என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர்-விழுப்புரம் மக்களை குளிரவைத்த கோடை மழை
    X

    கடலூர்-விழுப்புரம் மக்களை குளிரவைத்த கோடை மழை

    விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கோடை மழையால் வெயிலின் கொடுமை தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. வெயிலின் அளவு சதத்தை தாண்டியே பதிவானது.

    அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் அளவு குறையவில்லை. மாறாக வெப்பம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை பெய்யாதா? என்று எதிர்பார்த்தனர்.

    இந்தநிலையில் வெப்ப சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. 30 நிமிடங்களுக்கு பின்னர் மழை குறைந்தது. அதன் பின்னர் இரவு 9 மணிவரை லேசாக தூறிக் கொண்டிருந்தது. இதனால் வெப்பம் தணிந்தது.

    மழைபெய்தபோது கடலூர் வெள்ளக்கரையில் உள்ள தங்கமணி என்பவரது வீட்டின் மீது இடி விழுந்தது. இதில் வீட்டில் இருந்த தங்கமணியின் மனைவி முத்துலட்சுமி (வயது 28), மகன் லோகநாதன் (9) ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் இருவரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடிசையில் எரிந்த தீயை அணைத்தனர்.

    இதேபோல் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும் பலத்த சூறாவளியுடன் மழை கொட்டியது. இதனால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் சாமந்தி, சம்பங்கி செடிகள் நாசமானது.

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் மேல்மலையனூர், அவலூர்பேட்டை, வளத்தி, கொடுக்கன்குப்பம், பிரம்மதேசம் பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. 1 மணி நேரம்வரை மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    செஞ்சி, திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப் புறங்களிலும் இடி-மின்னலுடன் 1 மணிநேரம் மழை நீடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    2½ மணி நேரத்துக்கு பின்னர் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கோடை மழை யால் வெயிலின் கொடுமை தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×