுத்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி.  

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ,பொம்மிடி அருகே உள்ள கேத்துரெட்டிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் எடுத்து விடும் வேலை செய்து வந்தவர் கோபால்.

    கடந்த 2009 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின்பு இவருக்கு அலுவலகத்தில் சேர வேண்டிய செட்டில் மெண்ட் தொகை பெறுவதற்கு ஊராட்சி செயலாளர் சரவணனிடம் சென்று மனு கொடுத்துள்ளார். அப்போது அவருக்கு சேர வேண்டிய 30 ஆயிரம் செட்டில்மெண்ட் தொகையை பெறுவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக ஊராட்சி செயலாளர் சரவணன் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர் கோபால் தனது மகனிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    லஞ்சம் கொடுப்பதற்கு விருப்பமில்லாத கோபால் மற்றும் அவரது மகன் தர்மராஜன் ஆகியோர் தர்மபுரியில் உள்ள மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் சென்று புகார் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த பவுடர் தடவி கொடுத்த ரூ. 1500 கொடுத்தனர். அதை சரவணனிடம் கோபால் கொடுத்தார்.

    இதனையடுத்து அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நேற்று தருமபுரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார். 

    • ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
    • நீர்வரத்து சரிவினால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சரிந்து பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அணைகளில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைத்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக சரிந்துள்ளது.

    தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்துள்ளதாலும், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து ஆனது நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடியாக சரிந்தது. நீர்வரத்து சரிவினால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சரிந்து பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வருவதால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

    • தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
    • லாரி ேலாகேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    தருமபுரி. 

     தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள புதுகொக்க–ராப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு லோகேஷ்(வயது19) என்ற மகன் உள்ளார். இவர் ஊத் தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று தனது அக்கா வீடான ஆல்ரப்பட்டிக்கு லோகேஷ் தனது மோட்டார் சைக்கி–ளில் சென்று விட்டு கம்பை நல்லூர் இருந்து ஒடசல்பட்டி ரோட்டில் வீரபத்திரன் கொட்டாய் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த போர்வெல் லாரி எதிர் பாராத விதமாக ேலாகேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் லோகேஷ் வரும் வழியி லேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து லோகேஷின் தாயார் செல்வி கம்பை நல்லூர் போலீஸ் நிலை யத்தில் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விதை பந்துகளை வனத்து றையிடம் ஒப்ப டைப்பு
    • 2000 மாணவிகள் 3.84 லட்சம் விதை பந்துகள் தயாரித்தனர்.

    தருமபுரி, 

     தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 23.69 சதவீதம் வனப்பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை 33 சதவீதமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 10 ஆண்டுகளில் 12 ஆயிரம் சதுர கிலோமீட்டர் வனப்பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தருமபுரியில் தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் மூலம் 3.84 லட்சம் விதைப் பந்துகள் தயார் செய்தனர். இதன் மூலம் காடுகளின் பரப்பை அதிகரிக்கவும், தயாரிக்கப்பட்ட விதை பந்துகள் மூலம் இந்தியா வுக்கே பெருமை சேர்த்த சந்திரயான்-3 விண்கலத்தின் ஓவியத்தை வரைந்து, உலக சாதனை பட்டியலில் இடம் பெறும் முயற்சியில் ஈடு பட்டனர். இதனை அடுத்து அரசின் பசுமை தமிழக இயக்கத்திற்கு வனத்துறை மூலம் வழங்க திட்டமிட்டனர்.

    கடந்த 2 நாட்களில் கல்லூரி மாணவ மாணவிகள் 3.84 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி, சந்திரன்-3 ஓவியம் வரைந்தனர். இது விஞ்ஞானிகளுக்கு மரியாதை செலுத்து–கின்ற வகையில் அமைக்கப் பட்டது.

    மேலும் உலக சாதனை பட்டியலில் 2000 மாணவிகள் ஒன்றிணைந்து 3.84 இலட்சம் விதை பந்துகள் தயாரித்து, 182.5 சதுர மீட்டரில் 13.5 மீட்டர் உயரம், அகலம் கொண்ட மிகப்பெரிய ஓவியத்தினை வரைந்தது, உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றது. அதனை எலைட் உலக சாதனை அமைப்பினர் நேரில் வந்து ஆய்வு செய்து,

    இந்த மாணவிகளின் முயற்சியை பாராட்டி உலக சாதனை படைத்ததாக அறிவித்தனர். மேலும் இந்த உலக சாதனை படைத்த தற்காக கல்லூரி தாளாளர் பச்சமுத்து பாஸ்கரிடம் அதற்கான சான்றிதழ்கள், பதக்கம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து பசுமை தாயகம் இயக்கத்திற்கு, தருமபுரி வனத்துறை அலுவலரிடம் தாங்கள் உருவாக்கிய 3.84 லட்சம் விதை பந்துகளை கல்லூரி மாணவிகள் ஒப்படைத்தனர். இந்த 3.84 லட்சம் விதைப் பந்துகளில் அரசன், புங்கன், புளியமரம், வேம்பு, ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு வகை யான விதைகளை வைத்து தயாரித்தனர். இந்த விதை பந்துகள் தருமபுரி, திருச்சி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

