என் மலர்tooltip icon

    கடலூர்

    பெண்ணாடம் அருகே சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெ.பொன்னேரி மேம்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்படாமல் மண்மேடாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி ஏற்பட்டு அந்த கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் மேம்பாலத்தின் மீது உள்ள மின் விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாததால், இரவில் இருள்சூழ்ந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பெ.பொன்னேரி கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு வந்து விருத்தாசலம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் ராஜா, பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 2 நாட்களில் தற்காலிக சாலை அமைத்து தருவதாகவும், அடுத்த 15 நாட்களில் முறையான அனுமதி பெற்று நிரந்தர சாலை அமைத்து தருவதாகவும் உறுதியளித்தனர்.

    இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் மணலி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மகள் சரண்யா (வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ படித்து முடித்துள்ளார்.

    அதேபகுதியைச் சேர்ந்தவர் சம்பத்(25). தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சரண்யாவுக்கும், சம்பத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

    கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சரண்யாவும், சம்பத்தும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். எனவே இவர்களது திருமணத்திற்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 22–ம் தேதி சரண்யாவும், சம்பத்தும் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். பெற்றோருக்கு தெரியாமல் தஞ்சை பெரியநாயகி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இன்று காலை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்க்கு இருவரும் வந்து தஞ்சம் அடைந்தனர். இதுதொடர்பாக சரண்யா கூறியதாவது:–

    நானும், சம்பத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்க வில்லை. எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார்.

    சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்து நீர்த்தேக்கத்தில் விட்டனர்.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள வல்லம்படுகை பழைய கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் முதலைகள் உள்ளன.

    இந்த ஆற்றில் உள்ள கிளைவாய்க்கால்கள் வழியாக முதலைகள் அடிக்கடி கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட் டது.

    மேலும் ஆற்றுக்கு குளிக்க செல்பவர்களையும் கடித்து வருவதால், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேறிய முதலை சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியின் விளை நிலத்துக்குள் புகுந்தது.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விவசாய நிலத்துக்குள் முதலை கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வனக்காப்பாளர்கள் சோமசுந்தரம், ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வயல்வெளியில் கிடந்த முதலையை 1 மணி நேரம் போராடி பிடித்தனர்.

    பிடிபட்ட முதலை 5 மீட்டர் நீளமும், 150 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. அந்த முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் விட்டனர்.

    தொழுதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர்-இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள மாப்புடையூரை சேர்ந்தவர் முருகன் (வயது 34). துபாயில் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினர்.

    இந்த நிலையில் அரங்கூரில் உள்ள முருகனின் உறவினர் செல்வமுத்து என்பவர் இறந்து விட்டார். துக்கம் கேட்பதற்காக முருகன் அவரது ஊரைச் சேர்ந்த தனலட்சுமி (26) யும் சென்றிருந்தனர். துக்கம் விசாரித்த பின்னர் இருவரும் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். அதிகாலை 5.30 மணி அளவில் தொழுதூரை அடுத்த நல்லதங்காள் கோவில் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    தூக்கி வீசப்பட்ட முருகனும், தனலட்சுமியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்ததும் தொழுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    வடலூரில் என்.எல்.சி. தொழிலாளியை கள்ளக்காதலி கழுத்து அறுத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள கொம்பாடி குப்பத்தை சேர்ந்தவர் திரிசங்கு. இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி அஞ்சலை (வயது 47).

    திரிசங்குடன் பண்ருட்டியை அடுத்த திருத்தலையூரைச் சேர்ந்த குணசேகரன் (42) என்பவரும் வேலைபார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரிசங்கு இறந்து விட்டார்.

