என் மலர்
செங்கல்பட்டு
- தாம்பரம் மாநகராட்சியில் இதுவரை 5 நகர செயலாளர்கள் இருந்தனர்.
- பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் மனு வாங்கப்படும்.
காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வின் 15-வது பொதுத் தேர்தலையொட்டி காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் தேர்தலுக்கு நாளை காலை 10 மணிமுதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
மாலை 5 மணிவரை மனு பெறப்படும். பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் மனு வாங்கப்படும். இதற்கான மனுவை மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று பெற்றுக்கொள்ளலாம்.
தேர்தல் நடத்துவதற்காக தலைமை கழக பிரதிநிதி விருதுநகர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழியிடம் பூர்த்தி செய்த வேட்புமனுவை உரிய கட்டணத்துடன் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தாம்பரம் மாநகராட்சியில் இதுவரை 5 நகர செயலாளர்கள் இருந்தனர். இப்போது 10 பகுதி கழகமாக பிரிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் வடக்கு-தெற்கு, பல்லாவரம் வடக்கு தெற்கு, பம்மல் வடக்கு-தெற்கு, செம்பாக்கம் வடக்கு-தெற்கு, பெருங்களத்தூர் வடக்கு-தெற்கு என 10 பகுதி செயலாளர்கள் இனி நியமிக்கப்படுவார்கள்.
- சிவசக்தி நகரில் திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது.
- நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 13 வீடுகளை அகற்ற அற நிலையத்துறை அதிகாரிகள் வந்தனர்.
தாம்பரம்:
திரிசூலம், சிவசக்தி நகரில் திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.
இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு, கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஏற்கவே முதல் கட்டமாக சில ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் 2-வது கட்டமாக கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 13 வீடுகளை அகற்ற அற நிலையத்துறை அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் வீடுகளுக்கு சீல் வைத்தனர். அப்போது வீட்டின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பல்லாவரத்தை சேர்ந்தவர் சின்னதுரை பெயிண்டர்.
- பல்லாவரம் சாலையில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் கடையின் முன்பு நின்று பேசி கொண்டிருந்தனர்.
தாம்பரம்:
பல்லாவரத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது29). பெயிண்டர். இவரும் மதுரையை சேர்ந்த ராஜா என்பவரும் நண்பர்களாக பழகி பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தனர்.
நேற்று இரவு நண்பர்கள் இருவரும் சேர்ந்து மது குடித்தனர். பின்னர் அவர்கள் பல்லாவரம் சாலையில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் கடையின் முன்பு நின்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, நண்பர் சின்னத்துரையை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
இதற்காக அவர் சின்னத்துரை தூங்கும் வரை காத்திருந்தார். நள்ளிரவு ஆனதும் அவர் அங்கே படுத்து தூங்கினார். உடனே ராஜா அருகில் கிடந்த பெரிய கல்லை தூக்கி சின்னத்துரையின் தலையில் போட்டார்.
இதில் சின்னத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் ராஜாவும் நண்பரின் உடல் அருகிலேயே மதுபோதையில் தூங்கி விட்டார்.
இன்று காலை ராஜா எழுந்து பார்த்த போது மது போதையில் நண்பர் சின்னத்துரையை கொலை செய்து விட்டதை நினைத்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் பல்லாவரம் போலீசில் சரண் அடைந்தார்.
அப்போது ராஜா போலீசாரிடம் கூறும்போது, மதுபோதையில் நண்பர் சின்னத்துரையுடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் சின்னதுரை தூங்கும் வரை காத்திருந்து அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.
போலீசார் சின்னதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று ராஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரனை செய்து வருகின்றனர்.
- மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சிக்குட்பட்ட அகத்திப்பட்டு கிராமம்.
- விவசாய நிலங்கள் அருகில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சிக்குட்பட்ட அகத்திப்பட்டு கிராமத்தில் கல்குவாரிகளுக்கு பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடி பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது.
