என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்களை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் சோனாங்குப் பத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 50). இவரும் அதே பகுதியைச்சேர்ந்த செல்வம்(50), ஆறுமுகம்(40), ஆகிய 3 பேரும் நேற்று காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றனர்.

    கடலூரிலிருந்து இருந்து 25 நாட்டிகல் மைல் தூரத்தில் நேற்று மாலை அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகு என்ஜினில் திடீரென்று பழுது ஏற்பட்டது.

    இதனால் படகு இயங்கவில்லை. அதை இயக்குவதற்கு அவர்கள் பல்வேறு முயற்சிகள் செய்தனர். அவர்கள் முயற்சிக்கு பலன் இல்லை.

    படகை அங்கிருந்து வேறுபகுதிக்கு இயக்க முடியவில்லை. என்ன செய்வதென்று அவர்கள் திகைத்தனர்.

    கடலோர காவல் படைக்கு 1093 என்ற எண்ணுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் சிக்னல் கிடைக்கவில்லை பல முறை முயற்சி செய்தும் அவர்களால் பேச முடியவில்லை.

    இரவு நேரம் ஆகிவிட்டதால் அவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர். வேறு படகுகள் வருமா? என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எந்த படகும் வரவில்லை. இரவு முழுவதும் அவர்கள் படகிலேயே தவித்தபடி இருந்தனர்.

    சூறாவளி காற்று வீசினால் அலையில் சிக்கி படகு கவிழ்ந்து விடுமே என்ற அச்சத்தில் இருந்தனர்.

    இன்று அதிகாலையில் கடலோர காவல் படைக்கு அவர்கள் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டனர். சிக்னல் கிடைத்தது. அதிகாரிகளிடம் தாங்கள் நடுக்கடலில் தத்தளிப்பதை கண்ணீருடன் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சேகர், சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், ரமேஷ், பிரபாகரன் ஆகியோர் படகு மூலம் அங்கு விரைந்து சென்றனர். நடுக்கடலில் தத்தளித்த ஸ்ரீதர், செல்வம், ஆறுமுகம் ஆகியோரை மீட்டு தங்களது படகில் ஏற்றினர்.

    பின்னர் பழுதடைந்த படகை தங்களது படகில் கயிற்றால் கட்டி கடலூர் முதுநகர் பகுதிக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட மீனவர்களை அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அழைத்து சென்றனர்.

    கடலூரில் வயிற்று வலி காரணமாக பெண் வி‌ஷம் குடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் வண்ணாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜமுனா(வயது 37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ஜமுனா திடீரென்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜமுனா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்யபட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வயிற்று வலி காரணமாக ஜமுனா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    விருத்தாசலத்தில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் செம்பருத்தி பூ தெருவைச் சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது 45). டிராவல்ஸ் உரிமையாளர். இவரது மனைவி பரமேஸ்வரி(36).

    நேற்று இரவு பாலசந்திரன் தனது குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று விட்டார்.

    இதைநோட்டமிட்ட மர்மமனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். பாலசந்திரன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் பீரோ மேல் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்தனர். அதிலிருந்த 15 பவுன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை வீட்டிற்கு வந்த பாலசந்திரன் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அந்த பகுதியில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதேபோல் அதேபகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் மர்ம மனிதர்கள் கொள்ளை அடித்துள்ளனர். விருத்தாசலம் செம்பருத்தி பூ தெருவில் அ.தி.மு.க.பிரதிநிதி மாதவன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார்.

    நள்ளிரவில் இவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள டிவியை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுதொடர்பாகவும் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட மாணவ - மாணவிகள் கபடி அணிகள் தேர்வு நாளை காலை 10 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கபடி கழக தலைவர் வேலவன் உத்தரவின்பேரில் மாவட்ட செயலாளர் நடராஜன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில சப் - ஜூனியர் கபடி சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற ஜூலை 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளன. ஆண்களுக்கான போட்டி ராமநாதபுரம் மாவட்டத்திலும், பெண்களுக்கான போட்டி திருவண்ணாமலை மாவட்டத்திலும் நடைபெறுகிறது.

    இந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள கடலூர் மாவட்ட மாணவ - மாணவிகள் கபடி அணிகள் தேர்வு நாளை 3-ந்தேதி காலை 10 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

    தேர்வு மாவட்ட கபடி கழக தேர்வு குழுவினரால் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தகுதிகள் வருமாறு: -

    மாணவ - மாணவிகள் 16 வயதுக்குள் இருக்க வேண்டும். உடல் எடை 50 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.

    இந்த தகுதி தேர்வுக்கு வரும் மாணவ - மாணவிகள் தங்கள் வயது சான்றிதழ், ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.

    கபடி போட்டியில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்கள் மாநில போட்டிக்கு செல்ல போக்குவரத்து, உணவு மற்றும் சீருடை மாவட்ட கபடி கழகத்தினரால் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பெண்ணாடத்தில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் ரெயில் நிலைய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (வயது 30) ரெயில்வேயில் டிராலி மேனாக வேலை பார்த்து வருகிறார்.

    செந்தில்குமாரும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். இதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் ஓட்டை பிரித்து விட்டு உள்ளே சென்றனர். பின் பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகை ரூ.15 ஆயிரம் பணம், 3½ கிலோ வெள்ளி உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி சென்று விட்டனர்.

