என் மலர்
செய்திகள்

விருத்தாசலம் அருகே குடிநீர் பிரச்சினை: கிராம மக்கள் சாலை மறியல்
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே பெரியகாப்பான்குளம் ஊராட்சிக்குட்பட்ட பி.கே.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 17–ந் தேதி அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது டிரான்ஸ்பார்மர் மீது இடி விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஊராட்சிக்கு சொந்தமான மின்மோட்டார்கள் இயங்கவில்லை. எனவே கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் முதனை, பெரியகாப்பான்குளம், கோட்டேரி ஆகிய கிராமங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வந்தனர்.
இதனால் அந்த பகுதி மக்களுக்கும் பி.கே.வீரட்டிக்குப்பம் மக்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
எனவே பி.கே.வீரட்டிக்குப்பத்தில் மின்மோட்டார்களை இயங்க வைத்து குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் ஊராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பி.கே.வீரட்டிக்குப்பம் பொதுமக்கள் விருத்தாசலம் -காட்டுக்கூடலூர் சாலையில் இன்று காலை 8 மணிக்கு திரண்டனர்.
காலிக்குடங்களுடன் வந்த அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனடி யாக குடிநீர் வழங்க வேண்டு மென்று கோஷமிட்டனர்.
இதனால் அங்கு 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் ஊ.மங்கலம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இன்று மாலைக்குள் குடிநீர் விநியோம் செய்யாவிட்டால் நாளை காலை மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






