என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,173 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 32 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,173 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 38-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 91 ஆயிரத்து 793 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,151-ஆக உயர்ந்தது. இவர்களில் 14 ஆயிரத்து 94 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 691 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 41 ஆயிரத்து 757 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 679-ஆக உயர்ந்துள்ளது. 4,649 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவுவதலை தடுக்கும் பொருட்டு செயல்பட்டு வரும் கோவிட் பாதுகாப்பு மையங்களில் 131 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    கொரோனா சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்தார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி, வெண்டிலேட்டர் கருவிகள் ஆகியவற்றின் இருப்பு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஆய்வகம் மூலம் உறுதி செய்யப்பட்டவர்களின் முதலில் பரிசோதனை செய்து தொற்றின் தீவிரம் அறிய ஏற்படுத்தப்பட்ட வகைப்படுத்தல் மையம் குறித்த விவரங்கள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,038 நபர்களில் தற்போது 10,644 நோயுற்ற நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 1,209 நோயாளிகள் கோவிட் மருத்துவமனைகளிலும், 1,054 நோயாளிகள் கோவிட் சுகாதார மையங்களிலும் 131 நோயாளிகள் கோவிட் பாதுகாப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவுவதலை தடுக்கும் பொருட்டு செயல்பட்டு வரும் கோவிட் பாதுகாப்பு மையங்களில் 131 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 2,825 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுடைய மொத்த படுக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு அரசு பொது மருத்துவ னையில் 480 படுக்கைகளில் 475 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும், நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரவும், அரசு மருத்துவமனை முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம், சென்னைக்கு அருகாமையில் உள்ளதாலும், தொற்று நோய் பரவும் விகிதம் ஏறு முகமாக உள்ளதாலும், அனைத்து வருவாய்த்துறை சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினரைச் சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    அதிக அளவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, நோய் தொற்றினை குறைத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), ஐ.கருணாநிதி (பல்லாவரம்), எஸ்.அரவிந்த ரமேஷ் (சோழிங்க நல்லூர்), பாலாஜி (திருப்போரூர்), எம். பாபு (செய்யூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) அரசு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    மாமல்லபுரம்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் படிப்படியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலைகளில் அத்தியாவசிய பணிக்கு செல்லும் வாகனங்களை தவிர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை சந்திப்பு பகுதி வழியாக காய்கறி, மளிகை கடைகளுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சென்று வருவதுண்டு. இந்த நிலையில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கொரோனா தொற்றின் அபாயத்தை உணராமல் அலட்சிய போக்குடன் முககவசம் அணியாமல் பயணித்தனர்.

    அங்கு செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முககவசம் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரை மடக்கி பிடித்து ரூ.200 அபராதம் விதித்தனர்.
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதை அடுத்து கொரோனா நோயாளிகள் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் பெரும் பாதிப்பையும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது.

    இவர்களில் 85 ஆயிரத்து 631 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 72 ஆக உயர்ந்தது. இதில் 12 ஆயிரத்து 978 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதை அடுத்து கொரோனா நோயாளிகள் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் மொத்தம் உள்ள 480 படுக்கைகளில் 325 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. நேற்றிரவு ஆக்சிஜன் வசதியுள்ள 325 படுக்கைகளும் நிரம்பிவிட்டன.

    இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நோயாளிகள் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நோயாளிகள் மருத்துவமனையின் வாயிலிலும் மரத்தடிகளிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    காட்டாங்கொளத்தூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    வண்டலூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள காவனூர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் வீரா (வயது 25). சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்பவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 1-ந் தேதி சிலிண்டர் வினியோகம் செய்த பணத்தை தன்னுடன் பணிபுரியும் நண்பர் ராஜனிடம் அலுவலகத்தில் உள்ள மேலாளர் சுகுமார் என்பவரிடம் கொடுத்து விடும்படி கூறியுள்ளார். அந்த பணத்தை ராஜன் கியாஸ் ஏஜென்சி மேலாளர் சுகுமாரிடம் கொடுத்த போது அதை வாங்குவதற்கு மறுத்துவிட்டார். வீராவை வந்து நேரில் தர சொல்லு என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து வேறு ஒரு நபரிடம் கூறி சுகுமாரிடம் பணத்தை ஒப்படைத்தார். இதையடுத்து அலுவலகத்திற்கு நேரில் சென்ற வீரா, நான் கொடுத்து அனுப்பிய பணத்தை வாங்குவதற்கு ஏன் முதலில் மறுத்தாய் என்று கேட்டார். அப்போது கியாஸ் ஏஜென்சி மேலாளர் சுகுமாருக்கும், வீராவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை வீரா வீட்டில் இருக்கும்போது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர் வீடு காலி செய்வதற்கு சரக்கு ஆட்டோ வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனையடுத்து வீரா தனது சரக்கு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு பொத்தேரி அவ்வையார் தெருவுக்கு சென்றார்.