    அதன்பின்னர் திரிசங்கு குடும்பத்துக்கு குணசேகரன் வேண்டிய உதவிகளை செய்து வந்தார். அஞ்சலை வீட்டுக்கு குணசேகரன் அடிக்கடி வந்து சென்றதால் அஞ்சலை-குணசேகரன் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் வடலூர் நெய்வேலி சாலையில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

    அஞ்சலையின் நடவடிக்கை பிடிக்காததால் அவரது மகள்கள் மற்றும் மகன் யாரும் அவரது வீட்டுக்கு வருவதில்லை. இது கள்ளக்காதல் ஜோடிக்கு மிகவும் வசதியாக அமைந்தது.

    இந்தநிலையில் குணசேகரனின் போக்கில் மாற்றம் தெரிந்தது. அவர் சரியாக அஞ்சலை வீட்டுக்கு வருவதில்லை. செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. குணசேகரனின் மாற்றத்துக்கு காரணம் என்ன என்று அஞ்சலை அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது தான் குணசேகரனுக்கும், வேறுஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பதும், அதன்காரணமாகவே அவர் தனது வீட்டுக்கு வராமல் இருப்பதையும் அறிந்தார்.

    இது குறித்து குணசேகரனிடம் அஞ்சலை கேட்ட போது அவர் சரியாக பதில் ஏதும் கூறவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குணசேகரன் நேற்று இரவு அஞ்சலையின் வீட்டுக்கு வந்தார். அப்போது, நீ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறாயா? உண்மையை சொல் என்று அஞ்சலை கேட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அஞ்சலை மிகவும் ஆத்திரத்தில் இருந்தார்.

    இன்று அதிகாலை ஆவேசமாக எழுந்த அஞ்சலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குணசேகரனை கழுத்தை அறுத்துக் கொன்றார். பின்னர் வடலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அஞ்சலையை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குணசேகரன் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து அதன் பின்னர் அஞ்சலையுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    செக் கொடுத்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் என்.எல்.சி. ஊழியருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து பண்ருட்டி குற்றவியல் முதலாவது நீதிமன்றம் உத்தரவிட்டது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி தாலுகா வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்.

    இவரிடம் நெய்வேலியில் வசிக்கும் என்.எல்.சி. நிரந்தர ஊழியரான செல்வக்குமார் ரூ.4 லட்சம் கடன் வாங்கினார்.

    அவர் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் வகையில் ரூ.4 லட்சத்துக்கான வங்கி காசோலையை கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி வல்லம் செல்வக்குமாரிடம் கொடுத்தார்.

    அந்த காசோலைக்கு வங்கி கணக்கில் பணம் இல்லை என்பதால் அது திரும்பி விட்டது.

    எனவே வங்கியில் பணம் இல்லாமலேயே செக் கொடுத்து மோசடி செய்ததாக நெய்வேலி செல்வக்குமார் மீது வல்லம் செல்வக்குமார் பண்ருட்டி போலீசில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு பண்ருட்டி குற்றவியல் முதலாவது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை நீதிபதி சரவணபாபு விசாரித்து, நெய்வேலி செல்வக்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், மேலும் வல்லம் செல்வகுமாருக்கு தரவேண்டிய ரூ.4 லட்சத்தை 2 மாதத்துக்குள் திரும்ப செலுத்தும்படியும் உத்தரவிட்டார்.
    கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், செங்கல்சூளை, உப்பளம் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இதையடுத்து நேற்று இரவு 7.55 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இரவு 9 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்தது. விடிய விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது.

    கடலூரில் முதுநகர், திருப்பாபுலியூர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், கோண்டூர், காராமணிக்குப்பம், நடுவீரப்பட்டு, பாலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது. சூறைகாற்று வீசியதால் கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மக்கள் இருளில் தவித்தனர்.

    கடலூரில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கடலூர் லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதையில் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பண்ருட்டியில் நேற்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. பண்ருட்டி அருகேயுள்ள புதுப்பேட்டை, காடாம்புலியூர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    இதேபோல் விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, பெண்ணாடத்திலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    வடலூரில் நேற்று இரவு இடி மின்னலுடன் மழை கொட்டியது. வடலூர் பார்வதி புரம், ஆபத்தாரணபுரம், சோரக்குப்பம், வடக்குத்து, சந்தவெளிபேட்டை, கருங்குழி, நயினார்குப்பம், மருவாய், அரங்கமங்கலம், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது.

