என் மலர்tooltip icon

    கடலூர்

    பெண்ணாடத்தில் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உண்டியலை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்தில் கங்கை மாரியம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். நேற்று பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டுச் சென்றார்.

    இன்று காலை அன்பழகன் கோவிலை திறந்தார். அப்போது கோவிலின் உட்புறத்தில் இருந்த உண்டியலை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களிடம் கூறினார். அதைத்தொடர்ந்து பொது மக்கள் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்போது கோவிலில் கொள்ளை போன உண்டியல் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கரும்பு தோட்டத்தில் கிடப்பது தெரியவந்தது. கோவிலில் உண்டியலை பெயர்த்தெடுத்த கொள்ளையர்கள் அதனை கரும்பு தோட்டத்திற்கு கொண்டு சென்று உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் கங்கை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்த மாதம் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் கோவில் உண்டியலில் காணிக்கையாக சுமார் 2½ லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என கோவில் பூசாரி அன்பழகன் கூறினார்.

    பெண்ணாடத்தில் வீடுகள் மற்றும் கடைகளில் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பொது மக்களிடையே அச்சம், பீதியும் ஏற்பட்டுள்ளது. போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருமணமான ஐடிஐ மாணவர் தனது பள்ளிப்பருவ காதலியுடன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சந்திரசேகர் (வயது 24).

    இவரும் ஆயங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகள் பிரேமலதாவும் (20) பள்ளிப்பருவத்திலேயே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சந்திரசேகர், எய்யலூரைச்சேர்ந்த முத்தமிழ்செல்வி என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    திருமணத்துக்கு பின்னர் சந்திரசேகர் சிதம்பரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) இறுதியாண்டு படித்து வந்தார். அவரிடம் பிரேமலதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் சந்திரசேகரும், பிரேமலதாவும் காட்டுமன்னார்கோவில் மேலபக்கத்துறையில் பாசன வாய்க்கால் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி ஆஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சந்திரசேகர்-பிரேமலதா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், வாழ்வில் ஒன்றுசேர முடியாத நாம் சாவிலாவது ஒன்று சேருவோம் என நினைத்து காதலர்கள் இந்த பரிதாப முடிவுக்கு வந்தது தெரியவந்தது.

    வேப்பூர் லாரி டிரைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஆந்திராவில் கைது செய்யப்பட்டான்.
    வேப்பூர்:

    விழுப்புரம் அருகே உள்ள திருக்காவூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், லாரி டிரைவர். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு லாரியை ஓட்டி வந்தார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வந்தபோது சிலர் அவரை வழிமறித்து அடித்து கொன்று பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது சேலம் பகுதியை சேர்ந்த கும்பல் பெண் ஆசை காட்டி லாரி டிரைவர் ராஜேந்திரனை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பணத்தை பறித்தபோது ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையொட்டி சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜா, சுரேஷ் கந்தன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இதேபோல் லாரி டிரைவர்களை வழிமறித்து பணம் கொள்ளையடித்ததும், அவர்களுக்கு தலைவனாக நாமக்கல் மாவட்டம் போடி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பாபு (வயது 30) என்பதும் தெரிய வந்தது. போலீசார் அவனை தேடிவந்தனர். அவன் தலைமறைவாகவே இருந்து வந்தான்.

    இதையொட்டி வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் தேடிவந்தனர். ஆந்திராவில் பாபு பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பாபுவை மடக்கி பிடித்தனர்.

    வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    சிதம்பரம் அருகே ரெயில் மோதி வாலிபர் துண்டான நிலையில் இறந்து கிடந்தார்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள பெறாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் காமராஜ் (வயது 25). சிங்கப்பூரில் கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் ஊர் திரும்பினார்.

    இந்தநிலையில் அவர் வேலக்குடி ரெயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் இறந்து கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? தண்டாவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என்று தெரியவில்லை.

    தகவல் அறிந்ததும் சிதம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காமராஜ் சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டியில் திருமணம் ஆகி 15 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் மாயமாகி இருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பண்ருட்டி

    பண்ருட்டியை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் முரளிதரன் (30). என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளி.

    முரளிதரனுக்கும் பக்கத்து ஊரான புலியூர் காட்டுசாகை கிராமத்தை சேர்ந்த சசிரேகா(24) என்பவருக்கும் 15 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்–மனைவி இருவரும் புதுப்பாளையத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சசிரேகாவும், முரளிதரனும் இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    காலையில் எழுந்து பார்த்தபோது சசிரேகாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த முரளிதரன் மனைவியை பல இடங்களில் தேடியும் காணவில்லை.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சசிரேகாவை தேடி வருகின்றனர்.

    திருமணம் ஆகி 15 நாட்களே ஆன நிலையில் மனைவியை காணவில்லை என்று கணவர் கொடுத்த புகாரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    திருமண தோ‌ஷம் நீங்க கோவில் குளத்தில் குளித்த என்ஜினீயர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் கடற்கரை ரோடு ரத்தினவேல் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36) என்ஜினீயர். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகசாமி கோவிலுக்கு ராஜேஷ் வந்து வழிபடுவது வழக்கம். அதன்படி இன்று காலை சென்னையிலிருந்து ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்தார்.

