என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பாலை ஊற்றி விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
    • லாரியின் அடிப்பக்கத்தில் சிக்கி பொன்முடி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள சின்னாகவுண்டம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்முடி (வயது 52). இவர் நேற்று இரவு அண்ணா மலைப்பட்டி கிராமத்திற்கு சென்று பாலை ஊற்றி விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க சாலையோரம் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது மொரப்பூரை நோக்கி உருளை கிழங்கு பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர் மீது சாய்ந்தது. இதில் லாரியின் அடிப்பக்கத்தில் சிக்கி பொன்முடி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அரூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியின் அடிப்பக்கம் சிக்கிய உடலை கிரேன் உதவியுடன் மீட்டு உடலை பிரேத பரி சோதனைக்காக அரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாசன் கண் மருத்துவமனையும், தனியார் மகளிர் கல்லூரியும் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது.
    • கண் தானம் வழங்க வேண்டியதன் அவசியத்தை அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.

    தருமபுரி, 

    கண் தானம் செய்ய வேண்டியதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் தருமபுரியில் உள்ள வாசன் கண் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் 38 -ஆம் ஆண்டாக கண் தான விழிப்புணர்வு வாரத்தை நினைவு படுத்தும் வகையில் கண்தான வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தருமபுரியில் வாசன் கண் மருத்துவமனையும், தனியார் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் அருகே இருந்து புறப்பட்ட இப்பேரணியை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு பேரணி யில் தருமபுரி வாசன் கண் மருத்துவமனையின் கண் மருத்துவர்கள் சரண்யா, வித்யா, ஹர்ஷினி, உள்ளிட்ட மருத்துவர்களும், மக்கள் தொடர்பு அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட ஊழியர்களும், மாட்லாம் பட்டி தனியார் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவி களும் கண் தானம் வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

    இப்பேரணியானது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தொடங்கி நேதாஜி பைபாஸ் சாலை நாச்சியப்ப கவுண்டர் தெரு, நகராட்சி பூங்கா வழியாக வாசன் கண் மருத்துவமனையை சென்றடைந்தது.

    • தருமபுரி வாசிக்கிறது என்ற புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்வை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
    • 8-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவை தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தி வருகிறது. இந்த புத்தகத்திருவிழா தருமபுரி மாவட்ட பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தருமபுரியில் புத்தகத்திருவிழா செப்டம்பர் 8-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அளே தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தருமபுரி வாசிக்கிறது என்ற புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்வை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் சாந்தி தெவித்ததாவது:-

    தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று ஆசிரியர் தினத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 29 கல்லூரிகளிலும், 1607 பள்ளிகளிலும் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் சுமார் 3 இலட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில் சுமார் 20 நிமிடங்கள் மாணவர்கள் புத்தகங்களை வாசித்துள்ளனர். தருமபுரி புத்தகத் திருவிழா தருமபுரி வள்ளலார் திடலில் வரும் 8-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் இடம் பெறுகிறது.

    நாள்தோறும் மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை மாநில அளவில் உள்ள சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த புத்தகத்திருவிழா அரங்குகளில் உள்ள புத்தகங்கள் சிறுவர் முதல் மூத்த குடிமக்கள் வரையிலும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் சிறந்த முறையில் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜல்லி கொட்டப்பட்டு பல ஆண்டுகாலமாக தார்சாலை அமைக்கப்பட்டாமல் உள்ளது.
    • கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், உரிய நேரத்தில் மருத்து வமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

    தருமபுரி, 

    மலைகிராமங்களான கதிரிபுரம் முதல் கூசுமலை அடிவாரம் வரை தார்சாலை யாக மாற்றவேண்டும் என அக்கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய இருவட்ட எல்லையில் உள்ளது பையர்நத்தம் ,கதிரிபுரம், கூசுமலை ஆகிய மலை கிராமங்கள் உள்ளன.இங்கு சுமார் 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம்.