    இந்த விதை பந்துகளை உருவாக்கி சாதனை படைத்த மாணவ, மாணவிகள் தங்கள் முயற்சி சாதனை படைத்தது என்றவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ஆரவாரத்துடன் கைதட்டி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    • கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள எல்.ஆர்.மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் சிவராம கிருஷ்ணன். இவர் ஓய்வுபெற்ற விலங்கியல் நிபுணர் ஆவார். இவரது மனைவி சாய் சரோஜா. இவர் அரசு பள்ளியில் உதவி உடற்பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சிவராமகிருஷ்ணன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் அவர்கள் கர்நாடாக மாநிலம் மைசூருவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இன்று திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்த போது, சிவராமகிருஷ்ணன் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், டிஎஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    இதேபோல் சிவராமகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியரான சிவக்குமார் என்பவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, சிவக்குமார் திருமணம் நிகழ்ச்சிக்காக மைசூருக்கு சென்று உள்ளதாலும், அவரது வீட்டில் இருந்து தங்க நகைகளை சிவக்குமார் குடும்பத்தினர் எடுத்து சென்றதாலும், கொள்ளையர்களுக்கு எதுவும் கிடைக்காததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது.

    மேலும், சிவக்குமார் மற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளில் நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி நகர் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • பாலக்கோடு அருகே விவசாய நிலத்தில் 13 அடி மலை பாம்பு மீட்கப்பட்டது.
    • காட்டுப்பன்றிகள் கிராமத்துக்குள் வருவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் (வயது 37). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அங்கு இன்று காலை சென்றார். அப்போது விவசாய நிலத்தில் சுமார் 13-அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தார்.

    இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவரது உத்தரவின் பேரில் விரைந்து வந்த பாலக்கோடு வனத்துறை யினர் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் பாது காப்பாக கொண்டு சென்று விட்டனர்.

    அடிக்கடி உணவுத்தேடி கிராமங்களுக்குள் காட்டுப்பன்றிகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்தனர். 

    • பென்னாகரம் அருகே கிராமத்திற்கு சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர்
    • நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆன நிலையிலும சாலை வசதி இல்லை என்று புகார்

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சி யில் ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு மலை கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மூன்று கிராமங்களுக்கும் முறையான சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் அடிப்படை தேவைகளுக்கு மலையை விட்டு கீழே இறங்கி வருவதற்கு முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மூன்று மலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மருத்துவம், பள்ளி உள்ளிட்ட தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாமல், சாலை வசதி வேண்டி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மக்களுக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏற்படுத்தி தர முடியாமல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கிராம மக்களே ஒன்றிணைந்து மண் சாலை அமைத்து, சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் மழை வருகின்ற பொழுது இந்த மண் சாலை முழுவதுமாக மண் அரிப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் வனத்துறை சாலை அமைக்க அனுமதி கொடுத்தால், மத்திய, மாநில அரசுகள் சாலை வசதி செய்து தர முடியும். இதனால் கிராம மக்கள் பல்வேறு இடங்களில் மனு கொடுத்தும், போராடியும் வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்ட வனத் துறை சார்பில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம், நேற்று முதல் முறையாக நடைபெறும் என மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவுறுத்தலின்படி நேற்று மாவட்ட வன அலுவலர் அப்பல்லோ நாயுடு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏரிமலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு தார் சாலை அமைப்பதற்கு வனத் துறை அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர். மேலும் நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆன நிலையிலும் தங்களது கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத இருப்பதால், உடல்நிலை சரியில்லாத நேரங்களில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே ஏரிமலை முதல் சீங்காடு வரை தார் சாலை அமைக்க வனத் துறை அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • 21 மூட்டைகளில் 1020 கிலோ ரேஷன்அரிசி பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
    • ஒரு டன் அரிசியை பதுக்கியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் தரும புரி,பாலக்கோடு, மற்றும் மாரண்டஅள்ளி பகுதிகளில் தருமபுரி சிவில் சப்ளை சிஐடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரோந்துப்பணி மேற்கொண்டனர்.