    சாமி கும்பிடுவதற்கு முன்பு அந்த பகுதியில் சிவன் கோவில் அருகே உள்ள குளத்துக்கு குளிக்க சென்றார். குளத்தின் அருகே தனது உடைகள், செல்போன், பான்கார்டு ஆகியவைகளை வைத்து விட்டு குளிப்பதற்காக படிக்கட்டில் இறங்கினார்.

    குளத்தில் 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. ஏராளமான வாலிபர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். குளத்தின் 3-வது படிக் கட்டில் இறங்கிய ராஜேஷ் திடீரென்று கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தார். ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினார்.

    குளத்தில் குளித்துக் கொண்டிருந்த மற்ற வாலிபர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அவர்களது முயற்சிக்கு பலனில்லை. சிறிது நேரத்தில் ராஜேஷ் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். குளத்தில் மூழ்கிய ராஜேஷின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதையறிந்து அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். குளத்தில் இறங்கி ராஜேஷ் உடலை ஏன் மீட்கவில்லை என்று கேட்டு தீயணைப்பு படையினரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்களே குளத்தில் குதித்து ராஜேஷின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர் வைத்திருந்த செல்போன் மூலம் சென்னையில் உள்ள ராஜேஷின் அக்கா மற்றும் கடலூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஸ்ரீமுஷ்ணத்திற்கு விரைந்து வருகிறார்கள்.

    ராஜேசுக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமண தோ‌ஷம் நீங்குவதற்காக கோவில் குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீமுஷ்ணத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் கடற்கரை ரோடு ரத்தினவேல் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36). இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி இன்று காலை கடலூரிலிருந்து ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றார்.

    சாமி கும்பிடுவதற்கு முன்பு கோவில் அருகே உள்ள குளத்துக்கு குளிக்க சென்றார். குளத்தின் அருகே தனது உடைகள், செல்போன், பான்கார்டு ஆகியவைகளை வைத்து விட்டு குளிப்பதற்காக படிகட்டில் இறங்கினார்.

    குளத்தில் 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. ஏராளமான வாலிபர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். குளத்தின் 3-வது படிக்கட்டில் இறங்கிய ராஜேஷ் திடீரென்று கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தார். ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினார்.

    குளத்தில் குளித்துக் கொண்டிருந்த மற்ற வாலிபர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அவர்களது முயற்சிக்கு பலனில்லை. சிறிது நேரத்தில் ராஜேஷ் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். குளத்தில் மூழ்கிய ராஜேஷின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதையறிந்து அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். குளத்தில் இறங்கி ராஜேஷ் உடலை ஏன் மீட்கவில்லை என்று கேட்டு தீயணைப்பு படையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

    பின்னர் அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்களே குளத்தில் குதித்து ராஜேஷின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். ராஜேஷ் வைத்திருந்த பான்கார்டை பார்த்து அவரது முகவரியை தெரிந்து கொண்டனர். அவர் வைத்திருந்த செல்போன் மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பணம் என்பதை மாற்ற வேண்டும் என்று கடலூரில் வைகோ பேசினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் தலைமையில் கடலூரில் நடந்தது.

    முன்னதாக வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்கள் நல கூட்டியக்கத்தில் நான்கு கட்சிகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டணிக்கு சில கட்சிகள் வரலாம், தேர்தலுக்கு பின்னர் அவர்கள் விலகி செல்லலாம்.

    அதுபோன்ற நிலைப்பாட்டை த.மா.கா.வும், தே.மு.தி.க.வும் எடுத்து இருக்கின்றன. நாங்கள் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து செல்வதால், அவர்களோடு நேச உறவை தொடர்ந்து கொண்டு இருக்கின்றோம்.

    சுவாதியின் படுகொலை தமிழகத்தை உலுக்கியுள்ளது. பணம் வாங்கிக்கொண்டு முன்பின் அறியாதவர்களை கொலை செய்கிற போக்கு தமிழ்நாட்டில், வேகமாக வளர்ந்து வருகிறது.

    இந்த கொலையில் ஈடுபடுகிறவர்கள் 19 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கிறார்கள். இதில் இருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிற போது காவல்துறையின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று முதல்-அமைச்சர் கூறியது அவருடைய விளக்கத்தின் நம்பகத்தன்மையையே அழித்து விட்டது.

    இந்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சனையை கண்டு கொள்வதே இல்லை. இப்பிரச்சனையில் ஒரு மாநில அரசு இதற்குமேல் எதுவும் செய்ய முடியாது, ஈழப்பிரச்சனைக்கு பொதுவாக்கெடுப்பு தான் தீர்வு.

    கச்சத்தீவு பிரச்சனை முடிந்து போன பிரச்சனை அல்ல, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்தியாவின் ஒருபகுதியை வேறுநாட்டுக்கு கொடுக்க முடியாது, அதுவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.

