என் மலர்
செங்கல்பட்டு
- முதல் நாளில் 2,300 பிளாஸ்டிக் பாட்டில்கள் திரும்ப கிடைத்து இருக்கிறது.
- பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ரூ.10 டெபாசிட் பெற்ற பிறகு தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,200-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கோடை காலத்தையொட்டி வெப்பத்தை தணிக்க ஷவர் குளியல், நீர்ச்சத்து பழங்கள் உள்பட பல்வேறு வசதிகள் விலங்குகள், பறவைகளுக்கு செய்யப்பட்டு உள்ளது.
பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில்களை பூங்கா வளாகத்தில் வீசி செல்வது நீடித்து வந்தது. இதனால் விலங்குகள், பறவைகள் பாதிக்கும் நிலை இருந்து வந்தது.
இதையடுத்து இதனை தடுக்கும் வகையில் பூங்காவுக்குள் வரும் சுற்றுலா பயணிகள், தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லும்போது திரும்ப பெறும் வகையில் ரூ.10-ஐ டெபாசிட்டாக செலுத்தி விட்டு திரும்பி செல்லும் போது தண்ணீர் பாட்டிலை கொடுத்து பணத்தை பெறும் புதிய திட்டம் கடந்த 5-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக தண்ணீர் பாட்டிலில் பிரத்யேக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. முதல் நாளில் 2,300 பிளாஸ்டிக் பாட்டில்கள் திரும்ப கிடைத்து இருக்கிறது. இதனால் விலங்குகள், பறவைகள் அடைக்கப்பட்டு உள்ள இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுவது முற்றிலும் குறைந்துள்ளது.
இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ரூ.10 டெபாசிட் பெற்ற பிறகு தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். வெளியில் செல்லும் போது அந்த பாட்டிலை கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
முதல் நாளில் 2,300-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இல்லையெனில் பெரும்பாலான விலங்குகளை அச்சுறுத்தவும், அதன் அடைப்புகளில் வீசவும் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
ஒவ்வொரு பகுதியில் வெவ்வேறு வண்ணத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். பார்வையாளர்களாக வரும்போது பழுப்பு நிறத்திலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக கேண்டீனில் சிவப்பு நிறத்திலும், டேன் டீ கடையில் ஊதா நிறத்திலும், சைக்கிள்களை வாடகைக்கு எடுக்கும் இடத்தில் நீல நிறத்திலும் ஸ்டிக்கர் இருக்கும். இந்த இடங்களில் விற்கப்பட்ட அனைத்து பாட்டில்களும் திரும்ப வந்து விட்டது.
இந்த திட்டம் திடீரென அறிமுகப்படுத்தப்பட வில்லை. ஜூன் 2, 3-ந்தேதி சோதனை முறையில் நடத்தி அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த நடைமுறை பூங்கா வளாகத்தில் விலங்குகள், பறவைகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் வருகையை குறைக்க உதவும். மேலும் ஸ்டிக்கருடன் பாட்டில்களை திருப்பி தர வேண்டியதன் அவசியத்தை சுற்றுலா பயணிகள் புரிந்து கொள்வார்கள் என்றார்.
- சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மல்லிகா வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
- ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பரத் தலைமையில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில், காய்கறி கடைகளுக்காக நகர போலீஸ் நிலையம் எதிரே மேட்டு தெரு நெல்லுமண்டி அருகே வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது.
ஆனால் வியாபாரிகள் அந்த இடத்தை பயன்படுத்தாமல் போலீஸ் நிலையம் எதிரே உள்ள மேட்டு தெரு சாலை மற்றும் கழிவு நீர், மழை நீர் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து காய்கறி கடைகளை நடத்தி வந்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியே சென்றவர்களும் அவதி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மல்லிகா வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். ஆனால் தொடர்ந்து அப்பகுதியில் வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமையில் நகர நல அலுவலர் செந்தில்குமார், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளை அகற்றினர்.
அப்போது சில வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பரத் தலைமையில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "பழைய பஸ்நிலையம் அருகே உழவர் சந்தை மற்றும் அதன் அருகே உள்ள சுமார் ஒரு ஏக்கர் உள்ள இடத்தை தூய்மைபடுத்தி கழிப்பிடம், குடி நீர் வசதி, வாகனங்கள் சென்று காய்கறி இறக்கி செல்வதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
எந்த வியாபாரிகளும் அங்கு சென்று விற்பனை செய்யாமல் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய், மழை நீர் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்து வந்தனர். இதனால் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு உள்ளது. சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
- அணுமின் நிலையத்தின் 2-வது உலையில் கடந்த மே மாதம் 23ம் தேதி, கொதிகலனில் கசிவு ஏற்பட்டது
- முதல் உலை நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் சரி செய்யப்படவில்லை.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது உலையில் கடந்த மே மாதம் 23ம் தேதி, கொதிகலனில் கசிவு ஏற்பட்டது., அதை சரி செய்வதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது கொதிகலன் சரி செய்யப்பட்டு, 180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் பழுதடைந்த முதல் உலை நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் சரி செய்யப்படவில்லை. இதனால் 220 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டு கிடப்பது குறிப்பிடதக்கது.
- திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலை குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி எல்லம்மாள் (வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த எல்லம்மாள் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உயிரியல் பூங்காவின் அனைத்து ஊழியர்களையும் ஒருங்கிணைத்து "ஒரு நபர் ஒரு மரம்" என்ற நோக்கத்துடன் மரக்கன்றுகள் நடப்பட்டது.
- உலக சுற்றுசூழல் தினம் "ஒரே ஒரு பூமி" என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகின்றது.