இந்த குடோனில் 6500 கிலோ வெடி மருந்து சேமித்து சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கல்குவாரிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
வெடி மருந்து சேமிப்பு குடோன் குடியிருப்பு, விவசாய நிலங்கள் அருகில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த வெடிமருந்து குடோனில் அதிக அளவு வெடி பொருட்கள் சேமித்து வைத்துள்ளதால் அசம்பா விதம் ஏற்பட்டால் அருகில் உள்ள கிராமம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும் குடோனுக்கு அடிக்கடி வரும் வாகனங்களால் சாலையில் சிறுவர்கள், பொதுமக்கள் சாலையில் நடமாட முடியாமல் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கல்குவாரி வெடிமருந்து குடோனை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் குடோனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வீரர்கள் உண்ணும் தினசரி உணவு வகைகளும் மாதிரி எடுக்கப்பட்டு தரம் பரிசோதனை.
- 120 உணவுத்துறை ஊழியர்கள் ஓட்டல்களில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நேற்று மாலை 3மணிக்கு 44வது சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடங்கியது. இப்போட்டி ஆகஸ்ட் 10வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 187 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட செஸ் வீரர், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் 21 நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, யோகா இயற்கை மருத்துவ குழுவினர் 50பேர் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து பூங்கா வழியாக யோகா பகுதிக்கு செல்லும் போது கொசுக்கள் தென்பட்டதாகவும், சிலரை கடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் கொசுக்களை விரட்டுவதற்கு என்றே தனி ஊழியரை நியமித்து கொசு விரட்டும் மின்சார பேட்டுடன் பணியமர்த்தி உள்ளது. இதை தொடர்ந்து போர் பாய்ண்ட்ஸ் செஸ் அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் கொசு விரட்டுவதற்கு தனி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வீரர்கள் உண்ணும் தினசரி உணவு வகைகளும் மாதிரி எடுக்கப்பட்டு தரம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 120 உணவுத்துறை ஊழியர்கள் ஓட்டல்களில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.
- ஏரிக்கரை பகுதியில் ஒரு பையில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
- மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை ஓரம் கஞ்சா விற்கப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது ஏரிக்கரை பகுதியில் ஒரு பையில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் சித்தாமூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 26), வல்லம் பகுதியை சேர்ந்த மதியழகன் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் விற்பனைக்காக 510 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- காரணைப்புதுச்சேரி விநாயகபுரம் 8-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி விநாயகபுரம் 8-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 34), நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாளின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெருமாள் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- நந்திவரம் நந்தீஸ்வரர் காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் நந்தீஸ்வரர் காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 32). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி இரவு அவரது பொட்டி கடையை மர்ம நபர்கள் உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1,280-யை திருடி விட்டனர். இதுகுறித்து ராமதாஸ் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின்சார உயர்வு மற்றும் உணவு பொருள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை மத்திய- மாநில அரசுகள் திரும்ப பெற வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே தே.மு.தி.க. சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில தொழில்சங்க பேரவை செயலாளர் காளிராஜன், தம்பி முருகன், முகிலரசன், கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கறீம், நகர செயலாளர்கள் முருகம், ரங்கன், எம்.ஜி.மூர்த்தி, பிரபு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லயன் நாகராஜ், கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் எத்திராஜ், ராமதாஸ், ஜெயபால், கவுன்சிலர் தனலட்சுமி முருகன், அலாவுதீன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
- இந்தியாவின் 'செஸ் ராஜா', முதல் கிராண்ட்மாஸ்டர், முதல் மற்றும் ஒரே உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் ஊர் சென்னை.
- இந்தியாவின் மற்றொரு இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷும், பிரக்ஞானந்தாவும் சென்னையின் ஒரே பள்ளியின் மாணவர்கள்.
உலக செஸ் திருவிழா, மாமல்லையில் இன்று தொடங்குகிறது. சதுரங்கத்தின் பிறப்பிடமான இந்தியாவில் முதல் முறையாக 'செஸ் ஒலிம்பியாட்' நடைபெறுவது சிறப்பு. அதிலும் இந்தியாவின் செஸ் தலைநகரமான தமிழகத்தில் உலக செஸ் ஜாம்பவான்களின் மோதல் அரங்கேறுவது ஏகப் பொருத்தம்.
செஸ் தலைநகரம் தமிழகம் என்பது ஒருவேளை உங்களுக்கு மிகைப்படுத்தலாக தோன்றலாம். ஆனால் அதன் அர்த்தம், கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்தாலே புரியும்...
இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர், மனுவேல் ஆரோன் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான்.
நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் எஸ்.விஜயலட்சுமி, சென்னையின் புதல்வி.
இந்தியாவின் முதல் சர்வதேச செஸ் நடுவர் வெங்கடாச்சலம் காமேஸ்வரன், சென்னையின் மதிப்புமிக்க மூத்த குடிமகன்.
இந்தியாவின் இன்றைய இரு இளம் கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, சென்னை செல்லங்கள்.
நாட்டில் தற்போதுள்ள கிராண்ட்மாஸ்டர்கள் 74 பேரில் 26 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் 'செஸ் ராஜா', முதல் கிராண்ட்மாஸ்டர், முதல் மற்றும் ஒரே உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் ஊர் சென்னை.
1972-ம் ஆண்டு சென்னையில் ரஷிய கலாசார மையத்தால் நிறுவப்பட்ட டால் செஸ் கிளப்பில் பயிற்சி பெறத் தொடங்கிய ஒரு சிறுவன்தான், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் செஸ் புரட்சிக்கு வித்திட்டவர்.
அவர்... நீங்கள் நினைப்பது சரி, 'விஷி' எனப்படும் விஸ்வநாதன் ஆனந்தேதான்.
செஸ் விளையாடத் தொடங்கிய சிறிது காலத்திலேயே இந்த 'மின்னல் குழந்தை' தனது வேகத்தாலும், வியூகத்தாலும் எதிராளிகளை விய(ர்)க்கவைத்தது.
புத்தாயிரம் ஆண்டில், புதிய உலக சாம்பியனாக, ரஷியர்கள் ஆதிக்கம் செலுத்திய செஸ் அரங்கில் புயலாய் பிரவேசித்தார் ஆனந்த்.
2000-ல் ஆனந்த் முதல் முறையாக உலக சாம்பியன் மகுடம் சூடிவந்தபோது அவரை விமான நிலையத்தில் இருந்து வீடு வரை சாரட் வண்டியில் அழைத்துச்சென்று சிலாகித்துக்கொண்டாடியது சென்னை.
ஆனந்தை பார்த்து உத்வேகம் பெற்ற பலரும் செஸ் பலகை முன் அமர, சரமாரியாய் இங்கிருந்து கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகத் தொடங்கினார்கள். சென்னையை 'கிராண்ட்மாஸ்டர் தொழிற்சாலை' என்றே வர்ணிக்கத் தொடங்கினார்கள் செஸ் வல்லுநர்கள்.
அதிலும் சமீப ஆண்டுகளில் இளம் வீரர்கள் சென்னையின் செஸ் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். அவர்களில் 'பளிச்'சென்று ஞாபகத்துக்கு வருபவர், பிரக்ஞானந்தா.
செஸ் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் (10) சர்வதேச மாஸ்டர் ஆனவர், 'பிராக்' (பிரக்ஞானந்தாவின் சுருக்க செல்லப் பெயர்). பக்கத்து வீட்டு பையன் போல தோற்றம் காட்டும் பிரக்ஞானந்தா, தற்போது உலகின் 5-வது இளம் கிராண்ட்மாஸ்டர்.
இந்த ஆண்டில், நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனை இருமுறை மண்டியிட வைத்து மலைப்பூட்டினார் பிரக்ஞானந்தா. இவர் தனது குருவாக கருதும் ஆனந்தை அவரது சொந்த ஊரான சென்னையில் சாய்த்த கார்ல்செனுக்கு எதிரான இனிய பழிவாங்கலாகவும் அது அமைந்தது.
கார்ல்செனை பிரக்ஞானந்தா முதல்முறை வென்றபோது, 'பிராக்... 16 வயதில் எவ்வளவு பெரிய வீரரை நீங்கள் வீழ்த்தியிருக்கிறீர்கள்! ஒட்டுமொத்த இந்தியாவையே நீங்கள் பெருமையடையச் செய்துவிட்டீர்கள்' என்று சிலிர்த்துப்போய் பாராட்டினார் கிரிக்கெட் கிங் சச்சின்.
இந்தியாவின் மற்றொரு இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷும், பிரக்ஞானந்தாவும் சென்னையின் ஒரே பள்ளியின் மாணவர்கள். பிறவி செஸ் மேதை குகேஷ், இவ்விளையாட்டு வரலாற்றில் 2-வது இளம் கிராண்ட்மாஸ்டர் ஆனவர்.