    இந்த பிரச்சனையில் எத்தகைய தகிடுதத்தங்கள் நடந்தன என்பது சட்டமன்றத்தில் மணிக்கணக்காக நடைபெற்ற விவாதங்கள் மூலம் தெரிய வரும். அதற்கு மேல் நான் அதற்குள்ளே போக விரும்பவில்லை. சட்டமன்ற விவாதமே, யார் செய்தது துரோகம்?, யார் மேல் தவறு உள்ளது? என்பதை கண்ணாடி போல் காட்டும்.

    நெய்வேலியில் நடைபெற்ற தொழிற்சங்க தேர்தலில் நாங்களும், விடுதலை சிறுத்தைகளும் ஆதரித்த சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    பணம் மட்டுமே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலையை தமிழக மக்கள் மாற்றுவார்கள். இது தொண்டர்கள் ஆரம்பித்த கட்சி. இதை அழிக்க முயற்சிக்கிறார்களே என்ற தொண்டர்களிடம் எழுந்துள்ள ஆவேசம் கட்சிக்கு புத்துணர்வை கொடுத்திருக்கிறது. நான் ரொம்ப நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    இவ்வாறு வைகோ கூறினார்.
    பண்ருட்டி அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தேடி வருகிறார்கள்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியை அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் இவரது மனைவி ரேணுகா (வயது 30).

    சம்பவத்தன்று இரவில் ரேணுகாவும் அவரது கணவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். காலையில் பார்க்கும் போது ரேணுகாவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த கணவர் வாசுதேவன் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ரேணுகாவை தேடி வருகிறார்.
    நெய்வேலியில் இன்று வாக்கிங் சென்ற என்.எல்.சி. தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 2–வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் அண்ணாமலை (வயது 47). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பணிக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு திரும்பினார்.

    பின்னர் அவர் தான் வளர்த்து வந்த நாயுடன் 2–வது வட்டத்தில் காலை வாக்கிங் சென்றார். அப்போது அந்த பகுதியில் 2 பேர் ஒருவருக்கொருவர் திட்டி தகராறு செய்து கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்த அண்ணாமலை அவர்களை கண்டித்தார். ஏன் ரோட்டில் நின்று தகராறு செய்கிறீர்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரில் ஒரு வாலிபர் அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து அண்ணாமலையை ஓங்கி அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    இதைப்பார்த்ததும் அங்கு தகராறு செய்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அண்ணாமலையை மீட்டு என்.எல்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அண்ணாமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் அண்ணாமலை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு கூடிநின்று கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. கலைச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    என்.எல்.சி. தொழிலாளியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

    காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட அண்ணாமலைக்கு உமா பார்வதி என்ற மனைவியும், வினோத் என்ற மகனும், சுரேந்திரா என்ற மகளும் உள்ளனர்.

    என்.எல்.சி. பகுதியில் இன்று காலை நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவிலில் மறைந்த முன்னாள் எம்.பி. இளையபெருமாளின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்படி செய்தால்தான் சாதாரண மக்களுக்கும் காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படும்.

    முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் கேரளா கவர்னர் சட்டசபையில் இதைபற்றி பேசுவது ஏற்புடையதல்ல. அது தவறான முடிவு.


    வருகிற உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. தனித்து போட்டியிடுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.
    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர் முன்னாள் எம்.பி. இளையபெருமாளின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடலூர் நெல்லிக்குப்பத்தில் உள்ள இஸ்லாமிய சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

    எதிர்வரும் மாநகராட்சி மேயர் தேர்தலில் நடைமுறையை மாற்றி, மாமன்ற உறுப்பினர்கள், மேயரை தேர்ந்தெடுக்கும் சட்ட திருத்தத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

    இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். சென்னை மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதற்காக இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது ஆளுங்கட்சியும், அரசும் செயல் இழந்தது. இதனால் தான் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க.வுக்கு சென்னையில் பல இடங்களில் தோல்வி ஏற்பட்டது. இந்த சூழலில் அ.தி.மு.க. நேரடி தேர்தல் வைத்தால் தோற்கும் என்பதால் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றியுள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை தலித் தொகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக நான் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அது விசாரணையில் உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    நாங்கள் 4 கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியாக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளோம். அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க இருக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு மூத்த தலைவர். அவரை சாதாரண சட்டசபை உறுப்பினர் போல் கொச்சைப்படுத்துவது சரியல்ல. அவரது பாதுகாப்பு முடிவை ரத்து செய்தது நாகரீகமான செயல் அல்ல.

    தி.மு.க. தலைவருக்கு உரிய மரியாதையையும், மதிப்பையும் தமிழக அரசு தர வேண்டும். அவரை அவமதிக்கும் போக்கை கைவிட வேண்டும். கச்சத்தீவு பற்றி தி.மு.க., அ.தி.மு.க. சட்டமன்றத்தில் மாறிமாறி பழிசுமத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

    ஆனால், கச்சத்தீவின் வரலாற்று உண்மையை வெளிப்படுத்தவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் தான் என்ற உண்மையை யாரும் சொல்லவில்லை. கச்சத்தீவை மீட்க மத்திய அரசை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வற்புறுத்த வேண்டும்.

    கச்சத்தீவை மீட்காத வரை மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய தோழர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

    ×