    விழுப்புரத்தில் நேற்று இரவு 7 மணிக்கு மழை பெய்ய தொடங்கி 10 மணிவரை நீடித்தது. விழுப்புரத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அதில் சாக்கடை நீர் கலந்ததால் சேரும், சகதியுமாக காணப்பட்டது. அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து நகரசபை தலைவர் பாஸ்கரன் அறிவுரையின்பேரில் நகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் தரைப்பாலத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினர்.

    விழுப்புரத்தில் சுதானாநகர் மற்றும் சிக்னல், துணைமின் நிலையம் ஆகிய பகுதிகளில் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது.

    விழுப்புரம் அருகே காணைகுப்பம், பாணாம்பட்டு ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் செங்கல்சூளை வைத்துள்ளனர். தொழிலாளர் பலர் வேலை செய்து வருகிறார்கள். பலத்த மழை காரணமாக செங்கல்சூளை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அறுத்து காயவைக்கப்பட்ட செங்கல்கள் மழையால் கரைந்தன.

    மரக்காணத்தில் நேற்று மாலை 4 மணி முதல் விடிய விடிய மழை பெய்தது. கீழ்புத்துப்பட்டு, அனுமந்தை, முறுக்கேரி, பிரம்மதேசம், நல்லாளம், எண்டியூர் ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியது.

    மரக்காணத்தில் 3 ஆயிரம் ஏக்கர் உப்பளம் உள்ளது. பலத்த மழையினால் உப்பளத்தில் தண்ணீர்தேங்கி உள்ளது. இதனால் பல லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளது.
    பெண்ணாடம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அடுத்த எரையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமேகலை(வயது 35). இவரின் வீட்டின் அருகே வசிப்பவர் ராஜேஸ்வரி(42). இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா விற்றதாக வழக்கு உள்ளது.

    சம்பவத்தன்று பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் எரையூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்து மணிமேகலை மற்றும் ராஜேஸ்வரி பதுங்கினர். இதைபார்த்த போலீசார் சந்தேகப்பட்டு அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

    பின்னர் 2 பேரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
    பெண்ணாடம் பகுதியில் பலத்த இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மோட்டார் சைக்கிள்கள்-தென்னை மரம் சேதம் அடைந்தது.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. முழங்கால் வரை தண்ணீர் சென்றது.

    இந்நிலையில் திட்டக்குடியை அடுத்த தெருமுனை கிராமத்தில் பலத்த இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது பலத்த இடி இடித்தது. அது சாலையோரம் இருந்த ஒரு தென்னை மரத்தை தாக்கியது. இதில் தென்னை மரம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

    அதே போல் பெண்ணாடம் பஸ் நிலையம் முன்பு சுமார் 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிந்தது. மழை நீர் அதிகமாக சென்றதால் அங்கிருந்த மோட்டார் சைக்கிள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.
    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் இடங்களில் அமைந்திருந்த 44 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன.
    கடலூர்:

    தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, மதுக்கடைகளின் நேரத்தை குறைப்பது ஆகிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதையொட்டி முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணியில் இருந்து 12 மணியாக மாற்றப்பட்டது. 2-வது கட்டமாக நேற்று 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

    கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 225 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலையங்கள் என சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் இடங்களில் அமைந்திருந்த 15 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன. அந்த டாஸ்மாக் கடைகளில் உள்ள 6 ஆயிரம் மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள மாவட்ட டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு சென்றனர். அங்கு மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் 15 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய 35 ஊழியர்கள் கடலூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் டாஸ்மாக் கடைகளில் உள்ள காலியிடங்களுக்கும், அதிகமாக மது விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளுக்கும் அனுப்பப்பட உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் 284 டாஸ்மாக் கடைகள் இருந்தன. சட்ட- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் பகுதிகளில் உள்ள 29 மதுக்கடைகள் மூடப்பட்டன. அங்கிருந்த ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் பொருட்கள் விழுப்புரம் காட்பாடி ரெயில்வே கேட் அருகே உள்ள நுகர்பொருள் வணிக கழக கட்டிடத்தில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு அனுப்பப்பட்டன. அங்கு அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய 29 சூப்பர்வைசர்கள், 35 ஊழியர்கள் மாவட்டத்தில் உள்ள மற்ற டாஸ்மாக் கடைகளில் பணிக்கு அனுப்பப்பட்டனர்.

