என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • மானியத்தில் வழங்கப்பட்டுள்ள தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பணிகளை தரமானதாக மேற்கொள்ள வேண்டு மெனவும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளின் பயன் முழுமையாக கிடை த்திட தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பி.துறிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்குவதற்கு தேவையாக புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள சமையல் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களின் தரம், எண்ணிக்கை ஆகியவற்றையும், போதகாடு ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்டப்பட்டு வரும் பணியினையையும், போதகாடு, மாரியம்மன் கோவிலூரில் பழங்குடியினர் நலஅலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கபள்ளியினையும் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், வெங்கடசமுத்திரம் கிராமத்தில் உள்ள வாணியாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் ரூ.5.47 லட்சம் (100 சதவீத) மானியத்தில் வழங்கப்பட்டுள்ள தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, பணிகளை தரமானதாக மேற்கொள்ள வேண்டுமெனவும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளின் பயன் முழுமையாக கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் உரிய அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்கள்.

    இந்த ஆய்வின் போது, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 100 மருத்துவ முகாம்கள் நடை பெறுகிறது.
    • அரூர் கோட்டத்தில் 26.8.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை அரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    தருமபுரி,

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் வருகின்ற 19.8.2023 மற்றும் 26.8.2023 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது.

    இது குறித்து தருமபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 100 மருத்துவ முகாம்கள் நடை பெறுகிறது.

    இதில் தருமபுரி மாவட்ட த்தில் உள்ள 2 வருவாய் கோட்டங்களில், பல்வேறு அரசுத் துறை களில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் தருமபுரி கோட்டத்தில் 19.8.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் அரூர் கோட்டத்தில் 26.8.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை அரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் இதுநாள் வரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய பதிவு செய்தல், UDID ஸ்மார்ட் கார்டு பதிவு செய்தல்,

    மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவித்தொகை, வங்கிகடன் மானியம், உதவி உபகரணங்கள் வருவாய்த்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை வாய்ப்பு பதிவு, புதுபித்தல், வேலை வாய்ப்பற்றோர் நிதி உதவித்தொகை, தனியார் துறை வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருதல், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், மாவட்ட தொழில் மையம் மூலம் PMEGP, UYEGP திட்டத்தின் வங்கி கடன் உதவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் NHFDC உள்ளிட்ட திட்டத்தில் சுயதொழில் புரிவதற்கு வங்கிகடன் மற்றும் வீடு கட்டுவதற்கு கடனுதவி,

    ஆவின் நிறுவனத்தில் உற்பத்தி பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான முகவர்கள் நியமனம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை, மற்றும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீட்டு உறுப்பினர் சேர்க்கை,

    போன்ற திட்டங்களில் பயன் பெற நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, பல்வேறு துறைகளுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

    எனவே மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, UDID ஸ்மார்ட் கார்டு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை புகை ப்படம் 5 ஆகிய வற்றுடன் மேற்காணும் முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • கோர விபத்தில் காயம் அடைந்த 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாயில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் இரண்டு ஈச்சர் வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் 3 வாகனங்களும் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காயம் அடைந்த 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மேலும் சாலை பராமரிப்பு குழு மற்றும் தொப்பூர் காவல்துறையின் துரித நடவடிக்கையால் உடனடியாக வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

    • வேதமூர்த்தி, அவரது மனைவி சூர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவரது மகன் வேதமூர்த்தி (வயது38). இவர் ஒரு பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேதமூர்த்தி அவரது உறவினர் பெண்ணான சூர்யா (24) என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமுருகன் வீட்டின் அருகே தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் வேதமூர்த்தி தனக்கு தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஆனால், அவருக்கு போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் வேதமூர்த்தியிடன் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளதாக தெரிய வந்தது.

    இதுகுறித்து வேதமூர்த்தி தனது தந்தை திருமுருகனிடம் தெரிவித்தபோது, தன்னிடம் உள்ள நிலத்தை விற்று கடனை அடைக்கலாம் என்று கூறி சமாதானம் பேசியுள்ளார்.

