search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுக்கடலில் தத்தளித்தவர்கள் மீட்பு: கடலோர காவல் படையினர் கடவுள்போல வந்து எங்களை காப்பாற்றியதாக மீனவர்கள் பேட்டி
    X

    நடுக்கடலில் தத்தளித்தவர்கள் மீட்பு: கடலோர காவல் படையினர் கடவுள்போல வந்து எங்களை காப்பாற்றியதாக மீனவர்கள் பேட்டி

    நடுக்கடலில் தத்தளித்த கொண்டிருந்த எங்களை கடலோர காவல் படையினர் கடவுள்போல வந்து காப்பாற்றியதாக நான்கு மீனவர்களும் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த 30 மீனவர்கள் ஒரு பெரிய விசைப்படகிலும், தேவனாம்பட்டினத்தை சேர்ந்த முத்துக்குமரன், சோனாங்குப்பத்தை சேர்ந்த அஞ்சாம்புலி, கடலூர் முதுநகர் ராஜசேகர், கண்ணா ஆகிய 4 பேர் ஒரு சிறிய பைபர் படகிலும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் செல்லும் போது எப்போதும் போல் பெரிய விசைப்படகில், சிறிய பைபர் படகை இணைத்து கயிற்றால் கட்டி இருந்தனர்.

    மீனவர்கள் 34 பேரும், ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டையில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். திடீரென பெரிய விசைப் படகில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்தது. இதனால் சிறிய பைபர் படகு கடலில் தனியாக சென்றது. 1 மணி நேரத்திற்கு பிறகு விசைப்படகில் சென்ற மீனவர்கள், சிறிய பைபர் படகை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த சிறிய பைபர் படகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் தேடினர். எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து அவர்கள் கடலூர் துறைமுகத்துக்கு வந்தனர். அப்போது தான் அவர்களுக்கு பைபர் படகில் சென்றவர்கள் கரைக்கு திரும்பவில்லை என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து பெரிய விசைப் படகில் வந்த மீனவர்கள் செல்போன் மூலம் கடலோர காவல் படை இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

    கடலோர காவல்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அதிநவீன ரோந்து படகிலும், தேவனாம்பட்டினம், முதலியார்பேட்டை பகுதி மீனவர்கள் 2 படகுகளிலும் சித்திரைப்பேட்டை, மரக்காணம் பகுதியில் உள்ள ஆழ்கடலில் தீவிரமாக தேடினர்.

    அப்போது நேற்று மாலை 4 மணி அளவில் மரக்காணத்தில் இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் 4 மீனவர்கள் தத்தளித்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை கடலோர காவல் படையினர் மீனவர்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட 4 மீனவர்களும் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரிய விசைப்படகுடன் கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்ந்ததால், சிறிய படகு தனித்து விடப்பட்டது. எங்களது படகில் இருந்த என்ஜினும் பழுதானது. இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்தோம். அப்போது கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் மரக்காணம் பகுதி கடலுக்கு வந்துவிட்டோம்.

    யாராவது படகில் வருகிறார்களா? என்று பார்த்தோம். ஆனால் யாரும் வரவில்லை. ஒரு நாள் முழுவதும் உணவு, குடிநீரின்றி தவித்தோம். அந்த நேரத்தில்தான் கடலோர காவல் படையினரும், தேவனாம்பட்டினம், முதலியார்பேட்டை மீனவர்களும் கடவுள்போல வந்து எங்களை காப்பாற்றி விட்டார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×