என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மதுராந்தம் அருகே 900 பேரிடம் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடியுடன் அடகு கடைக்காரர் ராஜஸ்தான் தப்பி ஓடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    மதுராந்தகத்தை அடுத்த படாளம் அருகே பூதூர் என்ற பகுதியில் ராம்தேவ் அடகு கடை உள்ளது. இந்த அடகு கடையை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பியாராம் (வயது 48) என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்த அடகு கடையில் அந்த பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிக் செல்வது வழக்கம். இதனால் ராம்தேவ் அடகு கடை அந்த பகுதியில் பிரபலமானது.

    இதை பயன்படுத்தி பியாராம் அந்த பகுதி மக்களிடம் தீபாவளி சீட்டு பிடித்து நடத்த தொடங்கினார். தீபாவளி சீட்டு ஒரு வருடம் கட்டினால் தங்க நகை மற்றும் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதற்கான கூப்பன்கள் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

    மாதம் தோறும் 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் வரை தங்கள் தகுதிக்கேற்ற வகையில் கட்டலாம் என்றும், அதற்கேற்ப தங்க நகைகளும், மளிகை கூப்பன்களும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இதை நம்பி அவரிடம் அந்த பகுதி மக்கள் தீபாவளி சீட்டு கட்டினர்.

    பூதூர், ஈசூர், எல்.என்.புரம், புளித்தரை கோவில், படாளம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் 1300-க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் தீபாவளி சீட்டு கட்டினர்.

    இந்த நிலையில் தீபாவளி நெருங்கும் வேளையில் அவர் கூறியபடி வாடிக்கையாளர்களுக்கு நகை-மளிகை கூப்பன் எதுவும் கொடுக்கவில்லை.

    பொது மக்கள் அடகு கடைக்கு சென்று நகை மற்றும் மளிகை கூப்பனை கேட்டனர். அதற்கு அவர் தனக்கு பண நெருக்கடி இருப்பதாகவும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் நகை மற்றும் மளிகை கூப்பன் தந்து விடுவேன் என்று உறுதியாக கூறினார்.

    மேலும் அவர் தினமும் அடகு கடையை திறந்து தொழில் செய்தார். குறிப்பிட்ட காலத்தில் நகையை தந்து விடுவார் என்று பொதுமக்கள் நம்பினார்கள்.

    இந்த நிலையில் டிசம்பர் மாதம் பிறந்ததும் அந்த பகுதி மக்கள் அடகு கடைக்கு சென்று பியாராமிடம் தீபாவளி சீட்டு கட்டியதற்கான நகையை கேட்க தொடங்கினார்கள்.

    இதையடுத்து அவர் பணம் கட்டியவர்களுக்கு நகையும், மளிகை கூப்பன்களும் வழங்கினார். 400 பேருக்கு நகையை கொடுத்து விட்டார். மற்றவர்களுக்கு அவரால் நகையை கொடுக்க முடியவில்லை. மற்றவர்களிடம் அவர் இந்த மாதம் இறுதிக்குள் கொடுத்து விடுவேன் என்று கூறி சமாளித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் அடகு கடை பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் தீபாவளி சீட்டு கட்டிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து மேல்வலம்பட்டம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அவரது வீடும் பூட்டப்பட்டு கிடந்தது. அவர் வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராஜஸ்தானுக்கு தப்பி ஓடியது தெரியவந்தது.

    இதுபற்றி பணம் கட்டி ஏமாந்தவர்கள் படாளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் 250 பேரிடம் சுமார் ரூ. 2 கோடி வரை பியாராம் சுருட்டியது தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த வழக்கு காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. பியாராமிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் அங்கு சென்று புகார் தெரிவித்து வருகிறார்கள்.

    இதையடுத்து ரூ. 2 கோடி சுட்டிவிட்டு தப்பி ஓடிய பியாராமை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பியாராமிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தினமும் அவரது அடகு கடையை முற்றுகையிட்டு வருகிறார்கள்.

    அவரிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கூறியதாவது:-

    பியாராம் இங்கு 7 வருடமாக அடகு கடை நடத்தி வருகிறார். அவர் கடை ஆரம்பித்த 3 வருடம் கழித்து தீபாவளி சீட்டு நடத்த தொடங்கினார். 2 வருடங்கள் தொடர்ந்து நடத்தினார்.

    அப்போது பணம் கட்டிய அனைவருக்குமே நகை மற்றும் மளிகை கூப்பன் கொடுத்து விட்டார். அதனால் அவரை நாங்கள் நம்பினோம். அதன்பிறகு அவர் 2 வருடங்கள் தீபாவளி சீட்டு பிடிக்கவில்லை.

