என் மலர்
கடலூர்
புதுவை மாநிலம் மூலக்குளத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் இருந்து மாணவ– மாணவிகள் ஏராளமானோர் அந்த கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்கள் தினந்தோறும் கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம்.
அந்த பஸ் கடலூரில் மாணவர்களை இறக்கி விட்டு மஞ்சக்குப்பம் மைதானத்தில் பஸ் நிறுத்தப்படும். அருகில் உள்ள மாதாகோவிலில் டிரைவர் தூங்குவார். வழக்கம் போல் டிரைவர் பஸ்சை மஞ்சக்குப்பம் மைதானத்தில் நிறுத்திவிட்டு மாதா கோவிலில் தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பஸ்சை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். நிர்வாகம் சார்பில் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார் படுத்தி தீவிர வாகனசோதனை நடத்தினர். இந்நிலையில் வடலூர் வள்ளலார் கோவில் மைதானத்தில் ஒரு பஸ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சென்று பார்த்தபோது அந்த பஸ் கடத்தப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி பஸ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுக்கபட்டது. அவரது உத்தரவின்பேரில் பஸ்சை போலீசார் மீட்டு கடலூர் ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வந்தனர்.
பஸ்சை கடத்தி சென்ற மர்மமனிதன் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஸ்சை கடத்திய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி கடலூர் மக்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.
வீராணம் ஏரி மூலம் 45 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏரி தூர்ந்து போனதால், தண்ணீரை அதிக அளவில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
எனவே வீராணம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து வீராணம் ஏரியை தூர்வாரி பலப்படுத்த ரூ.40 கோடியும், வெள்ளியங்கால் ஓடையை சீரமைத்து மதில்சுவர் கட்ட ரூ.8 கோடியே 15 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது.
வீராணம் ஏரியை தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
லால்பேட்டை, திருச்சின்னபுரம், நத்தமலை, கந்தகுமாரன், கொள்ளுமேடு மற்றும் மேலக்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் பொக் லைன் எந்திரங்கள் மூலம் வீராணம் ஏரியை தூர்வாரி வந்தனர். வெள்ளியங்கால் ஓடையையும் சீரமைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு காட்டு மன்னார்கோவில் பகுதியில் பரவலாக பெய்த கோடை மழை காரணமாக வீராணம் ஏரி தூர்வாரும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
கோடை மழை நின்றதையடுத்து கடந்த வாரம் வீராணம் ஏரியை தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் தொடங்கினர்.
பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில் காட்டு மன்னார்கோவில் பகுதியில் உள்ள லால்பேட்டை, திருச்சின்னபுரம், நத்தமலை, கொள்ளுமேடு, கந்தகுமாரன் ஆகிய கிராமங்களில் திடீரென பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக அங்கு மழை நீர் தேங்கி நிற்பதால் வீராணம் ஏரி பகுதியில் நடைபெற்று வந்த தூர்வாரும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மேலக்கரை பகுதியில் மழை பெய்யாத காரணத்தால், அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.
கத்திரி வெயில் முடிந்த பின்னரும் கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. எனவே கோபால்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே படுத்திருந்தனர்.
இதையறிந்த மர்ம மனிதர்கள் இன்று அதிகாலை கோபால்சாமி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இன்று காலை கோபால் சாமி எழுந்தபோதுதான் வீட்டில் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இந்த துணிகர கொள்ளை குறித்து கோபால்சாமி சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.
கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து 1 கி.மீ. தூரம் ஓடிச் சென்று படுத்துக் கொண்டது.
இந்த நிலையில் கோபால்சாமி வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள 6 வீடுகளின் கதவை உடைத்துள்ளனர்.
வீட்டுக்காரர்கள் சத்தம் போட்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சேத்தியாத்தோப்பு பகுதியில் அடுத்தடுத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்ட முயன்றது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் காணை அருகே உள்ள சிறுவாக்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45), லாரி டிரைவர். இவர் விழுப்புரம் அருகே உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்களை லாரியில் ஏற்றி திருச்சிக்கு கொண்டு சென்றார்.
அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை இறக்கி விட்டு மீண்டும் விழுப்புரத்துக்கு வந்து கொண்டிருந்தார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது 4 மர்ம மனிதர்கள் அவரை வழிமறித்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றனர்.
