என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் புகை பிடித்தவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், குமராட்சி, காட்டு மன்னார்கோவில், புதுச்சத்திரம், பண்ருட்டி, நல்லூர், மங்களூர், விருத்தாசலம், வடலூர், குறிஞ்சிப்பாடி, உறையூர், புவனகிரி உள்பட 13 வட்டாரங்கள் உள்ளன.

    இந்த பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்திரவிட்டார்.

    அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவர்ஹர்லால் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார துரை ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது இடங்களில் புகை பிடித்தவர்கள் மற்றும் பள்ளி அருகே பீடி, சிகரெட் விற்றவர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    கடலூர் அருகே நடுக்கடலில் அலையில் சிக்கி படகு மாயமானது. அதிலிருந்த 4 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாததால் கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் சோனாங்குப்பத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 45). இவருக்கு சொந்தமான விசைப்படகில் 20 பேர் நேற்று மாலை மீன்பிடிக்க சென்றனர். அந்த விசைப் படகுடன் பைபர் படகும் சென்றது.

    இதில் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த முத்துகுமரன்(33), கடலூர் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி(35), முதுநகரைச் சேர்ந்த ராஜசேகர்(27), ராமேசுவரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் உள்பட 4 பேர் சென்றனர்.

    விசைப்படகுடன் பைபர் படகு கயிறால் கட்டி இணைக்கப்பட்டிருந்தது. நடுக்கடலில் அவர்கள் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்திருந்தனர். அப்போது சுழல் காற்று வீசியது. விசைப்படகில் இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுந்தது.

    விசைப்படகில் இருந்தவர்கள் அந்த பைபர் படகை மீட்க முயன்றனர். அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் பைபர் படகு இழுத்து செல்லப்பட்டது. அந்த படகில் இருந்த 4 மீனவர்களும் ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று அபய குரல் எழுப்பினர்.

    புதுவை கடல்பகுதி வரை பைபர் படகை அலை இழுத்து சென்றது. விசைப்படகு மீனவர்கள் அதை மீட்க பின் தொடர்ந்து சென்றனர்.

    இந்த நிலையில் பைபர் படகு திடீரென்று மாயமானது. இதனால் விசைப்படகு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புதுவை மற்றும் கடலூர் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து படகுகள் மூலம் தேடினர்.

    அப்போதும் பைபர் படகை கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் இருந்த 4 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இதையடுத்து சென்னையில் உள்ள கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மாயமான மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

    மீனவர்கள் மாயமானதால் கடலூரில் மீனவர்கள் கவலையுடன் காணப்பட்டனர். அவர்களும் படகுகளில் சென்று கடலில் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மழையால் வகுப்பறை சேதமடைந்ததால் பள்ளி வளாகத்தில் உள்ள அரச மரத்தின் அடியில் அமர வைத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ளது கூடுவெளிச்சாவடி கிராமம். இந்த ஊரில் இருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது கடந்த 2011-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    ஆனால் கூடுதலாக ஆரம்பிக்கப்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படாததால், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான கட்டிடத்திலேயே உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 10 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள், 200 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையில் ஒரு வகுப்பறை கட்டிடம் சேதமடைந்தது. எனவே அந்த கட்டிடத்தில் இருந்த 6-ம் வகுப்பு மாணவர்களை அங்கன்வாடி கட்டிடத்துக்கு மாற்றினார்கள்.

    7-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு வகுப்பறை இல்லாததால், அவர்களை பள்ளி வளாகத்தில் உள்ள அரச மரத்தின் அடியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

    பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மரத்தின் அடியில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது ஆடு-மாடுகளும் பள்ளி வளாகத்துக்குள் வருகின்றன. இது மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
    என்.எல்.சி. நிர்வாகம் வேலை வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பத்தை அடுத்த வேப்பங்குறிச்சியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 38). இவர் தனது 3½ ஏக்கர் நிலத்தை என்.எல்.சி.க்கு கொடுத்துள்ளார்.

    இதையடுத்து கோபாலகிருஷ்ணனுக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்கப்பட்டது. அவர் கடந்த 12 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 21.3.2015 முதல் கோபாலகிருஷ்ணனை பணிக்கு வரவேண்டாம் என என்.எல்.சி. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதனால் கோபாலகிருஷ்ணன் மனமுடைந்தார். மேலும் தனக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி என்.எல்.சி. 2-வது சுரங்க அலுவலகம், என்.எல்.சி. தலைமை அலுவலகம், என்.எல்.சி. நில எடுப்பு அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். ஆனால் அவருக்கு வேலை வழங்கவில்லை.

    இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன், தனது மனைவி ராஜலட்சுமி(30), மகன்கள் ராஜபிரியன்(10), விஜயராகவன்(8) ஆகியோரை அழைத்துக்கொண்டு என்.எல்.சி. 2-வது சுரங்க அலுவலகத்துக்கு வந்தார்.

    அலுவலகம் முன்பு கோபாலகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

    என்.எல்.சி. நிர்வாகம் வேலை வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கு பணியில் இருந்த காவலாளிகளிடம் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபால கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர், “வேலை வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இது தொடர்பாக கோபாலகிருஷ்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் மரத்தின் அடியில் அமர்ந்து பாடம் படிக்கிறார்கள்.
    சிதம்பரம்

    சிதம்பரத்தில் இருந்து கந்தகுமாரன் கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ளது கூடுவெளிச்சாவடி கிராமம். இந்த ஊரில் இருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடமானது, கடந்த 2011-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    ஆனால் கூடுதலாக ஆரம்பிக்கப்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படாததால், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான கட்டிடத்திலேயே உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 10 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள், 200 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையில் ஒரு வகுப்பறை கட்டிடமானது சேதமடைந்தது. அதனால் அந்த கட்டிடத்தில் இருந்த 6-ம் வகுப்பு மாணவர்களை அங்கன்வாடி கட்டிடத்துக்கு மாற்றினார்கள். ஆனால் 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறை இல்லாததால், அவர்களை பள்ளி வளாகத்தில் உள்ள அரச மரத்தின் அடியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் கூட இல்லாததால், மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது மாடுகளும் பள்ளி வளாகத்துக்குள் வருகின்றன. இது மாணவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதால், கம்புகளை நட்டு நேற்று, வேலி அமைத்துக்கொண்டு இருந்தனர்.

    இதற்கிடையே தொடக்கப்பள்ளிக்கூட கட்டிடத்தில் உயர்நிலைப்பள்ளி வகுப்புகள் நடைபெறுவதால், தொடக்கப்பள்ளியானது, அருகில் உள்ள மற்றொரு பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆசிரியர்களும் தரையில் அமர்ந்து பாடம் கற்றுக்கொடுக்கின்றனர். அங்கு 3 அங்கன்வாடி பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லி கொடுத்தனர்.

    இதுபற்றி ஆசிரியர் ஒருவரிடம் கேட்ட போது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை 4 வயதிலேயே ஆங்கில பள்ளிகளில் சேர்த்து விடுகிறார்கள். இதனால் கிராமப்புற அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த 3 பிள்ளைகளுக்கு அடுத்த வருடம் 5 வயது ஆகி விடும் என்பதால் இவர்களை இங்கேயே சேர்த்துக்கொள்ளலாம் என்பதற்காக இங்கே வைத்து உள்ளோம் என்றார்.

    மரத்தின் அடியில் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்துவது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் சார்பில் ஒருகோடியே 62 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு 8 வகுப்பறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இன்னும் 3 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிவடைந்து விடும், அதன் பிறகு 6 முதல் 10 வரையுள்ள வகுப்புகள் புதிய கட்டிடத்தில் செயல்படும். இப்போது உயர்நிலைப்பள்ளி செயல்படும் கட்டிடங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படும் என்றார்.
    விருத்தாசலம் அருகே குடிநீர் பிரச்சினையால் காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே பெரியகாப்பான்குளம் ஊராட்சிக்குட்பட்ட பி.கே.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் 17–ந் தேதி அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது டிரான்ஸ்பார்மர் மீது இடி விழுந்தது.

    இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஊராட்சிக்கு சொந்தமான மின்மோட்டார்கள் இயங்கவில்லை. எனவே கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

    இந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் முதனை, பெரியகாப்பான்குளம், கோட்டேரி ஆகிய கிராமங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வந்தனர்.

    இதனால் அந்த பகுதி மக்களுக்கும் பி.கே.வீரட்டிக்குப்பம் மக்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

    எனவே பி.கே.வீரட்டிக்குப்பத்தில் மின்மோட்டார்களை இயங்க வைத்து குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் ஊராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பி.கே.வீரட்டிக்குப்பம் பொதுமக்கள் விருத்தாசலம் -காட்டுக்கூடலூர் சாலையில் இன்று காலை 8 மணிக்கு திரண்டனர்.

    காலிக்குடங்களுடன் வந்த அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனடி யாக குடிநீர் வழங்க வேண்டு மென்று கோஷமிட்டனர்.

    இதனால் அங்கு 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் ஊ.மங்கலம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இன்று மாலைக்குள் குடிநீர் விநியோம் செய்யாவிட்டால் நாளை காலை மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரபல சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா நேற்று சாமி தரிசனம் செய்தார்.
    பிரபல சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா. இவர் நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அவரை கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச்சென்றனர்.

    பின்னர் அங்குள்ள சிற்சபையில் வீற்றிருக்கும் நடராஜர், சிவகாம சுந்தரியை பி.சுசீலா சாமிதரிசனம் செய்தார். அவருக்கு தீட்சிதர்கள் பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தை வலம் வந்தார். சாமிதரிசனம் முடிந்த பின்னர் பி.சுசீலா அங்கிருந்து திருவாரூருக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக பி.சுசீலா சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்ப்பதற்காக சிதம்பரம் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் பெரும் கூட்டம் கூடியது.

    இதையடுத்து எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருப்பதற்காக கோவிலின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
    திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
    பெண்ணாடம்:

    திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 21). இவரது நண்பர்கள் விஜய் (18), முத்தமிழன் (21). இவர்கள் 3 பேரும் நேற்று இரவு 11.30 மணிக்கு எழுத்தூரில் இருந்து தொழுதூருக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    தொழுதூர் பஸ் நிலையம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது தொழுதூரை சேர்ந்த கோகுல்ராஜ், அவரது நண்பர் ராமலிங்கம் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    திடீரென்று தமிழரசன் வந்த மோட்டார் சைக்கிளும், கோகுல்ராஜ் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன.

    இந்த விபத்தில் தமிழரசனின் நண்பர்கள் விஜய், முத்தமிழன் ஆகியோர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார்கள்.

    தமிழரசன், கோகுல்ராஜ், ராமலிங்கம் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான 2 பேரின் உடல்கள் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    என்.எல்.சி. தொழிலாளர்களுடன் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் துறை அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சுரங்கத் துறை சட்டப்படி அகவிலைப்படி உள்பட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 3 முறை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதைத்தொடர்ந்து ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று (11-ம் தேதி) இரவுப் பணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில் அந்த சங்கத்தின் சிறப்பு செயலர் எம்.சேகர் கூறும்போது:-

    திட்டமிட்டப்படி சனிக்கிழமை இரவு பணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆனால், இந்தப் போராட்டத்தை நிறுத்தும் முயற்சியில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதில் எட்டப்படும் முடிவைப் பொருத்தே வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

    சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையாளர் அண்ணாதுரை முன்னிலையில் சென்னை சாஸ்திரி பவனில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சேகர், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    என்.எல்.சி. சார்பில் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

    பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று தொடங்காது. இல்லாவிட்டால் இன்று இரவு முதல் என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
    கடலூரில் நாளை காலை 11 மணிக்கு ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி.யில் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், சுரங்கச் சட்டப்படி பஞ்சப்படி, என்.எல்.சி.க்கு வீடு மற்றும் நிலம் கொடுத்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது குறித்து 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தார்கள்.

    ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து ஜூன் மாதம் 11–ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று ஏ.ஐ.டி.யூ.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சாலை சங்கத்தினர் என்.எல்.சி. நிர்வாகத்திடம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர்.

    இதையடுத்து சென்னையில் மண்டல தொழிலாளர் நல ஆணையாளர் முன்னிலையில் என்.எல்.சி.அதிகாரிகளும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    இதையடுத்து இந்த பிரச்சனையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடலூரில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ஜகரட்சகன், பொதுசெயலாளர் சேகர், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    போராட்டத்தின் முடிவில் பொதுச்செயலாளர் சேகர் பேசும்போது கடலூரில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. கட்சி அலுவலகத்தில் நாளை நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கோரினார்.

