என் மலர்tooltip icon

    கடலூர்

    அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய பாதிப்பு இல்லை என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
    கடலூர்:

    வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை- காற்றினால் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கடலூர் மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    கடலூரில் பாதிக்கபட்ட பகுதிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார்.

    கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைபள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். நிவர் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். 

    புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறியும்போது முதலமைச்சரை முதியவர் ஒருவர் திடீரென தொட்டு வணங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    அதனை தொடர்ந்து புயல் பாதுகாப்பு மையத்தில் மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். 

    கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.  புயலால் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம்.

    மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய பாதிப்பு இல்லை. புயல் வெள்ளத்தின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உயிரிழப்பை தவிர்க்க மழை நீர் முழுவதும் அகற்றப்பட்ட பிறகே மின்சார வினியோகம் தொடங்கும்.

    பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகள், இழப்புக்கு உரிய நிவாரணம் பெற முடியும். 

    கடலூரில் சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சுமார் 2.3 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். 
    கடலூரில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    கடலூர்:

    நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. 

    சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை  வழங்குவதிலும்  மீட்புக் குழுவினர்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

    இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் கடலூர் புறப்பட்டுச் சென்றார். முதலில் ரெட்டிச்சாவடி பகுதியில் புயல் பாதிப்பை ஆய்வு செய்தார். 

    புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை பார்வையிட்ட முதலமைச்சரிடம், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பாதிப்பு குறித்த விவரங்களை தெரிவித்தார். அதன்பின்னர் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் முதலமைச்சர் சென்றார். 
    அதிதீவிர புயலாக வலுப்பெற்ற நிவர் புயலின் வெளிச்சுற்று கடலூரை தொட்டதால் பலத்த காற்றடன் கனமழை கொட்டி வருகிறது.
    தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. தற்போது அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என வானிமை மையம் தெரிவித்துள்ளது.

    நகர்ந்து வரும் வேகம் 11 கி.மீட்டரில் இருந்து 16 கி.மீட்டர் வேகமாக அதிகரித்துள்ளது. தற்போது அதிதீவிர புயலாக நிவர், கடலூரில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 570 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

    இந்த நிலையில் நிவர் புயலின் வெளிச்சுற்றுப் பகுதி, அதாவது புயல் மையத்தை சுற்றியுள்ள காற்றுப்பகுதி கடலூரைத் தொட்டுள்ளது. இதனால் பலத்த காற்றுடன், கனமழை கொட்டி வருகிறது. கடல் சீற்றமாக காணப்படுகிறது. நிவர் புயலின் மையம் கரையைத் தொட்ட இன்னும் ஐந்து மணி நேரம் ஆகலாம்.
    நிவர் புயல் கரையை கடக்க தொடங்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும் என கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி தெரிவித்துள்ளார்.
    தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மணிக்கு 11 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல், சென்னையில் இருந்து 214 கி.மீட்டர் தொலைவிலும், கடலூரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

    புதுவை கடற்கைரை அருகே கரையை கடந்தாலும் கடலூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிபார்க்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் புயலை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று இரவு 8 மணியில் இருந்து காற்று வீசத் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காற்று வீசத் தொடங்கியதும் மின்சாரம் துண்டிக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    மேலும் டார்ச் லைட், மெழுகுவர்த்திகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார்.
    நிவர் புயல் காரணமாக கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    கடலூர்:

    நிவர் புயல் நேற்று இரவு தீவிர புயலாக மாறி கடலூருக்கு கிழக்கு தென் கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    ‘நிவர்’ புயல் சென்னை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த புயலால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

    நேற்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    அதேபோல் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. மேலும் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

    அதேபோல் கடலூர் மீனவ கிராமங்களான தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்படுகிறது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடலூர் உள்பட 7 மாவட்டங்களில் பஸ் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் ‘நிவர்’ புயலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற ஒருவித அச்சத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    கடலூர்:

    நிவர் புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில், கடலூர், தேவனாம்பட்டினம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பேரிடர் குழுக்கள், வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மழை வெள்ளத்தின்போது, தண்ணீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் நடவடிக்கையாக, தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு கடலில் இணையும் பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடலூர் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    கடலூர்:

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து தீவிர புயலாக மாறி நாளை (புதன்கிழமை) மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல் தற்போது தீவிரம் அடைந்து சென்னையில் இருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ளது. மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இத்துறைமுகத்தை நெருங்குகிற அல்லது இதற்கு அருகே கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதற்கு அடையாளமாக இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நிவர் புயல் காரணமாக கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்கிறது.
    கடலூர்:

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து தீவிரபுயலாக மாறி நாளை (புதன்கிழமை) மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இன்று முதல் 3 நாட்கள் வரை கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 7 மணியளவில் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசாக மழை தூற தொடங்கியது.

    அதன்பின்னர் சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

    இதனால் காலை நேரத்தில் சாலைகள் இருள் சூழ்ந்து காணப்பட்டது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும்பாலானோர் மழையில் நனைந்த படியும், குடைபிடித்த படியும் சாலையில் செல்வதை காண முடிந்தது.
    பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் விஜயராஜ் (வயது 30) லாரி டிரைவர். இவருக்கும் வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் பொன்னி (22) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு விஜயராஜ் தனது மனைவி பொன்னியிடம் அவரது பெற்றோரிடம் இருந்து கார் வாங்கி தருமாறு கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று பொன்னி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமச்சந்திரன் காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகள் பொன்னியின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் பொன்னி இறந்துள்ளதால், அவரது சாவு குறித்து கடலூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    கடலூரில் கொத்தனார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48), கொத்தனார். இவர் சம்பவத்தன்று புதுப்பாளையத்தில் உள்ள பொது கழிப்பறை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த அஞ்சாபுலி மகன் ராதாகிருஷ்ணன் (19) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சாலையில் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, சாலையோரம் நிற்குமாறு கூறியதாக தெரிகிறது.இதில் ராதாகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் மகன் குமரவேல்(28), கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சியின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் கொலை முயற்சி வழக்கை, போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே புதுப்பாளையம் பகுதியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நிவர் புயல் காரணமாக மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பழைய கட்டடங்களில் வசிக்கும் மக்கள் முகாமுக்கு செல்லுமாறு கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது 25-ந்தேதி நிவர் புயலமாக மாறி கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    ஒருவேளை அதிதீவிர புயலாக மாறினால் 100 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த காற்றழுத்தத்தாழ்வு மற்றும் புயல் காரணமாக நாளையில் இருந்து வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதனால் கடலூர், திருவாரூர் உள்பட 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவாரூர் ஆட்சியர் ‘‘பழமையான வீடுகளில் வசிக்கும் நபர்கள், பாழடைந்த, அபாயக்கட்டத்தில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் நபர்கள் மூன்று நாட்களுக்கு முகாமில் சென்று தங்க வேண்டும்’’ என அறிவுறுத்தியுள்ளார்.

    அதேபோல் கடலூர் ஆட்சியர் ‘‘மண், குடிசை வீடுகளில் வசிப்போர் முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 300 ஜேசிபி, ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது’’ உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
    வேப்பூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பூர்:

    வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி சிவப்பிரியா (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் சிவப்பிரியா மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு கொண்டார். 

    இதைபார்த்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×