என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகர ஏசி பஸ்"

    • பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மாமல்லபுரத்துக்கு மாநகர ஏ.சி.பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் முக்கிய சுற்றுலாதலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்த்து ரசிக்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மாமல்லபுரத்துக்கு மாநகர ஏ.சி.பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஏற்கனவே சென்னை பிராட்வே, கோயம்பேடு, தி.நகர், அடையாறு பகுதியில் இருந்து மாமல்லபுரத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோடைகால விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி, விஷேச நாட்களில் மாநகர ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் போதிய வருவாய் இல்லாததால் அந்த பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு மாநகர ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மாநகர ஏ.சி. பஸ் இயக்க, போக்குவரத்து துறை முடிவு செய்து நேற்று முதல் இயக்கப்படுகிறது.

    பயணிகளின் வரவேற்பை பொறுத்து அனைத்து நாட்களிலும் மற்றும் பிராட்வே, கோயம்பேட்டில் இருந்து ஏ.சி. மாநகர பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் கூடுதலாக ஏ.சி. பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பெங்களுர் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத பஸ்களின் விகிதத்தை 20:80 என்ற எண்ணிக்கையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    அக்னி வெயில் முடிந்தாலும் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிக அளவில் உள்ளது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்துள்ளது.

    வெப்பத்தின் தாக்கத்தால் மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சென்னையில் கூடுதலாக மாநகர ஏ.சி. பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சென்னையில் தற்போது 48 மாநகர ஏ.சி. பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர்-பிராட்வே (21ஜி), தாம்பரம்-திருவான்மியூர் (91), கோயம்பேடு-கேளம்பாக்கம் (570) வழித்தடங்களில் அதிக அளவு ஏ.சி. பஸ்கள் செல்கின்றன. எனினும் இது நகரத்தின் தேவையில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும்.

    பெங்களுர் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத பஸ்களின் விகிதத்தை 20:80 என்ற எண்ணிக்கையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் குறைந்தது 600 அல்லது அதற்கு மேலான ஏ.சி. பஸ்கள் இருக்க வேண்டும்.

    இதுகுறித்து பயணி ஒருவர் கூறும்போது, "ஏ.சி. பஸ்கள் மாமல்லபுரம் சாலை, ஐ.டி. நிறுவன பகுதிகளில் இயக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் பாதி அளவு பஸ்களே ஓடுகின்றன. மீதி பஸ்கள் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    எனவே தற்போது மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற சுற்றுலா தலங்களுக்கு ஏ.சி. பஸ்கள் இயக்கலாம்.

    கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் கூடுதலாக ஏ.சி. பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "இதற்கு முன்பு 24 ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது 48 பஸ்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏ.சி. பஸ்களை பொதுமக்கள் அதிகம் உள்ள சுற்றுலா வழித்தடங்களில் ஏற்கனவே திருப்பி விட முயற்சி செய்தோம். ஆனால் பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. புறநகர் ரெயில்களை போலவே வார இறுதி நாட்களில் பயணிகள் வருகை 50 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது.

    வார நாட்களில் ஏ.சி. பஸ்சில் ஒரு நாள் வருமானம் சராசரியாக ரூ.14 ஆயிரம் ஆகும். இது மாநகர டீலக்ஸ் பஸ்களுடன் ஒப்பிடும்போது 10 முதல் 15 சதவீதம் குறைவு ஆகும். ஆனாலும் மாநகர போக்குவரத்து கழகம் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஏ.சி. பஸ்களை இயக்கி வருகிறது என்றார்.

    ×