என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் கடத்தல்
    X

    கடலூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் கடத்தல்

    தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் கடத்தப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    புதுவை மாநிலம் மூலக்குளத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கடலூர் மாவட்டத்தில் இருந்து மாணவ– மாணவிகள் ஏராளமானோர் அந்த கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்கள் தினந்தோறும் கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம்.

    அந்த பஸ் கடலூரில் மாணவர்களை இறக்கி விட்டு மஞ்சக்குப்பம் மைதானத்தில் பஸ் நிறுத்தப்படும். அருகில் உள்ள மாதாகோவிலில் டிரைவர் தூங்குவார். வழக்கம் போல் டிரைவர் பஸ்சை மஞ்சக்குப்பம் மைதானத்தில் நிறுத்திவிட்டு மாதா கோவிலில் தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பஸ்சை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். நிர்வாகம் சார்பில் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார் படுத்தி தீவிர வாகனசோதனை நடத்தினர். இந்நிலையில் வடலூர் வள்ளலார் கோவில் மைதானத்தில் ஒரு பஸ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சென்று பார்த்தபோது அந்த பஸ் கடத்தப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி பஸ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுக்கபட்டது. அவரது உத்தரவின்பேரில் பஸ்சை போலீசார் மீட்டு கடலூர் ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வந்தனர்.

    பஸ்சை கடத்தி சென்ற மர்மமனிதன் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஸ்சை கடத்திய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×