    கியாஸ் ஏஜென்சி மேலாளர் சுகுமார் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து வீராவை வழிமறித்து சரமாரியாக வீச்சரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதில் வீரா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை தேடி வருகின்றனர்.
    மர்ம நபர்கள் மூலம் மதுபாட்டில்கள் திருடு போகாத வகையில் மாமல்லபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இரும்பு கம்பி மூலம் வெல்டு வைத்து சீல் வைக்கப்பட்டது.
    மாமல்லபுரம்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் படிப்படியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை்) முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

    இந்த ஊரடங்கு நாட்களில் மதுகடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் அயல்நாட்டு மதுபான கடை மற்றும் பூஞ்சேரி, வடகடம்பாடி, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள 4 கடைகளில் நேற்று மாலை 6 மணி வரை மது விற்பனை களைகட்டியது. ஏராளமான மது பிரியர்கள் பெட்டி, பெட்டியாக தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கி சென்றனர். விற்பனை நேரம் முடிந்து கடை மூடப்பட்ட பிறகு வந்த ஏராளமான மது பிரியர்கள் மது கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றதையும் காண முடிந்தது.

    விற்பனை நேரம் முடிவடைந்த பிறகு அனைத்து டாஸ்மாக் கடைகளும் சீல் வைக்கப்பட்டன. ஊரடங்கு நாட்களில் மர்ம நபர்களால் மது பாட்டில்கள் கொள்ளை போகாத வண்ணம் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், குப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் அனைத்து டாஸ்மாக் கடைகளின் கதவுகளை பூட்டி இரும்பு கம்பி மூலம் வெல்டு வைத்து சீல் வைக்கப்பட்டது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,458 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 964-ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,458 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 964-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 80 ஆயிரத்து 790 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,033-ஆக உயர்ந்தது. இவர்களில் 13 ஆயிரத்து 142 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 906 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 439-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 38 ஆயிரத்து 512 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 612- ஆக உயர்ந்துள்ளது. 4,315 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கொரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் அவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் மற்றும் குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இவற்றை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார்.

    பின்னர் பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் வகைப்படுத்துதல் மையம் அமைக்க செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

    அதைதொடர்ந்து நிருபரகளிடம் அவர் கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகளில் செயல்பட்டு வந்த கொரோனா நோய் வகைப்படுத்துதல் மையம் சிங்கப்பெருமாள் கோவில் நகர்புற சுகாதார மையம் மற்றும் தாம்பரம் அரசு காசநோய் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

    சென்னை புறநகரில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பல்லாவரத்தில் உள்ள கண்டோன்மெண்ட் ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் வகைப்படுத்தும் மையம் இன்னும் ஓரிரு நாளில் திறக்கப்பட உள்ளது. மேடவாக்கத்திலும் நோய் வகைப்படுத்துதல் மையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நோய் வகைப்படுத்துதல் மையத்தில் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு உள்ள நோய் பாதிப்பை வைத்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதா? கொரோனா சிறப்பு மையங்களுக்கு அனுப்புவதா?, தீவிர சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதா? என அங்குள்ள டாக்டர்கள் முடிவு செய்வார்கள்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு நோய் பாதிப்பு குறைவாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள், எந்த காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அதையும் மீறி மற்றவர்களுக்கு நோய் பரவும் வகையில் வீட்டைவிட்டு வெளியில் வந்து நடமாடினால் அவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி 10 நாட்கள் அங்கு பாதுகாக்கப்பட்டு அதன் பிறகுதான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை செய்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92 ஆயிரத்து 476-ஆக உயர்ந்துள்ளது
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,154 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92 ஆயிரத்து 476-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 79 ஆயிரத்து 320 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,022-ஆக உயர்ந்தது. இவர்களில் 12 ஆயிரத்து 134 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 857 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 519 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 38 ஆயிரத்து 17 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 598-ஆக உயர்ந்துள்ளது. 3,904 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,039 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 16 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,039 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 78 ஆயிரத்து 77 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,013 ஆக உயர்ந்தது. இதில் 11 ஆயிரத்து 174 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 836 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. 3,399 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 10 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதில் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பதட்டம் அடைந்த டாக்டர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளின் உதவியை நாடினர்.

