என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் அருகே பெண்ணை தாக்கி நகை கொள்ளை
    X

    சிதம்பரம் அருகே பெண்ணை தாக்கி நகை கொள்ளை

    பி.முட்லூர் பகுதியில் நள்ளிரவில் டிரவுசர் கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி(வயது 45) விவசாயி. இவரது மனைவி சித்ரா(40) நேற்று இரவு புழுக்கமாக இருந்ததால் வீட்டிற்கு வெளியே சக்கரபாணி படுத்து தூங்கினார். இவரது மனைவி வீட்டில் படுத்திருந்தார்.

    நள்ளிரவில் 5 மர்ம வாலிபர்கள் அங்கு வந்தனர். வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி உள்ளே குதித்தனர். சத்தம்கேட்டு சக்கரபாணி திடுக்கிட்டு எழுந்தார்.

    மர்ம வாலிபர்களை பார்த்து யார் நீங்கள் என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர்கள் அவரிடம் பணம் வைத்திருக்கிறாயா? என்று கேட்டனர். அதற்கு சக்கரபாணி என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் கோபமடைந்த அந்த வாலிபர்கள் சக்கரபாணியை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

    வலி தாங்க முடியாமல் சக்கரபாணி அலறினார். உடனே அவரது மனைவி சித்ரா வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்ததும் கொள்ளையார்கள் அங்கிருந்து ஓடினர்.

    பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள சிங்காரவேலர் நகருக்கு சென்றனர். அங்கு பரங்கிப்பேட்டை தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்க்கும் பாலசுப்ரமணியன்(40) என்பவரது வீடு உள்ளது.

    நேற்று இரவு அவர் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது தாயார் சின்னம்மாள்(70) மனைவி உமாமகேஷ்வரி, மகள் சுவாதி, மகன் பாலயோகேஷ் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    கொள்ளையர்கள் அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்தனர்.

    வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். சத்தம்கேட்டு சின்னம்மாள் எழுந்து வெளியே வந்தார். அவரை வாலிபர்கள் சரமாரியாக தாக்கினர்.

    பின்னர் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கசங்கிலி, ½ பவுன் மூக்குத்தி ஆகியவைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது பி.முட்லூர் பகுதியில் கொள்ளையடித்த மர்ம வாலிபர்கள் டிரவுசர் மட்டும் அணிந்திருந்தார்கள் என்றும் அவர்களுக்கு 25 வயது இருக்கும் என்றும் தெரியவந்தது. அந்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கொள்ளையர்கள் தாக்கியதால் காயம் அடைந்த சக்கரபாணி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பி.முட்லூர் பகுதியில் நள்ளிரவில் டிரவுசர் கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×