என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    திருப்போரூர் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் தந்தை தலைமறைவானார்.
    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் நிலத்தகராறு மோதலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். எம்.எல்.ஏ. இதயவர்மன் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் மனு செய்தார். அவரது ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில் எம்.எல்.ஏ. இதயவர்மனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

    எம்.எல்.ஏ. இதயவர்மன் நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துப்பாக்கிச்சூடு நடந்த செங்காடு கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 மணிநேர விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் செங்கல்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

    எம்.எல்.ஏ. இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி (வயது 70) ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தற்போது அவர் தலைமறைவாகி விட்டார். அவருடன் இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், துளசி, மணி, ஞான சேகரன் ஆகியோரும் தலைமறைவாக உள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்த சீனிவாசன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு தரப்பான ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இமயம்குமார் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த தங்கராசு, சிவகுமார், ஆறுமுகம், தேவராஜ், மோகன், பிரேம்குமார் உள்ளிட்ட 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களும் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் மனு செய்துள்ளனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 375 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 10,888 ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 375 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 10,888 ஆக உயர்ந்துள்ளது.
    மதுராந்தகம் அருகே லாரி டிரைவரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கடந்த 7-ந்தேதி விக்கிரவாண்டியில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் பச்சையப்பன் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது லாரியை வழிமறித்த 2 பேர் கத்திமுனையில் பச்சையப்பனை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். 

    இது குறித்து படாளம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக கூடுவாஞ்சேரியை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனா ( 22), படாளத்தை அடுத்த நடராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
    திருப்போரூர் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் அம்மன் கோவில் நிலத்தில் பாதை அமைப்பது தொடர்பாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த வழியாக சென்ற கீரை வியாபாரி சீனிவாசன் படுகாயம் அடைந்தார்.

    இந்த மோதல் தொடர்பாக எம்.எல்.ஏ. இதயவர்மன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்களும், இமயம்குமார் தரப்பை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். எம்.எல்.ஏ. இதயவர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி பயன்படுத்திய 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகேட்டு செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதற்காக திருப்போரூர் போலீசார், எம்.எல்.ஏ. இதயவர்மனை பூந்தமல்லி தனி கிளை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

    மனுவை விசாரணை செய்த நீதிபதி, எம்.எல்.ஏ. இதயவர்மனை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் போலீசார் தனியார் மண்டபத்தில் வைத்து எம்.எல்.ஏ. இதயவர்மனிடம் விசாரணை நடத்தினர்.
    காட்டாங்கொளத்தூரில் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் பள்ளி திறக்காத நிலையில் கோர்ட்டு உத்தரவை மீறி பள்ளி நிர்வாகம் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களை நிர்ப்பந்தம் செய்துள்ளது. 

    இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெற்றோர், கோர்ட்டு உத்தரவுபடி 40 சதவீத கல்வி கட்டணத்தை நாங்கள் செலுத்துகிறோம். பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 338 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,365 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,21,776 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,551-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 87,235 ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 10,027 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 338 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,365 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 7,276 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 201 பேர் உயிரிழந்துள்ளனர்.
    செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி. கண்ணன் காட்டாங்குளத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இமயம்குமார், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் தரப்பினர் இடையே நிலத்துக்கு பாதை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் நடந்த துப்பாக்கி சூட்டில் கீரை வியாபாரி சீனிவாசன் படுகாயம் அடைந்தார்.

    இந்த வழக்கில் ஏற்கனவே எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்பட 13 பேரும், இமயம்குமார் தரப்பை சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் இமயம் குமார் தரப்பை சேர்ந்த சிவகுமார் (வயது 39), ஆறுமுகம் (42), தேவராஜ் (24), மோகன் (24), பிரேம்குமார் (31) ஆகிய மேலும் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    எம்.எல்.ஏ. இதயவர்மன் வீட்டிலிருந்து மேலும் 1 துப்பாக்கியை போலீசார் பறிமுதல்  செய்தனர். ‘சிங்கிள் பேரல் ஏர் கன்’ மற்றும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் இதயவர்மனின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 259 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,917 ஆக உள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,17,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,481-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85,859 ஆக அதிகரித்துள்ளது.
     
    இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 9,658 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 259 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,917 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 7,114 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர். 
    மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஆளவாய் கிராம பாலாற்றில் சிலர் மணல் கடத்துவதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு டிராக்டரில் மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையொட்டி டிராக்டரை ஓட்டி வந்த குன்னப்பட்டு கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். டிராக்டர் கைப்பற்றப்பட்டது. அத்துடன் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம், ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர். வாகனங்களை ஓட்டி வந்த 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
    புதுகல்பாக்கம் மீனவர் குப்பத்தில் கடல் அரிப்பால் குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதுகல்பாக்கம் மீனவர் குப்பத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடலுக்கு அருகாமையில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

    தற்போது ராட்சத கடல் அலையால் கடல் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலை ஒட்டியுள்ள பெரும்பாலான மீனவர்களின் வீடுகள் கடல் அரிப்பால் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க புது கல்பாக்கம் மீனவர் கடற்கரை பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு பகுதி என இருபுறமும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று கடல் அரிப்பு குறித்த தகவல் அறிந்து வருவாய்த்துறை அதிகாரி காஞ்சனா, கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆறுமுகம், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் கடலோர காவல் படை போலீசார் புதுகல்பாக்கம் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிசிடம் தகவல் தெரிவித்தனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
    அச்சரப்பாக்கம் அருகே எரிசாராயம் கடத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த ஒரத்தி அருகே கடந்த 4-ந்தேதி மினி கன்டெய்னர் லாரியில் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 5 ஆயிரத்து 320 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கைப்பற்றினர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர். தப்பியோடிய மாரி என்ற நண்டு மாரி, (வயது 55), விமல்ராஜ் (28), சுந்தரமூர்த்தி என்ற வேல்முருகன் (36) ஆகியோரை தற்போது அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், சண்முகம், கமலக்கண்ணன் மற்றும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    ×