    கடந்த வருடம் மீண்டும் தீபாவளி சீட்டு தொடங்கினார். அவர் நகை கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் சீட்டு கட்டினோம். 1300 பேரில் 400 பேருக்கு மட்டுமே நகை கொடுத்துள்ளார். 900 பேருக்கு அவர் நகை மற்றும் மளிகை கூப்பன் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32). இவர் மனைவி ரமணி, மகள் தீனப்பிரியா (4), 1½ வயது மகன் தருண் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவரது பெற்றோர் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் வெண்மாலகரத்தில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை அய்யப்பன் தனது பெற்றோரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வெண்மாலகரம் சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு வீடு திரும்பினார். இரும்புலி கூட்ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த மணிகண்டன் என்பவரது மோட்டார் சைக்கிளும், அய்யப்பனின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். மணிகண்டனுக்கு கால்கள் முறிந்தன.

    இதுபற்றி தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் ஆதிபராசக்தி ஆஸ்பத்திரி போன்றவற்றின் சார்பில் லட்சுமி பங்காரு நடமாடும் ஆஸ்பத்திரி தொடக்க விழா மேல்மருவத்தூரில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது.
    மதுராந்தகம்:

    அதிநவீன வசதிகள் கொண்ட நடமாடும் ஆஸ்பத்திரி குளிர் சாதன வசதி கொண்ட பஸ் ஆகும். இதில் காணொலி காட்சி மூலமாக நோயாளிகள் நேரடியாக சிறப்பு மருத்துவரை தொடர்பு கொள்ள முடியும். இதனை ஆதிபராசக்தி ஆஸ்பத்திரியின் துணைத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரமேஷ், முதன்மை செயல் அதிகாரி சேகர், பல் மருத்துவ கல்லூரி முதல்வர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நடமாடும் ஆஸ்பத்திரி மூலம் மதுராந்தகம், வந்தவாசி, உத்திரமேரூர், வெண்மாலகரம், திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் மருத்துவ வசதியை பெற முடியும். இதனால் ஏழை, எளிய நோயாளிகள் அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை இருந்த இடத்திலேயே பெறலாம்.

    இதில் படுக்கை வசதிகள் அவசரகால சிகிச்சை வசதிகள், பல் மருத்துவ சிகிச்சை அளிக்க சிறப்பு வசதிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு பயண நேரங்கள் மிச்சப்படும் என ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
    சிங்கப்பெருமாள்கோவில் அருகே வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அருகே செங்குன்றம், அலமேலு மங்காபுரம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் 2 நாய்கள் கடித்து குதறப்பட்ட நிலையில் செத்துக்கிடந்தன. அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், சிறுத்தை கால் தடம் இருப்பதாகவும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, செங்கல்பட்டு வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று நாய்கள் செத்துக்கிடந்த இடத்தை பார்வையிட்டனர். செத்த நாய்களை மருத்துவ பரிசோதனைக்காக வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட வனப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி பாண்டுரங்கன் கூறியதாவது:-

    சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் அஞ்சும் பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. நேற்று அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம்.

    இதுவரை அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை. தொடர்ந்து 24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். ரோந்து பணியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே வந்தது முள்ளம் பன்றி அல்லது காட்டுப்பன்றியாக இருக்கலாம்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான காட்சிகள் எதுவும் பதிவானால் கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு செய்யப்படும். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சப்படும் பகுதியில் மின் விளக்குகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பயம் வேண்டாம்.

    அந்த பகுதி மக்கள் வீட்டில் உள்ள மாடுகள், நாய்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செங்கல்பட்டு அருகே பாலாற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள பாலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஆகாஷ் (வயது14).

    அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ஆகாஷ் நண்பர்களுடன் வெளியே விளையாட சென்றான். பின்னர் அனைவரும் அங்குள்ள பாலாற்றில் குளித்தனர்.

    அப்போது ஆகாஷ் தண்ணீரில் சிக்கி மூழ்கினான். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுபற்றி ஆகாசின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தேடியும் ஆகாசை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் தேடும் பணி நடந்தது. அப்போது அதே இடத்தில் ஆகாசின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

    குன்றத்தூரை அடுத்த பழதண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 17) பிளஸ்-2 மாணவன். இவர் நண்பர்களுடன் சோமங்கலம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்குள் மீன்பிடி படகில் சென்றார்.

    அப்போது கார்த்தி தண்ணீரில் இறங்கினார். இதில் அவர் மூழ்கினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் சென்று தண்ணீரில் மூழ்கிய கார்த்தியை தேடி வருகிறார்கள்.
    ×