என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவருக்கும் வேப்பூர் அருகே திருப்பெயர் பகுதியைச் சேர்ந்த லக்கேஷ்வரி (21)க்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணம் இன்று காலை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
நேற்று இரவு பெண் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. திருப்பெயரில் இருந்து நகர் கிராமம் பகுதிக்கு லக்கேஷ்வரியை காரில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். உறவினர்கள் ஏராளாமானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
நடுவழியில் திடீரென்று லக்கேஷ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனிளிக்காமல் லக்கேஷ்வரி பரிதாபமாக இறந்தார்.
மணப்பெண் திடீரென்று இறந்ததால் இங்கு நடைபெற இருந்த திருமணம் நின்றது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். மணமகள் இறந்த தகவல் அறிந்த மணமகன் அதிர்ச்சி அடைந்தார். மிகவும் சோகமாக காணப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தினர்.
இதில் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வாகன புத்தகம் இல்லாமை, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற பல்வேறு விதிமுறைகளை மீறியதாக 835 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மட்டும் 40 பேர் சிக்கினர். இதேபோல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழைய குற்றவாளிகள் 15 பேரும் கைது செய்யப்பட்டனர். பிடிவாரண்டு குற்றவாளிகள் 15 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் அதற்கான ஆயத்த பணிகளை சில மாவட்டங்களில் தமிழக அரசு தொடங்கியது. சட்டசபை தேர்தல் காரணமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டன.
தேர்தல் முடிந்து விட்டதால் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முதல் கட்டமாக திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிநவீன கருவியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி அதில் ரேஷன் அட்டைதாரர்கள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி கூறியதாவது:–
கடலூர் மாவட்டத்தில் தற்போது அரிசி மற்றும் சர்க்கரை கார்டுகள் என மொத்தம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 536 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை மாதந்தோறும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும்போது மேலும் அதிகரிக்கும்.
இந்த நிலையில் போலி ரேஷன் கார்டுகள் பிடி படும்போது ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை குறையும்.
தேர்தலுக்கு முன்பு புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி முடிவடைந்து ஒரு வார காலத்துக்குள் அவை வினியோகிக்கப்படும்.
இனி ரேஷன் கார்டு தேவைப்படுவோர் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக இ–சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
புதிய ரேஷன் கார்டு கேட்டு தாலுகா அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை கொடுத்தாலும் அவற்றை சரிபார்த்து பின்னர் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.
கடலூர் மட்டுமின்றி விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை ஆகஸ்டில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் போது வாங்காத பொருட்கள் பற்றிய விவரம் செல்போன் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனால் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெய்வேலி:
நெய்வேலியை அடுத்த புதுநகரில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காவலாளியாக மந்தாரகுப்பத்தை சேர்ந்த ரங்கராஜன்(வயது 70) வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் பணியில் இருந்தார். இன்று காலை பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தார்.
இதனை கண்ட அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவலாளி ரங்கராஜன் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
வேப்பூர் அருகே உள்ள கண்டப்பங்குறிச்சியை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் சிங்ககுட்டி (வயது 24), தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், உடல்நிலை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிங்ககுட்டி விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சிங்ககுட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிங்ககுட்டி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. வெயிலின் அளவு சதத்தை தாண்டியே பதிவானது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் அளவு குறையவில்லை. மாறாக வெப்பம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை பெய்யாதா? என்று எதிர்பார்த்தனர்.
இந்தநிலையில் வெப்ப சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. 30 நிமிடங்களுக்கு பின்னர் மழை குறைந்தது. அதன் பின்னர் இரவு 9 மணிவரை லேசாக தூறிக் கொண்டிருந்தது. இதனால் வெப்பம் தணிந்தது.
மழைபெய்தபோது கடலூர் வெள்ளக்கரையில் உள்ள தங்கமணி என்பவரது வீட்டின் மீது இடி விழுந்தது. இதில் வீட்டில் இருந்த தங்கமணியின் மனைவி முத்துலட்சுமி (வயது 28), மகன் லோகநாதன் (9) ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் இருவரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடிசையில் எரிந்த தீயை அணைத்தனர்.
இதேபோல் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும் பலத்த சூறாவளியுடன் மழை கொட்டியது. இதனால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் சாமந்தி, சம்பங்கி செடிகள் நாசமானது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் மேல்மலையனூர், அவலூர்பேட்டை, வளத்தி, கொடுக்கன்குப்பம், பிரம்மதேசம் பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. 1 மணி நேரம்வரை மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
செஞ்சி, திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப் புறங்களிலும் இடி-மின்னலுடன் 1 மணிநேரம் மழை நீடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
2½ மணி நேரத்துக்கு பின்னர் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கோடை மழை யால் வெயிலின் கொடுமை தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரேணுகா (வயது 19). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார்.
இவரும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். ஆனந்தராஜ் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு தனியார் பஸ்சில் கண்டக்டராக உள்ளார்.
இவர்களது காதல் விவகாரம் ரேணுகா வீட்டுக்கு தெரியவந்தது. அவர்கள் ரேணுகாவை கண்டித்தனர். இதுகுறித்து ரேணுகா ஆனந்தராஜிடம் தெரிவித்தார். எனக்கு நல்ல வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆனந்தராஜ் தெரிவித்தார்.
