என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • கடந்த மாதம் 29-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் பட்டப்பகலில் சர்புதீன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த ருத்ரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன்(37). சமூக ஆர்வலர். இவர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கோர்ட்டில் உத்தரவு பெற்று இருந்தார்.

    இந்த மோதலில் கடந்த மாதம் 29-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் பட்டப்பகலில் சர்புதீன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த, பேரூராட்சி கவுன்சிலர் தவுலத்பீ, அவரது மகன் பாரூக் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலையாளிகளுக்கு உடந்தையாக போலீஸ் நிலையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தகவல்களை பரிமாறியதாக திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலைய நீதிமன்ற பொறுப்பு காவலர் பிரசாந்த்(32) என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரதீப் பிறப்பித்து உள்ளார்.

    இது தொடர்பாக மேலும் ஒரு போலீசாரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    கொலையாளிகளுக்கு தகவலை பரிமாறியதாக போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பங்கேற்று வெற்றி பெறும் வீரர்கள் ஆசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
    • வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.

    மாமல்லபுரம்:

    கோவளம் கடற்கரையில், அகில இந்திய அளவிலான அலைச்சறுக்கு, மற்றும் பாய்மர படகு சாகச விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நேற்று மாலை தொடங்கியது. இதனை தமிழ்நாடு பாய்மரப் படகு சங்கம் மற்றும் சென்னை மாவட்ட பாய்மரப் படகு சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகிறது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, போட்டியை தொடங்கி வைத்தார். தமிழகம்-பாண்டிச்சேரி கடற்படை அதிகாரி ரவிக்குமார் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள், தமிழக கடலோர காவல்படை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த போட்டியில் ராணுவம், கடற்படையை சேர்ந்த 48 வீரர்கள் உள்பட இந்தியா முழுவதும் இருந்து 15 மாநிலங்களை சேர்ந்த படகுபோட்டி குழுக்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக ஓபன், மாஸ்டர்ஸ், கிராண்ட் மாஸ்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதேபோல் பார்முலா கைட் போட்டியும், ஓபன் முறையில் நடக்கிறது.

    இதில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர்கள் ஆசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

    இந்த அலைச்சறுக்கு மற்றும் பாய்மர படகு போட்டி வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளை கட்டணமின்றி அனைவரும் கண்டு ரசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • பயிற்சி நிலையத்தினை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் முதல் இங்கு பேக்கரி பொருட்கள் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு குறைவானவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதற்கான பயிற்சி நிலையத்தினை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் முதல் இங்கு பேக்கரி பொருட்கள் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    சீர்திருத்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்கள் 9 ஆசிரியர்களை கொண்டு கற்றுத்தரப்படுகிறது. தற்போது வெளிவந்த பிளஸ்-2 தேர்வு முடிவில் 4 பேர் வெற்றி பெற்று உள்ளனர். பிளஸ்-1 தேர்வை 3 பேரும், 10-ம்வகுப்பு தேர்வை 14 பேரும் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயன்முறை மருத்துவ சிகிச்சை பிரிவை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், வண்டலூர் தாசில்தார் பாலாஜி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற துணைத் தலைவர் லோகநாதன், நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவஅலுவலர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், ஆனந்த், சுகாதார மேற்பார்வையாளர் வித்யானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருத்தேரில் சுவாமி வீதி உலா சென்றபோது பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • நாளை மறுநாள் தெப்போற்சவ விழா நடக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், சித்திரை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவமாக , நேற்று தேர்திருவிழா கோலகலமாக நடைபெறறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருத்தேரில் சுவாமி வீதி உலா சென்றபோது பக்தர்கள் வீதியின் இருபுறமும் திரண்டு நின்று தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் (மே.13ம் தேதி) தெப்போற்சவ விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.

    • தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற மாணவி மீது சென்னையில் இருந்து சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் உரசியது.
    • தூக்கி வீசப்பட்ட மாணவி கிருத்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    வண்டலூர்:

    பெருங்களத்தூர், திருவள்ளுவர் நகர், 3-வது குறுக்குத்தெவை சேர்ந்தவர் கிருத்திகா (வயது20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று மாலை அவர் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பொத்தேரி ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் அங்குள்ள நடைமேடை மேம்பால படிக்கட்டை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது, சென்னையில் இருந்துசென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மாணவி மீது உரசியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி கிருத்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான மாணவி கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • கணவரிடம் கோபித்து கொண்டு கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் அய்யனாரப்பன் தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
    • சிகிச்சை பலனின்றி பொன்னரசி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பாண்டூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரது மனைவி பொன்னரசி (வயது 26), இவர்கள் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சிரஞ்சீவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பது தெரிய வந்ததையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த பொன்னரசி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் அய்யனாரப்பன் தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பொன்னரசி பூச்சி மருந்து குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னரசி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் பொன்னரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 15 மாதங்களே ஆவதால் இது குறித்து தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார்.

    • சதுரங்கப்பட்டினத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஒன்று கூடினர்.
    • பள்ளி காலத்தில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துகொண்டனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1972-1974-ஆம் கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களாகவும், வணிகர்களாகவும், விவசாயிகளாகவும், அரசுப் பணியாளராகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளனர்.