    வேலையை முடித்து வீட்டிற்கு வந்த செந்தில் குமார் பீரோ உடைந்து கிடந்து பொருட்கள் சிதறிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம் ஆலத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 31). பெண்ணாடம் கிழக்கு ரத வீதியில் சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடிந்தபின் கம்ப்யூட்டர் சென்டரை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். காலையில் கம்ப்யூட்டர் சென்டருக்கு வந்தார். அப்போது பூட்டியிருந்த கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்து மணிமாறன் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறிய நிலையில் கிடந்தது.

    கம்ப்யூட்டர் சென்டரில் இருந்த 2 லேப்-டாப்கள் 1 எல்.சி.டி. மானிட்டர் உள்ளிட்ட சுமார் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து மணிமாறன் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஜனவரி மாதம் ஏற்கனவே மணிமாறனின் கம்ப்யூட்டர் சென்டரில் கொள்ளை போனது. இப்போதும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் மணிமாறன் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் அச்சத்தில் உள்ளன.

    பெண்ணாடத்தில் கடந்த 2 மாதத்தில் 12-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியூருக்கு செல்வதற்கே பயப்படுகின்றனர்.

    தொடர் கொள்ளை சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கடலூரில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    கடலூர்:

    கடலூர் வன்னியர் பாளையம் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன், மதன்குமார் ஆகியோர் கடலூர் புதுநகரில் உள்ள நகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.

    அதே பள்ளியில் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஷேக்முகமது மற்றும் வன்னியர்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோரும் பிளஸ்-2 படித்து வந்தார்கள்.

    வாசுதேவன் தரப்பினர் ஒரு கோஷ்டியாகவும், ஷேக்முகமது தரப்பினர் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வந்தனர். நேற்று புதுப்பாளையத்தில் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    அப்போது புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி அந்த வழியாக ரோந்து சுற்றிவந்தார். மோதலில் ஈடுபட்ட ஒருதரப்பைச் சேர்ந்த வாசுதேவன், மதன்குமார், வடிவேல், ராஜேஷ் ஆகிய 4 பேரையும் மற்றொரு தரப்பை சேர்ந்த ஷேக்முகமது, விக்னேஷ், சேகர், சரவணன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.

    பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
    சிதம்பரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சேத்தியாத்தோப்பு:

    சிதம்பரம் அருகே உள்ள ஆயிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் கமலா (வயது 16 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரத்தூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    சம்பவத்தன்று ஜெயராமன் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று விட்டனர். கமலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(23) என்பவர் அங்கு வந்தார். கமலா வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். பெற்றோர் வெளியூர் சென்று திரும்பியவுடன் கமலா நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் கூறினார்.

    இதையடுத்து ஜெயராமன் பிரகாஷ் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்தார். அப்போது பிரகாசும், அவர் தாய் அமுதாவும் சேர்ந்து ஜெயராமனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக பிரகாஷ், அவரது தாய் அமுதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி வீடு எரிந்து சாம்பல் ஆனது. இந்நிலையில் மூதாட்டிக்கு உதவும் வகையில் 8–ம் வகுப்பு மாணவி அவருக்கு நிதி உதவி வழங்கி உள்ளார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மனைவி பெரியம்மாள் (வயது 70). இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவர் இறந்து விட்டார். பெரியம்மாள் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. வெளியேவர முடியாமல் தவித்த பெரியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை காப்பாற்றினர்.

    தீ கொழுந்து விட்டு எரிந்ததால் வீடு மற்றும் உடமைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    இச்சம்பவத்தை பற்றி கோவிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த சேவியர் என்பவர் தனது வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார். இதை சேவியரின் மூத்த மகள் பாஸ்டினா(13) கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

    ஏற்கனவே பாஸ்டினா தனது தந்தை கொடுத்த பணத்தை சிறுக சிறுக சேமித்து 455 ரூபாய் வைத்திருந்தார். அந்த பணத்தை பாதிக்கப்பட்ட பெரியம்மாளுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் என்று தனது தந்தையிடம் கூறினார்.

    அதைத்தொடர்ந்து சேவியர் தனது மகள் பாஸ்டினாவை பெரியம்மாள் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு பாஸ்டினா தான் சேமித்து வைத்த தொகையை மூதாட்டியிடம் வழங்கினார்.

    8–ம் வகுப்பு படித்து வரும் மாணவியின் மனித நேயத்தை அனைவரும் பாராட்டினர்.

    சிதம்பரம் நடராஜ கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் இன்று தொடங்கி 11–ந் தேதி வரை நடைபெறுகிறது.

    சிதம்பரம் நடராஜ கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் இன்று தொடங்கி 11–ந் தேதி வரை நடைபெறுகிறது.

    உற்சவத்தையொட்டி இன்று காலை கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதையடுத்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பட்டு நடராஜ சன்னதி கொடிமரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    காலை 9 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியர் நடேஸ்வர தீட்சிதர் கொடியேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனித்திருமஞ்சனத்தையொட்டி வருகிற 9–ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது.

    10–ந் தேதி அதிகாலை 4 மணிமுதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேதநடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் சிறப்புபூஜையும் பஞ்மூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு ஆனித்திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது. 11–ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துபல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்துவருகின்றனர்.

    ×