    இதற்குள் ஆக்சிஜன் கிடைக்காமல் 13 நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்ததும் கலெக்டர் ஜான் லூயிஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் “ஆக்சிஜன் செல்லும் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு ஏற்பட்டது. போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்று கூறினார்.

    ஆக்சிஜன் சிலிண்டர்கள்

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறி நேற்று மதியம் டாக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செங்கல்பட்டு உதவி கலெக்டர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆக்சிஜன் குழாயில் உள்ள பிர‌ஷரில் ஏற்பட்ட மாறுதலே நோயாளிகளின் இறப்புக்கு காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக இந்த கோளாறு சரி செய்யப்பட்டது.

    மேலும் ஆஸ்பத்திரிக்கு தேவையான ஆக்சிஜனும் தேவையாள அளவு கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இது குறித்து ஆஸ்பத்திரி டீன் முத்துக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆக்சிஜன் குழாயில் பிர‌ஷரில் ஏற்பட்ட கோளாறால் உயிரிழப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த கோளாறு சரி செய்யப்பட்டது.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 10 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

    கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் குழாயில் பழுது எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.
    செங்கல்பட்டு:

    கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இதேநிலை நீடிக்கிறது.

    தமிழகத்திலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 23 ஆயிரத்து 310 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 167 பேர் இறந்துள்ளனர்.

    இதற்கிடையே டெல்லி, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

    கோப்புப்படம்


    தற்போது செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் உயிரிழந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நேற்று மட்டும் 1,755 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெருந்தொற்று உள்ளவர்களுக்கு மட்டும் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதனால் பதற்றம் அடைந்த டாக்டர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் உதவியை நாடியதாக தெரிகிறது. ஆனால் அங்கும் குறைந்த அளவிலேயே ஆக்சிஜன் இருப்பதாக கூறி ஆக்சிஜன் வழங்க மறுத்து விட்டனர்.

    இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் அடுத்தடுத்து 13 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

    இதனை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவத்தால் சக நோயாளிகள் அச்சத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஆக்சிஜன் சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு புகார் வந்தது. அதை தொடர்ந்து நான் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் ஆக்சிஜன் செல்லும் குழாயில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 13 பேர் உயிரிழந்து விட்டனர்.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 23 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்கர்கள் உள்ளது. ஆஸ்பத்திரியில் நாளொன்றுக்கு 2.9 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. நேற்று முன்தினம் நோயாளிகளின் வருகை அதிகமானதால் 4.5 கிலோ லிட்டர் வரை ஆக்சிஜன் செலவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 447 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே இறந்தவர்களின் உடல்களை ஆஸ்பத்திரி நிர்வாகம் அவசர கதியில் உறவினர்களிடம் ஒப்படைத்தது.

    உடல்களை பெற்றுக்கொண்ட உறவினர்கள் அங்கிருந்து கிளம்பினால் போதும் என புறப்பட்டு சென்றனர். இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து அங்கு பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

    அனைவரும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

    போராட்டம் குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே 13 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்கக்கோரியும் டாக்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு உதவி கலெக்டர் சுரேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. மதியம் மருத்துக்கல்லூரி இயக்குனர் நாராயணபாபு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    டாக்டர்களின் கோரிக்கைகள் ஒரு வார காலத்திற்குள் சரிசெய்யப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் டாக்டர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    ×