    கதிரிபுரத்திலிருந்து கூசுமலை அடிவாரம் வரை தார் சாலை அமைக் கவேண்டும் என சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மனு கொடுத்தோம். அதன் பின்னர் இந்த கிராமங்களுக்கிடையே சிறிது தரம் மட்டுமே தார்சாலை அமைத்தனர். மற்ற சாலையில் ஜல்லி கொட்டப்பட்டு பல ஆண்டுகாலமாக தார்சாலை அமைக்கப்பட்டாமல் உள்ளது.

    இந்த ஜல்லி கொட்டப்பட்ட சாலையில் விவசாய பொருட்களை எடுத்துச்செல்ல முடியவில்லை.இரு சக்கர வாகனத்தில் சென் றால் கொட்டப்பட்ட ஜல்லிகற்கலால் வானக ஓட்டிகள் கிழே விழுகின்றனர்.கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், மற்றும் நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்து வமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

    இபபகுதிக்கு ஆம்புலன்ஸ் வர முடியாததால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே மலை கிராம மக்களின் நலன் கருதி ஜல்லி கொட்டப்பட்ட சாலையை தார்சாலையாக மாற்றவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்தார்.
    • 9 லட்சம் மதிப்புள்ள விவசாய வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது.

    காரிமங்கலம்,  

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழக முதல்வரின் வேளாண்மை இயந்திரமாக்கும் உப இயக்கம் 2022-23-ன் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி காரிமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆனந்த் முன்னிலை வகித்தார். வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சந்திரா வரவேற்றார். காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன் நிகழ்ச்சியில் பங்கேற்று விவசாயிகளுக்கு பவர் டில்லர், பவர் பீடர் ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் 13 விவசாயிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள விவசாய வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை பொறியியல் துறை பணி யாளர்கள் பங்கேற்றனர்.

    • ஒகேனக்கல்லுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீர்வரத்தானது 11 ஆயிரம் கன அடி வரை அதிகரித்து வந்தது.
    • நீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டதாலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    ஒகேனக்கல்லுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீர்வரத்தானது 11 ஆயிரம் கன அடி வரை அதிகரித்து வந்தது. இந்த நீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.

    இதனைத் தொடர்ந்து கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதாலும் காவிரி நீர் பிடிப்பதில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 6500 கன அடியாகவும் சரிந்தது.

    இந்த நீர் வரத்து குறைவால் கடந்த 3 நாட்களாக பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    • புகாரின் பேரில் விசாரணை நடத்த தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது.
    • மர்ம கும்பல் ரூ.11 லட்சத்தை பறித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி ஆனந்த பிரியா (வயது28). சாப்ட் வேர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அனந்த பிரியாவின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் தனியார் வங்கி மூலம் ரூ.10 லட்சம் கடன் தங்களுக்கு வந்துள்ளது என்று இருந்தது. அதனை நம்பிய ஆனந்த பிரியா அந்த லிங்கை கிளிக் செய்தார்.

    அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் வரை பணம் காணமால் போய்விட்டது. இது குறித்து ஆன்ந்தபிரியா சைபர் கிரைம் போலீசாருக்கு செல்போன் மூலம் புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்த தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீ சாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ஆனந்த பிரியாவிடம் இருந்து ஆன்லைன் மூலம் மர்ம கும்பல் ரூ.11 லட்சத்தை பறித்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் என்ஜினீயரிடம் தனியார் வங்கி மூலம் கடன் தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குண்டும் குழியுமான மலைச் சாலையில் 7 கிலோமீட்டர் தூரம், 45 டிகிரி கோணத்தில் ஏறி, இறங்க வேண்டும்.
    • குழந்தைகள் பள்ளி படிப்பை 5-ம் வகுப்பிற்கு மேல் படிக்காமல் நிறுத்தி விடுகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிமலை, கோட்டூர் மலை, அலக்கட்டுமலை என 3 மலை கிராமங்கள் உள்ளன. இதில் அலக்கட்டு மலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அடர்ந்த வனப் பகுதிகளில் சாலை வசதி முழுவதுமாக இல்லாத, குண்டும் குழியுமான மலைச் சாலையில் 7 கிலோமீட்டர் தூரம், 45 டிகிரி கோணத்தில் ஏறி, இறங்க வேண்டும். இந்த மலையில் உள்ள மக்களுக்கு சாலை, குடிநீர், மருத்துவம், கல்வி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த பகுதியை மலை கிராமத்தில் உள்ள குழந்தைகள் படிப்பதற்காக அரசு மலை மீது தொடக்கப்பள்ளி தொடங்கியுள்ளது. போதிய கட்டிட வசதி இல்லாமல் பைபர் மூலமாக 2 அறைகள் கொண்ட வகுப்பறை கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மலை கிராமத்தில் உள்ள குழந்தைகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து விட்டு, 6-ம் வகுப்பு மலையை விட்டு கீழே இறங்க வேண்டும். அவ்வாறு 7 கிலோ மீட்டர் தூரம் நடக்கின்றபோது வனப்பகுதியில் 5 இடங்களில் சிற்றாறுகள் குறுக்கிடுவதும், ஆங்காங்கே யானைகள், காட்டு எருமை உள்ளிட்ட விலங்குகளின் அச்சுறுத்தல் இருப்பதால், பெரும்பாலான குழந்தைகள் பள்ளி படிப்பை 5-ம் வகுப்பிற்கு மேல் படிக்காமல் நிறுத்தி விடுகின்றனர்.

    மேலும் இந்த தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் தினந்தோறும் 7 கிலோ மீட்டர் மலையேறி செல்ல வேண்டும், இருசக்கர வாகனங்களில் மலை சாலையில் பயணிக்கும் அனுபவம் இல்லாததால், அடிக்கடி விழுந்து அடிபடுகின்ற சூழலும், விலங்குகளின் அச்சுறுத்தல்களும் இருப்பதால், பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு வாரம் ஒரு முறை கூட வராமல் நின்று விடுகின்றனர். இதனால் இந்த மலை கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி என்பதும் ஒரு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு பாப்பரப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற ஆசிரியர் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது 16 ஆசிரியர்கள் இந்த அலக்கட்டு மலை கிராமத்திற்கு செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழரசன் பதவி உயர்வு பெற்ற நிலையில், விரும்பி அலக்கட்டு மலை கிராம பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்த பொழுது உடன் கலந்தாய்வு கூட்டத்தில் இருந்த ஆசிரியர்கள் மலை கிராமம், வன விலங்குகள் அச்சுறுத்தல், தினமும் சென்று வருவதில் பல்வேறு சிக்கல்கள் என அச்சுறுத்தியுள்ளனர்.

    ஆனாலும் மனம் தளராமல் அந்த மலை கிராம மாணவர்களுக்கு கட்டாயம் கல்வியை கற்பிப்பேன், அவர்களது முன்னேற்றத்திற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்ற உறுதியோடு முதல் நாள் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது மலை மீது ஏறுகின்ற பொழுது முறையான சாலை வசதி இல்லாமல், மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் பள்ளி முடிந்து கீழே இறங்கும்பொழுது பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் நடைப்பயணமாக சென்றுள்ளார். அப்பொழுது கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு மலை ஏறுவதும் இறங்குவதுமாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

    ஆனால் கீழிருந்து பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் நடந்து செல்ல முடியாத சூழல் இருந்து வந்துள்ளது. இதனால் மீண்டும் இரு சக்கர வாகனத்திலேயே ஆசிரியர் தமிழரசன் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் அடிக்கடி விழுந்து அடிபடுவதால், இதற்கு மாற்று ஏற்பாடாக பள்ளிக்கு தினம் தோறும் செல்கின்ற வகையில் அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். கிராமத்தில் 2 பேர் மட்டுமே இரு சக்கர வாகனத்தை ஆட்களை அமர வைத்துக் கொண்டு பாதுகாப்பாக ஓட்டி வருகின்ற நிலையில், அதில் ஒருவர் மகாலிங்கம் என்பவர். இவர் தினந்தோறும் ஆசிரியரை வண்டியில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதும், பள்ளி முடிந்த பிறகு அழைத்து வந்து கீழே கொண்டு வந்து விடுவதுமாக இருந்துள்ளார். இதனால் தொடர்ச்சியாக மகாலிங்கம் மூலமாகவே தினந்தோறும் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கலாம் அதற்காக மகாலிங்கத்திற்கு மாதம் ஊதியம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதற்கு மகாலிங்கம் ஒப்புதல் தெரிவித்து தினந்தோறும் காலை ஆசிரியரை மலைக்கு அழைத்துச் செல்வதும், பள்ளி முடிந்து மாலை கீழே கொண்டு வந்து விடுவதுமாக இருந்து வருகிறார்.