    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்கள் மற்ற டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
    கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    புதுவை அரியாங்குப்பம் மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(வயது 20). இவர் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சந்திக்குப்பம் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க வந்தார். ஆற்றில் இறங்கி குளித்தார். அவரது நண்பர்களும் குளித்தனர்.

    அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற தமிழரசன் சுழலில் சிக்கினார். ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். அவர்களின் முயற்சிக்கு பலன் இல்லை. ஆற்றில் மூழ்கி தமிழரசன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தமிழரசனின் உடலை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆற்றில் மூழ்கி பலியான தமிழரசனின் உடலை பார்த்து அவரது நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறியது பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
    கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. ஒன்றிய, நகர, பேரூராட்சி அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் பா.ம.க.வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர், விழுப்புரம், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் பா.ம.க. அதிக செல்வாக்கு உள்ள மாவட்டங்கள் ஆகும்.

    தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். சட்டசபை தேர்தலில் 5 மாவட்டங்களில் அதிக அளவு பா.ம.க. வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்று நினைத்தனர்.

    ஆனால் தேர்தல் முடிவு வேறுவிதமாக இருந்தது. ஒரு தொகுதியிலும் கூட பா.ம.க.வெற்றி பெறவில்லை. அன்புமணி ராமதாசும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    சட்டசபை தேர்தலில் பா.ம.க.தோற்றது ஏன்? என்று மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது நிர்வாகிகள் சரியாக பணியாற்றவில்லை என்றும், மாற்றுக்கட்சிகளுடன் அவர்கள் இணக்கமாக இருந்ததும் தெரியவந்தது.

    கடந்த சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் பா.ம.க.போட்டியிட்டது.

    இங்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் 17 சதவீத வாக்குகளே கிடைத்தன.

    நெய்வேலி என்.எல்.சி.யில் பாட்டாளி தொழிற் சங்கம் பிரபலமாக இருந்து வந்தது. 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை என்.எல்.சி.யில் பாட்டாளி தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கமாக திகழ்ந்தது.

    2012-ம் ஆண்டு நடந்த ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் பாட்டாளி தொழிற்சங்கம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி என்.எல்.சி.நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச., உள்ளிட்ட 6 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. இதில் பாட்டாளி தொழிற்சங்கம் 1,291 வாக்குகள் மட்டுமே பெற்று பா.ம.க.தொழிற்சங்கம் தோல்வியை தழுவியது.

    என்.எல்.சி. தொழிலாளர் பிரச்சனையை தீர்க்க டாக்டர்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அக்கறை காட்டினர்.

    எனவே என்.எல்.சி. தொழிற்சங்க தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இந்த தேர்தலில் 4-வது இடத்தை தான் பாட்டாளி தொழிற்சங்கம் பிடித்தது.

    தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ம.க.அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானித்துள்ளது.

    சட்டசபை தேர்தலைப் போல் வெற்றிவாய்ப்பை தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காக கட்சியை பலப்படுத்தவும், கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் பலர் உள்ளாட்சி தலைவர்களாகவும், ஒன்றிய கவுன்சிலர்களாகவும் உள்ளனர்.

    வருகிற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் அதிக இடங்களை கைப்பற்ற தீர்மானித்துள்ளனர்.

    இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் பா.ம. க.ஒன்றிய, நகர, பேரூராட்சி அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிலவரத்தை அறிகிறார்கள்.

    அதன்பின்னர் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் இதே போல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
    ×