பின்னர் அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டார்கள்.
லாரி டிரைவரை கொன்று பணத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் ராஜா, ரமேஷ்பாபு, சப்–இன்ஸ்பெக்டர் ஷேக் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக வேப்பூர், திட்டக்குடி, தொழுதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
வேப்பூர் அருகே பாசார் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு லாரி டிரைவர் ஒருவரை மர்ம மனிதர்கள் தாக்கி பணத்தை கொள்ளையடித்தனர். சில நாட்கள் கழித்து அதே பகுதியில் கரும்பு டிராக்டர் டிரைவரை தாக்கி மர்ம மனிதர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கைதானவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். எனவே, லாரி டிரைவர் ராஜேந்திரனை கொன்று கொள்ளையடித்த வழக்கில் பழைய குற்றவாளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள்.
இதையொட்டி வேப்பூர் பகுதியை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியதாக தெரிகிறது.
மேலும், புதுவை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திட்டக்குடி, வேப்பூர், தொழுதூர் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சேப்பாக்கத்தில் லாரி டிரைவரை கொன்று மர்ம மனிதர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வேப்பூர் அருகே மர்ம மனிதர்கள் மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
வேப்பூர் அருகே உள்ள வரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 35), விவசாயி. நேற்று இரவு வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார். வீட்டுக்குள் புழுக்கமாக இருந்ததால் அவரது குடும்பத்தினர் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். ராஜா வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
பின்னர் அதே பகுதியில் உள்ள விவசாயி அன்பழகன் வீட்டின் கதவை உடைத்து மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். சத்தம் கேட்டு அவர் வெளியே ஓடிவந்தார். உடனே அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து ஓடினார்கள்.
ஊர் மக்கள் திரண்டு வந்து கொள்ளையர்களை துரத்தி சென்றனர். ஆனால், அவர்கள் தப்பி விட்டனர்.
இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி(வயது 45) விவசாயி. இவரது மனைவி சித்ரா(40) நேற்று இரவு புழுக்கமாக இருந்ததால் வீட்டிற்கு வெளியே சக்கரபாணி படுத்து தூங்கினார். இவரது மனைவி வீட்டில் படுத்திருந்தார்.
நள்ளிரவில் 5 மர்ம வாலிபர்கள் அங்கு வந்தனர். வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி உள்ளே குதித்தனர். சத்தம்கேட்டு சக்கரபாணி திடுக்கிட்டு எழுந்தார்.
மர்ம வாலிபர்களை பார்த்து யார் நீங்கள் என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர்கள் அவரிடம் பணம் வைத்திருக்கிறாயா? என்று கேட்டனர். அதற்கு சக்கரபாணி என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் கோபமடைந்த அந்த வாலிபர்கள் சக்கரபாணியை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
வலி தாங்க முடியாமல் சக்கரபாணி அலறினார். உடனே அவரது மனைவி சித்ரா வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்ததும் கொள்ளையார்கள் அங்கிருந்து ஓடினர்.
பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள சிங்காரவேலர் நகருக்கு சென்றனர். அங்கு பரங்கிப்பேட்டை தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்க்கும் பாலசுப்ரமணியன்(40) என்பவரது வீடு உள்ளது.
நேற்று இரவு அவர் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது தாயார் சின்னம்மாள்(70) மனைவி உமாமகேஷ்வரி, மகள் சுவாதி, மகன் பாலயோகேஷ் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
கொள்ளையர்கள் அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். சத்தம்கேட்டு சின்னம்மாள் எழுந்து வெளியே வந்தார். அவரை வாலிபர்கள் சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கசங்கிலி, ½ பவுன் மூக்குத்தி ஆகியவைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பி.முட்லூர் பகுதியில் கொள்ளையடித்த மர்ம வாலிபர்கள் டிரவுசர் மட்டும் அணிந்திருந்தார்கள் என்றும் அவர்களுக்கு 25 வயது இருக்கும் என்றும் தெரியவந்தது. அந்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் தாக்கியதால் காயம் அடைந்த சக்கரபாணி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பி.முட்லூர் பகுதியில் நள்ளிரவில் டிரவுசர் கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேப்பூர்
விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள திருவாக்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). லாரி டிரைவர்.
இவர் விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு சென்றார்.