வண்டலூர்:
வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்கும் வகையில் ரூ.10 வைப்புத் தொகை செலுத்தும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களால் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும், பூங்காவில் உள்ள விற்பனை நிலையங்களில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டி ரூ.10-ஐ திரும்பபெறும் வைப்பு தொகையாக பெறப்பட்டு, பின் பயன்படுத்திய ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களில் கொடுத்து வைப்பு தொகையான ரூ.10-ஐ திரும்ப பெற்று கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த ஆண்டு உலக சுற்றுசூழல் தினம் "ஒரே ஒரு பூமி" என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி உயிரியல் பூங்காவின் அனைத்து ஊழியர்களையும் ஒருங்கிணைத்து "ஒரு நபர் ஒரு மரம்" என்ற நோக்கத்துடன் மரக்கன்றுகள் நடப்பட்டது.
வெப்பமய மாதல், கால நிலை மாற்றம் தணிப்பு மற்றும் பூங்காவில் பசுமையான சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது. உயிரியில் பூங்காவில் உள்ள 350 பணியாளர்களும் தாங்கள் தேர்ந்தெடுத்த மரக்கன்றுகளை நியமிக்கப்பட்ட பகுதிகளில் நட்டுள்ளனர். மேலும் அனைவரும் தாங்கள் நட்ட மரக்கன்றுகளை பராமரித்து வளர்க்க உறுதி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் நிலையான மேலாண்மை நடை முறையை நோக்கி, பூங்காவில் இருக்கும் நீர்தொட்டிகளில் மீன் வளர்ப்பு முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த முயற்சி பூங்காவிற்குள் இருக்கும் நீர் பறவைகள் மற்றும் முதலைகளின் அன்றாடமீன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- மரக்கன்று நடும் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடத்தாங்கல் ஏரியில் சீரமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாப்பாங்குழி ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40 ஆயிரத்து 800 மதிப்பில் மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 100 மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.டி.கருணாநிதி கலந்து கொண்டனர்.
- கொரோனா தொற்று பரவும் பயம் இல்லை, குடிநீர் வீணாகுவதும் இல்லை.
- பெரியவர்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் நான்கு விதமான பைப்புகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் கடற்கரை கோயில் வளாகத்தில் சென்னை விமான நிலையத்தில் இருப்பது போன்ற நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் "வெப்கோஸ்" நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொல்லியல்துறை கண்காணிப்பாளர் காளிமுத்து திறந்து வைத்தார்.
இந்த நவீன குடிநீர் எந்திரத்தில் பட்டனை அமுக்கியதும் நேரடியாக டம்ளர் இல்லாமல் தண்ணீர் குடிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் பயம் இல்லை, குடிநீர் வீணாகுவதும் இல்லை.,
பெரியவர்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் நான்கு விதமான பைப்புகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன குடிநீர் எந்திரம் பயன்பாடு மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- குப்பைகளை தரம்பித்து ஓவிய வடிவில் வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் கடற்கரையில் தூக்கி வீசப்படும் குப்பைகளால் கடற்கரை பகுதி நாளுக்கு நாள், மாசடைந்து வருகிறது.
இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தை சேர்ந்த யோகா கலைஞர்கள் ஒருங்கிணைந்து கடற்கரை கோயில் அருகில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது கடற்கரையில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், காலணிகள், உணவு கழிவுகள், கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளால் தூக்கி வீசப்பட்ட பழைய துணிகள், காகித அட்டைகள், அழுகிய பழங்கள் உள்ளிட்ட குப்பைககளை தரம் பிரித்து கடற்கரை மணலில் வண்ண கலரில் இந்திய வரைபடம் வரைந்து அதனை சுற்றி தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை காட்சி படுத்தினர்.
பிறகு அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் இதுபோன்ற குப்பைகளால் கடற்கரை பகுதி மாசு ஏற்படுகிறது என்றும், அதனால் பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள் என்றும், குப்பைகளை கடற்கரையில் கண்ட இடங்களில் வீசாதீர்கள் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது யோகா கலைஞர்கள் ஓவிய வடிவில் காட்சி படுத்தப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை சுற்றி வட்ட வடிவில் நின்று மாமல்லபுரம் யோகாசன மூத்த பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது இதனை காண வந்த சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரிடமும் இதுமாதிரி குப்பைகளால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை பொலிவிழந்து வருகிறது என்றும், இங்கு யாரும் குப்பைகளை போடாதீர்கள் என்று அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர். காட்சி ஓவியம் வடிவில் என்ன மாதியான குப்பைகளால் கடற்கரை பொலிவிழந்து வருகிறது என்பதை வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட காட்சி சுற்றுலா வந்த பயணிகளையும், பொதுமக்களையும் அதிகமாக கவர்ந்தது.
- பாரதிய ஜனதா கட்சி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
- அண்ணாமலை தமிழகத்திற்கு பாரதிய ஜனதா அரசால் என்ன நன்மை கிடைத்தது, என்று கூற முடியுமா?
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதிய ஜனதா கட்சி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்., அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் தமிழகத்தில் சேது சமுத்திர திட்டம். தமிழை செம்மொழியாக அறிவித்தது. மேலும் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை அதிகமாக அமைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் என இது போன்ற ஏராளமான திட்டங்களை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது.
அனைத்திற்கும் புள்ளி விபரம் கூறும் அண்ணாமலை தமிழகத்திற்கு பாரதிய ஜனதா அரசால் என்ன நன்மை கிடைத்தது, என்று கூற முடியுமா? மோடி அரசால் தமிழகம் இதுவரை என்ன நன்மைகள் அடைந்து இருக்கிறது? அல்லது எந்த நன்மையை அடையப் போகிறது? அண்ணாமலை கூறட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