    இருந்த போதிலும் மனவேதனையில் இருந்த வேதமூர்த்தி, தனது வீட்டில் நேற்று இரவு தூங்க சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை நீண்டநேரமாகியும் வேதமூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் வீட்டில் இருந்து வெளியே வராமல் கதவு மூடியபடி இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வேதமூர்த்தியின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் வெளியே வராததால், உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வேதமூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இதனை கண்ட உறவினர்கள் அதிச்சியடை ந்தனர். அப்போது அவர்கள் இருவரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், வேதமூர்த்தி வீட்டின் முன்பு பொது மக்கள் திரண்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேதமூர்த்தி, சூர்யா ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடன் தொல்லையால் கணவன்-மனைவி இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிகிச்சை பெற்று வந்த விஜயகுமார் என்பவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வழக்கு பதிவு செய்து வெடிவிபத்து நடந்த சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    பாலக்கோடு அருகே கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தையொட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 15-ந் தேதி கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், 16-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அப்பகுதியில் பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் வைத்து திருவீதி உலா வந்தது. அப்போது அந்த ஊர்வலத்தின்போது பின்தொடர்ந்து வந்த ஒரு மினி சரக்கு ஆட்டோவில் ராக்கெட், 5 ஆயிரம் வெடி சரம் உள்ளிட்ட பட்டாசுகள் வைத்து அதனை வெடித்து வந்தனர்.

    சாமி ஊர்வலத்தில் முன்னே வாணவேடிக்கை காட்டுவதற்காக ராக்கெட் பட்டாசை பற்ற வைத்து மேலே பறக்க விட்டனர்.

    அப்போது அந்த பட்டாசு வெடித்து அதில் இருந்து தீப்பொறி மினி சரக்கு ஆட்டோவில் வைத்திருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் மளமளவென வெடிக்க தொடங்கியது. இதனால் சாமியுடன் வந்த பக்தர்கள் பயந்து பதறி அடித்து ஓடத் தொடங்கினர்.

    இந்த வெடிவிபத்தில் கருப்பாயி கொட்டாயை சேர்ந்தவர்கள் மாதேஷ் மகன் விஜயகுமார் (வயது21), சுப்பிரமணி மகன் பரசுராமன் (27), திருப்பதி மகள் யாசிகா (6), கார்த்திக் மகள் பிரதிக்ஷனா (7), அழகேசன் மகன் தர்ஷன் (6), நாகராஜ் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து காயமடைந்த 6 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 6 பேரையும் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் யாசிகா என்ற குழந்தையின் உடல் நிலை மோசமானதால் உடனே மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகுமார் என்பவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் மற்றும் போலீசார்

    வழக்கு பதிவு செய்து வெடிவிபத்து நடந்த சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடிவிபத்து நடந்து 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பட்டாசு வெடித்ததால் நடந்ததா? அல்லது ஓட்டலில் இருந்து சிலிண்டர் வெடித்து விபத்து நடந்ததா? என்ற சந்தேகத்திற்கு விடைகிடைக்காத நிலையில் தருமபுரி பாலக்கோட்டில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நீர் வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வண்ணம் உள்ளது.
    • தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் இந்த இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடிக்கு மேல் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

    இந்த நீரானது கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கர்நாடகா அணைகளில் இருந்து மேலும் நீர்வரத்து அதிகரித்து 22 ஆயிரம் கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

    இந்த நீர் வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வண்ணம் உள்ளது.

    நேற்று 12,500 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது.

    நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

    • அங்காடிக்கு நேற்று 2870 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
    • மொத்தம் ரூ.13 லட்சத்து ஆயிரத்து 369-க்கு பட்டு கூடுகள் விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டு கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று 2870 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.578-க்கும், குறைந்த பட்சமாக ரூ.210-க்கும், சராசரியாக ரூ.453. -க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.13 லட்சத்து ஆயிரத்து 369-க்கு பட்டு கூடுகள் விற்பனையானது.

    • தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம், சிறந்த சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பரப் பொருள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம் போன்ற விருதுகள் வழங்கப்பட உள்ளது.
    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற வாயிலாக 27-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    தருமபுரி, 

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் வழங்கப்படும் சுற்றுலா தொழில் முனைவோர் களுக்கான விருதுகள் பெற வருகின்ற 27-ந் தேதிக்குள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்க உத்தேசித்துள்ளது.

    தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த உள்வரும் சுற்றுலா ஆபரேட்டர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர், சிறந்த பயண கூட்டாளர், சிறந்த விமான கூட்டாளர்,

    சிறந்த தங்கு மிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நட்சத்திர நிகழ்ச்சியாளர், சிறந்த முக்கிய சுற்றுலா ஆபரேட்டர், சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தளம் ஆபரேட்டர், சிறந்த கூட்டங்கள் ஊக்குவிப்பு மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சிறந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம், சிறந்த சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பரப் பொருள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம் போன்ற விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக 27-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அங்கு கார் ஒன்று நீண்ட நேரமாக சாலையோரம் நின்று இருந்தது.
    • கர்நாடகாவில் இருந்து குட்கா கடத்தி வந்த போது டயர் பஞ்சரானதால் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் காரை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது தெரியவந்தது.

    காரிமங்கலம், 

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் நேற்று காலை செல்ல மாரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு கார் ஒன்று நீண்ட நேரமாக சாலையோரம் நின்று இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கர்நாடகாவில் இருந்து குட்கா கடத்தி வந்த போது டயர் பஞ்சரானதால் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் காரை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கார் மற்றும் மூட்டைகளில் இருந்த ரூ.2.65 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.

    குட்கா கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    தருமபுரி,   

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து பாலக் கோடு போலீசில் மாணவியின் தாய் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • சுதந்திர தின விழாவில் செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரவிந்திரன் ஆகியோரிடம் மாவட்ட கலெக்டர் சாந்தி கேடயம் வழங்கினார்.
    • தொடர்ந்து பேரூராட்சி தலைவரிடம் கேடயம் வழங்கப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் பாலக்கோடு பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரவிந்திரன் ஆகியோரிடம் மாவட்ட கலெக்டர் சாந்தி கேடயம் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவரிடம் கேடயம் வழங்கப்பட்டது.

    அதனை பெற்று கொண்டு, பேரூராட்சி செயல் அலுவலர் துப்புரவு ஆய்வாளர், அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி வாழ்த்து தெரிவித்தார்.

    • குண்டல்பட்டி, பழைய தருமபுரி வழியாக வந்த வெற்றி ஜோதி தொடர் ஓட்டத்திற்கு தருமபுரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • சக்திவேல், மாதையன், முன்னா, நாகராஜன், நாகேந்திரன், கார்த்தி, மாதேஷ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    மதுரையில் வருகிற 20ம் தேதி அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வெற்றி ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது.

    பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று மாநாடு நடைபெறும் நாள் அன்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த வெற்றி ஜோதி வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, குண்டல்பட்டி, பழைய தருமபுரி வழியாக வந்த வெற்றி ஜோதி தொடர் ஓட்டத்திற்கு தருமபுரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    4 ரோட்டில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏக்கள் கோவிந்த சாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். இந்த தொடர் ஓட்டம் தருமபுரி நகரில் பைபாஸ் ரோடு, இலக்கியம்பட்டி, கலெக்டர் அலுவலகம், ஒட்டப்பட்டி, அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி வழியாக தொப்பூர் சென்ற டைந்தது.

    அங்கு இந்த வெற்றி ஜோதி சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்புச் செயலாளர் சிங்காரம், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் நல்ல தம்பி, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, நீலாபுரம் செல்வம், செந்தில்குமார், கோபால், நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், நகர பொருளாளர் பார்த்திபன், நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, சக்திவேல், மாதையன், முன்னா, நாகராஜன், நாகேந்திரன், கார்த்தி, மாதேஷ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×