    என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்களா என்று ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வமணியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

    கடலூரில் நாளை காலை 11 மணிக்கு ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தான் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடலாமா வேண்டாமா என்று இறுதி முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் இன்று ஒரே நாளில் 260 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் மிகச்சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இங்கு வருபவர்கள் தங்களுக்கு திருமணம் சிறப்பாக கை கூடினால் கோவிலுக்கு வந்து திருமணம் செய்வதாக வேண்டிக் கொள்வார்கள். பின்னர் முகூர்த்த நாளில் கோவிலுக்கு வந்து திருமணம் செய்து கொள்வார்கள். ஒரே நாளில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும்.

    எனவே திருமணம் நடப்பதற்காக கோவில் அருகே உள்ள அவசதகிரி மலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருமண மண்டபம் கட்டபட்டுள்ளது.

    அந்த திருமண மண்டபத்தில் முகூர்த்த நாளில் திருமணங்கள் நடைபெறும். இன்று வைகாசி மாதம் கடைசி முகூர்த்தமாகும். இதையொட்டி கடலூர், விழுப்புரம், புதுவை ஆகிய பகுதிகளில் இருந்து திருமணம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் கார், வேன்களில் திருவந்திபுரம் வந்தனர்.

    கோவில் அருகே கடலூர்-பாலூர் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினார்கள். அங்கிருந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து கோவிலுக்கு வந்தனர். கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமண மண்டபத்தின் மேல்பகுதியிலும், கீழ் பகுதியிலும் திருமணங்கள் நடைபெற்றன.

    அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை 70 ஜோடிகளுக்கும் 7.30 மணியில் இருந்து 9 மணி வரை 70 ஜோடிகளுக்கும், 9 மணி முதல் 10.30 மணி வரை 70 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.

    மேலும் கோவில் அருகே உள்ள மற்ற திருமண மண்டபங்களில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அதாவது இன்று ஒரே நாளில் 260 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்தபின் மணமக்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். இதனால் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடலூர்-பாலூர் சாலையில் வாகனங்கள் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் பில்லாலி தொட்டி கிராமத்தில் இருந்து கடலூர் கே.என்.பேட்டை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோட்டின் இரு புறமும் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்த போக்குவரத்தை சீர்செய்தனர்.

    திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் திருமணம் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு தை மாதம் 222 ஜோடிகளுக்கும், 2013-ம் தை மாதம் 300 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இன்று வைகாசி முகூர்த்த நாளையொட்டி 260 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கடலூர் வாலிபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது அண்ணன், வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் கிஞ்சன்பேட்டையை சேர்ந்தவர் பத்மாபன் (வயது 34). இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் வந்தது.

    ஆனால் அவர் சாவில் மர்மம் இருப்பதாக பத்மநாபனின் அண்ணன் மகாதேவன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

    என்னுடைய தம்பி பத்மநாபன் கடந்த 2014–ம் ஆண்டு புதுவையை சேர்ந்த கணேசன் மூலமாக வெளிநாட்டுக்கு சென்றார். அங்கு அவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதையடுத்து எங்களிடம் பேசிய அவன் சம்பளம் பற்றி நிர்வாகத்திடம் பேசி வருவதாக கூறி இருந்தான்.

    மேலும் வேலை எனக்கு பிடிக்கவில்லை, சம்பளமும் சரியாக வழங்காததால் நான் ஊருக்கு வந்துவிடுவேன் என்று கூறி இருந்தான்.

    இந்நிலையில் கடந்த 21–4–2016 அன்று என்னுடைய தம்பி தூக்குப்போட்டு இறந்து விட்டதாக அங்கு வேலை பார்க்கும் எங்கள் ஊரை சேர்ந்த சிவக்குமார் கூறினார். இதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பின்னர் மாவட்ட கலெக்டரின் முயற்சியால் அவனுடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்தோம்.

    இதற்கிடையில் என்னுடைய தம்பி பயன்படுத்திய செல்போனில் உள்ள சில வீடியோ ஆதாரங்கள் மூலம் அவன் மர்மமான முறையில் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவனுடைய முதலாளியே கொலை செய்து தூக்கில் மாட்டிவிட்டது போல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆகவே இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மறு விசாரணை நடத்துவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவை மாவட்ட கலெக்டர், முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு, சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகத்துக்கும் மகாதேவன் அனுப்பி உள்ளார்.
    ×