கடந்த 2019-ம் ஆண்டில் அந்த பெருமையை தனதாக்கினார் இவர். அப்போது உலகிலேயே இளம் கிராண்ட்மாஸ்டராக திகழ்ந்த உக்ரைனின் செர்ஜி கர்ஜாகினின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பை வெறும் 17 நாட்களில் தவறவிட்டார் குகேஷ்.
தமிழத்திலும், தாயகத்திலும் சதுரங்க விருட்சம் கிளைவிட விதையாய் விழுந்த ஆனந்த், தனக்கு முன்பே செஸ் கலாசாரம் தமிழகத்தில் வேரூன்றியிருந்தது என்று கூறுகிறார்.
இன்றும் தமிழகத்தின் சிறுநகரங்களிலும், பெருநகரங்களிலும் மூலை முடுக்குகளில் எல்லாம் செஸ் பயிற்சி நிலைய பலகைகள் தென்படுவதையும், அங்கு கருப்பு-வெள்ளை கட்ட பலகைகளின் முன்னே இளஞ்சிறார், சிறுமியர் மோனத் தவம் இருப்பதையும் காணலாம். சர்வதேச அனுபவம் பெற்ற செஸ் கில்லிகள் பலரும் அடுத்தடுத்த வீரர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த விளையாட்டில் பெற்றோர் காட்டும் ஆர்வத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
சென்னையின் இளம் சர்வதேச செஸ் சிங்கங்கள் பலவும் சைவப்பட்சிகள். அதனால் அவர்களின் தாய்மார்கள் ரைஸ் குக்கரும் கையுமாய் உலகெங்கும் உடன் பயணிக்கிறார்கள். செஸ் விளையாட்டுக்கு பல பள்ளிகள் அளிக்கும் ஆதரவும் 'சபாஷ்' போடத் தகுந்தது.
முத்தாய்ப்பாக, செஸ் விளையாட்டுக்கு கட்சி தாண்டி தமிழக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தரும் ஆதரவு, இந்தியாவிலேயே வேறு எங்கும் காண முடியாத முக்கியமான விஷயம் இது என்கிறார் ஒரு தமிழக கிராண்ட்மாஸ்டர்.
தற்போதுகூட, செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பை இருகரம் நீட்டி வரவேற்றதும், அதை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும் என்று முதல்-அமைச்சர் முதற்கொண்டு அரசு எந்திரம் சுற்றிச் சுழல்வதும் தமிழகத்தின் செஸ் பிரியத்துக்குச் சான்று.
அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் சொந்த மண்ணில் தமிழக செஸ் படை பட்டையைக் கிளப்பும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு.
- 19 வயதான வெங்கட் என்ற ஆண் வரிக்கழுதைப்புலி, கடந்த 2 மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது.
- கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சிங்கங்கள் உயிரிழந்தது.
சென்னை:
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இந்த பூங்காவை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வயதான வெங்கட் என்ற ஆண் வரிக்கழுதைப்புலி, கடந்த 2 மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. பூங்கா கால்நடை டாக்டர்கள் அதற்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் நேற்று வரிக்கழுதைப்புலி பரிதாபமாக உயிரிழந்து. இறந்த வரிக்கழுதைப்புலியின் உடலை பூங்கா டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த பிறகு பூங்கா வளாகத்தில் உள்ள நவீன எரியூட்டு மையத்தில் தகனம் செய்தனர்.
உடல் நலக்குறைவால் வரிக்கழுதைப்புலி உயிரிழந்ததை தொடர்ந்து பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு எந்த விதமான நோய் தொற்றுகளும் ஏற்படாதவாறு பூங்கா டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சிங்கங்கள் உயிரிழந்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் பூங்காவில் தொடர்ந்து சிங்கம், புலி, சிறுத்தை, வரிக்குதிரை, சாம்பார் மான், காட்டுமாடு, காட்டுப்பன்றி உள்பட பல்வேறு விலங்குகள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது.
- வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது.
வண்டலூர்:
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று ஒரு நாள் விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது.
அதற்கு பதிலாக வருகிற 2-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.
இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.