    இதனால் பள்ளிக்குச் செல்கின்ற ஆசிரியர் தமிழரசன் மலை கிராமத்தில் உள்ள பெற்றோர்களிடம் பேசி, குழந்தைகளை பள்ளிக்கு வர வைத்துள்ளார். தற்பொழுது 15 பிள்ளைகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். மேலும் 5-ம் வகுப்பு முடித்த மாணவர்களை கீழே உள்ள பள்ளிகளில் விடுதிகளில் சேர்த்து படிக்க வைக்கும் முயற்சியும் மேற்கொண்டுள்ளார்.

    இந்தப் பள்ளியில் மாணவர்களின் வருகை அதிகரிக்க வேண்டும், மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நண்பர்கள் மூலமாக பள்ளிக்கு தேவையான கணினி உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி வருவதும், பள்ளி வகுப்பறை முழுவதும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆர்வமூட்டுகின்ற வகையில் புகைப்படங்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தியுள்ளார்.

    மேலும் வகுப்பறையில் பாடம் எடுக்கின்றபோது மாணவர்கள் ஆசிரியரை உற்று கவனிக்க வேண்டும் என்பதற்காக, பாடங்களில் வருவதை தானே நடித்து பாடம் நடத்தி வருகிறார். இதனால் மாணவர்கள் ஆர்வமாக ஆசிரியரின் வருகையையும், பாடம் வகுப்பு நடத்துவதையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இந்த அணைக்கட்டு மலை கிராம பள்ளிக்கு ஆசிரியர் தமிழரசன் வந்த பிறகு பள்ளியில் உள்ள மாணவர்கள்இடைநீற்றல் இல்லாமல், பள்ளிக்கு வருவதும், நன்றாக படித்தும் வருகின்றனர். இதனால் மலை கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்பொழுது தமிழரசன் ஆசிரியர் பள்ளி மாணவர்களின் நலனுக்காக, அவர்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக மலையில் உள்ள பள்ளிக்கு செல்ல மாத ஊதியும் கொடுத்து ஒருவரை வைத்து தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருவது மலை கிராம மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் மலை கிராம மாணவர்களுக்கு கல்வியும் தடையில்லாமல் கிடைக்கிறது. எத்தனையோ அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறந்த ஆசிரியர் என்ற விருதை பெற்றிருந்தாலும், இந்த மாணவர்களின் வளர்ச்சிக்காக, மலை, வன விலங்கு அச்சுறுத்தல்கள், இதையெல்லாம் கடந்து கல்வி கற்பிக்கின்ற பொழுது ஒரு மிகுந்த மன நிறைவு இருப்பதாக ஆசிரியர் தமிழரசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு ஆசிரியரும் தமிழரசன் போலவே மாணவர்களின் வளர்ச்சிக்கு கல்விக்கும் தங்களது சிரமங்களை பார்க்காமல் பணியாற்றினால் மலை பகுதியில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மாணவர்களுக்கும் கல்வி அறிவு புகட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக தருமபுரி சோகத்தூரில் உள்ள பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தருமபுரியில் ஏரிக்கரை அருகே உள்ள சென்ன கேசவா பெருமாள் கோவில் அருகே ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி அடுத்த சோகத்தூர் ஏரிக்கரை அருகே தகடூரை ஆண்ட அதியமான் மன்னரால் வீர தீர ஆஞ்சநேயர் கோவில் நிறுவப்பட்டது.