ஆனால் ரேணுகா வீட்டிற்கு போக மறுத்து இப்போதே திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார். இதையடுத்து இருவரும் மே 9-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் மகளை காணவில்லை என ரேணுகாவின் தந்தை ராஜேந்திரன் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த ஆனந்தராஜ், ரேணுகாவும் இன்று கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
தமிழக சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்டார். 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த 2 நாட்களாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இன்று அவர் சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட நான் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். தற்போது தொகுதி முழுவதும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன்.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் தேர்தலில் தில்லு முல்லு நடந்துள்ளது. அதனால்தான் நீங்கள் தோற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று என்னிடம் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் முறையாக தேர்தல் நடைபெறவில்லை. எனவே ஜூன் 3-வது வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் சாலைகள் சீராக இல்லை. இங்கு பஸ் நிலையம் கட்ட முக்கியவத்தும் கொடுத்தவர்கள் சாலை சீரமைப்பில் கவனம் செலுத்தியிருந்தால் காட்டுமன்னார்கோவில் முன்னேறியிருக்கும். இனியாவது தமிழக அரசு காட்டுமன்னார்கோவில் தொகுதியில் சாலைகள் சீரமைப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டு காலத்தில் 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
தமிழக சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவாரா? என்பது சந்தேகமாக உள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையம் சரியான முறையில் செயல்படவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.
234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணப்பட்டுவாடா செய்துள்ளன. இதை தடுக்க வருங்காலங்களில் தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள செலவுத் தொகையை தேர்தல் ஆணையத்திடமே வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் அந்த தொகையை செலவு செய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் முறையை தேர்தல் ஆணையம் அனுமதிக்கக்கூடாது. பொதுக்கூட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். வீடுகளில் கட்சி சின்னம் வரையவும் தடை விதிக்க வேண்டும். ஜூலை 3-வது வாரத்தில் “வேர்களைத்தேடி” என்ற திட்டத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். அப்போது கட்சியை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாராளுமன்ற தேர்தல்தான் எங்கள் அடுத்த இலக்கு.
மேற்கண்டவாறு திருமாவளவன் கூறினார்.
போதிரமங்களத்தில் உள்ள அம்மாபொன்நகரை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 24). இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு மதிவாணன் குடும்பத்தோடு தூங்கினார்.
நள்ளிரவில் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரொக்கபணம் ரூ.75 ஆயிரத்தை கொள்ளை யடித்து சென்றுவிட்டனர்.
இந்த துணிகரகொள்ளை குறித்து ஆவினன்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள போதிரமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55), விவசாயி.
இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம மனிதர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரொக்கப்பணம் ரூ.75 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இன்று காலை தங்கராஜ் எழுந்தபோது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த நகை-பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.
அடுத்தடுத்து 2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது.
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும்.
வீராணம் ஏரி கடலூர் மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. தூர்ந்து போய் உள்ள வீராணம் ஏரியை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வீராணம் ஏரி மற்றும் வெள்ளியங்கால் ஓடையை தூர்வாரி பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வீராணம் ஏரியில் நடைபெற்று வந்த தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.
தற்போது மழைநீர் வடிந்ததால் மீண்டும் வீராணம் ஏரியை தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 30–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் பைபர் படகு, விசைப்படகுகள் மூலம் தினந்தோறும் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆண்டுக்கு ஒரு முறை மீன்வளத்துறை சார்பில் பைபர் படகு, விசைப்படகுகள் எவ்வளவு உள்ளது என்று ஆய்வு செய்யப்படும். அதன்படி மீன்வளத்துறை அதிகாரிகள் கடலூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்தனர்.
மேலும் அவர்களுக்கு டீசல் மானியமாக வழங்குவது குறித்தும், படகு வைத்திருப்பவர்கள் இன்சூரன்ஸ் முறைப்படி செலுத்தி உள்ளார்களா? என்றும் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு மீனவ கிராமத்திற்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 6 பேர் கொண்ட குழு நேரில் சென்று ஆய்வு செய்தது.
இதனால் கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. கடலூர் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
சிதம்பரம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக சட்டசபை தேர்தலின் போது பல்லாயிர கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா நடைபெற்றதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் 100 சதவீதம் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. ஆகவே தமிழகத்தில் 232 தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
கோவையில் தலித் மாணவி ஒருவர் கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசு தரப்பில் எந்த ஆறுதலும் கூறவில்லை. இது தலித் மக்களுக்கு எதிரான அலட்சியப்போக்கை காட்டுகிறது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். நான் பாராட்டு தெரிவித்தேன். ஆனால் அந்த திட்டங்கள் பொதுமக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை.
டாஸ்மாக் நேரம் பகல் 12 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனென்றால் குடிகாரர்கள் மாலையில் அதிகமாக குடிப்பது வழக்கம். ஆகவே காலையில் 2 மணி நேரம் குறைத்ததை மாலையில் 6 மணியில் இருந்து 10 மணியாக குறைத்திருந்தால் நன்றாக இருக்கும்.
காட்டுமன்னார் கோவிலில் நான் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றேன். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கேட்டேன். மேலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.
தாமதமாக மக்கள் நலக்கூட்டணி அமைந்ததால் பொதுமக்களிடம் எங்கள் கோரிக்கைகள் சென்று சேரவில்லை. தொடர்ந்து மக்கள் நல கூட்டணி நீடிக்கிறது. நாளை பிறந்த நாள் கொண்டாடும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






