என் மலர்
கடலூர்
நெய்வேலியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 56). என்.எல்.சி.யில் கூடுதல் துணை பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் விடுமுறை நாளில் கோவிந்த ராஜ் அலுவலகத்துக்கு சென்றார்.
பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி வாணி அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நெய்வேலி டவுன் ஷிப் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோவிந்தராஜை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நெய்வேலி வட்டம் 7-ல் உள்ள வடிகால் ஓடை அருகே கோவிந்தராஜ் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பிணத்தின் அருகே விஷ பாட்டில் கிடந்தது. போலீசார் விரைந்து வந்து அவரது பிணத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலின் அருகே கிடந்த விஷப்பாட்டிலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகின. கோவிந்தராஜ் நேற்று முன்தினம் மாலை தனது அலுவலகத்தில் செல்போனை வைத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் நெய்வேலி பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். அங்குள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
பின்னர் ஓடை பகுதிக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
கோவிந்தராஜுக்கு கடந்த சில நாட்களாக வேலைபளு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டியை அடுத்த ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி தேவிகா (வயது 21). தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
சதீசுக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் வெளியூர் சென்றிருந்த சதீசும், அவரது மனைவி தேவிகாவும் ஊருக்கு திரும்பினர். அப்போது அங்கு வந்த சந்தோஷ் மற்றும் அவரது உறவினர்களான விஷ்ணு, பரசுராமன், தமிழழகன் ஆகியோர் அவர்களை வழிமறித்து வாய்க்குவந்தபடி திட்டினர்.
பின்னர் கணவன்–மனைவியை தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் தேவிகா படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தாக்குதல் குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குபதிவு செய்து கணவன்–மனைவியை தாக்கிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் நெல்லிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 45). தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி ஆரோக்கியராணி (43). இவர் நெல்லிக்கொல்லை பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.
இந்நிலையில் பஞ்சாயத்து நிதியில் இருந்து ஆரோக்கியமேரி, அவரது கணவர் ஜெயராஜூடன் சேர்ந்து 54 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் தாராஈஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவி ஆரோக்கியராணி, ஜெயராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் நெல்லிக்கொல்லை பஞ்சாயத்து நிதியில் இருப்பு எவ்வளவு உள்ளது? பஞ்சாயத்து கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் நடந்துள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் பஞ்சாயத்து நிதியில் இருந்து 54 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தாராஈஸ்வரி, சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியராணி, ஜெயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக சென்னையில் உள்ள தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிலைகடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிதம்பரத்தில் சாலையோரம் விநாயகர் சிலையை கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ளது எண்ணாநகரம் கிராமம். இந்த கிராமத்தின் சாலையோரம் 3 அடி உயரத்தில் 300 கிலோ எடையுள்ள விநாயகர் சிலையை யாரோ விட்டுச் சென்று விட்டனர். இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது. பொது மக்கள் திரண்டு வந்து விநாயகர் சிலையை வழிபட்டனர்.
சாலையோரம் விநாயகர் சிலை உள்ளது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் விரைந்து வந்து விசாரித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், விநாயகர் சிலையை மர்ம மனிதர்கள் எங்கிருந்தோ கடத்தி வந்துள்ளனர். பாரம் தாங்காமல் எண்ணாநகரம் கிராமத்தில் சாலையோரம் விட்டுச் சென்றுள்ளனர் என்றார்.
போலீஸ் விசாரணைக்கு பின்னர் அந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச்சென்று பொது மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலை குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர் சிவ ராமகிருஷ்ணன் கூறுகையில் இந்த விநாயகர் சிலை 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.
இந்த விநாயகர் உச்சிஸ்த விநாயகராக இருக்கலாம். தேவியை மடியில் அமர வைத்த நிலையில் காட்சி அளிக்கிறார் என்றார்.
விநாயகர் சிலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி:
விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 26). இவரது தங்கை குமாரி(24). தங்கை மீது குமார் மிகவும் பாசமாக இருந்தார்.
தங்கையை பண்ருட்டி அருகே உள்ள நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த சக்திவேலுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். குமாரிக்கு ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குமார் தனது தங்கை குமாரி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். தனது தங்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.