    60 வயதை கடந்த இந்த முன்னாள் மாணவர்கள் 51 பேரும், 50 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ் அப் குழு மூலம் தகவல்களை பரிமாறியதுடன், சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த சந்திப்பின்போது, தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை கவுரவிக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து 50-ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு 60 வயதை கடந்து பேரன், பேத்திகளுடன் வாழ்ந்து வரும் முன்னாள் மாணவர்கள் 51 பேரும் சதுரங்கப்பட்டினத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஒன்று கூடினர். அப்போது பள்ளி காலத்தில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துகொண்டனர்.

    மேலும், தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக 80 வயதை கடந்த தங்கள் ஆசிரியர்களுக்கு வெற்றிலை-பாக்கு, பழம், பட்டுவேட்டி, பட்டு புடவையுடன் கூடிய சீர்வரிசை கொடுத்து நெகிழ்ந்தனர். தங்கள் மனைவிகளுடன் வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் 80 வயதை கடந்தவர்கள், 60 வயதிலும் தங்களை மறக்காத மாணவர்களின் நன்றி உணர்வுகளை மெய்சிலிர்த்து பாராட்டினர். பின்னர் அனைவரும் ஒன்றாக நின்று குழு படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    • மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா தனது அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிவிட்டு தூக்குப்போட்டு கொண்டார்.
    • பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் முடிச்சூர் சாலை சக்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரேமா (வயது 39). இவர், சென்னை துறைமுகத்தில் அலுவலக பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த தம்பதியினர் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். இதில் பலரிடம் வாங்கிய ரூ.8 லட்சம் நிலுவையில் இருந்தது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தனர். பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது. கடன் தொல்லை அதிகமானதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா நேற்று காலை தனது அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிவிட்டு தூக்குப்போட்டு கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் மற்றும் மகன் இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய பிரேமாவை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரேமா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
    • கோடை வெயிலை சமாளிக்க பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் 25 ஆயிரம் பேர் பூங்காவை கண்டு ரசித்தனர்.

    கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களின் வசதிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா இந்த மாதம் (மே) முழுவதும் செவ்வாய்கிழமை விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கோடை வெயிலை சமாளிக்க பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நீர்சத்து அதிகம் உள்ள பழங்கள் உள்ளிட்டவை அதிகம் வழங்கப்படுகிறது.

    யானைகளுக்கு ஷவர் குளியில் ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளன. யானைகள் ஷவரில் ஆனந்த குளியல் போடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மாமல்லபுரத்துக்கு மாநகர ஏ.சி.பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் முக்கிய சுற்றுலாதலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்த்து ரசிக்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மாமல்லபுரத்துக்கு மாநகர ஏ.சி.பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஏற்கனவே சென்னை பிராட்வே, கோயம்பேடு, தி.நகர், அடையாறு பகுதியில் இருந்து மாமல்லபுரத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோடைகால விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி, விஷேச நாட்களில் மாநகர ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் போதிய வருவாய் இல்லாததால் அந்த பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு மாநகர ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மாநகர ஏ.சி. பஸ் இயக்க, போக்குவரத்து துறை முடிவு செய்து நேற்று முதல் இயக்கப்படுகிறது.

    பயணிகளின் வரவேற்பை பொறுத்து அனைத்து நாட்களிலும் மற்றும் பிராட்வே, கோயம்பேட்டில் இருந்து ஏ.சி. மாநகர பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சாலையின் ஒரு பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு ஒரே மார்க்கத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன.
    • தரைப்பாலப்பணி கடந்த சில வாரங்களாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி பழைய மாமல்லபுரம் சாலையான கேளம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இணையும் 18 கிலோ மீட்டர் கொண்ட வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைதடுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து 4 வழிப்பாதையான இந்த சாலையில், ரத்தினமங்கலம்-கண்டிகை இடையே தலைப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் சாலையின் ஒரு பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு ஒரே மார்க்கத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்நிலையில் தரைப்பாலப்பணி கடந்த சில வாரங்களாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் தரைப் பாலம் பணி முடிவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

    இதன்காரணமாக கடும் புழுதி பறக்கும் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்ற னர். எனவே தரைப்பாலப் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டி களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’யை (4.0) போலீசார் கடந்த 30-ந்தேதி தொடங்கினார்கள்.
    • இந்த சோதனை வேட்டையில் தாம்பரத்தில் 15 டன் குட்கா பிடிப்பட்டது

    சென்னை :

    தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை'யை (4.0) போலீசார் கடந்த 30-ந்தேதி தொடங்கினார்கள். போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தலின்பேரில் பல்வேறு தனிப்படை போலீசார் இந்த வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 6 நாட்களில் தமிழகம் முழுவதும் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் 5 பெண் கஞ்சா வியாபாரிகள் அடங்குவர். இவர்களிடம் இருந்து 728 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா வியாபாரிகளின் 41 வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர்.

    இந்த சோதனை வேட்டையில் தாம்பரத்தில் 15 டன் குட்கா பிடிப்பட்டது. 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை' தொடரும் என்றும், கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க பண வெகுமதி வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

    ×