என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி டிரைவரை கொன்று பணம் கொள்ளை: 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
    X

    லாரி டிரைவரை கொன்று பணம் கொள்ளை: 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

    விழுப்புரம் மாவட்டத்தில் லாரி டிரைவரை கொன்று பணம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேப்பூர்:

    விழுப்புரம் காணை அருகே உள்ள சிறுவாக்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45), லாரி டிரைவர். இவர் விழுப்புரம் அருகே உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்களை லாரியில் ஏற்றி திருச்சிக்கு கொண்டு சென்றார்.

    அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை இறக்கி விட்டு மீண்டும் விழுப்புரத்துக்கு வந்து கொண்டிருந்தார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது 4 மர்ம மனிதர்கள் அவரை வழிமறித்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றனர்.

    பின்னர் அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டார்கள்.

    லாரி டிரைவரை கொன்று பணத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் ராஜா, ரமேஷ்பாபு, சப்–இன்ஸ்பெக்டர் ஷேக் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக வேப்பூர், திட்டக்குடி, தொழுதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

    வேப்பூர் அருகே பாசார் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு லாரி டிரைவர் ஒருவரை மர்ம மனிதர்கள் தாக்கி பணத்தை கொள்ளையடித்தனர். சில நாட்கள் கழித்து அதே பகுதியில் கரும்பு டிராக்டர் டிரைவரை தாக்கி மர்ம மனிதர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக கைதானவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். எனவே, லாரி டிரைவர் ராஜேந்திரனை கொன்று கொள்ளையடித்த வழக்கில் பழைய குற்றவாளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள்.

    இதையொட்டி வேப்பூர் பகுதியை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியதாக தெரிகிறது.

    மேலும், புதுவை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திட்டக்குடி, வேப்பூர், தொழுதூர் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×