    அப் போது போலீசாருக்கு உலக னள்ளியை சேர்ந்த சுப்ரமணி(50) என்பவர் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனைசெய்துப் பார்த்த தில் அவரது் வீட்டின் அருகே 21 மூட்டைகளில் 1020 கிலோ ரேஷன்அரிசி பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து அவரி டமிருந்து கைப்ப ற்றப்பட்ட சுமார் ஒரு டன் ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பகிடங்கில் ஒப்ப டைக்கப்பட்டது.இதனை அடுத்து சுப்பி ரமணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்ய ப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.

    • தருமபுரியில் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடை பயிற்சி திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • மாணவ மாணவிகள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன், நலமுடன் வாழ நடப்போம் நலம் பெறுவோம்" எனும் சுகாதார நடைபயிற்சி திட்டம் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது .

    இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் அதியமான்கோட்டை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திலிருந்து மாவட்ட கலெக்டர் இல்லம் வழியாக சிப்காட் சாலை, தடங்கம் வரையிலான 8 கி.மீ தொலைவிலான சுகாதார நடைபயிற்சியை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி, தி.மு.க மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, நல்லம்பள்ளி பிடிஓ லோகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கல்லூரி மாணவ மாணவிகள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காரிமங்கலம் அருகே மளிகை கடைக்காரர் மோட்டர் சைக்கிள் மோதி பலியனார்.
    • மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மூலக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது61) இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் வீட்டு அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று கம்பைநல்லூர் வந்து கடைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு மோட்டர் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது் கம்பைநல்லூர்-கெலவள்ளி ரோட்டில் சென்று சென்று கொண்டிந்தார்.

    அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் ஒட்டி வந்த வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து துரைசாமி மகன் சரவணன் அளித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிவசக்தி மற்றும் அவருடைய நண்பர்கள் 7 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
    • வனப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த சிவ சக்தியை கைது செய்தனர்.

    தருமபுரி, 

    தருமபுரி அடுத்த ஒட்டப் பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஜருகு பஞ்சாயத்து தலைவரும் தருமபுரி மாவட்ட பிஜேபி கட்சியின் துணை தலைவருமான சிவ சக்தியை நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒட்டப்பட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கால்வே அல்லி பகுதியைச் சேர்ந்த சின்னசாமியின் மகன் கணேசன் (32) என்பவருக்கும் அதே பகுதியை சார்ந்த தமிழரசி என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒன்றை ஆண்டுகள் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தமிழரசி பிரிந்து தருமபுரி ஒட்டப்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜருகு பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி என்பவருக்கும் தமிழரசிக்கும் காதல் மலர்ந்து சிவசக்தி 2-வதாக தமிழரசியை திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழரசி விவாகரத்து கோரி நீதிமன் றத்தை அணுகியுள்ளார். இந்த விஷயம் தெரிய வரவே கணேசன் நேரடியாக சென்று பேசிக் கொள்ளலாம் என நேற்று ஒட்டப்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சிவசக்தி மற்றும் அவருடைய நண்பர்கள் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்றுசேர்ந்து கணேசனை கடுமையாக கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த கணேசன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

    இது சம்பந்தமாக அதியமான் கோட்டை போலீசார் விசாரணை செய்து மேற்படி ஜருகு பஞ்சாயத்து தலைவரும் தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தன்மீது வழக்கு பதிவு செய்து தேடுவதை அறிந்த பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி தலைமறைவானார்.

    தலைமுறைவான பஞ்சாயத்து தலைவரை பிடிப்பதற்காக தர்மபுரி எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுப் பாதம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று இரவு வனப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக தங்கி இருந்த பஞ்சாயத்து தலைவர் சிவசக்தியை கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். 

    • தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நாளை முதல் 2 நடக்கிறது.
    • 1.1.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தமிழ் நாடு தேர்தல் ஆணையம் சமீபத்தில் வரைவு வாக்களார் பட்டியலை வெளியிட்டது. அதில் விடுபட்ட மற்றும் 17 வயது முடிந்து 18 வயதில் உள்ளவர்கள் தங்கள் பெயரை சேர்த்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டருமான சாந்தி தெரிவித்துள்ளதாவது;- 1.1.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர்ப ட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளும் வகையில் நாளை 4ந்தேதி மற்றும் நாளை மறுதினம் 5ந்தேதி மற்றும் 18.11.2023 மற்றும் 19.11.2023 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங் களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

     இந்த முகாம்களில், தகுதி யான நபர்கள் அனை வரும் அருகில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6வழங்கபட உள்ளது. ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர்திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றச்செய்ய விரும்பினால், அதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6B-யை பூர்த்தி செய்தும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வழங்கலாம். 

    மேலும், பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில் Apply Online/Correction of entries என்ற Link மூலமும் விண்ணப்பிக்கலாம்.  மேலும், செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.  இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு,கூடுதல் விவரங்கள் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×