    இந்த கோவிலை பொது மக்கள் புதுப்பித்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் ஓசூர் முதல் அதியமான்கோட்டை வரை புதிதாக 4 வழி விரைவு சாலை அமைக்கப்படும் பணி நடந்து வருகிறது.

    கோவில் அருகே அமைக்கப்படும் மேம்பாலத்தால் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் கோயிலை பாதுகாப்பாக அகற்றக்கோரி இந்து சமய அறநிலை துறைக்கு அறிவுறுத்தினர்.

    இதனை அடுத்து நேற்று அறநிலைத்துறையினர் சுமார் 5 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையை பாதுகாப்பாக கிரேன் மூலம் அகற்றி ஏரிக்கரை அருகே உள்ள சென்ன கேசவா பெருமாள் கோவில் அருகே ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    விரைவில் இங்கு கோவில் அமைக்க இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் சோகத்தூர் ஊர் பொது மக்கள் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த சிலை மாற்றம் தொடர்பாக இந்து சமய அறநிலைத் துறையி னருக்கு சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் மூலம் பெருந்தொகை கை மாறி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    • அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகளுக்கு பிறகு சென்றாயப் பெருமாள் சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகம் விழாவில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி பங்கேற்றார்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சென்றாய பெருமாள் சாமி கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1200 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணதேவராய காலத்தில் நடைபெற்றதாக வரலாறுகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது இதன் கும்பாபிஷேக விழா மன்னர் காலத்திற்குப் பின் இன்று நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விழா கொடியேற்றத்துடன் விழாதொடங்கியது. தொடர்ந்து முதற்காலயாகவேள்வி மற்றும் கணபதி, லட்சுமி உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று 2-ம் காலயாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்த குட ஊர்வலத்தின் போது தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி பவித்திர தண்டத்தை ஊர்வலமாக கொண்டு வந்தார். பின்னர் மூலவர் விமான கோபுர கலசம், கருடாழ்வார் விமான கோபுர கலசம் மற்றும் கொடி மரம் உட்பட மூலவர் தெய்வங்களுக்கு அர்ச்சகர்கள் புனித நீரை ஊற்றினர்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கமிட்டனர். கலச நீரானது பக்தர்கள் மீதும் தெளிக்கபட்டது. இந்த கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    மேலும் சென்றாய பெருமாள் திருக்கோவில் 16.ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் மன்னர்களால் கோவிலின் உட்புறம் மரபு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இதனால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதினால் கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • ஒகேனக்கல்லுக்கு தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
    • பரிசல் இயக்க தடை காரணமாக வார விடுமுறையான நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளின் நீர் திறப்பு எதிரொலியால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வார விடுமுறையால் நேற்று பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு சுமார் 9 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி கரையோர பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், பிலிகுண்டுலு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இணைவு பெறும் தொட்டல்லா ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்தானது நேற்று முன்தினம் 11ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 9 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    ஒகேனக்கல்லுக்கு தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது. அதனை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்த தடை இன்று 3-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பரிசல் இயக்க தடை காரணமாக வார விடுமுறையான நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இருப்பினும் வந்திருந்து சுற்றுலா பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியல் குளித்தும், தொங்கு பாலத்தின் மீது ஏறி அருவியின் அழகை கண்டு ரசித்தனர். காவிரி ஆற்றில் பரிசில் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வந்திருந்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    மேலும் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி செல்லும் நடைபாதை, மீன் விற்பனை நிலையம், உணவருந்தும் பூங்கா, முதலைகள் மறுவாழ்வு மையம், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

    • தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
    • இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களால் சாலையை கடக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரப் பகுதியான தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த உயர் மின் கோபுர விளக்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களால் சாலையை கடக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் இருள் சூழ்ந்து கிடப்பதால், ஆள் நடமாட்டம் இல்லாத போது பெண்களிடம் மர்ம நபர்கள் நகை பறிப்பு, வழிபறி சம்பவங்கள் ஈடுபட ஏதுவாக இருக்கும் என கருதி அப்பகுதியில் பெண்கள் இரவு நேரங்களில் நடமாட அஞ்சி வருகின்றனர்.

    எனவே நகராட்சி நிர்வாகம் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ×