என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.எல்.சி. ரகசிய ஓட்டெடுப்பு: சி.ஐ.டி.யூ. - தொ.மு.ச. வெற்றி
    X

    என்.எல்.சி. ரகசிய ஓட்டெடுப்பு: சி.ஐ.டி.யூ. - தொ.மு.ச. வெற்றி

    என்.எல்.சி.யில் நேற்று நடைபெற்ற ரகசிய ஓட்டெடுப்பில் சி.ஐ.டி.யூ., மற்றும் தொ.மு.ச. தொழிற் சங்கங்கள் வெற்றி பெற்றுள்ளன.
    நெய்வேலி:

    என்.எல்.சி. நிறுவனத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யூ, பாட்டாளி தொழிற் சங்கம் உள்பட 14 தொழிற்சங்கங்கள் உள்ளன.

    இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் மட்டுமே என்.எல்.சி. நிர்வாகத்துடன் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். இந்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் பதவி காலம் 4 ஆண்டுகளாகும். அதன்பின் மீண்டும் தேர்தல் நடத்தி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

    அதன்படி, நேற்று தொழிற் சங்க அங்கீகாரத்துக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட 6 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன.

    வாக்குப்பதிவிற்காக என்.எல்.சி. நிறுவனத்தில் 16 இடங்களில் பூத் அமைக்கப்பட்டு இருந்தது. தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 679 வாக்குகள் பதிவானது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வட்டம் 9-ல் உள்ள என்.எல்.சி. நடுநிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இரவு 9.30 மணி அளவில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இரவு 11.15 மணி அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    தொழிற் சங்கங்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

    சி.ஐ.டி.யூ.-4,828

    தொ.மு.ச.- 2,426

    அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம்- 2,035

    இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 51 சதவீதம் வாக்குகள் பெறும் சங்கமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் நேற்று நடைபெற்ற தேர்தலில் எந்த சங்கமும் 51 சதவீதம் வாக்குகள் பெறவில்லை.

    எனவே அதிக வாக்குகள் பெற்ற முதல் 2 சங்கங்களான சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்ரீவத்சவா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கடந்த 4 ஆண்டுகளாக என்.எல்.சி. அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கமாக இருந்த அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், இந்த தேர்தலில் அதன் அங்கீகாரத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×