அங்கு டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை இறக்கி விட்டு நேற்று இரவு விழுப்புரத்துக்கு லாரியில் புறப்பட்டார்.
அதிகாலை 2 மணி அளவில் லாரி கடலூர் மாவட்டம் திட்டக்குடி வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது 4 மர்ம மனிதர்கள் லாரியை வழிமறித்தனர். ராஜேந்திரன் லாரியை நிறுத்தினார். உடனே அந்த மர்ம மனிதர்கள் லாரிக்குள் பாய்ந்து ஏறினார்கள். ராஜேந்திரனை கண்மூடித்தனமாக தாக்கினர். அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அவர் பணத்தை தர முடியாது என்று மர்ம மனிதர்களுடன் போராடினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராஜேந்திரனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்றனர். பின்னர் லாரியில் இருந்து அவரை கீழே இறக்கி அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் வீசினர்.
பின்னர் லாரியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த மர்ம மனிதர்கள் தப்பி சென்று விட்டனர். அந்த பெட்டியில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு அந்த வழியாக வந்த பொதுமக்கள் ராஜேந்திரன் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ரோட்டின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை பார்வையிட்ட னர். லாரியில் இருந்த பெட்டிகள் உடைக்கப்பட்டு இருந்தன.
வயல் பகுதியில் கிடந்த ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், திட்டக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டியன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ராமகிருஷ்ணன், ராஜேஷ், ரவிச்சந்திரன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
இதே பகுதியில் நேற்று நள்ளிரவு வேப்பூர் சேப்பாக்கம் வழியாக வந்த மற்றொரு லாரியையும் மர்ம மனிதர்கள் வழிமறித்து உள்ளனர்.
லிப்டு கேட்டு ஏறிய அவர்கள் லாரி டிரைவரை தாக்கி அவரிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த லாரி டிரைவர் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
எனவே இந்த கும்பல்தான் லாரி டிரைவர் ராஜேந்திரனை கொலை செய்து கொள்ளையடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
பழைய குற்றவாளிகள் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரழைக்கப்பட்டது. அது அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்துக் கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே பகுதியில் சிவகங்கை மாவட்டம் திருவாடானை மணக்குடி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் லூயிஸ் லாரன்ஸ் (வயது 40) என்பவரையும் மர்ம மனிதர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக லூயிஸ் லாரன்ஸ் கூறியதாவது:–
நான் அரியலூரில் இருந்து சிமெண்ட் மூட்டை களை ஏற்றிக்கொண்டு லாரியில் திருவண்ணா மலை நோக்கி வந்து கொண்டிருந்தேன்.
இரவு திட்டக்குடி அருகே உள்ள வேப்பூர் என்ற பகுதியில் வந்த போது 4 வாலிபர்கள் வழிமறித்தனர். தங்களது லாரி சேப்பாக்கம் அருகே பழுதாகி நிற்கிறது. அங்கு செல்ல வேண்டும். உங்கள் லாரியில் நாங்கள் வருகிறோம் என்றனர்.
அவர்கள் கூறியதை நான் நம்பினேன். 4 பேரையும் லாரியில் ஏற்றிக் கொண்டேன். லாரி சேப்பாக்கம் அருகே வந்த போது 4 பேரில் ஒருவன் திடீரென்று என்னிடம், நான் வைத்திருக்கும் பணத்தை தரும்படி கேட்டான். நான் மறுத்தேன். உடனே அவன் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான்.
பின்னர் நான் பையில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டான். நான் தடுக்க முயன்ற போது என்னை தாக்கினான்.
இதையடுத்து லாரியை நிறுத்த சொன்னான். உடனே நான் லாரியை நிறுத்தினேன். லாரியில் இருந்து 4 பேரும் கீழே இறங்கி விட்டனர்.
அதன் பின்னர் நான் வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு லாரியுடன் வந்து புகார் செய்தேன். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அதற்குள் மர்ம வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
என்னை தாக்கி பணத்தை பறித்த வாலிபர்களுக்கு 20 வயது இருக்கும். நான் அவர்களிடம் பணத்தை கொடுக்காமல் இருந்திருந் தால் அவர்கள் என்னை யும் கொலை செய்து இருப் பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 30), தொழிலாளி.