இந்த நிலையில் நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக குமாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக குமாருக்கு தகவல் வந்தது. உடனே குமார் கண்ணீர் விட்டு கதறினார். தனது குடும்பத்தினருடன் நல்லூர் பாளையத்துக்கு வந்தார். தங்கையின் உடலை பார்த்து கண்ணீர் சிந்தினார்.
பின்னர் குமாரியின் இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்தது. உடலை வீட்டில் இருந்து சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். குமார் அழுதபடியே நடந்து சென்றார். சுடுகாட்டில் குமாரியின் உடலை தகனம் செய்தனர்.
அப்போது துக்கம் தாங்காமல் குமார் கதறியபடியே ஓடிவந்தார். அவரை அங்குள்ளவர்கள் தடுத்தனர். இருப்பினும் அதையும் மீறி குமாரியின் உடல் தகனம் செய்யப்பட்ட தீயில் குதித்தார். அவர் உடலில் தீ பற்றியது.
அங்கிருந்தவர்கள் அவரை வெளியே இழுத்து அவர் உடலில் பற்றிய தீயை அணைத்தனர். ஆனாலும் குமார் உடலில் தீக்காயம் ஏற்பட்டது.
தீக்காயம் அடைந்த குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச் சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீயில் குதித்த குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது. அருக்கு அஞ்சலாட்சி என்ற மனைவியும் ஒரு கைக்குழந்தையும் உள்ளனர்.
தங்கை உயிர் இழந்ததால் தீயில் குதித்த அண்ணனின் பாசச்செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்.எல்.சி. நிறுவனத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யூ, பாட்டாளி தொழிற் சங்கம் உள்பட 14 தொழிற்சங்கங்கள் உள்ளன.
இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் மட்டுமே என்.எல்.சி. நிர்வாகத்துடன் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். இந்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் பதவி காலம் 4 ஆண்டுகளாகும். அதன்பின் மீண்டும் தேர்தல் நடத்தி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
அதன்படி, நேற்று தொழிற் சங்க அங்கீகாரத்துக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட 6 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன.
வாக்குப்பதிவிற்காக என்.எல்.சி. நிறுவனத்தில் 16 இடங்களில் பூத் அமைக்கப்பட்டு இருந்தது. தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 679 வாக்குகள் பதிவானது.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வட்டம் 9-ல் உள்ள என்.எல்.சி. நடுநிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இரவு 9.30 மணி அளவில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இரவு 11.15 மணி அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தொழிற் சங்கங்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
சி.ஐ.டி.யூ.-4,828
தொ.மு.ச.- 2,426
அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம்- 2,035
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 51 சதவீதம் வாக்குகள் பெறும் சங்கமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் நேற்று நடைபெற்ற தேர்தலில் எந்த சங்கமும் 51 சதவீதம் வாக்குகள் பெறவில்லை.
எனவே அதிக வாக்குகள் பெற்ற முதல் 2 சங்கங்களான சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்ரீவத்சவா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக என்.எல்.சி. அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கமாக இருந்த அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், இந்த தேர்தலில் அதன் அங்கீகாரத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.
நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்புச் செயலாளர் சேகர் தலைமையில் கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் அளித்திருந்தனர்.
அதன் பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருந்த நிலையில், தொழிலாளர் துறையினர் ஏற்பாட்டின் படி சமரச பேச்சுவார்த்தை 4 கட்டமாக நடந்தது. இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், ஜூன் 1-ந்தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிமாக ஒத்திவைத்தனர்.
அடுத்த 5-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 23-ந்தேதி நடக்கவுள்ள நிலையில், ஜீவா சங்க பேரவை கூட்டமும், பேச்சுவார்த்தை குறித்த விளக்க கூட்டமும் மந்தாரக்குப்பத்தில் நடந்தது.
சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செல்வமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் சிறப்புத் தலைவர் ராமமூர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி. தொலை தொடர்பு ஒப்பந்த சங்க மாநில பொதுச் செயலாளர் ஆனந்தன், சிறப்புச்செயலாளரும், சட்ட ஆலோசகருமான சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை அமல்படுத்தி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும், தொழிலாளர்களை அச்சுறுத்தி மிரட்டும் என்.எல்.சி. பாதுகாப்பு அதிகாரி மீது நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. தீர்மானத்தை பொருளாளர் கல்யாண சுந்தரம் வாசிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் சிறப்புச் செயலாளர் சேகர் கூறும்போது, வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ள 5-வது கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால், வருகிற ஜூலை 1-ந்தேதி ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அதைத்தொடர்ந்து வேலை நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளோம் என்றார்.
நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 13 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 13-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன.
இந்த தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு கட்சிகள் சார்பாக செயல்படுகின்றன.
என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சு நடத்த 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிற்சங்கங்களுக்கிடையே ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும்.
அதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
2016-2020-ம் ஆண்டுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் என்.எல்.சி.யில் உள்ள 14 தொழிற்சங்கங்களில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச. உள்பட 6 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்திற்கு எச்.எம்.எஸ்., எல்.எல்.எப்., எம்.எல்.எப், டி.எம்.டி.யு, தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், டி.டி.யு.சி. உள்பட 6 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்திற்கு மூவேந்தர் முன்னேற்ற சங்கமும், பிற்படுத்தப்பட்டோர் பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் தொழிற்சங்கத்தினர், தாங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டால் தொழிலாளர்களுக்கு பெற்று தரப்படும் உரிமைகள், சலுகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதற்காக என்.எல்.சி. நிறுவனத்தில் 16 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவு இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு காலை தொடங்கியதும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்களுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வட்டம் 9-ல் உள்ள என்.எல்.சி. நடுநிலைப்பள்ளிக்கு எடுத்து வரப்படுகின்றன. அங்கு உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நள்ளிரவு 11 மணி அளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1.1.2017 முதல் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் அமைய உள்ளதால் தற்போது நடைபெறும் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலை மிகவும் முக்கியமானதாக கருதி தொழிலாளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.
கடலூரில் கடந்த மாதம் 21–ந் தேதி ரெட்டிச் சாவடியைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான வினோத்குமார், சதீஷ் குமார் ஆகியோரை 10 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கொலை செய்தது.
இந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய ரெட்டிசாவடியை சேர்ந்த லட்சுமணன், கீழஅழிஞ்சிப்பேட்டையை சேர்ந்த டேவிட்ராஜ், ராம்குமார், சதீஷ்குமார், அருண்குமார், கணபதி, பாலமுருகன், சவுந்தர்ராஜன், ஆனந்தராஜ், சுமான் ஆகியோரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ரெட்டிச் சாவடியை சேர்ந்த லட்சுமணன், கீழ அழிஞ்சிபட்டைச் சேர்ந்த டேவிட் ராஜ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் அந்த 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி:
பண்ருட்டியை அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் ஓடையின் அருகில் தனியாருக்கு சொந்தமான முந்திரிதோப்பு உள்ளது.
இங்கு முந்திரி பொறுக்க சென்றவர்கள் அழுகிய நிலையில் 60 வயது மதிக்கதக்க பெண் பிணம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? எப்படி இறந்தார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.முட்லூர் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அமுதா(வயது 46). கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் அமுதா கணவனை பிரிந்து அந்த பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். அமுதாவிற்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர் அனுப்பும் பணத்தை அமுதா வட்டிக்கு கொடுத்து பணம் சம்பாதித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி அமுதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதற்கிடையே அங்குள்ள வெள்ளாற்றங்கரையில் அமுதாவை மர்ம மனிதர்களை கொன்று புதைத்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கிள்ளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த பகுதியைச் சேர்ந்த மினிலாரி டிரைவர் வீரமணி, அவரது நண்பர் பிரேம்குமார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் அமுதாவை கொன்று வெள்ளாற்றங்கரையில் புதைத்ததை ஒப்புக் கொண்டனர். அதிகாரிகள் முன்னிலையில் அமுதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
அமுதாவை கொன்றது ஏன்? என்று மினிலாரி டிரைவர் வீரமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் அதன் விவரம் வருமாறு:-
நான் தேன்நிலவு என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு குழந்தை இல்லை.
எனது வீட்டின் அருகே அமுதா தனியாக வசித்து வந்தார். அவருக்கும் எனக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
இதனால் எங்கள் 2 பேர் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. எனக்கும், அமுதாவிற்கும் தகராறு ஏற்படும் போது ‘குழந்தை பெற முடியாதவன்’ என்று என்னை மனம் நோகும்படி திட்டுவார்.
இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அவமானம் தாங்காமல் துடித்தேன். எனவே அமுதாவை தீர்த்து கட்டவேண்டும் என முடிவு செய்தேன்.
இதுதொடர்பாக எனது நண்பர் பிரேம்குமாரிடம் கூறினேன். அவரும் அமுதாவை கொல்ல ஒப்புக்கொண்டார்.
கடந்த 29-ந் தேதி இரவு அமுதா வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நானும், பிரேம் குமாரும் அங்கு சென்றோம். தூங்கிக்கொண்டிருந்த அமுதாவை தலையில் கோடரியால் ஓங்கி அடித்தேன். அவர் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. சிறிது நேரத்தில் அமுதா துடிதுடித்து இறந்தார்.
பின்னர் பிணத்தை வெள்ளாங்கரையில் புதைக்க நினைத்தேன். என்னுடைய மினிலாரியை அங்கு ஓட்டி வந்தேன். பின்னர் நானும், பிரேம் குமாரும் சேர்ந்து அமுதாவை தூக்கி சென்று மினிலாரியில் வைத்தோம்.
அதன்பின்னர் மினி லாரியை வெள்ளாற்றங்கரைக்கு ஓட்டிச் சென்றோம். அங்கு அமுதாவின் உடலை புதைத்து விட்டு தப்பிச் சென்றோம்.
மேற்கண்டவாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வீரமணி, பிரேம்குமார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி ஆயிஷாபேகம் உத்தரவிட்டார்.
பின்னர் 2 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த 30 மீனவர்கள் ஒரு பெரிய விசைப்படகிலும், தேவனாம்பட்டினத்தை சேர்ந்த முத்துக்குமரன், சோனாங்குப்பத்தை சேர்ந்த அஞ்சாம்புலி, கடலூர் முதுநகர் ராஜசேகர், கண்ணா ஆகிய 4 பேர் ஒரு சிறிய பைபர் படகிலும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் செல்லும் போது எப்போதும் போல் பெரிய விசைப்படகில், சிறிய பைபர் படகை இணைத்து கயிற்றால் கட்டி இருந்தனர்.
மீனவர்கள் 34 பேரும், ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டையில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். திடீரென பெரிய விசைப் படகில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்தது. இதனால் சிறிய பைபர் படகு கடலில் தனியாக சென்றது. 1 மணி நேரத்திற்கு பிறகு விசைப்படகில் சென்ற மீனவர்கள், சிறிய பைபர் படகை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த சிறிய பைபர் படகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் தேடினர். எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் கடலூர் துறைமுகத்துக்கு வந்தனர். அப்போது தான் அவர்களுக்கு பைபர் படகில் சென்றவர்கள் கரைக்கு திரும்பவில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பெரிய விசைப் படகில் வந்த மீனவர்கள் செல்போன் மூலம் கடலோர காவல் படை இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
கடலோர காவல்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அதிநவீன ரோந்து படகிலும், தேவனாம்பட்டினம், முதலியார்பேட்டை பகுதி மீனவர்கள் 2 படகுகளிலும் சித்திரைப்பேட்டை, மரக்காணம் பகுதியில் உள்ள ஆழ்கடலில் தீவிரமாக தேடினர்.
அப்போது நேற்று மாலை 4 மணி அளவில் மரக்காணத்தில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் 4 மீனவர்கள் தத்தளித்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை கடலோர காவல் படையினர் மீனவர்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட 4 மீனவர்களும் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரிய விசைப்படகுடன் கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்ந்ததால், சிறிய படகு தனித்து விடப்பட்டது. எங்களது படகில் இருந்த என்ஜினும் பழுதானது. இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்தோம். அப்போது கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் மரக்காணம் பகுதி கடலுக்கு வந்துவிட்டோம்.
யாராவது படகில் வருகிறார்களா? என்று பார்த்தோம். ஆனால் யாரும் வரவில்லை. ஒரு நாள் முழுவதும் உணவு, குடிநீரின்றி தவித்தோம். அந்த நேரத்தில்தான் கடலோர காவல் படையினரும், தேவனாம்பட்டினம், முதலியார்பேட்டை மீனவர்களும் கடவுள்போல வந்து எங்களை காப்பாற்றி விட்டார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






