என் மலர்
கடலூர்
புவனகிரியை அடுத்த குமரிமூலை பகுதியை சேர்ந்தவர் கருப்பன்(வயது 72) இவர் நெய்வேலி இந்திராநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். பண்ருட்டி கும்பகோணம் சாலையை கடக்க முயன்ற போது பண்ருட்டியிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குறிஞ்சிபாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கருப்பன் இறந்துவிட்டார். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டியை அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் தினேஷ்(வயது 17). இவரது நண்பர் ஜெயகிருஷ்ணா(14). இருவரும் பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
கடலூர்–பண்ருட்டி நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த தினேஷ் மற்றும் ஜெயகிருஷ்ணா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வாலிபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டியில் திராசு பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பிச்சை. இவரது மனைவி புவனேஸ்வரி(வயது 56).
பிச்சையின் தம்பி ரவி இவரது மனைவி ஜெயந்தி(40). பிச்சையும், ரவியும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். நேற்று இரவு புவனேஸ்வரியும், ஜெயந்தியும் வீட்டின் முன்பகுதியில் படுத்து தூங்கினர்.
பிச்சை மற்றும் ரவி வீட்டின் வெளிபகுதியில் படுத்திருந்தனர். நள்ளிரவில் 2 மர்மவாலிபர்கள் அங்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர்.
அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த புவனேஸ்வரி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியையும், ஜெயந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியையும் பறித்தனர். திடுக்கிட்டு எழுந்த இருவரும் ‘திருடன் திருடன்’ என்று சத்தம் போட்டனர். உடனே மர்ம வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர்கள் வள்ளி, துளசிதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் மேலபுதுத் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜன்(வயது 64). முன்னாள் வருவாய் ஆய்வாளர். இவர் வருவாய் ஆய்வாளராக சேத்தியாத்தோப்பில் பணியாற்றியபோது லஞ்ச வழக்கில் கைதானார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இவர் மின்துறையில் வேலை வாங்கி தருவதாக கடலூர், அரியலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பட்டதாரி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவர்களுக்கு மின்துறையில் வேலைக்கான உத்தரவு ஆணையை வழங்கினார். அந்த ஆணையை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் பணியில் சேர சென்றபோது பணிஆணை போலியானது என்றும், தேவராஜன் தங்களை ஏமாற்றி விட்டதையும் அறிந்தனர்.
தேவராஜனிடம் பணத்தை கேட்டபோது, அவர் பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
அவர் தேவராஜனை கைது செய்ய மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி தலைமையில் தனிப்படை போலீசார். அவரை பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.
அப்போது சென்னை எம்.கே.பி.நகரில் தேவராஜன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அவரை கைது செய்து வேனில் கடலூருக்கு அழைத்து வந்தனர்.
கடலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் தேவராஜனிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி இன்று விசாரணை நடத்தினார். அதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.
கடலூர், அரியலுர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல இளைஞர்களிடம் தேவராஜன் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆணைகளை தயாரித்து கொடுத்து ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார். இதில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு முதல் அவர் இந்த மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளார். சென்னையில் பொதுமக்களிடம் இவர் தெய்வபக்தி உள்ளவராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
சிதம்பரத்தில் ஆசிரமம் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனை பொதுமக்கள் நம்பி உள்ளனர்.
இவர் அரசு வேலைக்கான ஆணையில் போலியாக அரசு முத்திரைகள், அரசு அதிகாரி கையெழுத்து ஆகியவைகளை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது.
இவை எங்கு தயாரிக்கப்பட்டன? இதை தயாரித்துக் கொடுத்த மர்மகும்பல் யார் என்று போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
இதுவரை தேவராஜன் மீது 26 புகார்கள் வந்துள்ளன. மேலும் பலர் புகார்கள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோசடியில் வேறுயாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பணிநிரந்தரம், பஞ்சப்படி உயர்வு உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்.எல்.சி.நிறுவனத்திடம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர்.
இதையடுத்து சென்னையில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் ஏ.ஐ.டி.யூ.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் என்.எல்.சி.நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை.
இதையடுத்து ஏ.ஐ. டி.யூ.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அவர்கள் உண்ணாவிரதம் திடீரென தர்ணா போராட்டமாக மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து நெய்வேலி தெர்மல் பஸ்நிலையம் கியூ பாலம் அருகே இன்று காலை ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சேகர் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தேத்துகடை பெரியமதகு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45) தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி(40), இவர்களுக்கு அருண்(11) என்ற மகன் உள்ளான்.
ஆறுமுகத்திற்கும் பரமேஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பரமேஸ்வரி தனது கணவரை விட்டு பிரிந்து வல்லம் படுகையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். ஆறுமுகம் பெரியமதகு பகுதியில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று மாலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பிவரவில்லை. அவரை அவரது அக்காள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கும் அவர் இல்லை.
இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு பரங்கிப்பேட்டை அகரம் உப்புக்காரச்சந்து வெள்ளாற்றங்கரையோரம் ஆறுமுகம் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது கழுத்து, கன்னம் ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருந்தன. அந்த பகுதி முழுவதும் ரத்தம் சிதறிக்கிடந்தது. நள்ளிரவில் மர்மமனிதர்கள் அவரை வெட்டிக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதைப்பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் உதய குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மகேந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட ஆறுமுகம் உடலை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தை போலீசார் பார்வையிட்டனர். அங்கு பீர்பாட்டில்கள் மற்றும் காலியான டம்ளர்கள் கிடந்தன. மர்மமனிதர்கள் அந்த பகுதியில் அமர்ந்து மதுகுடித்திருப்பது தெரியவந்தது.
ஆறுமுகத்தை மர்ம மனிதர்கள் ஏமாற்றி அழைத்து வந்து வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? வேறு காரணம் ஏதும் உண்டா என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