கடந்த மாதம் ஏனாதிமேடு பகுதியில் நடந்த சவ ஊர்வலத்தில் பாண்டியன் கலந்து கொண்டார். அந்த ஊர்வலத்தில் பூதாமூரைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் பி.ஜி.சேகரும் கலந்து கொண்டார்.
ஊர்வலத்தில் நடந்து சென்றபோது சேகருக்கும், பாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 2 பேரும் மோதிக் கொண்டனர். அருகில் இருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சேகர் தனது காரில் பாண்டியன் வீட்டுக்கு சென்றார். அவர் கொண்டு சென்ற ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகளை காட்டி பாண்டியனை மிரட்டினார். பின்னர் சரமாரியாக தாக்கினார்.
மேலும் என்னிடம் மோதினால் உன்னை வெடிகுண்டு வீசி கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இது குறித்து பாண்டியனின் தாயார் ராணி (54) விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் பி.ஜி.சேகரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பெட்ரோல் குண்டு மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர்:
கடலூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் எம்.சி.சம்பத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து கடலூர் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமையில் காரமணிக்குப்பம், வர்க்கால்ப்பட்டு உள்ளிட்ட பல பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்தார்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை பழனிசாமி, மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் டி.ஜி.என்.ராமலிங்கம், மதியழகன், தொகுதி கழக துணை செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட பேரவை பொருளாளர் ஆறுமுகம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், நில வங்கி துணை தலைவர் ரவி, ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயராயலு, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ராஜசேகர், ராதிகா ஜெயபால், வசந்தா முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், நடராஜன், சுதாகர் கிளை செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் அருகே துணிசிரமேடு கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரைக் கண்ணன் (வயது 40). இவருடைய உறவினர் மாரிசெல்வி. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்ததால், மாரிசெல்வி அவர் கடலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வாங்கி வர முடிவு செய்தார்.
இந்த நிலையில் கிள்ளை அருகே கீழச்சாவடி கிராமத்தை சேர்ந்த சுகுமாறன், மணிமாறன் ஆகியோர் மாரிசெல்வி மற்றும் செந்தாமரைக்கண்ணணை சந்தித்தனர். அப்போது ரூ.4 லட்சம் கொடுத்தால் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு மாரிசெல்விக்கு பணியிட மாற்றம் வாங்கி தருகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை நம்பி அவர்களிடம் ரூ.4 லட்சத்தை கொடுத்தனர்.
ஆனால் அவர்கள் கூறியபடி பணியிட மாற்றம் வாங்கி தராமல் ஏமாற்றினர். சம்பவத்தன்று சுகுமாறன், மணிமாறன் ஆகியோரை செந்தாமரைக்கண்ணன் சந்தித்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார்.
அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுகுமாறன், மணிமாறன் ஆகியோர் ஒன்று சேர்ந்து தாமரைக்கண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து செந்தாமரைக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ் வழக்குப்பதிவு செய்து சுகுமாறன், மணிமாறன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை கூட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கடலூர் மாவட்ட செயலாளர் சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொதுச்செயலாளர் செல்வமணி, கல்யாணசுந்தரம், குணா மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சுரங்க சட்டப்படி பஞ்சப்படி வழங்கிட வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநிரந்தரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை என்.எல்.சி. நிர்வாகம் புறக்கணிப்பதை கண்டிப்பது.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, ஒப்பந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகள் சந்தித்து ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பது.
என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தவது.
அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வேண்டுகோள் ஈர்ப்பு போராட்டம் நடத்துவது.
இந்த போராட்டத்திற்கு பிறகும் சுமூக பேச்சுவார்த்தையில் தீர்வு காண என்.எல்.சி. நிர்வாகம் தவறுமேயானால் அடுத்த மாதம்(ஜூன்) 11-ந்தேதி இரவு பணியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்நிறுத்தி நடைபெற உள்ள இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு அளிக்க கோருவது மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெய்வேலி வட்டம் 15 மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. என்.எல்.சி. குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர்கள் தங்கராசு, சின்னதுரை ஆகியோர் விஷவாயு தாக்கி பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக வட்டம் 22 குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து வரும் தொழில்நுட்ப பணியாளர்களான முரளி கிருஷ்ணன், நீதிமணி ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.






